கதைகள்

“கனகர் கிராமம்” … தொடர் நாவல் …. அங்கம் – 25 …. செங்கதிரோன்.

கோகுலன் – கோகுலனின் தாயார் – கதிரவேல் – கதிரவேலின் தாயார் – கதிரவேலின் அக்கா – கோகுலனின் இளையக்காவும் குழந்தையும் – பெரியவர் சாமித்தம்பி எல்லோரும் கதிர்காம முருகன் ஆலயம் சென்று காலை ஆறுமணிப் பூசையை பார்த்து விட்டு வள்ளியம்மன் மடம் வந்து சேர்ந்தார்கள்.

ஊருக்குப் புறப்படுவது என்பது உறுதியாகிவிட்டது. வள்ளியம்மன் மடத்தில் தாம் தங்கியிருந்த அறையையும் இடத்தையும் காலி செய்து கைத்தூக்குச் சாமான்களையும் காவிக்கெண்டு மாணிக்ககங்கை ஆற்றைக் கடந்து அக்கரையில் கூடாரவண்டில் தரித்துநின்ற இடத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள். வண்டிலோட்டியும் உதவியாளனும் அவர்களுடன் கோகுலன் மற்றும் கதிரவேலும் சேர்ந்து வண்டிலில் வைத்துக் கட்டவேண்டிய சாமான்களைத் தெரிந்து வண்டிலில் ஏற்றிவிட்டுப் பயணத்தின்போது தேவையான சாமான்களைத் தனியே கைத்தூக்குகளாக எடுத்துக் கொண்டார்கள். தாங்கள் ‘பஸ்’ஸில் ஊருக்குச் செல்ல வண்டில் நெடுஞ்சாலை வழியே பயணித்துப் பொத்துவில் வந்து சேர்வது என்பதே பயண ஏற்பாடு. கதிர்காம பஸ் நிலையம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது. பஸ்நிலைய வீதியோரத்தில் அப்பம் சுட்டு விற்றுக்கொண்டிருந்த ஆச்சிமார்களை நோக்கி எல்லோரும் சென்று காலைச்சாப்பாடாக அப்பம் சாப்பிட்டார்கள்.

அப்பம் சாப்பிட்டுவிட்டு பஸ்நிலையத்திற்குள் நுழைந்தபோது சொல்லி வைத்தாற்போல பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு செல்லும் பஸ், ‘வணக்கம்! வாருங்கள்!’ என்றாற்போல கோகுலனின் தாயாரின் யாத்திரை அணியை வரவேற்றது. எல்லோரும் ஆசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

பஸ் புறப்பட்டதும் ‘பஸ்’சுக்குள் இருந்த பயணிகள் ‘அரோகரா’ ஒலியை எழுப்பப் பெரியவர் சாமித்தம்பி வெளியெ கலங்கிய கண்களுடன் கையசைத்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தார். வண்டிலோட்டியும் உதவியாலும் கூடநின்று கையசைத்தார்கள்.

கதிர்காமத்திலிருந்து காலை ஒன்பது மணிபோல் புறப்பட்ட பஸ் புத்தல – மொனராகல – சியாம்பலதுவ – லகுகல வழி பொத்துவிலை மத்தியானம் ஒரு மணிக்கு வந்து சேர்ந்தது.

எல்லோரும் ‘பஸ்’சை விட்டு இறங்கினார்கள்.

கோகுலனின் தாயார் கதிரவேலின் தாயாரிடம் ‘’வாங்க மச்சாள்! ஊட்ட போய்ச் சாப்பிட்டு ஆறுதலா இரிந்து புறகு பின்னேரமாப் பாணமைக்குப் போகலாம்தானே” என்று கூறி அழைத்தார்.

“இல்ல மச்சாள்! இன்னொரு நாளைக்குப் பாப்பம். இப்ப நேரம் கிடக்குத்தானே. அங்கால பாணம ‘பஸ்’சும் நிக்கிது. அதில போனா நேரத்திற்கு ஊட்ட போயிரலாம்” என்று பவ்வியமாகச் சொல்லிக் கோகுலனின் தாயாரின் அன்பான அழைப்புக்கு இங்கிதமாகப் பதிலளித்தார்.

கோகுலனின் தாயாரும் கோகுலனும், கதிரவேல் – கதிரவேலின் தாயார் – கதிரவேலின் அக்கா ஆகியோரைப் பொத்துவில் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பாணமை ‘பஸ்;’சில் ஏற்றி பஸ் புறப்படு மட்டும் நின்று அவர்களை அன்போடு வழியனுப்பி விட்டுக் கைத்தூக்குச் சாமான்களைக் காவிக்கொண்டு கோகுலன் – கோகுலனின் தாயார் – கோகுலனின் இளையக்கா குழந்தையுடன் எல்லோரும் பொத்துவில் வட்டிவெளியிலுள்ள தமது வீட்டிற்கு நடைபோட்டார்கள்.

வீட்டையடைந்தபோது, கதிர்காமம் சென்று திரும்பியவர்களைக் கண்ட கோகுலனின் பெரியக்காவும், சின்னக்காவும் மகிழ்ச்சியில் முகம்மலரச் சிரித்தபடி எதிர்கொண்டு வரவேற்றார்கள்.

பின் கோகுலனின் சின்னக்கா அவசரமாகத் தனது வீட்டிற்குச் சென்று திரும்பி வந்து “தம்பிக்குக் கொழும்பிலிரிந்து கடிதமொண்டு வந்திரிக்கி” என்று சொல்லிக் கடிதமொன்றைத் தாயாரிடம் நீட்டினார்.

ஆங்கிலத்தில் முகவரியிடப்பட்டிருந்த அக்கடிதம் கோகுலனின் தாயாரின் கையிலிருந்து கோகுலனின கைக்குத் தாவியது. கடிதத்தைப் பிரித்துப் பார்த்த கோகுலன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

“அம்மா! ‘இரிக்கேசன் லேனர்ஸ்’ நேர்முகப்பரீட்சையில் நான் தெரிவாகிவிட்டேன்” என்று உரத்துக்கூறியபடி கூத்தாடினான்.

கோகுலனின் தாயாரின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சுரந்தது.

“எல்லாம் அந்தக் கதிர்காமக் கந்தண்ட கருணதான். கதிர்காமம் நடந்து போய் ஊட்ட வந்து சேரக்குள்ள நல்ல சேதியத் தந்திரிக்கான். நான் வைச்ச நேத்திக்கடன் வீண்போகல்ல” என்று சொல்லிக் கதிர்காமக் கந்தனை நினைந்து கைகூப்பித் தொழுதாள்.

தந்தையுமில்லாமல் தன்னை வளர்த்து ஆளாக்கிய தனது தாயாரின் மனம் குளிர்வதைக் கண்டு கோகுலனின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. தாயின் கஸ்டங்களைத் தான் இனிப்போக்கலாம் என்ற எண்ணமும் தன் தம்பியின் படிப்புக்கும் தனக்கு மூத்த பெண் சகோதரங்களின் குடும்பங்களுக்கும் உதவலாம் என்ற நம்பிக்கையும் அவன் மனதில் துளிர் விட்டன.

கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகள் மற்று தேவைப்பாட்டு விடயங்களையெல்லாம் ஆயத்தம் செய்து நீர்ப்பாசன பயிலுனர் பயிற்சி நெறிக்குப் போவதற்காக நாளையிலிருந்தே தயாராக வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான் கோகுலன்.

1968 இல் நின்று கொண்டிருந்த காலக்குதிரை கடிதென முன்னோக்கி வேகமாக விரைந்தது.

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ என்ற இடத்தில் அமைந்திருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காகத் தனது தாய்மாமனான (தாயின் தம்பி) பண்டிதர் வி.ரி.செல்லதுரை பதினெட்டு வயதுச் சிறுவனான தன்னைப் புகையிரதத்தில் மட்டக்களப்பிலிருந்து மாகோச்சந்தி சென்று பின் மாகோச்சந்தியில் மாறி அனுராதபுரம் செல்லும் புகையிரதத்தில் கல்கமுவ கூட்டிச் சென்றது – 01.11.1968 இல் ஆரம்பித்த பயிற்சி நெறியில் 1969 ஃ 70 இருவருடங்கள் அங்கு தங்கியிருந்து நீர்ப்பாசனப் பொறியியல் ‘டிப்ளோமா’ பயிற்சி நெறியை ஆங்கில மொழிமூலம் பூர்த்தி செய்து 01.02.1971 இலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களத்தில் ‘ரி. ஏ’ ஆக முதல் நியமனம் பெற்றது – நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அம்பாறை அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ் அம்பாறை, உகனை, சம்மாந்துறைப் பகுதிகளில் ஆரம்பகாலங்களில் கடமையாற்றியது- பின் நீர்ப்பாசனத் திணைக்கள வேலைகளையும் முன்னைய ‘பொதுமராமத்து இலாகா’ வின் வீதி வேலைகளையும் முன்பு கமத்தொழில் திணைக்களத்தின் கீழிருந்த சிறிய நீர்ப்பாசன வேலைகளையும் முன்பு உள்ளூராட்சித் திணைக்களம் கையாண்ட உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ‘ஆள்புல சிவில் பொறியியல் அமைப்பு’ என்ற அமைப்பின் கீழ் மதவாச்சித் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் 1970 இல் பதவிற்கு வந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலையிலான அரசாங்கத்தின் காணி நீர்ப்பாசன அமைச்சருமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சேனநாயக்கா கொணர்ந்து, அதன் பிரதேச அலுவலகங்களிலொன்றான கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்திற்கு அம்பாறையிலிருந்து தான் மாற்றம் பெற்றது – கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் பிரிவின் கீழ் களியோடை அணைக்கட்டு, செங்கல்படை அணைக்கட்டு, உள்ளாறு அணைக்கட்டு, கல்லரிச்சல் வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசன வேலைத் தலங்களில் கடமையாற்றியது – பின் 1975 இலிருந்து சாகாமப் பிரதேசத்திற்கும் கோமாரிப் பிரதேசத்திற்கும் பொறுப்பான ‘ரி. ஏ’ ஆகப் பணியாற்றத் தொடங்கியது என கோகுலனின் நினைவுச்சங்கிலி ஓடவிட்ட திரைப்படச் சுருள்போல ஓட 1968 இலிருந்து 1977 வரையிலான சம்பவங்கள், காட்சிகள், அனுபவங்கள் எல்லாமே புகையிரத்தில் பயணிக்கும் போது வெளியே யன்னல்களுக்கூடாக எதிர்த்திசையில் கடந்து செல்லும் காட்சிகளைப் போல வேகமாகக் கடக்கக் காலக்குதிரை 1977 இல் வந்து தரித்தது. கோகுலன் இப்போது இருபத்தியேழு வயது இளைஞனாகவிருந்தான்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் (பாராளுமன்றம் அப்போது தேசிய அரசுப்பேரவை என அழைக்கப்பட்டது) பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக மயில்வாகனம் கனகரட்ணம் தெரிவானார்.

கனகரட்ணம் அவர்கள் இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப் பெற்ற அரசியல் கட்சிகளிலொன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொத்துவில் தொகுதிக்கான வேட்பாளராக நியமனம் பெறுவதற்கும் – பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தேர்தல் தொகுதியின் இரண்;டாவது பாராளுமன்ற உறுப்பினராக அவர் வெற்றியீட்டுவதற்கும் நெம்புகோலாக நின்று பாடுபட்டது கோகுலன்தான்.

1977 இல் தரித்துநின்ற காலக்குதிரையில் இருந்தபடி கோகுலன் அரசியல் விவகாரங்களில்; தான் அறிந்தவற்றையும் – ஆர்வம் கொண்டிருந்த விடயங்களையும் தனது தேடலில் கிடைத்த தகவல்களையும் – தனது வகிபாகத்தையும் தன் நினைவு வீணையில் மீட்டத் தொடங்கினான்.

1970 இல் பதவியேற்ற இலங்கையின் ஏழாவது பாராளுமன்றம் 18.05.1977 அன்று கலைக்கப்பட்டது.

சுதந்திர இலங்கையில் முப்பது வருடகாலம் தங்களுக்கு என்றொரு தங்களால் தெரிவு செய்யப்பெற்ற தமிழ்ப்பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அற்றிருந்து, அதனால் சமூக பொருளாதார அரசியல் ரீதியாகப் பல பின்னடைவுகளுக்குள்ளாகிப் போயிருந்த அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு முதன் முறையாக ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வழங்குவதைச் சாத்தியமாக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின்; தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின்போது ஏற்படுத்தப்பெற்ற ‘புதிய’ பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதி உருவாக்கத்திற்குக் கோகுலனும் அவனுடன் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கூடப்படித்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த சண்முகநாதனும் சேர்ந்து உழைத்திருந்தனர்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் புதிய பொத்துவில் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களாக மு. திருச்செல்வம் கியூ. சி – அ. தங்கத்துரை – கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரது பெயர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி வட்டாரங்களில் அடிபட ஆரம்பித்திருந்தன.

அப்போது கோகுலன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொத்துவில் தொகுதிக்கிளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவனாக இருந்தான்.

புதிய பொத்துவில் தொகுதியில் வெற்றியை நிச்சயப்படுத்தக்கூடிய ஒரு தமிழ் வேட்பாளரையே தேடிப்பிடிக்க வேண்டுமென்று தீர்மானித்தான். தமிழர் விடுதலைக்கூட்டணி வட்டாரங்களில் அடிபட்ட பெயர் வழிகளான திருச்செல்வம் – தங்கத்துரை – காசிஆனந்தன் ஆகியோர் தகுதியான வேட்பாளர்களெனினும் அவர்கள் வெற்றியீட்டுவது அரும்பொட்டில் தவறிப் போய்விடவும்கூடும் என்பது அவனது கணிப்பு. அதற்குக் காரணமும் இருந்தது.

புதிய பொத்துவில் தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை 27,000 தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 17,000 சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை 5000. ஆட்சிக்கு வரக்கூடிய இலங்கையின் பிரதான தேசியக்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தத்தம் கட்சிகளின் வேட்பாளர்களாக முஸ்லீம்களையே நிறுத்தும். முஸ்லீம் மற்றும் சிங்களவாக்காளர்கள் இணைந்தும் இரண்டு அணிகளாகப் பிரிந்தும் இந்த இரண்டு கட்சிகளுக்குமே வாக்களிப்பார்கள். தமிழ் வாக்காளர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். முஸ்லீம் மற்றும் சிங்கள வாக்காளர்;கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் வாக்களித்தால் இரண்டு கட்சிகளும் தலா 16,000 {(27,000 + 5000) ÷2} வாக்குகளைப் பெறும். தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழர்களின் வாக்குகள் முழுவதும் அளிக்கப்படும் என்ற எடுகோளின் படி அக்கட்சிக்குப் 17,000 வாக்குள் விழும். இந்த அடிப்படையில் கணிப்பீடு செய்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் அளிக்கப்படும் வாக்குகள் 16,000 : 16000 : 17,000 என்ற விகிதத்தில் அதாவது கிட்டத்தட்ட 1 : 1 : 1 என அமையும்போது தமிழர்களுடைய வாக்குகள் சிறிதளவாவது சிதறடிக்கப்படுமாயின தெரிவு செய்யப்படும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுமே முஸ்லீம்களாகவே அமைந்துவிடக்கூடிய ஆபத்து உண்டு. ஒரு முஸ்லீம் பிரதிநிதி ஐக்கிய தேசியக் கட்சியிலும் மற்றைய பிரதிநிதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் தெரிவாவர். அப்படி நடைபெற்றால் பொத்துவில் தொகுதியானது முஸ்லீம் ஒருவரும் தமிழர் ஒருவரும் தெரிவு செய்யப்படக்கூடியவாறு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக உருவாக்கப்பட்டதன் நோக்கமும் அடிபட்டுப் போய்விடும். அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தொடர்ந்தும் அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவார்கள்.

இதனைச் சமன் செய்வதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்படும் தமிழர் பொத்துவில் தொகுதியில் முஸ்லீம்களுடைய வாக்குகளைக் கொஞ்சமாவது பெற்றுக்கொள்ளும் வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வெற்றி நிச்சயம். அப்படியான ஒருவரைக் கோகுலன் தேடியபோது தொழிலதிபர் கனகரட்ணத்தின் பெயரே அவனது தெரிவாக இருந்தது.

இரண்டொரு தினங்களில் முஸ்லீம் ஐக்கிய முன்னணி என்ற அமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி முஸ்லீம் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம் பெரும்பான்மைத் தொகுதிகள் சிலவற்றில் தமிழர் விடுதலைக்கூட்டணி வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட கல்முனை வரவிருக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தைச் சந்தித்து இது விடயமாக முதலில் பேசவேண்டுமென்று கோகுலன் தீர்மானித்துக் கொண்டான்.

அமர்தலிங்கம் கல்முனை வந்து கல்முனையில் தமிழர் விடுதலைக்கூட்டணிப் பிரமுகரான நொத்தாரிஸ் கந்தையா வீட்டில் தங்கியிருந்தார். கோகுலன் கல்முனையில் தனது நண்பர்களும் உறவினர்களுமான ஜெகநாதனையும் சிவானந்தனையும் அழைத்துக் கொண்டு கந்தையா நொத்தாரிஸ் வீட்டிற்குச் சென்றான்.

ஜெகநாதன் இலங்கை வங்கியின் பொத்துவில் கிளையின் முகாமையாளர். கனகரட்ணத்தின் குடும்ப நண்பன். தமிழ் உணர்வாளர் சிவானந்தன் கல்முனைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு சமூக சேவையாளன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர ஆதரவாளன்.

கந்தையா நொத்தாரிஸ் “வாங்க தம்பிமாரே” என்று அன்புடன் வரவேற்று மண்டபத்தில் நாற்காலிகளில் அமரச் செய்தார்.

“அமிர் அண்ணனைச் சந்திக்க வந்துள்ளோம்” என்றனர்;. கந்தையா நொத்தாரிஸ் வீட்டின் உள்ளே போய் ஐந்து நிமிட இடைவெளியில் அமிர்தலிங்கம் வந்து இவர்களின் முன் அமர்ந்தார். மூவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் கூறிவிட்டுச், “சொல்லுங்கோ தம்பிமாரே” என்றார்.

கோகுலன்தான் விடயத்தைத் தொடங்கினான்.

பொத்துவில் தொகுதியின் நிலைமையை விளக்கிக் கூறித் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராகக் கனகரட்ணத்தை நிறுத்தும் படியான கோரிக்கையைச் சுற்றிவளைக்காமல் – இழுத்து நீட்டாமல் நேரடியாகவே முன்வைத்தான்.

கோகுலன் கூறியவற்றைக் கூர்மையாகச் செவிமடுத்த அமிர்தலிங்கம், பொத்துவில் தொகுதியை எப்படியாவது வென்றெடுக்க வேண்டும் அதற்கு உங்கள் யோசனை யதார்த்த பூர்வமானது. கனகரட்ணம் பொருத்தமானவர்தான். ஆனால் அவரின் சம்மதத்தைப் பெறவேண்டும். மட்டுமல்லாமல் பொத்துவில் தொகுதியிலே காரைதீவு ஒரு முக்கிய கிராமம். காரைதீவு மக்களின் ஒருமித்த தீர்மானமும் அவசியம்.

இன்று முஸ்லீம் ஐக்கிய முன்னணியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் கல்முனை கடற்கரைப் பள்ளியடியில் டாக்டர் உதுமாலெவ்வையின் தலைமையில் நடைபெறவுள்ள முஸ்லீம் ஐக்கிய முன்னணிக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு நான் இன்றிரவே கொழும்பு திரும்புகிறேன். கோப்பாய்த்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளை கல்முனை வாடிவீட்டில் தங்கியுள்ளார் அவரிடம் நான் நீங்கள் வந்து என்னைச் சந்தித்த விடயத்தைக் கூறிச் செல்வேன். அவரை நீங்கள் கல்முனை வாடிவீட்டில் அல்லது நாளை மாலை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில் முன்றலில் வேல்முருகு மாஸ்ரர் தலைமையில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்திக்கலாம். கனகரெட்ணத்தின் சம்மதத்தையும் காரைதீவுக் கிராமத்தின் ஒருமித்த தீர்மானத்தையும் அவரிடம் தெரியப்படுத்துங்கள் என்று கூறி கோகுலன் குழுவினரை வழியனுப்பி வைத்தார் அமிர்தலிங்கம்.

அமிர்தலிங்கம் கூறியது கோகுலனுக்கு நன்கு புரிந்தது. காரைதீவு உள்ளூர் கிராம சபைத்தேர்தல் அரசியல் போட்டிகளால் விநாயகமூர்த்திக் கோஸ்டி – டாக்டர் பரசுராமன் கோஸ்டியென இரண்டு பட்டுக்கிடக்கிறது. அதனைச் சரிப்படுத்த வேண்டும். தான் பிறந்த ஊர்.

பந்து இப்போது கோகுலனின் பக்கத்தில். சரியாக விளையாடிக் ‘கோல்’ போட வேண்டும். நொத்தாரிஸ் கந்தையாவின் வீட்டிலிருந்து வெளியேறி வீதிக்கு வந்ததும் கோகுலன் ஜெகநாதனிடம் “மச்சான்! நீ நாளை காலயே பொத்துவிலுக்குப் போய் கனகரட்ணத்திடம் விசயத்தச் சொல்லி அவரச் சம்மதிக்க வைச்சி அவரயும் கூட்டிக்கொண்டு மாலை ஆறுமணி போல கல்முன வாடிவீட்டுக் வந்து சேர்” என்று கூறிக் கனகரட்ணம் சம்பந்தமான பொறுப்பை ஜெகநாதனிடம் ஒப்படைத்துவிட்டு,

“நான் கல்முனயில தங்கிநிண்டு கதிரவேற்பிள்ள எம்.பி ஐச் சந்திக்கிறதோட காரைதீவில விநாயகமூர்த்தியையும் பரசுராமனையும் சந்திச்சி அவங்க ரெண்டு பேரயும் ஒண்டாக்கிற வேலயப் பாக்கிறன். அவங்க ரெண்டு பேரயும் எப்பிடியும் நாளைக்குப் பின்னேரம் ஆறுமணிபோல கல்முன வாடிவீட்டுக்குக் கூட்டித்து வருவன். நீயும் மச்சான்! அந்தநேரத்தில அங்க கனகரட்ணத்தோட வந்து சேரப்பார். அங்க வைச்சி அலுவல அமிர்தலிங்கம் சொன்ன மாதிரி வெற்றியாக்குவம்” என்று தொடர்ந்து கூறிய கோகுலன், ஜெகநாதன் – சிவானந்தன் இருவரிடமிருந்தும் விடைபெற்றான்.

(தொடரும் …… அங்கம் – 26)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.