காரியம் ஆகும் வரையில் காலைப்பிடிக்கும் பெரும்பான்மையின தலைமைகள்: விக்னேஸ்வரன் சாடல்

சிங்களத் தலைவர்கள் காரியம் ஆகும் வரையில் காலைப்பிடிப்பார்கள் எனவும் காரியமானவுடன் கழுத்தைப் பிடிப்பார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
”ஐயா! நீங்கள் மத்திய அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் அதிகம் சிரத்தை காட்டுவதில்லை. முன்னர் நீதித்துறை (Judicial) செயலாற்றுத்துறை (Executive) சார்ந்தவராக இருந்து இன்று நீங்கள் சட்ட இயற்றுநராக இருக்கின்றபடியால் அரசாங்கத்திற்கும் நாட்டுமக்களுக்கும் நீங்கள் முன்னணியில் நின்று உதவிபுரிய வேண்டும் அல்லவா?
அவ்வாறு செய்வதில்லை ஏன்? என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களின் அவலங்கள்
”வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு நாவிருபது வருடங்களுக்குப் பின்னரும் நாடாளுமன்றம் செல்ல உத்தேசித்தது பெரும்பான்மையினர் எம்மை ஆளுவதற்காக நான் அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு அல்ல.
முக்கியமாக தமிழ் மக்களின் அவலங்களை உலகறியச் செய்யவே நாடாளுமன்ற தேர்தலில் நான் பங்கேற்றேன்.
எனது பதவியானது நாட்டின் மற்றைய இனங்களுக்கும் உலகத்தோருக்கும் எமது வடக்குகிழக்கு தமிழர்கள் பற்றிய அறிவைக் கொண்டு செல்லவே பாவிக்கப்படுகின்றது.
இதுவரையில் வெளிநாட்டு அரச அலுவலர்களுக்கு எம் உண்மை நிலைபற்றி அறிவித்துவிட்டேன்.
மேலும் எமது நாட்டின் மக்களின் வரலாறு பற்றியும் கூறிவருகின்றேன். அரசாங்கத்திடம் இருந்து அமைச்சுப் பதவிகளையோ வேறு சலுகைகளையோ பெற எத்தனிப்பவர்கள் தான் சிங்களப் பெரும்பான்மையோர் தமக்கு சாதகமாக சட்டம் இயற்ற விழையும் போது அவர்களுக்கு உதவிபுரியவேண்டும்.
ஆனால் தமிழ்மக்களுக்குப் பாதகம் மற்றும் பங்கம் ஏற்படுத்தும் சட்டவரைபுகளை விமர்சித்தே வருகின்றேன். எனது நாடாளுமன்ற பேச்சுக்களை பரிசீலித்துப் பார்ப்பீர்களானால் அது புரியும்.” என கூறியுள்ளார்,