வடமிழுத்தவர்களுக்கு நன்றி சொன்னதற்காக! …. சங்கர சுப்பிரமணியன்.
கட்டுரையை படைப்பதில் தனக்கென ஒரு இலக்கணத்தை வகுத்திருப்பதில் யாழ். பாஸ்கரன் அதியற்புத உத்தியினைக் கையாண்டிருக்கிறார்.. கட்டுரை படைப்பதும் களமாடுவது போன்றுதான். களமாடுவதில் வெற்றியீட்டுவதுபோல் கட்டுரை படைப்பதிலும் மற்றவர்களைக் கவரும்படி படைக்க வேண்டும்.
புளித்த மாவு இருந்தால் தோசையை யார் வேண்டுமானாலும் சுடலாம். ஆனால் அதை பக்குவமாக மற்றவர்கள் சுவைத்து சாப்பிடும்படி சுடுவதில்தான் திறமையே உள்ளது. வீடுகளில் தோசை சுடுவது வேறு உணவகங்களில் தோசை சுடுவது வேறு. சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் இதழ்களுக்கும் அதிகமான வாசகர்களைக் கொண்ட இதழ்களுக்கும் வேறுபாடு கண்டிப்பாக உள்ளது.
சரி, இந்த தோசையின் விடயத்துக்கு வருவோம். சமீபத்தில் பெங்களூர் சென்றிருந்த நான் நகரத்தின் மையப் பகுதியில் சுமார் பத்து நாட்கள் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன். விடுதிக்கு அருகே ஒரு சிறந்த உணவகம். நாமாக உணவைப் பெற்றுக் கொள்ளவேண்டும். கூட்டம் அலைமோதும். விலையும் மிக அதிகம்.
உணவு வகைகளை நம் முன்னேயே தயாரித்து கொடுக்கிறார்கள். உணவு தயாரிக்கும் இடத்துக்கும் உணவை உட்கொள்ளும் இடத்திற்கும் இடையே மார்பளவுக்கு ஒரு தடுப்புச்சுவர். அந்த தடுப்புச் சுருக்கு மேலேயே தயாரித்த உணவை வைப்பதற்கும் அதை அதற்குரியவர்கள் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக மேசை போன்று அமைத்திருந்தார்கள்.
உணவுக்காக காத்திருப்பவர்களில் நானும் தடுப்புச் சுவரின் மறுபுறம் காத்திருந்தேன். தோசை சுடுபவரின் திறமையைப் பார்த்தேன். எந்த தொழிலும் திறமையிருந்தால்தான் சாதிக்க முடியும். செவ்வக வடிவில் நீண்ட அகன்ற பெரிய தோசைக்கல். தோசையில் பல விதம். அதற்கு ஏற்றவாறு கல்லின் வெப்பத்தையும் கூட்டி குறைக்க வேண்டும். இருப்பதோ ஒரே தோசைக்கல்.
ஒரே கல்லிலேயே இது எவ்வாறு சாத்தியம்? அதிக வெப்பத்திற்கு வெப்ப அளவைக் கூட்டுகிறார். குறைவான வெப்பம் தேவைப்படும் தோசைக்கு ஏற்றவாறு அதே கல்லில் குளிர்ந்த நீரை ஒருபகுதியிலும் மிதமான வெப்பம் தேவைப்படும் தோசைக்கு ஏற்றவாறு இன்னொரு பகுதியிலும் தண்ணீரை ஊற்றுகிறார்.
இவ்வாறு தண்ணீரை திரும்பத்திரும்ப ஊற்றி ஊற்றிய நீர் சூடானதும் அதை அப்புறப்படுத்தியபடியே இருக்கிறார். இவையாவும் துரிதகதியில் நடந்தேறும்.
ஒரே கல்லில் பல வகையான தோசைக்கு ஏற்ப வெப்பத்தை சரியாக்குகிறார். தேவைக்கு ஏற்ற வெப்பத்தை அந்தந்த பகுதி அடைந்ததும் அதற்கான தோசையை அங்கே சுடுகிறார்.
இந்த தோசை விடயத்தை இங்கு எடுத்த காரணம். பல தரப்பட்ட படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளின் படைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதுபோன்றே வாசகர்களும் இருக்கிறார்கள். உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் எல்லா படைப்பாளிகளையும் எல்லா வாசகர்களையும் ஈர்த்திருக்கிறார் யாழ். பாஸ்கரன் அவர்கள்.
இத்தகைய செயல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. சுய நலத்திற்காக சில அரசியல்வாதிகளும் சில அரசியல்வாதி
அல்லாதோரும் தமிழரிடையே பிளவை ஏற்படுத்தி அந்த பிளவில் ஒரு சிறு சந்தர்ப்பம் வாய்ப்பினும் ஆப்பு வைத்து பிளவை பெரிதாக்குகிறார்கள். சந்தர்ப்பத்தை தக்கவாறு பயன் படுத்துவதில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலானோர் அவ்வாறு இல்லை என்பதற்கு யாழ். பாஸ்கர் அவர்களே சான்று. தமிழ்நாட்டைச் சார்ந்த திறமைமிக்க பல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து அருமையான படைப்புக்களை வெளியிடுவது
பெருமையளிக்கிறது. ஒரு நிறம் என்றில்லாமல் வானவில்லைப் போல் பல நிறங்களுடன் மிளிர, வருங்காலங்களில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழரிடையேயுள்ள படைப்பாளிகளையும் இனங்கண்டு அக்கினிக் குஞ்சில் பயணிக்க வைப்பார் என்று நம்புகிறேன்.
பல நாடுகளில் பல இதழ்களில்
பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்புக்களை காணலாம். வேற்று நாட்டைச் சார்ந்த வேற்றினத்தவர்கள் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியதை வரலாறு பேசும்போது வெவ்வேறு நாடுகளில் வாழும் நம்மினத்தவர்கள் ஏன் ஒரு இதழில்
பங்காற்றக்கூடாது என்ற யாழ். பாஸ்கரின்
பரந்த நோக்கை நான் வரவேற்கிறேன்.
உலாவருகின்ற தேருக்காக வடம் இழுத்தவர்களுக்கு நன்றி சொல்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்? தாங்கள் இணைந்து வடம் இழுத்தவர்களைப் பற்றி சொல்லும்போது எங்கள் ஊர் நெல்லையப்பர் தேரோட்டம் கண் முன் வருகிறது. கீழரத வீதியில் சங்கிலிப் பூதத்தார் முக்கினருகே நிலைகொண்டிருக்கும் தேர் நான்கு ரதவீதி வழியாக உலாவருவது அவ்வளவு ஒரு ஆனந்தமாக இருப்பினும் அது எளிதான வேலையல்ல.
எங்கள் ஊர் தேர் என்றுகூட சொல்ல முடியாமல் தமிழில் எனக்குப் பிடிக்காத சொல் எங்கள் என்ற சொல் ஆகிவிட்டது. பாரதி சொன்னான் ஒருமுறைக்கு இருமுறை. எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே என்று. வாத்தியார் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை குழந்தைகளுக்கு கூட பிடித்தபடம். எங்களுக்கும் காலம் வரும் என்ற பாடல் இன்றும் இனிமையாகவும் எதிர்காலத்தில் நம்பிக்கையை தரும் பாடலாகவும் உள்ளது. வசந்த காலத்தில் வாழும்போது கோடையையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
வடம் இழுக்கும் விடயத்துக்கு வருவோம். வடம் இழுப்பது எளிதல்ல. மகிழ்ச்சியுடன் குரலெழுப்பி பலர் இணைந்து இழுப்பதால்தான் தேர் கொஞ்சம்
கொஞ்சமாக நகர்கிறது. தேரை உள்ளூர்க்காரர்கள் மட்டும் இழுப்பதில்லை. தேரோட்டம் பார்க்கவரும் பல வெளியூர்க்காரர்களும் இணைந்தே தேர்
இழுக்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்து தேர் இழுப்பவர்களும் உண்டு. இடையில் வந்து தேர் இழுப்பவர்களும் உண்டு. என்ன இக்கட்டு வந்தாலும் கடைசிவரை தேர் இழுப்பவர்களும் உண்டு. இடையிலே வந்து இடையிலே போகிறவர்களும் உண்டு. இடையிலே வந்து ஏழரையை கூட்டுபவர்களும் உண்டு. சிறியோரும் பெரியோரும் கற்றோரும் கல்லாதாரும் பண்பாளர்கள் பண்பற்றோர் என பலவுண்டு. ஆனால் அங்கே தேர் இழுக்கும் முனைப்புதான் உண்டு.
அதபோல் அக்கினிக்குஞ்சின் வளர்ச்சிக்கு வடம் இழுத்தவர்களை தாங்கள் வகைப்பாடுத்தி நன்றி சொல்லியிருக்கிறீகள். தேரில் இருக்கும் சிலையான கடவுளும் கடவுளுக்கு அருகில் அமர்ந்திருப்பவரும் கூட வடம் இழுப்பவர்களை நினைத்துப் பார்ப்பதில்லை. கடவுள் சிலையாக இருப்பார். அவர் அருகில் இருப்பவர் தன்னை வைத்து வடம் இழுப்பவர்களை பார்த்தபடியே மகிழ்திருப்பார். அவ்வளவே!
வடமிழுப்பவர்களை பாராட்டி நன்றி கூறும் அந்த மாண்புக்கு என் மனதில் எழுந்தவற்றை எழுத்தாக்கி வடித்ததுதான் இக்கட்டுரை. மேலும் அக்கினிக்குஞ்சின் பிறந்தநாளை கடமைக்காக ஒரு நாள் கூத்தாக
கொண்டாடினோம் என்ற எண்ணத்திலிருந்து விடுபடவும் இதை வடிகாலாக காண்கிறேன்.
-சங்கர சுப்பிரமணியன்.