நேபாளத்தில் பணயக்கைதிகளாகப் பாகிஸ்தானியர்களால் பிடிக்கப்பட்ட இலங்கையர்களின் விபரம் வெளியாகின!

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக உறுதியளித்து நான்கு இலங்கையர்களை நேபாளத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நான்கு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணயக் கைதிகளாக வைத்திருந்த நான்கு இலங்கையர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள பொலிஸார் தெரிவித்தனர்.
57 வயதான சுபைர் அம்சாத், 42 வயதான ஜெஹான் தன்பீர், 61 வயதான மாலிக் அப்துல் ஹமீத் மற்றும் 44 வயதான ஆரிப் மசிஹா ஆகியோரே இவ்வாறு பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டவர்கள் என என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடா, ருமேனியா, கிரீஸ் ஆகிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி இந்த இலங்கையர்களை நேபாளத்துக்கு அழைத்துச் சென்று விடுதியில் தங்கவைத்து, அவர்களது கடவுச்சீட்டுகளை பாகிஸ்தான் பிரஜைகள் எடுத்துச் சென்றுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு இலங்கையர்களும் இலங்கையில் உள்ள அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள அனுமதிக்காமல் மிரட்டி சித்திரவதை செய்து, அந்த நான்கு பாகிஸ்தானியர்களும் இலங்கையர்களிடம் பணம் பறிக்க முயன்றதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.