சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அதிகாரிகள் சந்திக்கலாம்: ஈரான்
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.
இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.
அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
“சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்” என ஈரான் மந்திரி தெரிவித்தார்.
அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.