மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்….போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியது அமெரிக்கா!
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இஸ்ரேலை பாதுகாக்கவும் மத்திய கிழக்கில் உள்ள தனது படைகளை பாதுகாக்கவும் அமெரிக்க இராணுவம் வெள்ளிக்கிழமை மத்திய கிழக்கில் இரண்டு நாசகாரி கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாக, தி வோல் ஸ்ட்ரீட் ஜேனல் தெரிவித்துள்ளது.
தி வோல் ஸ்ட்ரீட் ஜேனல் தகவலின்படி, ஒரு நாசகாரி ஏற்கனவே பிராந்தியத்தில் இருந்தது, இரண்டாவது அங்கு திருப்பி விடப்பட்டது. நாசகாரிகளில் ஒன்று ஏஜிஸ் ஏவுகணை-தற்காப்பு அமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
ஈரானின் தாக்குதலின் நேரம் மற்றும் இடம் பற்றி நன்கு அறிந்த ஒருவரின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த தந்திரோபாய நகர்வுகள் வந்ததாக ஜேனல் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
“எங்கள் பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் தரையிலும், வானிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், மேலும் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதை நாங்கள் அறிவோம்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் வெள்ளிக்கிழமை இஸ்ரேலில் தெரிவித்தார்.
ஈரானிய தாக்குதலைப் பற்றி விவாதிப்பதற்காக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி இராணுவ ஜெனரல் எரிக் குரில்லாவையும் வெள்ளிக்கிழமை கேலன்ட் சந்தித்தார்.
ஈரானின் உடனடி பதிலடித் தாக்குதல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன. ஈரானின் அச்சுறுத்தல்கள் “உண்மையானவை” மற்றும் “சாத்தியமானவை” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஈரானும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை எச்சரிக்கைகளை பரிமாறிக்கொண்டன. அதிபர் ஜோ பைடன் ஈரானுக்கான தனது செய்தி, “வேண்டாம்” என்று கூறினார். அமெரிக்காவிற்கு ஈரானின் செய்தி “அதிலிருந்து விலகி இருங்கள்.”என்பதாக இருந்தது.
இதற்கிடையில் இஸ்ரேல் ஏற்கனவே தனது எச்சரிக்கையை விடுத்துள்ளது. “நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை நாங்கள் அறிவோம், யார் நம்மை காயப்படுத்தினாலும் அல்லது நம்மை காயப்படுத்த திட்டமிட்டாலும் – நாங்கள் அவரை காயப்படுத்துவோம் என்ற எளிய கொள்கையின்படி செயல்படுவோம்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.