இலக்கியச்சோலை

சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை ஏந்திய எளிமையான மலையகப் படைப்பாளி என்.எஸ்.எம். ராமையா! … முருகபூபதி.

“ முழங்காலைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறிவந்த ரங்கையாக் கிழவன், கடைசிப் படியில் நின்று வாயால் ஊதிக் கொண்டான். பத்துப் பதினைந்து படிகள் அவன் எறியதில், அவனுடைய கிழட்டுக் கால்கள் ‘வெட வெட’ வென்று நடுங்கின. தன் லயத்து வாசலை நோக்கி நடந்தவன், சூழ்நிலையில் ஒரு மாற்றம் தெரிவது உணர்ந்து நின்று நிதானித்துப் பார்த்தான்.

அவனுடைய வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளியிருக்கும் சிவசாமியின் வீட்டிற்குள்ளிருந்து ஒளி வெள்ளம் வெளியே பாய்ந்து கொண்டிருந்தது. அந்த லயத்தின் ஒன்பது வீடுகளிலும் சிணுங்கிக் கொண்டிருந்த லாந்தர் வெளிச்சத்திலும், சின்னப் போத்தல் விளக்குகளின் மங்கிய ஒளிக்கும் மத்தியில் அந்த ஒரு வீட்டு வெளிச்சம் மட்டும் வாசலை நோக்கி வைரச் சுடரை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.

ஒளியின் சக்தி மகத்தானதுதான். “

இவ்வாறு தொடங்குகிறது , எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட மலையக படைப்பாளி என். எஸ். எம். ராமையாவின் வேட்கை என்ற சிறுகதை.

1967 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுதை வெளியான காலத்தில் பெற்றோ மக்ஸின் விலை நூற்றி இருபது ரூபாதான் என்பதை இக்கதையின் மூலம் தெரிந்துகொள்கின்றோம்.

மலையகம் 200 பேசுபொருளாகியிருக்கும் இக்காலப்பகுதியில், இன்றைய தலைமுறை எழுத்தாளர்களும், வாசகர்களும், மலையக மக்களின் ஆத்மாவை இலக்கியத்தில் பதிவுசெய்த இந்த மூத்த எழுத்தாளரைபற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்.

பதுளையில் ரொக்கில் தோட்டத்தில் 27-01- 1931 ஆம் திகதி மலையக தோட்டத் தொழிலாளரின் குடும்பத்தில் பிறந்திருக்கும், ராமையா, அங்கு கணக்காளராகவும் பணியாற்றியவர்.

இந்தத் தோட்டத்தின் துரையாக இருந்தவர்தான் பின்னாளில் இலங்கை அரசில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ரஞ்சன் விஜேரத்தின.

தோட்டத்துரையின் அழுத்தங்களை தாங்கமுடியாமல் கொழும்புக்கு வந்து, ஒரு இரும்புக்கடையில் பணியாற்றினார்.

நான் எழுத்துலகில் பிரவேசித்த 1970 இற்குப்பின்னரே அவரை அந்தக்கடையில் முதல் முதலில் சந்தித்தேன்.

“ இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாயிருந்து கலையம்சம் மிக்க கலை, இலக்கியங்களைப் படைக்க வேண்டிய மணிக்கரங்கள் இரும்புக்கடையின் மத்தியில் கணக்கு ஏட்டுடன் சதா கருமமாற்றும் நிலை என்றுதான் மாறுமோ ? “ என்று வீரகேசரியில் பணியாற்றிய நண்பர் மூர்த்தி, என்.எஸ்.எம். ராமையாவைப் பற்றி மல்லிகையில் எழுதியிருந்தார். பின்னாளில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த மூர்த்தி, அங்கிருந்து வீரகேசரி மூர்த்தி என்ற பெயரில் எழுதினார். தற்போது அவரும் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

என். எஸ். எம். ராமையா, 1990 ஆம் ஆண்டு தமது 59 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.

நானும் முதல்முதலில் என்.எஸ்.எம். அவர்களை அந்த இரும்புக்கடையில்தான் சந்தித்தேன்.

அமைதி, அடக்கம், பணிவு, மறந்தும் சுடுசொல் பாவிக்கத் தெரியாத அப்பாவித் தனமான குண இயல்புகள், எதனையும் ரசிக்கும்போது குழந்தைகளுக்கே உரித்தான வெள்ளைச் சிரிப்பு. இவ்வளவற்றையும் தன்னகத்தே கொண்டிருந்த அந்த வித்தியாசமான மனிதரிடத்தில் நல்ல ரஸனையைக் கண்டேன். தர்மாவேசத்தை என்றைக்கும் கண்டதில்லை.

நாம் அவரை ராமையா என்று அழைப்பது அபூர்வம். அவரது முதல் எழுத்துக்கள்தான் இலக்கிய உலகில் பிரபலமானவை. மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக விளங்கிய போதும்கூட தலைவர்களுக்கே உரித்தான கம்பீரம் காத்து இமேஜ் தேட முயலாமல் எளிமையாக வாழ்ந்தவர்.

மலையக இலக்கியத்தில் அவருக்கு சில அத்தியாயங்கள் உண்டு. மலையக மக்களின் ஆத்மாவை இவரது கதைகளில் கண்ணுற்றேன்.

சென்னை வாசகர் வட்டம் தொகுத்தளித்த அக்கரை இலக்கியம் நூலில் அவரது வேட்கை சிறுகதையும் இடம்பெற்றது. பல தரமான வானொலி நாடகங்களின் சிருஷ்டி கர்த்தா.

என்.எஸ்.எம் வாழ்வில் சோகமான அத்தியாயங்கள்தான் அதிகம். எத்தனை சோகங்கள் அவருள் முகிழ்த்திருந்த போதிலும் சாந்தமான

அவரது முகத்தில் மாற்றத்தினைக் காண முடியாது. சலனங்கள் அற்ற முகத்துக்குச் சொந்தக்காரர் அவர்.

ஏழு நாட்களுக்குள், அடுத்தடுத்து தனது இரண்டு பெண் செல்வங்களை நோய் அரக்கனுக்குப் பலி கொடுத்த பரிதாபத்தை இங்கு எழுத வார்த்தைகள் இல்லை. அவரைப் படைத்தவன், அவரை கோரமாக வஞ்சித்திருக்கக்கூடாது. மரணத்தின் கொடுமையை அதுவரும்போதுதான் நாம் உணர்கின்றோம். அக்கொடுமைக்கு என்.எஸ்.எம். ஆளாகியவர்.

இனவாதபெருநெருப்பு தென்னிலங்கையில் தாண்டவமாடிக் கொண்டிருந்த (1983) காலம். 25 மைல் தூரத்திலிருந்த எனக்கு என்.எஸ்.எம்.மின் பிள்ளைகள் இருவர் நோயினால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள் என்ற சோகமான செய்தி தாமதமாகவே கிடைத்தது.

நண்பர் தெளிவத்தை ஜோசப் மூலம் இச்செய்தி அறிந்து நண்பர் மு.கனகராசனுடன் ராமையாவைத் தேடி அவர் பணிபுரிந்த இரும்புக்கடைக்கே ஓடினோம். அங்கே என்.எஸ்.எம் அமைதியாக அமர்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்.

பின்னாளிலே ராமையாவை, பாபர் வீதியில் அமைந்த சாயி இல்லத்தில் அவர் மேற்கொண்டிருந்த பணியைக் கண்டு திகைத்துப்போனேன். ஒரு அன்பரை காண்பதற்காக நான் சாயி இல்லம் சென்றிருந்த வேளை அங்கு பஜனை ஆரம்பமாக விருந்தது. பஜனைக்காக குழுமியவர்களின் பாதணிகளை வாங்கி, அங்கிருந்த பலகைத்தட்டுகளில் சீராக அடுக்கி வைத்துக் கொண்டு நிற்கிறார் எங்கள் ராமையா.

மலையக மக்களின் ஆத்மாவைப் பிரதிபலித்த அற்புதமான சிருஷ்டிகளைப் படைத்த அந்த மணிக்கரங்கள், சோனகத் தெருவில் இரும்புக்கடையில் கணக்கு ஏட்டை புரட்டிக் கொண்டும் பாபர் வீதி சாயி இல்லத்தில் பக்தர்களின் செருப்புகளை ஏந்தி பத்திரப்படுத்திக் கொண்டுமிருக்கிறதா?

என்ன விந்தையான மனிதர் அவர் ?

எனது திகைப்பை புரிந்து கொள்ளாமலே, “ வாருங்கள் , செருப்பை இங்கே தாருங்கள். “ என்றார்.

அந்த மணிக்கரங்கள் என் செருப்பை ஏந்தக் கூடாது. நானே எடுத்து வைத்தேன். தேடி வந்த அன்பர் பற்றிய நினைவை மறந்து, ராமையாவின் பணி கண்டு சிலிர்த்துப் போனேன்.

நான் இன்றைக்கும்கூட ஒரு சாயி பக்தன் அல்லன். ஆனால் அந்தப்பிரார்த்தனையில் அமைதியும் மனச்சாந்தியும் கிட்டுவதை

உணர்ந்தேன். என்.எஸ்.எம் தனது வாழ்வின் சோகங்களுக்கு இந்தப் பிரார்த்தனையின் மூலம்தான் அமைதியையும் மனச்சாந்தியையும் தேடுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இது பற்றி வீரகேசரி வாரவெளியீட்டிலும் எழுதினேன்.

அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்ததன் பின்னர், ராமையா உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவலை நண்பர் டொமினிக்ஜீவா மல்லிகையில் எழுதித்தான் தெரியும்.

என்னாலியன்ற சிறு உதவியை நண்பர் ராஜஸ்ரீகாந்தன் ஊடாக வழங்கியபொழுது சலனங்களைக் காட்டாத அம்மனிதரின் கண்கள் கலங்கி விட்டதாக நண்பர் எனக்கு எழுதியிருந்தார்.

ராமையாவும் அன்போடு எனக்கு கடிதம் எழுதினார். இன்றும் அக்கடிதம் என்னிடத்தில் பத்திரமாக உண்டு.

ராமையாவின் மறைவையடுத்து இறுதிச்சடங்கில் அமைச்சர்கள், அரசியல் , கலை , இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதைப் பார்த்த ராமையாவின் வீட்டின் அயல்வாசிகள், இப்படியும் ஒரு பிரபலமான மனிதர், எமக்கருகில் வாழ்கிறார் என்பதை அறியாமல் இருந்திருக்கின்றோமே என மூக்கில் விரல் வைத்து வியந்தார்களாம்.

கண்களுக்கு அருகே இமை இருந்தாலும் அந்தப் பாதுகாப்பு கவசம் கண்களுக்குத் தெரிவதில்லை அல்லவா?

அந்த மலையக இலக்கிய மேதையின் மறைவின் பின்னர் அவருக்காக இரங்கலுரை நிகழ்த்திய அரசியல் பிரமுகர்கள், அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றி சிந்தித்ததே இல்லை. பத்திரிகை செய்திகளிலும் விளம்பரங்களிலும் பிரபலம் தேடிக் கொண்ட மனிதர் அல்ல ராமையா. படைப்பாளுமை மிக்க அமைதியான இலக்கிய கர்த்தா.

தமிழகத்தின் அக்கரை இலக்கியம் தொகுப்பு இனங்கண்டு கொண்ட அளவிற்குத்தானும் மலையக அரசியல் தொழிற்சங்க உலகம் இவரை அன்று இனம்காணவில்லை.

மு.நித்தியானந்தன் இல்லையென்றால் ராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து (1980 இல் தேசிய சாகித்திய விருது பெற்றது) சிறுகதைத் தொகுப்பை தமிழ் இலக்கிய உலகம் கண்டிருக்காது.

தனது முப்பது வருட (1961 -1990) இலக்கிய வாழ்வில் பதினான்கு சிறுகதைகளையே ராமையா எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப் தன்னுடைய மலையகச்சிறுகதை வரலாறு நூலில் பதிவு செய்துள்ளார்.

குறைந்த எண்ணிக்கையில் கதைகள் எழுதியிருந்தபோதிலும் ராமையா பிரசித்தமாகவே அறியப்பட்டவர். அவரது கதைகளின் சிறப்பும் தரமும்தான் அதற்குக்காரணம்.

செ.யோகநாதன் தமிழ் நாட்டில் வெளியிட்ட

ஈழத்துச்சிறுகதைகள் தொகுப்புகளில் ஒன்றின் பெயர் ஒரு கூடைக்கொழுந்து என்றே அச்சிடப்பட்டிருக்கிறது. இது ராமையாவின் சிறுகதை.

10-10-1989 ஆம் திகதி ராமையா எனக்கு எழுதியிருந்த சிறிய கடிதத்தின் இறுதியில், “அங்கு இலங்கை நண்பர்கள் பலர் இருப்பதாக அறிந்தேன். எல்லோரையும் நமது மண்ணிலே ( இலங்கையில் ) சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என்றும் நம்புகிறேன். என்று எழுதியிருந்தார்.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். ஆனால் அவர் நம்பிக்கையோடு காத்திருந்த என்னைப்போன்ற பலரை பார்க்காமலேயே விடைபெற்றுவிட்டார்.

 

—0—

Loading

One Comment

  1. இலங்கை நண்பர்கள் பலர் அங்கு இருப்பதாக அறிகிறேன்.அவர்களை
    இலங்கையில் சந்திப்பேன்.அவரது இவ்வார்த்தையில் ஆத்மார்த்த
    ஆழம் பொதிந்த அர்த்தங்கள் பல.
    இனக்கலவரத்தில் 1983 ம் ஆண்டளவில்
    இரண்டு பெண் செல்வங்களை இழந்த
    சங்கத்தை தங்களுடைய அழகு தமிழில்
    தந்தீர்கள்.திருமலை பாலா,இலண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.