தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை!….. சிறீதரன்.
தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வில் கைவிசேஷம் வழங்கி வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.
ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவளித்த பல பேர் தோல்வியடைந்தனர்.
வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை. இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்படையில் பெரும்பாலனவர்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கருத்து நிலவி வருகிறது.
தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வேண்டும். சர்வதேச விசாரணை வேண்டும். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதை சர்வதேச ரீதியில் ஒரு செய்தியை சொல்ல முடியும் என தெரிவித்தார்.
கச்சத்தீவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிறிதரன் எம்.பி., இந்தியாவின் ஆளுகைக்குள் கச்சதீவு இருந்தாலும் ஒப்பந்தத்தில் கச்சதீவு இலங்கைக்குரியது. வடக்கு தமிழ் கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் நாட்டில் இருக்கின்ற சகோதரர்கள் ஈழத்தின் தொப்புள் கொடி உறவுகளை பாதிக்க விடமாட்டார்கள். தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரமே இது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.