“தொண்ணூறு வயதுப்பாட்டி இரவில் யாரோ கயிற்றுடன் வந்து போவதாக தூக்கத்தில் கத்துவாள்” … கவிதை …. முல்லைஅமுதன்.
அம்மா அடுக்களையுடன்,சாமி அறையையும் தனதாக்கிக்கொண்டாள்.
தனித்த மூலை அறையை
அக்கா அடம்பிடித்து பெற்றுக்கொண்டாள்.
கட்டிலுக்காய் தம்பியுடன்
நாளாந்தம் சன்டைதான்.அம்மா கத்துவாள்.
அப்பா வர எல்லாம் அடங்கி மௌனமாகிவிடும் வீடு.
காற்றோட்டத்திற்காக அப்பா முன்னறையில் படுத்துக்கொள்வதுண்டு.
குளிர்,மழை எனிலும் அப்பா சன்னலை திறந்துவைத்தபடி,
அசைந்தாடும் பூச்செடியை ரசித்தபடி தூங்கிப்போவதால்
அந்த வாழ்க்கை பிடித்துப்போயிற்று.
தொண்ணூறு வயதுப்பாட்டி இரவில் யாரோ கயிற்றுடன் வந்து போவதாக
தூக்கத்தில் கத்துவாள்.பாதுகாப்பாக அவளருகில் எப்போதும் துவரம் தடி துணைக்கிருக்கும்.
ஒருநாள் அப்பாவின் குரல் அடங்கிப்போனது.
நடுவீட்டிலிருந்து அப்பாவின் உடலை தூக்கிய நடந்தபோது
அம்மா நிலைகுலந்துபோனாள்.
இந்த வீடு நிரந்தரமில்லை என்பது
மாமா வீட்டை அபகரித்தபோது
அப்பாவுடன்
நாங்களும் வெளியேறியது விதியென்றழுவதா?
முல்லைஅமுதன்.