கதைகள்

“ஓநாய்ப் பசிக்காரன்” … வரலாற்றுச் சிறுகதை … சிறுகதை – 62 …. அண்டனூர் சுரா.

“அடேய் விவசாயி மகனே, என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித் துண்டுகளைத் திருடியிருக்கிறாயடா நீ?”

கண்களுக்குள் தனலைக்காட்டி கேட்டிக்கொண்டிருந்தான் உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ். உறைக்குளிருந்து வெளிவரும் வாளினைப் போல அவனது கேள்வி இருந்தது. அவனது நாசிகள் துப்பாக்கிக் குழலாக விடைத்தன.

புஷ்கின், கூண்டுக்கிளியாக கையறு நிலையில் நின்றான். அவனது கால்கள் ஆட்டம் கண்டன. அவனுடைய நாசியிலிருந்து ரத்தம் சன்னமாக ஒழுகிக்கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் சிவப்புப் படை காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜாரரசனின் அதிகாரப்பூர்வ காவலர்கள். அரசன் காட்டும் ஒவ்வொரு சமிக்ஞைக்கும் புஷ்கின் முகத்தில் தாக்குதல் விழுந்தன.

“ஜாரரசன் அரண்மனைக்குள் நுழைய உனக்கு யாரடா தைரியம் கொடுத்தது?, எத்தனை நாட்களாக இந்தத் திருட்டு நடக்கிறது?, கேவலம், நீ விவசாயி மகன்தானே?, போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவனோ?, உன்னுடன் சேர்ந்து திருட வந்தவன்கள் யார் யாரடா?”

ஒவ்வொரு கேள்வியும் சாட்டையாக, உதையாக, அடியாக விழுந்துகொண்டிருந்தன. புஷ்கின் வாயைத் திறக்கவில்லை. திகில் பிடித்த கோரம் அவனது முகத்தில் இருந்தது. வாங்கிய அடி உதைகளால் அவனது தோல் மரத்துப்போனது. உணர்வுகள் அறுந்துவிட்டன. கண்களை மூடவும் திறக்கவுமாக இருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படையாக இறங்கிக்கொண்டிருந்தது.

“அடேய், நீ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவன். கருவறுக்கப்பட வேண்டியவன்!” ஜாரரசன் வார்த்தை கொப்பளத்தால் விரோதித்தான். கொடும்பார்வையால் கயிறு திரித்தான்.

ஜாரரசனுக்கு அரண்மனைத் திருட்டு பெருத்த அவமானமாக இருந்தது. நாசிக்குள் பாம்பு நுழைந்துவிட்டதைப் போல குறுகுறுத்தான். ஆட்சிக்கு எதிராக கலகம் தூண்டிவிட்டதைப் போல உணர்ந்தான். ஜாரரசனுக்கு அவன் நியமித்திருந்த ஒற்றர்கள் மீதும் சிவப்புப் படை காவலர்களின் மீதும் நீதிபதிகளின் மீதும் நம்பிக்கையற்று வெறுப்பு வந்தன.

 

இரண்டாம் நிக்கோலஸ் ஜாரரசனுக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை இருந்தது. அவன் பேரரசன் என அழைக்கப்பட வேண்டும் என்று. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருஷ்ய தேசம், பைஸாண்டிய தேசத்தைப்போல பரந்து விரிந்த தேசமாக இருந்தது. முதலாம் ஜான் பீட்டர் மக்களால் பேரரசன் என்று அழைக்கப்பட்டுவந்தார். பைஸாண்டிய என்கிற பரந்து விரிந்த தேசம் இப்பொழுது இல்லை. ஆனால் அத்தேசத்திற்குரிய பல நிலப்பகுதிகளை இரண்டாம் நிக்கோலஸ் பிடித்திருந்தான். இப்போதைக்கு இப்பூவுலகின் பெரிய தேசம் அவனுக்கும் கீழ் இயக்கும் உருஷ்ய தேசம்தான். அத்தேசத்தை ஆளும் தான், பேரரசன் என அழைக்கப்பட மரபு வழித் திருச்சபை, போயர் மன்றம், சிவப்பு படை இராணுவ வட்டங்களில் தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தான். இதற்குமுன் உருஷ்யாவை ஆட்சிப் புரிந்த முதலாம் நிக்கோலஸ்; முதலாம், இரண்டாம், மூன்றாம் அலெக்ஸாண்டர்களுக்கு இருந்த மதிப்பு, பெருமையை விடவும் ஜாரரசனுக்கு மதிப்பு கூடியிருந்தது.

அதுநாள் வரையிருந்த மரணக் கைதிகளைக் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டத்தை அடியோடி நீக்கி அதற்குப் பதிலாக தூக்குத் தண்டனை விதித்திருந்தான். இந்த திருத்தம் வால்கா கரையோரம் முதல் ட்வினா வரை எழுச்சி இளைஞர்களின் மத்தியில் நன்மதிப்பைக் கூட்டியிருந்தது. குறிப்பாக டார்டார்கள், உக்ரைனியன்கள், செர்பியர்கள், யுரல்மலை பகுதிவாழ் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

ஜாரரசனின் மனைவிகள் ஜாரினாக்கள் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் நீண்ட நாட்களாகச் சமிக்ஞை காட்டிக்கொண்டு வந்தார்கள். அரசக் குடும்பத்திற்கு எதிராக சதி நடக்கிறதென்றும் சிவப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும், படைத் தளபதிகளை மாற்றியமைக்க வேண்டும்! ஆனால் ஜாரரசன் அதனை காதுகொடுத்துக் கேட்கவில்லை. விரைந்து சுழலும் இப்பூமிப்பந்தில் அடியேன் ஒருவனே பேரரசன்; மற்றவர்கள் என் அடிமைகள் எனச் சொல்லிக்கொண்டுவந்தான். ஆனால் எதிர்பாராத அரண்மனைத் திருட்டு அவனுக்குள் ஒரு பெரிய கலவரத்தை மூட்டியிருந்தது.

அரண்மனைத் திருட்டு விசாரணையை முதலில் ஏதேனும் ஒரு நீதிபதியை வைத்து விசாரிக்கவேண்டுமென ஜாரரசன் நினைத்தான். நீதிபதிகள்மீது அவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆகவே அவனே ஒரு அவசர நீதிமன்றத்தை செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பொதுவெளி சதுக்கத்தில் கூட்டினான். இவ்விசாரணை மூலம் பொதுமக்களுக்கும், ஆட்சிக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்களுக்கும், போல்ஷவீக் கும்பலுக்கும் ஓர் எச்சரிக்கையைக் கொடுக்க வேண்டுமென நினைத்தான்.

“அடேய் விவசாயி மகனே, அரசாளும் அரண்மனைக்குள் நுழைந்து திருடக் கற்றுக்கொடுத்தவன் எவனடா?”

புஷ்கின் மேனி குலுங்கினான். அவனது நிர்வாண உடம்பு சில்லிட்டது. கையறு நிலையில் அவன் நின்றான். அவன் என்றோ ஒருநாள் கனவின் நடுப்பகுதியில் கண்ட பிரமாண்டமான கட்டிடத்தைப் போல செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் கட்டிடங்கள் இருந்தன. அவனால் அதை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவனது பற்கள் கிட்டிற்றன. தோல் சுருங்கி சில்லிட்டது. உடல் வெடவெடத்தது.

புஷ்கினின் செய்கையைப் பார்த்து ஜாரரசன் சிரித்தான். அரசன் சிரித்தால் அவையினர் சிரிக்க வேண்டும்!. ஜாரினாக்கள் சிரித்தார்கள். அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்காடுபவர்கள், ஊழியர்கள் எனப் பலரும் சிரித்தார்கள். புஷ்கினும் சிரித்தான். அவன் ஜாரரசன் சிரிப்பதைப் போல உடம்பை நான்கு புறமும் குலுங்கிச் சிரித்தான். அவன் சிரிப்பால் ஜாரரசனின் முகம் சிவந்தது. தன் வாகான தோளை நிமிர்த்தி புஷ்கினைப் பார்த்தான். அதே பார்வையில் அவையை முறைத்தான். அவையினர் அத்தனை பேரும் சிரிப்பை முறித்து தொண்டைக்குள் அடக்கினார்கள்.

“அடேய் விவசாயி மகனே, திருடும் போது இல்லாத பயம் விசாரணையில் ஏனடா வருகிறது?”

ஜாரரசனின் இக்கேள்விக்கு புஷ்கினிடம் பதில் இருந்தது. பதில் சொல்ல வேண்டுமென்றால் தலையை நிமிர்த்த வேண்டும். கழுத்தில் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு பெரிய உலோகக்குண்டு. அது புவிஈர்ப்பு விசையுடன் சேர்த்து அவனது தலையைத் தரையை நோக்கி இழுத்துகொண்டிருந்தது.

புஷ்கின் மொத்தப் பலத்தையும் கழுத்திற்குக் கொடுத்தான். உலோகக் குண்டுடன் சேர்ந்து தலையை நிமிர்த்தினான். ஜாரரசனை ஏறிட்டுப் பார்த்தான். “நான் பெரிதென மதிக்கும் மாட்சிமைத் தங்கிய சக்கரவர்த்தி அவர்களே, என் நடுக்கம் பயத்தினாலானது இல்லை”

“பிறகென்ன பனியினாலானது என்கிறாயா?”

“அதுவும் அன்று. பசியினாலானது.”

ஜாரரசன் ‘கொல்’லெனச் சிரித்தான். “அடேய் பசி கெஞ்சச் செய்யும். இப்படி நடுங்கச் செய்யாதேடா.”

“பேரரசரே, இளம்பசி நடுங்க செய்யும். கொடும்பசி சூறையாடத் தூண்டும்.”

“என்னடா பேசுகிறாய், யாரிடம் பேசுகிறாய்?” ஜாரரசன் கடைக்கண்களை அங்கேயிங்கே ஓடவிட்டான். அவனது பார்வைகேற்ப ஒரு சிவப்புப்படை காவலன் புஷ்கினின் முகத்தில் குத்தினான். இன்னொருத்தன் சாட்டையால் முதுகில் பாய்ச்சினான்.

நரம்பிற்குள் ஓடிய இரத்தம் தோலிற்கு வெளியே ஓடியது. சிலர் அதை இரத்தமாகப் பார்த்தார்கள். சிலர் கலகத்தை மூட்டும் சிவப்பாகப் பார்த்தார்கள். ஜாரினாக்கள் அவனது ரத்தத்தை கண்டு ரசித்தார்கள். இன்னும் கூட அவனது இரத்தம் சிந்தப்பட வேண்டும் என வெறித்தார்கள். சிலர் அரசக் குடும்பத்தினர்களின் முகம் கோணாமல் இருக்க ரசிப்பதைப் போல நடித்தார்கள்.

நீதிமன்றம் மக்கட்திரளால் நிரம்பி வழிந்தது. ஜாரரசன்கீழ் இயங்கும் அத்தனை அதிகார சக்கரங்களும் அவனது பிடிக்கு வந்திருந்தன. இந்த வழக்கு ஜாரரசனின் குடும்ப வழக்கு. ஜாரரசனே விசாரித்து கைதிக்கு தீர்ப்பளிக்கப் போகிறார். இது எப்பொழுதாவது நடந்தேறும். பதினாறாம் நூற்றாண்டில் இப்படியாக விசாரணை நடந்திருக்கிறது. பலருக்குக் கல்லெறி மரணத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஜார் அரண்மனையின் கொந்தளிப்பான ஆண்டுகள் அவை. அவ்வாண்டு புவி சுழற்சியால் மறுபடியும் திரும்பியிருக்கிறதோ, ஜாரரசனுக்கு எதிராக இளைஞர் படை ஒன்று திரண்டிருக்கிறதோ, அதன் தொடக்கம்தான் இந்த அரண்மனைத் திருட்டோ? மக்கள் புதிரான கேள்விகளுடன் விசாரணை சதுக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.

ஜாரரசன் அகோரமாக எழுந்தான். நாவை மடக்கி கண்களால் உருட்டிக் கேட்டான். “அடேய், உன் மேல் நான் சுமத்திருக்கும் குற்றச்சாட்டிற்கு நீ சொல்லவரும் பதில் என்ன?” மொத்த அமைதியையும் அவனது கேள்வி முறித்திருந்தது. பலரும் திடுக்கிட்டார்கள். சதுக்கம் ஒரு குலுங்குக்குலுங்கி நிமிர்ந்தது. ஆனால், புஷ்கின் ஒரு பதட்டமில்லாமல் நின்றுகொண்டிருந்தான்.

“புஷ்கின், நீ செய்திருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்.” சூழ்ந்திருந்த மக்கள் பார்வையால் அவனைக் கனிந்தார்கள். உதடுகளால் கெஞ்சினார்கள். அவர்களின் நெற்றியும் முகச்சுழிப்பும் அதையே சொல்லிக்கொண்டிருந்தன.

ஒரு தடித்த அரைக்கால் டவுசர் அணிந்த சிவப்புப் படை காவலன் சொன்னான். “அடேய், குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குற்றவாளிக்குத் தண்டனை குறைந்திருக்கிறது.”

இன்னொரு காவலன் சொன்னான். “யூதர்கள் பின்பற்றிய கல்லால் அடித்தே கொல்லும் மரணத் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றிய பேரரசன் நம் ஜாரரசன். உன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை ஒப்புக்கொள்.” காதிற்குள் கிசுகிசுத்தான்.

இன்னொரு காவலன், “பிழைக்கத் தெரியாதவனே, .நம் சக்கரவர்த்தி எத்தனையோ மரணத் தண்டனை கைதிகளுக்கு விடுதலை தந்திருக்கிறார். நான்கூட அப்படியாகப்பட்டவன்தான். சிலருக்கு விடுதலையுடன் சேர்த்து வெகுமதியும் கொடுத்திருக்கிறார். நம் உக்ரைன் மாகாண தரைப்படை தளபதி ஒரு காலத்தில் மரணத் தண்டனை கைதி. அவருக்கு விடுதலை கிட்டும் என்று யார் எதிர்பார்த்தார்கள். இன்றைக்கு அவர் ஒரு மாகாணத்தின் தளபதி.

உருஷ்யா முழுவதும் இப்படிக் குற்றத்தை ஒப்புக்கொண்டு உயிர்ப் பிச்சையுடன் பதவிகள் பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. மாஸ்கோ தலைமை நீதிபதி ஒரு காலத்தில் உன்னைப் போல சங்கிலி உலோகக் குண்டால் புனைக்கப்பட்ட குற்றவாளிதான். அவர் செய்த குற்றத்திற்கு மரணத் தண்டனையை விடவும் பெரிய தண்டனை கிடைத்திருக்க வேண்டும். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா? ஜாரரசனின் தம்பி மகனை அரண்மனைக்குள் வைத்து கொன்றிருந்தான். விசாரணை நீதிமன்றத்திற்குச் சென்று மரணத்தண்டனை உறுதியாகியிருந்தது. குற்றவாளி உன்னைப் போல விதண்டவாதம் பேசிக்கொண்டிருக்கவில்லை. ஜாரரசனை சந்தித்து ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் எனக் கெஞ்சி மன்றாடினான். விசாரணை ஜாரரசனிடம் வந்தது. ஜாரரசன் வழக்கை விசாரித்தார். “என் உடன்பிறப்பு மகனை

ஏனடாக் கொன்றாய்?” எனக் கேட்டார். அவன் சொன்னான் “என்னை மன்னிக்க வேண்டும் பேரரசே, உங்களுக்கு எதிராக சதி நடந்தது. உம்மைத் தீர்த்துக்கட்டி உம் அரியாசனத்தில் ஏறும் சதியில் அவன் இறங்கியிருந்தான். அதற்கான நாளையும் குறித்தான். இதை என் கண்ணால் கண்டேன். உமக்கு எதிராகச் சதியா, அதையும் என்னால் பொறுக்க முடியுமா, ஒரு வாளினை உருவினேன். உம் மீது நான் வைத்திருந்த மரியாதையால் அவனது சிரத்தை கொய்தேன். இதற்கு மேல் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்…” என்று சிரம் தாழ்ந்தான். இதற்கு ஜாரரசன் எத்தகைய தீர்ப்பபை வழங்கப்போகிறார் என உலகமே பார்த்திருந்தது. ஜாரரசன் எழுந்து தன் தீர்ப்பை வழங்கினார், “இவன் குற்றவாளி அல்ல. இவன் என் நிழல். இவனை இப்பொழுதே விடுதலை செய்கிறேன். இவன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைப் பாத்திரமாக இவனை நான் மாஸ்கோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கிறேன்…..” என்றார். இதுதான் நம் ஜாரரசன். அவர் நம்பும் படியாக ஏதேனும் ஒரு பொய்யைச் சொல். அவரிடமிருந்து உயிர்ப்பிச்சை வாங்கிக்கொள்.” ஒரு காவலன் புஷ்கின் முகத்தை நிமிர்த்தி கண்கள் பார்க்க அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்லி முடித்தான்.

ஜாரரசன் புஷ்கினை அதட்டினார். அந்த அதட்டல் பெய்யும் பனி மழையைத் துளைத்தது.

“உன்னைத்தானடா கேட்கிறேன், என் அரண்மனைக்குள் நுழைந்து திருடியிருக்கிறாய், இதற்கு நீ சொல்லவரும் விளக்கம் என்ன?”

நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மக்கள் வாயில் கையை வைத்துகொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவர்களின் இதயத் துடிப்புகள் இரட்டித்தன. மூச்சை உள்ளே இழுத்து நெஞ்சடைக்க விட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ‘திக்….திக்…‘ என இருந்தது.

புஷ்கின் தலையை மெல்ல உயர்த்தினான். தடதடக்கும் நடுக்கத்துடன் சொன்னான். “மாட்சிமை தாங்கிய பேரரசே, நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. சிறு தவறுதான் செய்திருக்கிறேன்.”

சூழ்ந்திருந்த மக்களின் முகம் சட்டென இருண்டது. எப்படியேனும் இவன் விடுதலை பெறவேண்டும் என தவித்துக்கொண்டிருந்தவர்களின் துடிப்பு இறுக்கம் கொண்டது.

“என்னடா சொல்கிறாய், குற்றம் செய்யவில்லை. தவறுதான் செய்திருக்கிறாயா, இரண்டிற்கும் ஆகப்பெரிய வித்தியாசமாக என்னடா வைத்திருக்கிறாய்?” ஜாரரசனால் ஒரே இடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. உடம்பு தானாக இருக்கையிலிருந்து எழுவதும் அமர்வதுமாக இருந்தது. நாற்காலி அவன் ஆட்சி செய்யும் நாட்டைப் போல ஆட்டம் கண்டது. நாற்காலி ஆடும் ஆட்டத்திற்கேற்ப அவரைச் சுற்றியிருந்தவர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

“அடேய், உன் பெயரென்ன சொன்னாய்?”

“பேரரசு அவர்களே, என் பெயர் புஷ்கின்”

ஜாரரசன் முகத்தால் சிவந்தான். “இப்படி தலை வால் இல்லாமல் சொன்னால் எப்படி…? தலையெழுத்து, வால் எழுத்தென்று எதாவது இருக்கிறதா இல்லையா?”

“இருக்கிறது பேரரசே, என் முழுபெயர் அலெக்ஸாண்டர் புஷ்கின்.”

“விவசாயி மகன் தானா நீ?” அலட்சியமான உச்சரிப்பில் அக்கேள்வி இருந்தது.

“ஆமாம் அரசே…”

“என் அரண்மனைக்குள் திருடியிருக்கிறாய்?”

“ஆமாம் அரசே…”

“ஒப்புக்கொள்கிறாயா?”

“ஆம், ஒப்புக்கொள்கிறேன் அரசே”

“அப்படியானால் நீ குற்றம் புரிந்தவன், அப்படித்தானே?”

“பசிக்காக உணவைத் தேடுவதும் கிடைக்கையில் அதைப் பறிப்பதும் எப்படி அரசே குற்றமாக முடியும்?”

“இவ்வுலகின் மிகப்பெரிய தேசத்தை ஆளும் என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித் துண்டுகளைத் திருடியவன் குற்றம் புரிந்தவன் இல்லாமல் வேறுஎன்னவாம்…?”

“நான் பெரிதென மதிக்கும் அரசே, நான் அரண்மனைக்குள் நுழைந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஓர் அறையில் தங்கக்குவியல் இருந்தது. நான் நினைத்திருந்தால் அதை வாரியள்ளி முடிந்திருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. இன்னொரு அறைக்குள் நுழைந்தேன். அறை முழுவதும் ஆபரணங்கள் இருந்தன. அதையும் நான் சீண்டவில்லை. மற்றொரு அறையில் பொற்காசுகள் குவிந்திருந்தன. அதையும் நான் தொடவில்லை. மற்றொரு அறையில் நீர் உடுத்தும் விலை மதிப்புமிக்க ஆடைகளும் மற்றொன்றி்ல் போர் குறித்த ரகசிய ஆவணங்களும் இருந்தன. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் திருடியிருந்தால் உம் கேள்வி சரியென இருக்கும். நான் எடுத்தது ஒன்றிரண்டு ரொட்டித் துண்டுகள்தான் அரசே. அதையும் நான் என் பசிக்காகவே எடுத்தேன். பசி தணிந்த பிறகு மேலும் ஒரு ரொட்டித் துண்டுகளைத் தின்றிருந்தால் நீவிர் சொல்வதைப் போல நான் குற்றம் புரிந்தவனாகியிருப்பேன். மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ரொட்டி அடுத்தவர் ரொட்டி அரசே. இது என் தந்தை எனக்கு சொன்னது அரசே. ரொட்டித்துண்டுகளை எனக்காகத்தான் எடுத்தேன். தின்றேன். பசி அடைந்த பின் அரண்மனைக்கு வெளியே ஒரு மரத்தடியில் உண்ட மயக்கத்தில் உறங்கினேன். உம் சிவப்புப் படை காவலர்கள் வேறு யார் யாரையோ பிடித்துவைத்துகொண்டு அடித்து உதைத்து வதைத்தார்கள். என் மனம் பொறுக்கவில்லை. நானாக முன்வந்து நான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன். இது எப்படி அரசே குற்றமாக இருக்க முடியும்?”

“அடேய், நீ செய்தது பெருங்குற்றம்.”

“இல்லை அரசே, நான் புரிந்தது குற்றமல்ல. சிறுதவறுதான்….”

ஜாரரசன் விலங்கிட்ட புஷ்கினைப் பார்த்தான்.

“குற்றத்திற்கும் தவறுக்குமிடையில் நீ காணும் வித்தியாசம் என்ன?”

“இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாகப் பார்க்கிறேன்…..”

“அதைத்தான் கேட்கிறேன்.”

“சொல்கிறேன் அரசே, தாகமெடுக்கிறது. நா வறண்டுத் தவிக்கிறது. கண்கள் இமைகளுக்குள் கனக்கிறது. ஒரு மிடறு தண்ணீர் வேண்டும். தாருங்கள், தாகம் தணித்துகொண்டு இரண்டிற்குமான வித்தியாசத்தைச் சொல்கிறேன்.”

ஒரு காவலன் கையில் வேலுடன் தண்ணீர் கொண்டுவர ஓடினான். ஜார் மன்னன் அவனைத் தடுத்தான். “அவனுக்கு தண்ணீர் கொடுக்காதீர். அவன் செய்திருக்கும் குற்றத்திற்கு ஒரு மாத காலம் தாகம் தணியாமல் இருக்க வேண்டும் என்பது அவனுக்கு நான் கொடுக்கும் ஒரு தண்டனை.”

தண்டனையைக் கேட்டதும் மக்கள் காதினைப் பொத்தினார்கள். நகரம் துக்கம் தரித்த அமைதியானது. புஷ்கினின் கால்கள் ஆட்டம் கண்டன. கழுத்தில் தொங்கிய உலோகக்குண்டு அவனை தரையோடு சாய்த்தது. அவன் முட்டிக்காலிட்டு குப்புற விழுந்தான். நெற்றி அடிபட சுருண்டான்.

“என் அரண்மனைக்குள் நுழைந்தது ஒரு குற்றம். அரண்மனை ரகசியங்களைக் கண்டது இன்னொரு குற்றம். ரொட்டித் துண்டுகளைத் திருடியது இன்னொரு குற்றம். குற்றத்தின் மேல் குற்றம் செய்திருக்கிறாய் நீ.”

“எனக்கு ஒரு மிடற்று தண்ணீர் மட்டும் தாருங்கள் அரசே.”

“தருகிறேன். என் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல். .நான் கேள்விப்பட்டிருக்கும் பதிலை நீ சொல்வாயேயானால் உன்னை விடுதலை செய்கிறேன். எதாவது ஒரு மாகாணத்தின் தளபதியாக்கி அழகுப் பார்க்கிறேன்.”

குப்புற விழுந்துக்கிடந்தவன் தலையை உயர்த்தி ஜாரரசனைப் பார்த்தான். உறைந்து உட்கார்ந்திருந்த மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

“விவசாயி மகனே, உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யார்?”

புஷ்கின் தலையை மேலும் நிமிர்த்தினான். தெரிந்த கேள்வியைக் கேட்டமைக்காக கண்களால் நன்றி நல்கினான். என்னை விடுதலை செய்துவிடுமாறு கெஞ்சினான்.

“மாமன்னர் அவர்களே, என்னுடன் சேர்ந்து மூன்று பேர் திருடினார்கள்.”

ஜாரரசன் எரிமலை போல எழுந்தான். அவனுடன் சேர்ந்து சபை எழுந்தது. நீதிபதிகள் எழுந்தார்கள். ஜாரரசன் கையை ஒரு முறை தட்டிக்கொண்டான். மீசையை நீவிக்கொண்டான். ஒரு முறை கனைத்துக்கொண்டான். அதே இடத்தில் நின்றவாறு குதித்தான். அதற்கும் இதற்குமாக நடந்தான். “என் கணிப்பு சரியாகி விட்டது. என் ஆட்சிக்கு எதிராக போல்ஷவீக் கும்பல் சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரியவருகிறது! காவலர்களே, என் ஆளுமையின் கீழ் பணியாற்றும் ஊழியர்களே கேட்டுக்கொள்ளுங்கள். போல்ஷ்வீக் பயல்கள் தேசத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் கருவறுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேரொடு களையப்பட வேண்டியவர்கள். அவர்களின் நிழல் என் ஆட்சி பகுதிக்குள் விழுதல் கூடாது.”

சிவப்புப் படை வீரர்கள் ஒரு சேர எழுந்தார்கள். நெஞ்சை நிமிர்த்தி நின்றார்கள். ஒன்றாகக் குனிந்து நிமிர்ந்தார்கள். “மாட்சிமை தாங்கிய மாமன்னர் வாழ்க. ஜாரரசன் புகழ் ஓங்குக.”

ஜாரரசன் ஒரு கணம் அமைதியாக வீற்றிருந்தான். புஷ்கின் முகத்தைப் பார்த்தான். அவனுடைய தவிப்பையும் கெஞ்சல் துடிப்பையும் ரசித்தான். ஒரு காவலனிடம் கையை நீட்டி அவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கொடுக்குமாறு பணித்தான்.

ஒரு காவலன் தண்ணீர் கொண்டு வந்தான். இன்னொரு காவலன் அதை வாங்கி புஷ்கின் வாயினில் ஊற்றினான். தண்ணீர் நூலிழையாக தொண்டைக்குள் இறங்கியது.

“புஷ்கின், நீ மிக விரைவில் விடுதலையாகப் போகிறாய். தாமதிக்காதே. உன்னுடன் சேர்ந்து திருடியவர்கள் யார் யாரென்று சொல்லி முடி.”

“அந்த மூவருமே என் தோழர்கள் அரசே.”

ஜாரரசனின் முகம் இருண்டது. பற்களைக் கடித்தான். கண்களை உருட்டி விழித்தான். “அவர்கள் யார் யார்?”

“சொல்கிறேன் அரசே, அதற்கு முன் பசியாற எனக்கு இரண்டு ரொட்டித்துண்டுகள் வேண்டும்.”

ஒரு காவலன் ஓடினான். ஒரு தட்டில் சில ரொட்டித் துண்டுகளை எடுத்து வந்தான். அதை ஒவ்வொன்றாக எடுத்து புஷ்கின் வாயினில் திணித்தான். புஷ்கின் பசியாறினான். தண்ணீர் பருகினான்.

“வேறு என்ன வேணும், கேளும் தருகிறேன்?”

“போதும் பேரரசே” புஷ்கின் தலையால் குனிந்து நன்றி நல்கினான்.

“சொல்லும். அவர்கள் யார்?”

நீதிமன்றம் நிசப்தமானது. மக்கள் விதிர்விதிர்த்து உட்கார்ந்தார்கள். அவர்களின் ஆசுவாசமான மூச்சு நின்று பெருமூச்சாக நெஞ்சுக்குள் அடைத்தது. “இவன் தொலைகிறான் என்றில்லாமல் யார் யாரையோ காட்டிக்கொடுக்கப்போகிறான். இவன் படுபாவி. இவனுக்காக நாம் இரக்கமுற்றோமே. இவன் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டியவன். துரோகி….” மக்கள் தொண்டைக்குள் பேசிக்கொண்டார்கள்.

புஷ்கின் மெல்ல எழுந்தான். மக்களைப் பார்த்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றவாறு கெஞ்சி நின்றான். “அரசே, என்னுடன் சேர்ந்து திருடியவர்கள் மூன்று பேர்.”

“ஆம், அவர்கள் யார் யார்?”

“முதலானவன் அடர் இருட்டு.”

ஜாரரசன் வெகுண்டான்.

“இரண்டாவது தோழன் சிட்டெனச் சீறிப்பாயும் ஒரு குதிரை”

மன்னரின் முகம் இருண்டது.

“மூன்றாவது தோழன் ஒரு வில். அத்துடன் சில அம்புகள்.”

‘விராட்..’ என்று எழுந்தான் ஜாரரசன்.

“அடேய் விவசாயி மகனே, நீ நன்றாகப் பேசுகிறாயடா. என் நீதிமன்ற அவையில் இதற்கு முன் எவனும் இப்படி பேசியதில்லையடா. உன் பேச்சுத் திறமையைப் பாராட்டுகிறேன். அத்துடன் உனக்கு நான் மூன்று பரிசுகள் தருகிறேன்.

முதல் பரிசு கிடைமட்டமாக ஊன்றப்பட்ட இரண்டு கம்பங்கள். இரண்டாவது பரிசு அதன் குறுக்கே கட்டப்பட்ட ஒரு சட்டம். மூன்றாவது பரிசு அதில் தொங்கும் ஒரு கயிறு.”

தீர்ப்பு வழங்கிய ஜாரரசன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல நீதிமன்ற அவையை விட்டு வெளியேறினான். அவனது கடைசி வெளியேற்றம் இது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.