பதினான்காவது ஆண்டில் அக்கினிக்குஞ்சு! … செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா (பாடும்மீன்)
“அக்கினிக்குஞ்சு” இணையத்தளம் 14 ஆவது ஆண்டில் கால் பதிப்பதையிட்டு எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பத்திரிகைத் துறையில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவரும் யாழ். எஸ்.பாஸ்கரின் முனைப்பில் வெளிவந்துகொண்டிருக்கும் அக்கினிக்குஞ்சு இணையச் சஞ்சிகை, கடந்த பதின் மூன்று ஆண்டுகளாக மிகுந்த வனப்போடு வெளியாகி, வண்ணத் தமிழில் உறவாடி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து வருகிறது. இதன் ஆசிரியர் யாழ் எஸ். பாஸ்கர் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும் என்றும் தளராது இயங்கிக்கொண்டிருப்பவர். அத்தகைய அவரின் செயற்பாடுகளின் இன்னுமொரு தோற்றமே பத்திரிகை வெளியீடு ஆகும். கங்காரு நாட்டிலே நான் கால் பதித்து இரண்டு மாதங்களுக்குள் என் கவனத்தை ஈர்த்துக் கொண்ட அவரது நட்பு, கடந்த முப்பத்தியிரண்டு ஆண்டுகளாக இடைவிடாத தொடர்போடு கலை இலக்கியப் பாதையில் களிநடம்புரிகிறது.
அவுஸ்திரேலியாவில், “அக்கினிக்குஞ்சு” சஞ்சிகையினை முப்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து, மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் காத்திரமான பங்களிப்பினைத் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்து வந்த யாழ் எஸ். பாஸ்கரின் புடம் போடப்பட்ட அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடே, காலத்தின் வளர்ச்சியோடு கைகோர்த்து, அதனை ஓர் இணையச் சஞ்சிகையாக வெளியிட வழியமைத்தது.
பல்துறைசார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பக்கபலமாகக் கொண்டு வெளிவரும் “அக்கினிக்குஞ்சு” இணையச் சஞ்சிகை தமிழ் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கும், தகவல் முதிர்ச்சிக்கும், தமிழ் இலக்கியச் செழுமைக்கும் களமாகவும், களஞ்சியமாகவும் அமைந்து, சமகாலச் செய்திகளை உண்மையாகவும், நேர்மையாகவும் தருகின்ற நம்பிக்கைக்குரிய ஊடகமாகவும் திகழ்ந்து வெற்றி நடை போடுகிறது.
அனுபவம் மிக்க புகழ்பெற்ற எழுத்தாளர்களினது படைப்புகள், அறிஞர்களின் ஆக்கங்கள் என்பவற்றால் நிறைந்து பொலிந்து வரும் அக்கினிக்குஞ்சு, வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்து வாசலைத் திறந்து வைத்துள்ளது.
அக்கினிக்குஞ்சு சஞ்சிகையின் பணி இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு தொடரவேண்டும் என்றும், மக்களுக்கான அதன் பணியில் காலத்தை வென்ற கதிரவனாய் ஒளிவீச வேண்டும் என்றும் உள்ளம் நிறைந்து வாழ்த்துவதில் உவகை கொள்கிறேன்.
செந்தமிழ்ச் செல்வர், சட்டத்தரணி, சு.ஸ்ரீகந்தராசா (பாடும்மீன்)