கதைகள்

“பெரியண்ணன் ஆட்டம்” …. சிறுகதை – 61 …. அண்டனூர் சுரா.

மூவரில் நன்றாக தாயம் விளையாடக்கூடியவள் புனிதாதான். காய்களை வெட்டித் தூக்குவதில் மீன்கொத்தி அவள். சுடுசோற்றை முன் கையால் உருட்டுவதைப் போலத்தான் அவள் கட்டைகளை உருட்டுவாள். கையை எரவாரமாக விரித்து உருட்டிவிடுகையில் குஞ்சுமீன்கள் கையிலிருந்து குதித்து ஓடுவதைப் போலத் தாயக்கட்டைகள் உருண்டோடும். பின்கை வழியேயும் கட்டைகளை நழுவவிடுவாள். அவள் கொஞ்சிச் சொல்வதைத் தாயக்கட்டைகள் கேட்கும்.

விடிகாலையிலேயே நாங்கள் விளையாட உட்கார்ந்ததற்குக் காரணம் ஊரடங்கு. எப்போதும் ஊர்ச் சுற்றக் கிளம்பிவிடும் பெரியண்ணன், அன்றைய தினம் வெளியில் செல்லவில்லை. அண்ணன் வீட்டிலிருப்பது ஒரு நாள் அதிசயம். அவர் வீட்டிலிருக்கையில் நாங்கள் பெட்டிப் பாம்பாக இருந்தாக வேண்டும். அண்ணனுக்குக் கோபம் வந்தால் பீமனாகிவிடுவார். அண்ணன் அனுமதியின் பேரில்தான் தாயம் விளையாட வட்டங்கட்டி அமர்ந்தோம். அண்ணன் ஒரேயொரு கட்டுப்பாட்டை விதித்தார். “வெற்றியை யாரும் தாம், தூமெனக் கொண்டாடக் கூடாது.“

சாணியால் மெழுகிய திண்ணை அது. இரவுதான் அம்மா ஒற்றையாளாக மெழுகியிருந்தாள். கட்டம் கட்ட, கரிக்கொட்டையை எடுத்துவர அடுப்படிக்கு ஓடினேன். அம்மா என்னை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள். அவளது பார்வைக்குக் கொடுக்குகள் உண்டு. “அடியே கிறுக்கி, திண்ணையவா கிறுக்கப்போற” சொற்களோடு சேர்த்துப் பற்களையும் கடித்தாள். “இங்கே பாருண்ணா அம்மாவ” அண்ணனிடம் பிராது சொன்னேன். அண்ணன் எழுந்து அம்மாவை ஒரு பார்வை பார்த்தார். அடுப்பில் பொங்கிய பால் அதுவாகவே அமர்ந்து பாத்திரத்திற்குள் உள்ளடங்கியது. பெரியண்ணன் வீட்டிற்குச் சட்டாம்பிள்ளை. முரட்டுக் கம்புக்குக் கரட்டுக் கோடாரி அவர்.

நான் திண்ணையில் கட்டம் கட்டினேன். ஏழுக்கு ஏழு. ஒன்பது மனை. நாங்கள் விளையாட உட்கார்ந்ததும், பக்கத்துவீட்டு குட்டிம்மா ஓடிவந்தாள். அவளுக்கு மூன்று வயது. அவளுக்கு விளையாட்டுப் பொம்மை நாங்கள்தான். அவள் எங்களைக் கட்டிப் பிடிக்கவும், முத்தம் கொடுக்கவுமாக இருக்கிறவள். ஓடி வந்த அவள் புனிதாவின் மடியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டாள்.

நான் தாயக்கட்டைகளைக் குலுக்கி உருட்டப் போனேன். “நிறுத்து” என்றார் பெரியண்ணன். அடுப்படியிலிருந்த அம்மா, தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். அண்ணன் எழுந்து வீட்டுக்குள் சென்று கண்ணாடியில் முகம் பார்த்து தலைமுடியை ஒடுக்கினார். அண்ணனுக்குப் பிடித்தது முடி அலங்காரம். போதாக்குறைக்கு தாடி வேறு வளர்த்திருந்தார்.

“ சோடியா, தனி ஆட்டமா ?” கேட்டுக்கொண்டு வெளியே வந்தார்.

“ தனி ஆட்டம்ண்ணே”

“நானும் வர்றேன்” என்றவர் சட்டையின் கைகளை முழங்கை வரைக்குமாக மடித்துவிட்டுக் கொண்டு திண்ணையில் அமர்ந்தார். நானும் சின்னண்ணனும் எதிரும் புதிருமாக உட்கார்ந்துகொண்டோம். புனிதாவுக்கு நேரெதிர் பெரியண்ணன்.

பெரியண்ணன் காய்கள் பொறுக்கிவர வாசலுக்குச் செல்கையில் சின்னண்ணன் புனிதாவின் காதிற்குள் எதையோ சொல்லிக் கிசுகிசுத்தார். அவர் சொன்னதை அத்தனை வேகமாக புனிதா என் காதிற்குள் கொட்டினாள். அவள் சொன்னது எனக்குச் சரியென்றே பட்டது!

பெரியண்ணன் சரியான வாய்ப்பந்தல். பேசத் தொடங்கினால் குறுணி பதறுகள் பொறுக்கலாம். விளையாட்டுக்கும்கூட தான் தோற்றுவிடக் கூடாதெனக் கங்கணம் கட்டுகிறவர். அவரைப் பொறுத்தவரைக்கும் வெற்றி என்பது மகிழ்ச்சி அல்ல, சூழ்ச்சி. அம்மா வீட்டுக்குளிருந்தபடியே, “அடியே அவன்கிட்ட கவனமா வெளையாடுங்கடி. வாயூதிப் பயல்” என்றாள். அம்மா சொல்வது சரிதான். வாயால் ஊதி ஊதியே காய்களை நகர்த்திடும் சாமார்த்தியம் அவரிடம் இருந்தது.

பெரியண்ணன் வேப்பமுத்துகளுடன் எனக்கும் அருகில் வந்தமர்ந்தார். நான் திண்ணையில் வசதியாக உட்கார்ந்துகொண்டு ஒரு காலைத் தொங்கவிட்டுக் கொண்டேன். அம்மா பொங்கிய பாலை இறக்கி வைத்துவிட்டு எனக்கும் அண்ணனுக்கும் இடையில் அமர்ந்துகொண்டாள். அம்மாவின் இரு கண்களில் ஒன்றேமுக்கால் கண்கள் என் மீதே படர்ந்திருக்கும். பெரியண்ணனுக்குப் பொசுக்கென்று வரும் கோபம் கையிலேயே வரும். அவரது கை என்னைத் தீண்டிவிடக் கூடாதென அப்படியாக உட்கார்ந்திருந்தாள். அப்பா சின்னண்ணக்கும் பின்னால் நின்றார். அவருக்குத் தாயம் விளையாடத் தெரியாது. ஆனால் தாயத்தால் நடந்த கதைகள் அவருக்கு அத்துப்படி. பாரதக் கதைகள் வண்டிக்கணக்கில் அளப்பார்.

 

நான் ஆட்டத்தைத் தொடங்கினேன். கட்டைகளை உள்ளங்கையில் வைத்து கையை இறுக மூடி, உருட்டினேன். புனிதா ஆட்டத்தை இப்படித்தான் தொடங்குவாள். முதல் உருட்டலிலேயே அவளுக்குத் தாயம் விழும். ஆனால் எனக்கு மூன்று விழுந்தது.

அடுத்து புனிதா. அவள் தாயக்கட்டைகளை நெற்றிக்குக் கொண்டுச்சென்று ‘இச்’ கொட்டி உருட்டினாள். அவள் தாயம் கேட்டாள். தாயமே விழுந்தது. அவளது மடியிலிருந்த கற்களில் ஒன்றை எடுத்து மனையில் வைத்தவளுக்கு அடுத்து இரண்டு விழுந்தது.

புனிதா, தாயம் விளையாட உட்கார்ந்துவிட்டால் யாரையும் நிமிர்ந்து பார்க்கிறவள் அல்ல. அவளது முழு பார்வையும் விளையாட்டுமீதே இருக்கும். அவள் ஒரு காலை உட்பக்கமாக மடக்கி அதன்மீது அமர்ந்துகொண்டு, ஒரு கையை முகவாய்க்குக் கொடுத்து உட்கார்ந்திருந்தாள். குட்டிம்மா அவளையே சுற்றி ஓடி வந்தாள்.

சின்னண்ணன் கட்டைகளை உருட்டினார். அவருக்கு ஆறு – ஐந்து – தாயம் என விழுந்தது. நாக்கை ஒரு பக்கக் கொடும்புக்குள் கொடுத்து குடைந்து சிரித்துக்கொண்டார்.

கட்டைகள் பெரிய அண்ணன் கையை வந்தடைந்தன. புனிதா தொண்டையைச் செருமினாள். ‘கண்கொத்திப் பாம்பா இருங்க’ எனச் சொல்லத்தான் அப்படியொரு செருமல். பெரியண்ணன் சட்டெனக் கட்டைகளை உருட்டிவிடவில்லை. தாமரை இலை மேல் தண்ணீரைப் போல கட்டைகளை உள்ளங்கையில் வைத்து உருட்டினார். காய்களைக் கண்களுக்குக் கொண்டுசென்று, ஊர்த் தெய்வங்களையெல்லாம் வேண்டி, உருட்டிவிட்டார். மூன்று விழுந்தது. தாடியைச் சொறிந்துக்கொண்டு கட்டைகளை என் பக்கமாகத் தள்ளினார். எனக்குத் தாயம் விழுந்தது. மறுதாயம், இன்னொரு தாயம் விழுந்தன.

அம்மா என் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்து, “ராத்திரிக்கு உனக்குத் திருஷ்டி சுத்திப் போடணும்” என்றாள். அப்பா “விருத்தம் நல்லா விழுதே, இந்த வருசம் நல்லேர் கட்டுறதுக்கு நீதான்டியாத்தா விதையெடுத்துக் கொடுக்கணும்” என்றார். பெரியண்ணன் தாடி சொறிவதைச் சற்றே நிறுத்தி, அப்பாவை நிமிர்ந்து பார்த்தார். அப்பா அடுத்துச் சொல்லவந்ததைச் சொல்லாது பார்வையை வேறொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டார்.

நான் ஆறு கேட்டேன். ஐந்து – ஆறு – இரண்டு விழுந்தன. காய்களை நகர்த்திய நான் புனிதாவின் கற்களில் ஒன்றை வெட்டித் தூக்கி வெட்டாட்டம் ஆடினேன்.

காடு, கழனி தோப்புத் துரவுக்குச் செல்கிறவர்கள் எங்கள் வீட்டு வாசல் வழியேதான் செல்ல வேண்டும். ஊரடங்கையும் மீறி தோளில் களைக்கொட்டு கையில் தூக்கு வாளியென சென்றவர்கள் பெரியண்ணன் வீட்டிலிருப்பதையும் தாயம் விளையாடுவதையும் பார்த்து வியந்து எங்களைச் சுற்றி நின்றார்கள்.

புனிதா கட்டைகளை உருட்டி, “தாயமா, அஞ்சா?” எனக் கேட்டாள். இரண்டு விழுந்தது. சுற்றி நின்றவர்கள், “இக்கூம்” என்றார்கள். தன்னைச் சுற்றி யாரெல்லாம் நிற்கிறார்கள் என்று அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. கணுக்கை வரைக்குமாக விழுந்துக்கிடந்த வளையல்களை முழங்கை வரைக்குமாக மேலே இழுத்துவிட்டுக்கொண்டவள் நெற்றியில் கிடந்த முடிகளை விரல்களால் தடவி முடியோடு செருகிக்கொண்டாள்.

சின்னண்ணனுக்கு ஐந்து – ஆறு – நான்கு விழுந்தன. அவரது காய் எனது புளியங்கொட்டையை வெட்டியது. அடுத்த உருட்டலில் மூன்று விழ புனிதாவின் கல்லைக் கொத்தினார். வெட்டாட்டம் ஆடி அவரது குச்சியை உள்கட்டத்திற்குள் கொண்டு சென்றார்.

பெரியண்ணனுக்குத் தாயம் விழுவேனா என்றது. “அட ஒரு தாயம்?” ஆறு விழுந்தது. “ஒரு தாயங்கிறேன்?” மூன்று விழுந்தது. எரிச்சலாக கட்டைகளை என் பக்கம் தள்ளினார்.

பெரியண்ணன் காய்களைத் தவிர எங்கள் மூவரின் காய்கள் கட்டங்களில் ஊர்ந்தன. புனிதா அனைத்து கற்களையும் மனைக்கு ஏற்றியிருந்தாள். அவள் எந்தவொரு காயையும் வெட்டாத ஒரு குறைதான். வெட்டிவிட்டால் உள்ளே சரசரவென இறங்கிவிடுவாள்.

குட்டிம்மா இரண்டு கைகளையும் முழங்காலுக்குக் கொடுத்து, குனிந்து புனிதாவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவளைச் சுற்றிவந்து அவளது கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள். அவளை அள்ளி மடியில் கிடத்திக்கொண்ட புனிதா தாயக்கட்டைகளை அள்ளி, ‘சோநாலு’ என்றாள். அடுத்து ‘பாநாலு’ என்றாள். அவள் என்ன சொல்லி கட்டைகளை உருட்டினாளோ அதுவே அவளுக்கு விழுந்தன. அவள் என் புளியங்கொட்டையை வெட்டி சின்னண்ணனின் குச்சியை வெட்டி, உள்கட்டத்திற்குள் அத்தனை வேகமாக நுழைந்தாள்.

எல்லாருக்கும் ஆட்டம் சூடு பிடித்திருந்தது. பெரிய அண்ணனுக்கு மட்டும் தாயம் விழுவதாக இல்லை. அவர் எப்படியெல்லாமோ காய்களை உருட்டிப் பார்த்தார். தாயம் என்கிற ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் விழுந்தன.

தாயம் விழாததை அவர் ஏமாற்றமாக மட்டுமில்லை, அவமானமாகவும் உணர்ந்தார். இப்போது அவர் கண்ணாடியைப் பார்த்தால் அவர் முகம் அவருக்குப் பார்க்கச் சகிக்காது. அப்படியாகத்தான் அவரது முகவெட்டு இருந்தது. எல்லோருடைய காய்களும் கட்டத்திற்குள் இறங்கி, ஒன்றையொன்று வெட்டிக்கொண்டு பழமனையை நோக்கி ஊர்ந்துகொண்டிருக்க பெரியண்ணன் காய்கள் சடமாக வெளியே இருந்தன.

நான் பெரியண்ணன் தாயம் உருட்டும் இலாவகத்தைப் பார்த்தேன். தாயக்கட்டைகளைப் போல அவர் கட்டைகளை உருட்டவில்லை. தரையில் அடித்து இரண்டையும் உடைத்துவிடுவதைப் போல அடித்தார். அவர் விளையாடும் விதம் எங்களுக்குச் சிரிப்பை மூட்டியது. அம்மா கண்களால் சமிக்ஞை காட்டி சிரிக்கக் கூடாதெனச் சொன்னாள்.

வெயில் தாயக்கட்டங்கள் மீது விழுந்து சலனமித்தது.

ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாமா, சின்னண்ணன் சங்கேத மொழியில் கேட்டார். எனக்கும்கூட அப்படியாகத்தான் தோன்றியது. அம்மாவும் கூட அதையே சொன்னாள். புனிதா இதற்குச் சம்மதிக்க வேண்டுமே! அவள் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை. சொன்னாலும் நிலைமையை உணர்கிறவள் அல்ல. அவளுக்கு விளையாட்டு என்பது பொழுதுபோக்கு அல்ல, கொண்டாட்டம்!

பெரியண்ணன் தாயக்கட்டைகளை உள்ளங்கைக்குள் வைத்து முறிக்கப் பார்த்தார். அவரது செய்கை, அம்மாவைப் பதட்டத்தில் ஆழ்த்தியது. கட்டையிலிருந்த ஒரு சிலாம்பு அவரது கையில் குத்தி, இரத்தத்தை அரும்பிட வைத்தது.

ஆட்டத்தை இத்தோடு கலைத்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தேன். அந்நேரம் பார்த்து அடையிலிருந்த பெட்டைக்கோழி, இரண்டு இறக்கைகளையும் அடித்துக்கொண்டு, கொக்..கொக்..எனக் கேவியவாறு பறந்து, தாயக்கட்டங்களில் விழுந்து எழுந்து ஓடியதில் காய்கள் நாலாபுறமும் சிதறித் தெறித்தன. எங்களைச் சுற்றி நின்றிருந்த பெண்கள், பெட்டை கேவுவதைப் போலவே சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதைப்

பார்த்து குட்டிம்மா சிரித்தாள். குட்டிம்மா கையைக் கொட்டிக் கொண்டு சிரித்தது, அத்தனை பேருக்கும் வேடிக்கையாக இருந்தது. பெரியண்ணன் அவளை வாரியள்ளி மடியில் கிடத்திக்கொண்டு, கன்னம் மாற்றி கன்னம் முத்தம் கொடுத்தார்.

“ இப்படியாக பாரதக் கதையிலும் ஒரு கோழி ஆட்டத்தைக் கலைத்திருந்தால் பாரதப் போர் ஏது, பாண்டவர்களுக்கு வனவாசம் ஏது?” என்றார் அப்பா. அவர் இப்படிதான். யாரேனும் தடுக்கி விழுந்தால், அதற்கொரு பாரதக் கதை சொல்கிறவர்.

சுற்றிநின்றவர்கள் சிதறிய காய்களைப் பொறுக்கிக் கொடுத்தார்கள். அதை வாங்கிய புனிதா அதனதன் இடத்தில் வைத்தாள். புனிதாவின் சிறப்பே இதுதான். காய்களை இருந்த இடத்தில் வைத்து, அத்தனை பேரையும் அவள் வியப்பில் ஆழ்த்தியிருந்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுச் சித்ரா பாட்டி புனிதாவின் தலையில் தன் கையிலிருந்த தூக்குவாளியால் ஒரு இடி இடித்து, “என்னடி இவ, இவளோ கருத்தா இருக்கா” என்றாள். “என் புள்ள மேல கண்ணு வைக்காதீங்க” என்றாள் பதிலுக்கு அம்மா. அவள் இடித்த இடி புனிதாவுக்கு வலிக்கவே செய்திருக்கும். ஆனால், அவள் எந்தவோர் உணர்ச்சியுமில்லாமல் உட்கார்ந்திருந்தாள்.

இப்பொழுது புனிதாவின் ஆட்டம். அவள் ராகத்தோடு கட்டைகளை உருட்டலானாள். “ஒரே ஒரு தாயம். தாயத்தோடவா போறேங்கிறே. இம், அஞ்சு. அஞ்சு மட்டுமா, ஆறு, இன்னொரு ஆறு? இம், அப்படித்தான். இப்ப மூணு வேணும். மூ..மூ..மூ மூணேதான்…” கைகளைக் கொட்டிக்கொண்டவள் கற்களை விழுந்திருந்த புள்ளிகளுக்கேற்ப நகர்த்தினாள்.

“இவ கையில அப்படி என்னதான் வச்சிருக்காளோ, கேட்கிறதெல்லாம் அப்படியப்படியே விழுது” என்றார் அப்பா. “பெரிய வித்தைக்காரிங்க இவ” என்றாள் அம்மா. சுற்றி நின்றவர்கள் அவளது கன்னத்தை உருவி முத்தம் கொடுத்தார்கள்.

தாயக்கட்டைகள் பெரியண்ணன் கையை வந்தடைந்தன. ‘ஒரு தாயம்?’ இரண்டு விழுந்தது.

எனக்குச் சிரிப்பு வந்தது. நான் சிரித்ததைப் பார்த்து, அம்மா என் தொடையைக் ‘நறுக்’கெனக் கிள்ளினாள். கிள்ளிய அதே கையால் தடவியும் கொடுத்தாள்.

பெரியண்ணன் ஏன் இப்படி முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு கட்டைகளை எறிய வேண்டுமாம். கட்டைகளுடன் பேசி கொஞ்சியபடி உருட்டினால் கேட்பது விழுமே. அண்ணனுக்கு இது ஏன் தெரியவில்லை. தாயக்கட்டைகள் வெறும் கட்டைகளாகவே இருந்தாலும், அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறதே! ஒரு ஆட்சியைக் கவிழ்த்து ஒரு குடும்பத்தை வனவாசத்திற்கு அனுப்பிய கர்வம் அதற்கு!

அண்ணா தாயக்கட்டைகளோடு கொஞ்சம் பேசுங்களேன் என்று சொல்லிக்கொடுக்க வேணும் போலிருந்தது. பெரியண்ணன் பக்கமாகத் திரும்பி, “அண்ணா” என்றேன். அவர் என் பக்கமாகத் திரும்பவோ, என்னை ஏறிட்டுப் பார்க்கவோ இல்லை. அவரது கர்வமும், சுயமரியாதையும் அவரைத் தடுத்திருந்தது.

அண்ணனின் கோலத்தை என்னால் பார்க்க முடியவில்லை. அவருக்குத் தாயம் விழாததைக் கண்டு ஊர்ப் பெண்கள் உதட்டைப் பிதுக்கவும் ‘இக்கூம், ஊக்கூம்’ எனவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அண்ணனின் நாசிகள் விடைத்தன. அவரது கோபம் ஊர்ப்பெண்கள் மீது பாய்ந்து, பாரதக் கலகம் போல தெருவுக்குள் ஒரு கலகம் மூண்டுவிடுமோ என்கிற அச்சம் என்னை ஆட்டுவித்தது.

ஊர்ப்பெண்கள் பெரியண்ணனுக்கு விழப்போகும் தாயத்தைப் பார்த்துவிட்டே செல்ல வேண்டுமென நின்றிருந்தார்கள். அண்ணனும் எப்படியெல்லாமோ கட்டைகளை உருட்டிப் பார்த்தார். தாயம் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் விழுந்தன.

எங்களைச் சுற்றி நின்ற பெண்கள் சிரித்தார்கள். யாரோ ஒருவரின் துணி கிழிவதைப் போன்ற சிரிப்பால் அண்ணன் பீமனாக மாறத் தொடங்கினார். சிரித்தவரின் பக்கமாகத் திரும்பி ஒரு முறைப்பு முறைத்தார். அண்ணனுக்குக் கோபமுகம் காட்டுவது கைவந்த கலை. கழுகின் மூக்குதான் அவருக்குக் கண்! நாசிகள் இரண்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி. அதற்கும்மேல் அவர்கள் எங்களைச் சூழ்ந்து நிற்கவில்லை.

“ அண்ணே, ஆட்டத்த முடிச்சிக்கலாம்”

அண்ணன் என்னை ஏறிட்டுப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தார். உதடுகள்தான் சிரித்ததே தவிர கண்கள் இல்லை. கண்கள் சிரிக்காத சிரிப்பு, பெருநடிப்பு என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது.

அண்ணன் இந்தமுறை கட்டைகளை வேறொரு லயிப்பில் அள்ளினார். சோலிகளை உருட்டுவதைப் போல உருட்டி, கட்டைகளை விரல் இடுக்குகள் வழியே கசியவிட்டார். “ ஒரு தாயம்?”. நாங்கள் கட்டைகளைக் கூர்ந்தாழ்ந்து பார்த்தோம். இரண்டு விழுந்தது. “ஆம், தாயமேதான் ” என்று கட்டைகளை அரக்கப் பரக்க அள்ளி முத்தம் கொடுத்து, பெருங்குலுக்குக் குலுக்கி, கட்டைகளை மறுஉருட்டு உருட்டினார். திரும்பவும் இரண்டே விழுந்தது. “இம், இன்னொரு தாயம்” என்ற அவர் கட்டைகளை வாரியள்ளி அவரிடமிருந்த இரண்டு வேப்பமுத்துகளை மனையில் வைத்தார். நான் சின்னண்ணனைப் பார்த்தேன். அவர் புனிதாவைப் பார்க்க அவள் என்னைப் பார்த்தாள்.

அந்நேரம் பார்த்து அமைதியாக படுத்திருந்த வீட்டுநாய் யாரையோ பார்த்து குரைத்தது. “ இங்கே என்னடி நடக்குது?” என்றார் அப்பா.

“ அள்ளிப் புள்ளி ஆயிரம்” என்றாள் அம்மா.

புனிதாவின் அம்மாஞ்சி முகம் உக்கிரமாக மாறத் தொடங்கியது. அவளது தலை உயர்ந்து, குரலும் உயர்ந்தது. “அண்ணே, இதென்ன அழிச்சாட்டியம், விழுந்தது தாயமில்ல, ரெண்டு” என்றாள்.

அண்ணன் தன் உதடுகளை உதப்பிக்கொண்டு அவளை வெறிக்க எரிக்கப் பார்த்தார். அவரது கண்கள் சிரிக்க, உதடுகள் தட்டையாகக் குவிந்தன. “தாயம்தான் விழுந்தது, வேணுனா அம்மாவைக் கேளு” என்றார். எங்களின் பார்வை அம்மாவின்பால் திரும்பியது. அம்மாவால் இதற்குப் பதில்சொல்ல முடியவில்லை. கர்ணனா, தர்மனா குந்தித் தாயைப் போல விழிக்கலானாள்.

“அப்பாவனா கேளு”. அப்பா ஒரு சத்தமில்லாமல் நடக்கலானார்.

“தாயம்தான் விழுந்தது. அதுல என்ன சந்தேகம்?. ஏன் தாயம் உனக்குத்தே விழும், எனக்கு விழாதா?” நாக்கைக் கடித்தார். பற்கள், நறநற என்றன. அவரது இமைகள் நெற்றிக்கு ஏறி இறங்கின.

புனிதா என்னைப் பார்த்து சின்னண்ணனைப் பார்த்தாள். சின்னண்ணனுக்குச் சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்கத் தெரியும். கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்படத் தெரியாது.

“ சரிடா, நீ உருட்டு. இன்னொரு தாயம் விழுவுதானு பார்ப்போம்..” என்றாள் அம்மா. அண்ணன் கட்டைகளை உருட்டினார். மூன்று விழுந்தது. அவரது வேப்பமுத்துகளில் ஒன்றை எடுத்து மூன்று கட்டங்கள் நகர்த்திவைத்தார்.

நான் கட்டைகளைக் குலுக்கினேன். புனிதா என்னைத் தடுத்தாள். “ பெரியண்ணே பொய்யாட்டமாடுது. தாயமே விழல. தாயமெனச் சொல்லி ரெண்டு காய்கள உள்ள இறக்கியிருக்கு” என்றவள் வாயில் முட்டிய அழுகையைத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டு, இதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதைப் போல முகத்தால் வெட்டினாள். அவளது முகம் பெரியண்ணன் முகத்திற்கு ஏழாம்பொருத்தமாக இருந்தது.

பெரியண்ணன் எழுந்து உடம்பை வளைத்தார். நெட்டிப் பறித்து, கைகளை முன்னே பின்னே சுற்றினார். குத்துச்சண்டைக்கு தயாராகுவதைப் போல குதித்து கழுத்தைச் சுற்றியபடி அதே இடத்தில் அமர்ந்தார்.

“ அண்ணா ரெண்டு காயயும் எடுங்க. உங்களுக்கு இன்னும் தாயம் விழல” என்றேன் நான்.

“ என்னது விழலையா? ” என நாக்கைத் துருத்தியவர் கண்களை உருட்டி என்னை விழுங்கிவிடுவதைப் போலப் பார்த்தார். அவரின் பார்வை என்னை நடுங்க வைத்தது. அடுத்து அவருடைய பார்வை சின்னண்ணன் பக்கமாகச் சென்றது. “நீ சொல்லடா தம்பி, தாயம் விழுந்ததா இல்லையா?” சின்னண்ணன் தலையை நெடுவாக்கில் ஆட்டி பிறகு கிடைவாக்கில் ஆட்டினார்.

“ தம்பியே சொல்லிட்டான், நீ கட்டய உருட்டு”

ஆட்டம் தொடர்ந்தது.

பெரியண்ணனுக்குத் தாயம்தான் விழலேயே தவிர, ஆட்டம் சூடு பிடித்தது. தண்ணீர்ப் போக்கினை எதிர்த்து நீந்தும் ஏத்துமீனைப் போல அவரது காய்கள் கட்டங்களில் முன்னேறிச் சென்றன. காய்களை அத்தனை

வேகமாக நகர்த்தி, புனிதாவின் கல்லைக் கொத்தி, தூக்கி எறிந்தார். அடுத்து சின்னண்ணன் குச்சியை வெட்டினார். வெட்டாட்டம் ஆடி, அவரது வேப்பமுத்தை பழமனைக்கும் முதல் கட்டத்தில் கொண்டுபோய் நிறுத்தினார்.

இப்போது அவரது காயைப் பழமனைக்கு ஏற்ற அவருக்கொரு தாயம் தேவைப்பட்டது. அதற்காக அவர் எப்படியெல்லாமோ கட்டைகளை உருட்டினார். தாயம் என்கிற ஒன்று விழுவதாக இல்லை.

புனிதாவின் பார்வை வேப்பமுத்தின் மீது குவிந்தது. அதையே அவள் வெறிக்கப் பார்த்தாள். விதிமீறி நுழைந்த காய்கள் அவளை என்னவோ செய்தன. உதடு கடித்தாள். நெட்டிப் பறித்தாள். இமைகளும் நாசியும் கூடுவாயிடத்தைச் சுழித்தாள்.

தாயக்கட்டைகள் அவளது கையை வந்தடைந்தன.

ஒரு தாயம்,? அத்தோடவா போற? ஒரு ஆறு, அடுத்து ஒரு பனிரெண்டு?, இன்னொரு ஆறு?, அவள் கேட்பதெல்லாம் விழுந்தன. கடைசியாக ஒரு மூணு? மூ மூ மூணேதான். கையை முறுக்கி, தரையில் குத்திக்கொண்டாள்.

என்ன செய்யப் போகிறாளென அவளது காய் நகர்த்தலைப் பார்த்தோம். அவள் தாயக்கட்டைகளை மடியில் போட்டுக் கொண்டு விழுந்திருந்த எண்களுக்குக் காயை நகர்த்தினாள். அவள் இரு கற்களை மாறிமாறி நகர்த்தி, பெரியண்ணன் உள்ளே கொண்டுபோய் வைத்திருந்த இரு வேப்பமுத்துகளையும் வெட்டித் தூக்கினாள்.

அடுத்து வெட்டாட்டம்! ஒரு தாயம் கேட்டாள். தாயமே விழுந்தது. அவளது கல்லைப் பழமனைக்கு ஏற்றினாள்.

புனிதாவின் ஆட்டம் என்னைப் புல்லரிக்க வைத்தது. அம்மா சத்தமில்லாமல் நகர்ந்து அவளது கலைந்த தலைமுடியைக் கொத்தாக வாரியள்ளி கொண்டை போட்டுவிட்டாள். நான் சின்னண்ணனைப் பார்த்தேன். அவரின் இமைகள் நெற்றிக்கு ஏறியிருந்தன.

எனக்கு எக்காளமாக இருந்தது. ஒரு குதியாட்டம் போட்டால் தேவலாம் போலிருந்தது. இவ்வளவு நேரம் அமைதியாக அம்மாவின் மடியில் உட்கார்ந்திருந்த குட்டிம்மா எழுந்து, கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடினாள்.

தாயக்கட்டைகள் எங்களைச் சுற்றி பெரியண்ணன் கையை வந்தடைந்தன. அவர் கட்டைகளை அள்ளி, நீண்டநேரம் கொண்டு குலுக்கி, நெற்றிக்குக் கொண்டுச் சென்று எதையோ சொல்லி முணுமுணுத்தவர், “ஒரே ஒரு தாயம்?” எனக் கேட்டு உருட்டினார். மூன்று விழுந்தது.

அடுத்து எனது ஆட்டம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.