முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ மதிப்பீடு! …. நடேசன்.
எமது அண்டை நாடான பாரத தேசத்தில் பிறந்த மூவர் நமது இலங்கையில் தங்களது சிந்தனைகள் , செயல்களால் செல்வாக்கு செலுத்தினார்கள். அவர்களில் கௌதம புத்தர் முதன்மையானவர். அவர் இலங்கைக்கு வந்தாரோ, இல்லையோ, அவரது உபதேசங்கள் இலங்கையில் தேர வாத பௌத்த சமயமாக இரண்டாயிரம் வருடங்கள் முன்னதாக ஆழமாக வேரூன்றியது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மோகனதாஸ் கரம் காந்தி இலங்கைக்கு வந்ததுடன், அவரது அரசியல் கருத்து போராட்ட வழி முறைகள் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியது.
உண்ணாவிரதம், அகிம்சை வழி, கடையடைப்பு என இங்கும் தமிழர், சிங்களவர் என இரு இனத்தவரும் அத்தகைய போராட்ட வடிவங்களை முன்னெடுத்தார்கள். ஆனால், இலங்கைக்கு வராதபோதிலும் பட்டி தொட்டி எங்கும் தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படுபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
மற்றைய இருவரிலும் பார்க்க, இவர் ஒரு விடயத்தால் முக்கியத்துவமாகிறார்.
கௌதம புத்தரை இலங்கை, கடந்த 75 வருடங்களாகத் தேர்தல் அரசியல் சரக்காக மாற்றியதுடன், இனக்கலவரம் , போர் என மூலப்பொருளாகப் பாவித்து பெரும்பான்மையான சிங்கள அரசியல்வாதிகள், அவரது கீர்த்தியை அபகீர்த்தியுடைய வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
அதேபோன்று தமிழ் அரசியல்வாதிகள் காந்தியின் கொள்கைகளை தங்களது சுயநலவாத அரசியலுக்குப் பாவித்தார்கள். போதாக்குறைக்கு ஆயுதத்தில் நம்பிக்கை வைத்திருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்சென்னையில் உண்ணாவிரதமுமிருந்தார். அவரது தளபதியான திலீபன் இந்திய அமைதிப்படைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்
இருந்து உயிர் துறந்தார். இவற்றை மன்னிக்க முடியும். ஆனால், வன்னியில் அவர்களின் சித்திரவதை முகாமுக்குப் பொறுப்பாக இருந்தவருக்கு காந்தி என்ற பெயரை வைத்திருந்தார்கள்.
இப்படியான எந்த அலங்கோலப்படுத்தலுக்கும் உட்படாது இன்னமும் இலங்கையில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கம்பீரமாக பாரதி விழா , பாரதி பாடசாலை எனப் பல வழிகளில் கொண்டாடப்படுவது, எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணிய பாரதி என்ற கவிஞன் மட்டுமே. அதுவே இங்கு முக்கியமானது.
பாரதிக்கு பல முகங்கள். ஒவ்வொரு முகங்களைப் பிடித்தவர்கள் கொண்டாடுவார்கள். தேச விடுதலைக்கான மகா கவியாக இந்தியர்கள் கொண்டாடும்போது, இந்தியரல்லாத தமிழர்கள் பாரதியின் இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடுகிறார்கள்.
போர் வீரன் தூரத்தில் எதிரியைக் கண்டால் அம்பையும், ஓரளவு சமீபத்தில் கண்டால் ஈட்டியையும், அருகில் வந்தால் வாளையும் எடுப்பான் . எதிரியோடு உடல் பிணைந்து பொருதும்போது குத்துவாளை உருவுவான். இவைகள் எல்லாவற்றிலும் திறமை கொண்டவனே சிறந்த வீரனாக முடியும். அதேபோல் எனது கணிப்பின்படி தமிழில், கவிதை, தாலாட்டு, சிந்து, குழந்தைப்பாட்டு, காவியம் என எல்லாவகையான சந்தங்கள் கொண்ட இலக்கிய நடையை எழுதியதுடன் உரைநடையில் சிறுகதை , கட்டுரை என்பன எழுதியதால் நவீனத் தமிழின் உரை நடையையும் உருவாக்கியவர் பாரதியே என்பார்கள்.
இவற்றிற்கு அப்பால் பாரதியை எனக்குப் பிடித்த காரணம் வேறு !
இக்காலத்தில் ஆங்கிலத்தில் பாவிக்கும் ஆயிரக்கணக்கான சொல்லடைகளை உருவாக்கியவர் வில்லியம் சேக்ஸ்பியர். ( உதாரணமாக நான் நாய் பூனைகளை கருணைக்கொலை செய்யும்போது , அடிக்கடி வெட்கமற்று பாவிக்கும் cliché வசனம் – we have to be Cruel to be kind ) அதேபோன்று தமிழில் பல சொல்லடைகளை உருவாக்கியவர் பாரதியாரே.
அவற்றில் உதாரணத்திற்கு சில
தீக்குள் விரலை வைத்தால் – அக்கினிக்குஞ்சு – உனையே மயல் கொண்டு – சுட்டும் விழிச் சுடர்
இதைப்போன்று பல சொல்லடைகளை உருவாக்கியவர் பாரதியார்.
தமிழ் மொழியின் உற்பத்தியாளராக இருந்த அவரது சொல்லடைகளை வைத்து இன்றைய எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் பொருளாக அவற்றை சில்லறை விற்பனை செய்கிறார்கள். ஒரு விதத்தில் எல்லா நவீன தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பாரதிக்குத் தீர்க்க முடியாத நன்றிக் கடமைப்பட்டவர்கள்.
எத்தனை பேர் பாரதியின் பாடல்களையும் சொற்களையும் திரைத்துறையில், பத்திரிகைத்துறையில் எழுதி பணம் சம்பாதித்தார்கள்?
அந்த விதத்தில் எழுத்தாளர் முருகபூபதி மிகவும் விரிவாக இலங்கையில் பாரதி என்ற 283 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைத் தனது சொந்தச் செலவில் பதிப்பித்துள்ளார். பாரதியாருக்கு இலங்கை எழுத்தாளர்களின் சார்பாக நன்றிக்கடனை அவர் தீர்த்துள்ளார். நன்றி மறந்த இந்த உலகத்தில் நன்றிக்கடன் தீர்ப்பது என்பது முக்கியமானது மட்டுமல்ல கொண்டாடப்படவேண்டியதுமாகும்.
இலங்கையில் பாரதி புத்தகத்தில் உள்ளதை இங்கு சொல்ல நான் வரவில்லை. உள்ளே இருப்பதைக் கண்ணாடி அலுமாரி காட்டுவதுபோல் சிலவற்றையே இங்கு காட்ட விரும்புகிறேன்.
பாரதி உயிருடன் 1908 இலே அதாவது பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பாரதியின் பெயரில் பாரதி பாஷா வித்தியாசாலை சின்னத்தம்பி செட்டியாரால் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்தப் பாடசாலை அரசுடைமையாக்கப்பட்டது என்கிறார் . இதேபோல் 1930 மலையகத்தில் தலவாக்கொல்லையில் பாரதி பாடசாலை உருவாகியது. அது இன்னமும் இயங்குகிறது என்கிறார்.
பாரதியை இலங்கையிலும் அண்ணாமலை பல்கலைக்கழத்திலும் பெருமைப்படுத்தியதுடன் , அவரது கவிதைகளை இலங்கைத் தமிழ்க் கல்விப் பாடத்திட்டத்தில் 1932 இலேயே சேர்க்கப்பட்டதற்குச் சுவாமி விபுலானந்தரே காரணமாக இருந்தார். என் போன்றவர்கள் சிறுவயதிலே பாரதியின் பாடல்களை படிப்பதற்குச் சுவாமி விபுலானந்தர் காரணமானவர் என்பதை நன்றியுடன் நினைவு கூருகிறேன் .
பாரதியை இலங்கையில் தொடர்சியாக முன்னெடுத்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும் கம்யூனிஸ்ட்டுகளுமே.
நான் 12 ஆம் தரத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் படிக்கும்போது, நல்லூர் அரசடி வீதியிலுள்ள ஜனசக்தி சனசமூக நிலையத்தில் தொடர்ச்சியாக மல்லிகை இதழை வாசிப்பவன். அப்போது மல்லிகையின் ஒவ்வொரு இதழிலும் ”ஆடுதல், பாடுதல், சித்திரம் – கவியாதியினைய கலைகளில் – உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர் – பிறர்ஈன நிலைகண்டு துள்ளுவார் “ என்ற வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். இந்த வார்த்தைகள் ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. “துள்ளுவார் “என்ற வார்த்தை எனக்குச் சிரிப்பை வரவழைக்கும்.
மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமானது. பாரதியின் பிறந்த நூற்றாண்டு 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி ஆரம்பமானது.
அவ்வேளையில் இலங்கையில் பாரதி நூற்றாண்டு நாடாளவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த பிறந்த நாள் நூற்றாண்டை முன்னெடுத்தபோது அதன் குழுவில் இணைந்திருந்தவர்தான் எழுத்தாளர் முருகபூபதி.
அந்த அனுபவங்களையும் உள்ளடக்கி முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது.
தற்போது, பாரதி நினைவு நூற்றாண்டு காலத்திலும் முருகபூபதி, பாரதி தரிசனம் என்ற நூலை வெளியிடுகிறார். இந்த தொடர்பொற்றுமையின் பின்னணியில் இலங்கையில் பாரதி நூல் பற்றிய எனது அவதான மதிப்பீட்டு குறிப்புகளை எழுதுகின்றேன்.
கொள்ளைக்காரன் ஒரு வங்கியின் இரும்புப் பெட்டியைத் திறந்து பார்த்தால் , அவனது மனதில் ஏற்படும் நினைவுகளுக்கு குறைவிருக்காது. அது போன்றதுதான் முருகபூபதி எழுதியிருக்கும் இலங்கையில் பாரதி புத்தகத்திலுள்ள தகவல்கள். ஒரு விதத்தில் பல்கலைக்கழக டாக்டர் பட்டத்துக்கான ஆய்வு போன்றது . நிச்சயமாக இந்தப் புத்தகத்தை ஆய்வுக்கு எடுத்து பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கமுடியும். ஆனால் என்ன, நமது இலங்கைப் பல்கலைக்கழகங்கள் இவற்றைக் கண்டு கொள்ளாது.
இந்தப்புத்தகம் ஆய்வாளரது மொழியில் எழுதப்படாது செய்தியாளரது மொழியில் எழுதப்பட்டதால் வாசிக்க இலகுவாக இருக்கிறது. ஆனால், முக்கியமான தகவல்களை உள்ளே வைத்து, அக்காலத்தில் நடமாடும் புடவை வியாபாரிகளது மூட்டைபோல் இறுக்கமாக உள்ளது.
அவிழ்த்தெடுத்தால் காஞ்சிபுரம், பெனாரிஸ், மணிப்புரியனெ வகை வகையாக வெளிவரும்.
இந்தப் புத்தகம் பாரதியை இலங்கைத் தமிழர் எப்படி ஆராதிக்கிறார்கள் என்பதைத் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு புரிய வைக்கும். என் போன்றவர்களுக்குப் பல விடயங்களைப் புரியவைத்த நண்பர் முருகபூபதிக்கு வாழ்த்துக்கள்.
பின்வரும் இணைப்புகளில் இலங்கையில் பாரதி மின்னூல் கிடைக்கும்.
Pustaka: https://www.pustaka.co.in/home/ebook/tamil/ilangaiyil-bharathi
Amazon: https://www.amazon.in/Ilangaiyil-Bharathi-Tamil-Murugapoopathy-ebook/dp/B0CS9LV8NH/
—0—