கவிதைகள்
“சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே” … கவிதை…. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
தைமகள் வந்தாள் தழுவியே நின்றாள்
கைநிறைய அள்ளித் தந்துமே நின்றாள்
தெய்வீகம் நிறைந்தது தெளிவுமே தந்தாள்
தித்திப்பாய் பொங்கலை ஆக்கியே நின்றாள்
என்பின்னே சித்திரை வருகிறாள் என்றாள்
ஏற்றபல உங்களுக்கு அளித்திடுவாள் என்றாள்
தைமகளின் வார்த்தை தடவியே கொடுத்தது
தளர்வகன்று சித்திரயை வரவேற்க நின்றோம்
சித்திரை என்றதும் நித்திரையே ஓடிவிடும்
புத்துடுப்பு மத்தாப்பு புதுநினைப்பே எழுந்துவிடும்
கொண்டாட்டம் குதூகலம் கூடவே சேர்ந்துவிடும்
அத்தனையும் சித்திரைதான் அளிப்பதற்கு வந்துநிற்கும்
தைமகளே வருடத்தில் முதல்வந்து நின்றாலும்
சமயமது சித்திரையை முதல்மகளாய் ஆக்கிருக்கு
சித்திரையை முன்னிறுத்தி பஞ்சாங்கம் அமைகிறது
அத்தனையும் சித்திரையை அடியொற்றித் தொடர்கிறது
பஞ்சாங்கம் பார்ப்பதும் பலன்களை அறிவதும்
பலருக்கும் பெருவிருப்பாய் சித்திரையில் அமைந்திடுமே
பலன்பார்த்து பலன்பார்த்து பரவசத்தில் மிதப்பாரும்
பலன்சிறக்கா முழிப்பாரும் சித்திரையில் இணைந்திடுவார்
மருத்துநீர் என்பது சித்திரையின் சிறப்பாகும்
தலைக்கோர் இலையும் கால்களுக்கோர் இலையும்
வைத்ததன் மேல்நின்று மருத்துநீர் தலைவைத்து
நீராடும் வழக்கம் சித்திரையின் முக்கியமே
மூடப் பழக்கமென்று முகஞ்சுழிக்க வேண்டும்
முன்னோர்கள் சிந்தனையைப் பின்தள்ள வேண்டாம்
இயற்கை மருத்துவத்தை இணைக்கின்ற வண்ணம்
எல்லாமே அமைவதுதான் எம்முன்னோர் எண்ணம்
பருவ காலங்களை பண்டிகையோ டிணைத்து
வருகின்ற வகையிலே வழிவகுத்தார் முன்னோர்கள்
கருத்தூன்றிக் கவனித்தால் கருத்தாக அமையும்
கண்மூடிப் பார்த்திட்டால் கருத்தெல்லாம் சிதறும்
சீனிப்பலகாரம் தித்திக்கும் சோகிப் பலகாரம்
அச்சுமுறுக்கு அமர்களமாய் அருமைச் சுவையோடு
இல்லாரும் செய்வார் இருப்பார் கூடச்செய்வார்
எல்லாமே சித்திரையை இன்பமாய் ஆக்கிடுமே
கோவில்கள் எங்கும் கோலகலமா யிருக்கும்
வாயில்கள் தோறும் மக்களாய் நிரம்பிடுவர்
அபிஷேகம் அலங்காரம் ஆண்டவனைக் குளிர்விக்கும்
அடிபரவும் அடியாரை ஆண்டவனும் மகிழ்விப்பார்
சித்திரையில் தேரோட்டம் நடக்கின்ற கோவிலெல்லாம்
திரண்டடியார் சென்றுமே தேர்வடத்தைப் பிடித்திழுப்பார்
தேர்வடத்தைப் பிடித்திட்டால் செய்தவினை அகலுமென்று
நம்பிக்கை மனதிலெழ வடம்பிடித்து மனம்நிறைவார்
சித்திரையைச் சிறப்பிக்க முத்தமிழே முன்னிற்கும்
பட்டிமன்றம் பாட்டுமன்றம் பலவுரைகள் நிகழ்ந்திடுமே
ஆடலொடு பாடலும் ஆனந்தம் அளித்திடுமே
அங்குமே சித்திரையும் முத்திரையாய் ஜொலித்திடுமே
ஆன்மீகம் இருக்கும் அழகுக்கலை இருக்கும்
அறிவியலும் இருக்கும் ஆசாரமும் இருக்கும்
அனைத்தையும் உள்ளடக்கி அமைகின்ற திருநாளாய்
சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே
கருத்துடைய சித்திரையை களிப்புடனே பார்ப்போம்
கைகோர்த்து அனைவருமே களிப்புற்று நிற்போம்
கையணைத்து உறவுகளைக் களிப்படைச் செய்வோம்
கற்கண்டாய் சர்க்கரையாய் களிசொற்கள் பகிர்வோம்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா….