கட்டுரைகள்

இஸ்ரேல் -ஈரான் படைவலு சமநிலை! காசாவில் படைகள் வாபஸ் சாத்தியமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள இந்நிலையில், ஈரான்  – இஸ்ரேல்,  படை வல்லமை குறித்து ஆராயும் ஆக்கமாகும்)
மத்திய கிழக்குப் பகுதிகளில் காட்சிகள் பாரியளவில் மாறி வருகிறது. காசாவை இஸ்ரேல் முற்றுகையிட்டு இருந்தது.  ஆனால், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இஸ்ரேல் காசாவின் கான் யூனிஸ் நகரிலிருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் படைபலம் :
ஈரான் விமானப் படையின் பலம் குறைவாக இருந்தாலும், ஈரானின் ஏவுகணை பலம் அதன் இராணுவ பலத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக அளவிலான ஏவுகணைகளை ஈரான் வைத்திருக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் மற்றும் நடுத்தர தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அதிகமாக உள்ளன. ஏவுகணைகள் இன்னும் வேகமாக பயணிப்பதற்காக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் நோக்கில் தங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஈரான் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஈரான் இராணுவத்தில் பல்வேறு நிலைகளில் 523,000 வீரர்கள் இருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச இராணுவ ஆய்வுகள் நிலையம் கூறியுள்ளது. இதில் வழக்கமான இராணுவப் பணியில் உள்ள 350,000பேரும், இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் (GRGC-ஐ.ஆர்.ஜி.சி) உள்ள 150,000பேரும் அடங்குவர்.
இஸ்லாமிய புரட்சிப் படை:
ஐ.ஆர்.ஜி.சியின் கடற்படைப் பிரிவுகளில் 20,000பேர் உள்ளனர். ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஆயுதம் ஏந்திய கண்காணிப்புப் படகுகளை இந்தக் குழு இயக்கி வருகிறது. உள்நாட்டு புரட்சியை ஒடுக்குவதற்கு உதவிய தன்னார்வலர் படைப் பிரிவான பாசிஜ் பிரிவையும் ஐ.ஆர்.ஜி.சி கட்டுப்படுத்துகிறது.
இந்த படைப் பிரிவு பல நூறாயிரம் பேரை திரட்டும் திறன் கொண்டது. ஈரானில் இஸ்லாமிய அமைப்பு முறையைப் பாதுகாப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஆர்.ஜி.சி உருவாக்கப்பட்டது. அப்போதிருந்து முக்கியமான இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக அது செயல்பட்டு வருகிறது.
வழக்கமான இராணுவத்தை விட இதில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், ஈரானில் வலிமையான இராணுவ படைப் பிரிவாக இது கருதப்படுகிறது.
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஜெனரல் காசெம் சுலைமானி தலைமையில் செயல்பட்டு வந்த ‘குட்ஸ்’ படைப் பிரிவு, வெளிநாடுகளில் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
நேரடியாக ஈரான் ஜனாதிபதி அயதுல்லா அலி காமேனியுடன் தொடர்பில் உள்ள பிரிவு அது. அதில் 5,000பேர் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தப் பிரிவு தற்போது சிரியாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உலகின் சக்திவாய்ந்த ராணுவம்:
உலகின் மிக சக்திவாய்ந்த இருபது இராணுவங்களில் ஒன்றான இஸ்ரேலின் மொத்த ராணுவ பலம் தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிடம் 601 அதி நவீன ராணுவ விமானங்களும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் 48 ஹெலிகொப்டர்களும் 2,200 ராணுவ டாங்கிகளும் உள்ளன. 300 பலமுனை ராக்கெட் வீச்சு அமைப்புகள் உட்பட 1,200 பீரங்கிகளும் இஸ்ரேல் ராணுவத்திடம் உள்ளன.
7 ராணுவ கப்பல்களும் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. மொசாட் உட்பட உலகின் மிகவும் திறன்மிக்க உளவுத்துறை அமைப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது. ராணுவத்திற்காக 2022ல் மொத்தம் 23.4 பில்லியன் டொலர்களை இஸ்ரேல் செலவிட்டுள்ளது.
ஆனால் 2021ல் செலவிட்டுள்ள தொகையில் இருந்து இது 4.2 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.
அத்துடன் அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவியை இஸ்ரேல் பெற்று வருகிறது. 2016ல் அமெரிக்க 10 ஆண்டுகளுக்கான சுமார் 38 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதில் 5 பில்லியன் டொலர் தொகைக்கு ஏவுகணை வாங்க பயன்படுத்தப்படும் என்றே கூறப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் ராணுவ உதவிக்கென சுமார் 58 பில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துள்ளது.
இஸ்ரேல் படை உருவாக்கம்:
இரண்டாம் உலகப்போரின் பின்னர், 26 மே 1948ம் ஆண்டில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் பென்-குரியனின் உத்தரவின்படி, ஹகானா துணை இராணுவப் படை குழுவிலிருந்து படைக்கு கட்டாய ஆட்சேர்க்கும் இராணுவமாக போராளிக் குழுக்களான இர்குன், லெகி என்பவற்றை உள்வாங்கி உத்தியோகபூர்வமாக இஸ்ரேல பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டன.
இஸ்ரேல இராணுவத்தின் குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கைகளாக இஸ்ரேல் விடுதலைப் போர் 1948–1949இலும் பழிக்குப்பழிப் படை நடவடிக்கைகள் 1950s–1960இலும் நிகழ்ந்தன. 1956 சூயெஷ் நெருக்கடி, அதன்பின்னர் 1967இல் ஆறு நாள் போர், தேய்வழிவுப் போர் 1967–1970இலும், யோம் கிப்பூர்ப் போர் 1973இலும் நிகழ்ந்தன.
1978உல் தென் லெபனான் போர், அதன்பின் முதலாவது லெபனான் போர் 1982இலும், மீண்டும் தென் லெபனான் போர் 1982–2000, அதன்பின்னர் முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம் (1987–1993), இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம் (2000–2005), இரண்டாவது லெபனான் போர் (2006), காசா போர் (2008–2009) ஆகிய போர்களில் இஸ்ரேலிய இராணுவம் பங்கேற்றது.
குறுகிய காலத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்ட போர்களின் எண்ணிக்கை, எல்லை முரண்பாடுகள் என்பன அவற்றை உலகிலுள்ள அதிக சமர் பயிற்சியுள்ள, அனுபவம் பெற்ற இராணுவங்களில் ஒன்றாக்கியுள்ளது. அதேவேளை அவை மூன்று முன்நிலைகளில் இயங்குகின்றன.
வடக்கில் லெபனானுக்கும் சிரியாவுக்கு எதிராகவும், கிழக்கில் யோர்தானுக்கும் ஈராக்கிற்கும் எதிராகவும், தெற்கில் எகிப்துக்கு எதிராகவும் ஆகும். 1979இல் எகிப்து-இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தின் பின், அவை கவனத்தை தென் லெபனான் மற்றும் பாலஸ்தீன நிலப்பகுதிக்கு திருப்பியுள்ளன.
இஸ்ரேல் படை வாபஸ்:
இஸ்ரேல் காசாவின் கான் யூனிஸ் நகரிலிருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் இதற்கு வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது ஹமாஸுக்கு எதிரான போர் ஆறு மாதத்தை எட்டியதால் அங்கு தனது திட்டத்தை முடித்துவிட்டே திரும்புவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வீரர்கள் வெளியேறினாலும் கூட, மீதமுள்ள வீரர்கள் அங்கேயே இருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைக் கவனிப்பார்கள் என்றே இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் வேறு ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அதாவது காசாவின் தெற்கே எகிப்தின் எல்லையில் உள்ள ரஃபா நகரத்தின் மீது தாக்குதலுக்குத் தயாராகும் வகையிலேயே ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக அவர் கூறியுள்ளார். இன்னமும் பல ஆயிரம் ஹமாஸ் படை இருப்பதால் எகிப்து அருகே உள்ள நகரமான ரஃபா மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ரஃபே நகரில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் வசிப்பதால் அங்குத் தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. தாக்குதலை ஆரம்பிக்கும் முன்பு அங்குள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமா என்பதில் சந்தேகம் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.