தமிழ்நாட்டு தேர்தலிலே ஸ்டாலினின் வெற்றிச் சிரிப்பை மோடி குறைப்பாரா? … – நியூசிலாந்து சிற்சபேசன்.
தமிழ்நாட்டில், பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ல் நடைபெறவுள்ளது. அதனால் அரசியல்களம் விறுவிறுப்படைந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் முதல் கடைநிலைப் பிரமுகர்கள் வரை அனைவருமே அங்குமிங்குமாக ஓடித்திரிகின்றனர். இடையிடையே டீக்கடை வாங்கில் இருந்து டீ குடிகின்றனர். குழந்தைகளை அள்ளி அணைக்கின்றனர். பஜ்ஜி – வடை சுடுகின்றனர். இவ்வாறு தத்துப்பித்தாக ஏதேதோவெல்லாம் செய்கின்றனர். அவ்வாறாக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியேனும் வாக்காளர்களைக் கவர முயற்ச்சிக்கின்றனர்.
முன்னைய தேர்தல்களைப் போன்று, முதலமைச்சர் ஸ்டாலினுடைய பிரச்சாரத்திலே துடிப்பைக் காணமுடியவில்லை. அவரது உடல்நிலை அதற்கு இடமளிக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. அதனை ஈடுசெய்யும் வகையில், உத்தியோகப்பற்றற்ற முதலமைச்சராக வலம்வருகின்ற, அவரது மகன் அமைச்சர் உதயநிதி தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார். ஸ்டாலின் மனைவி துர்கா அம்மையார் கோவில்குளமென்று சுற்றுகின்றார்.
பிரதமர் மோடியும் விடாக்கண்டராகவே தெரிகிறார். அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். இந்தவாரத்திலே, சென்னையின் பிரசித்தமான தி.நகர் பாண்டி பஜார் பகுதி, வேலூர், நீலகிரி என மூன்று இடங்களிலே, “ரோட் ஷோ” என்று சொல்லப்படுகின்ற, திறந்த வாகனத்திலிருந்து பிரச்சாரம் செய்கின்றார். அத்தோடு, கோவை, பெரம்பலூர் மற்றும் விருதுநகரில் பிரச்சாரக் கூட்டத்திலே பேசுகின்றார்.
மோடியினுடைய ஆட்சியிலே, தமிழகம் வஞ்சிக்கப்படுவதான தொனி ஸ்டாலினுடைய பிரச்சாரங்களிலே தூக்கலாகவே தெரிகின்றது. அதனால், தன்னுடைய அரசின் சாதனைகளைப் பேசுவதற்கான வாய்ப்பைத் தவற விடுகின்றாரோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மறுவளத்தில், பாரதிய ஜனதாவின் பிரச்சாரம் கூர்மையான இலக்குகளைக் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய அளவில் விஷயங்கள் பேசுபொருளாக்கப்படுகின்றன. அவைதொடர்பில், எதிர்க்கட்சிகளையும்கூட பேசவைக்கின்ற சாதுர்யத்தைக் காணமுடிகின்றது. அந்தவகையிலேயே, டெல்லி முதல் சென்னை வரை கவனத்தைச் சுண்டியிழுத்த கச்சதீவு விவகாரத்தையும் கவனிக்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு ஈடுகொடுத்து, தேர்தல் முறைகேடுகளைக் கண்காணிக்கும் பறக்கும்படை மற்றும் வருமானவரித்துறையின் செயற்பாடுகளும் வேகமடைந்துள்ளன.
வருமானவரித்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறையாகும். அதனுடைய கவனப்பரப்பிலே எதிர்கட்சிகளே அதிகமாக வந்துவிடுகின்றன. அதனால், டெல்லியிலே ஆட்சியிலுள்ள கட்சியே வருமானவரித்துறையைப் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டு காலாதிகாலமாகச் சொல்லப்படுகின்றது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டது. தற்போது, பாரதிய ஜனதாக் காலத்திலும் சொல்லப்படுகின்றது.
தமிழ்நாட்டிலே, திராவிடக் கட்சிகளே பெரும்பாலும் வருமானவரித்துறையின் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்றன. அதனால் தேர்தல் காலத்தில், “ஐடி ரெய்டு” என்று சொல்லப்படுகின்ற, வருமானவரித்துறையின் சோதனை என்பது பலருக்கும் “வயிற்றைக்கலக்கும்” சமாச்சாரமாகும்.
ஏப்ரல் 5ம் திகதி, நெல்லை கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்திலே கூட்டணிக் கட்சிகளின் மாவட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு பணவிநியோகம் செய்யப்படுகின்றது என்ற முகதாவில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் பணவிநியோகம் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாளான ஏப்ரல் 6ம் திகதி, சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி வரை பெறுமதியான ரூபாய் நோட்டுகள் அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வைத்திருந்தவர்களுடன் பாரதிய ஜனதாக் கட்சியின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புபடுத்தப்பட்டார்.
பொதுவாக, எதிர்கட்சியினரே வருமானவரித்துறையின் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகின்ற பின்ணணியிலேயே, பாரதிய ஜனதாவின் நயினார் நாகேந்திரன் “சிக்கியது” புருவங்களை உயர்த்தியது.
2019 பாராளுமன்ற தேர்தலின்போது வேலூர் தொகுதியிலே இதேபோன்று பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது. அதனால் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. அதேபோன்றதொரு நிலை நெல்லைக்கும் ஏற்படுமா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.
இதனிடையே, ஏப்ரல் 8ம் திகதி வேலூர் கேவி குப்பம் அருகேயுள்ள காங்குப்பம் கிராமத்திலே, அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் பணப்பட்டுவாடா நடைபெறுவதான புகார் மீதான விசாரணையில், ஏழரை இலட்சம் பெறுமதியான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.
வேலூர் தொகுதியிலேயே, அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
ஏப்ரல் 9ம் திகதி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சிதம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை.
தேர்தல் பிரச்சாரங்களும் – அதிலே விஐபி தலைவர்களின் வருகையும் ஒருபக்கம், தேர்தல் முறைகேடுகளை கண்காணிக்கும் அதிரடி நடவடிக்கைகள் மறுபக்கம் என தமிழ்நாட்டின் தேர்தல் களம் அமளிதுமளிப்படுகின்றது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாகவே காணப்படுகின்றது. 40 தொகுதிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்பதே ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியின் இலக்காகும். அந்த இலக்கைத் தகர்த்து, தமிழ்நாட்டில் கையளவு வெற்றிகளை பெற்றுவிடவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் வியூகமாகும்.
அகில இந்திய அளவிலே மோடிக்கு சாதகமாகவே தேர்தல்களம் தெரிகின்றது. அதற்கு, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் பலவீனமே காரணமாகும்.
எது எப்படியாகிலும், தமிழ்நாட்டின் தேர்தல் முடிவு அகில இந்திய அளவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு குறைவாகவே தெரிகின்றது. அதேவேளையில், இந்திய அளவில் கவனிக்கப்படக்கூடிய “டிரெண்ட்செட்டராக” (அரசியல்போக்காக) அமையலாம். ஸ்டாலினின் வெற்றிச் சிரிப்பை மோடி குறைக்கலாம் என்பதே கணிப்பாகும்.