கட்டுரைகள்

அவுஸ்திரேலிய ஆதரவு: சர்வதேச அங்கீகாரத்துடன் பாலஸ்தீன அரசு ! ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் அல்ல!!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

பாலஸ்தீனிய அரசுரிமையை அங்கீகரிப்பதற்காக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கின் (Penny Wong) புதுப்பிக்கப்பட்ட கோரிக்கையை பிரதம மந்திரியும் மற்ற தொழிட் கட்சியின் மூத்த எம்.பி.க்கள் பாராளமன்றில் ஆதரித்துள்ளனர்.
காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஒரு மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ள பிராந்தியத்தில் மோதலில் அவுஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை கடினப்படுத்துவதைக் குறிக்கும் வகையில் இவ்வாரம் 9/4/24 செவ்வாயன்று இந்த யோசனையை வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் முன்வைத்தார்.
அத்துடன் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) ஆற்றிய உரையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலம் இரு நாடுகளின் தீர்வினால் மட்டுமே வர முடியும் என்றார்.
அவுஸ்திரேலிய பாரளமன்றில் புதனன்று, பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் தனது அரசாங்கம் எப்போதும் இரு நாடுகளின் தீர்வையே நாடுகிறது என்றும், எங்கள் நிலைப்பாட்டில் எதுவும் மாறவில்லை என்றும் கூறினார். அத்துடன் இரு நாடுகளின் தீர்வு தெளிவாக இப்பிரச்சினைக்கு, அவுஸ்திரேலியாவின் நீண்ட கால தெரிவாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் ஒரு நீண்டகால அரசியல் தீர்வு தேவை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இது பாதுகாப்பான எல்லைகளுக்குள் இஸ்ரேலின் உரிமையைத் தொடரும். அந்த பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழி வெளிப்படையாக உள்ளது. அதுவே பிராந்தியத்தில் உள்ள பிற தேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன தேசமாகும்.
இந்த முடிவற்ற வன்முறை மற்றும் இரத்தக்களரி சுழற்சியில் இருந்து ஒரு பாதையை உருவாக்க விரும்பினால், இரு-மாநில தீர்வு முயற்சி அவசியமாகும். அதேவேளை எதிர்கால பாலஸ்தீன அரசில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பிரதமர் கூறினார்.
எதிர்கட்சி கடும் எதிர்ப்பு:
ஆனால் எதிர்கட்சி இந்த யோசனையை கடுமையாக சாடியுள்ள எதிர்கட்சி கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இது ஹமாஸுக்கு வெகுமதி அளிக்கிறது என்று முத்திரை குத்தி உள்ளது.
எதிர்க்கட்சியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சைமன் பர்மிங்காம் இந்த யோசனை பற்றி கூறுகையில், இரு மாநில தீர்வு என்பது பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையுடன் மட்டுமே சாத்தியமாகும். ஒவ்வொரு தரப்பினருக்கும் இருக்கும் உரிமை மற்றொரு தரப்பில் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல்கள், ஹோலோகாஸ்டுக்குப் பிறகு எந்த ஒரு நாளையும் விட அதிகமான யூதர்களை வேண்டுமென்றே படுகொலை செய்ததாக உள்ளது.
இது போன்ற காட்டு மிராண்டித்தனமான நடத்தைக்கு வெகுமதி அளிப்பது மிகவும் ஆபத்தானது. பாலஸ்தீன தேசத்தை
அங்கீகரிப்பது பற்றி எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர் அல்ல!
இதேவேளை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் ஆளும் அரசு 18 அக்டோபர் 2022 தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
2018இல் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக முன்னைய அவுஸ்திரேலியா லிபரல் கட்சி அரசு அறிவித்தது. இந்த முடிவை தற்போதய அவுஸ்திரேலியா அரசு மாற்றியுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் அறிவிக்கையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முன்னாள் அரசின் முடிவை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். அவை ஒருதலைப்பட்சமான முடிவுகளாக இருக்கக் கூடாது.
இரு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை தடுக்கும் முடிவுகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அவுஸ்ரேலியாவின் வெளியுறவுத் துறை அலுவலகம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொடர்ந்து செயல்படும்.
இஸ்ரேலை முறையாக அங்கீகரித்த நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்ற அவுஸ்திரேலியா அறிவித்ததை
இஸ்ரேல் அரசும், பிரதமரும் ஆட்சேபித்தனர். ஜெருசலேம் இஸ்ரேலின் ஒன்றுபட்ட தலைநகரம். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று
முன்னாள் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இருக்கும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடவே அறிவித்தார்.
ஆனால், ஜெருசலேத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்காமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீன தாயக கோரிக்கை:
1967-ம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளுடன் தங்களது நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் பாலஸ்தீன தாயக கோரிக்கை ஆகும். அல்-அக்சா மசூதி இருக்கும் கிழக்கு ஜெருசலேமைத் தங்களிடமே தந்துவிட வேண்டும் என்றும் பாலஸ்தீனர்கள் கேட்கிறார்கள்.
இதுபோக, மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை அகற்றுவது, போரால் வெளியேறிய அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது என பல பிரச்னைகள் பாலஸ்தீன அங்கீகாரத்தில் அடங்கியிருக்கின்றன.
சர்வதேச ரீதியில் இந்தியா உள்பட 126 நாடுகள் பாலஸ்தீனத்தின் இறையாண்மையை அங்கீகரித்திருக்கின்றன.
தற்போது காசாவில் போர் தொடர்கையில், என்னதான் உலகில் பெரும்பான்மை நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தாலும் ஐ.நா.வில் அதற்கு இதுவரை அங்கீகாரம் கிடைக்காததால் எல்லை வரையறுப்பது, ராணுவம் அமைப்பது, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது, சர்வதேச நீதிமன்றங்களில் முறையிடுவது போன்றவற்றில் சிக்கல்கள் இருக்கின்றன.
பாலஸ்தீனத்திற்கான சர்வதேச அங்கீகாரம் இருக்கையிலேயே இஸ்ரேலின் போர் கொடூரமாக தொடர்கிறது. பாலஸ்தீன அங்கீகாரத்தினை அகற்றாமலேயே முழு நிலப்பரப்பை கைப்பற்றி யூதக்குடியேற்றங்களை அதிகரிப்பதில் இஸ்ரேல் முனைப்பாக உள்ளது என்பதே உண்மையாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.