“நிலை தடுமாறா நிலையுடை இதழ்” … வாழ்த்து கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
நெருப்பு பிழம்பின் நிலைமிகு வெட்பம்
இருப்பை ஏற்றிடும் கருத்தினில் தட்பம்
கருப்பொருளறிந்து வழங்கிடும் நுட்பம்
உருப்படியாய் நின்று உலவிடும் திட்பம்
ஆக்கங்கள் சுமக்கும் அழகுடை பேழை
ஏக்கங்கள் தவிர்க்கும் எழிலான சோலை
நோக்கமொடு தொடர உதவிடும் சாலை
தாக்கத்தை விதைக்கவும் தயங்கா ஓலை
இத்தகு இதழென ஏற்றிடவே நம் நெஞ்சு
அத்தகு கருத்துரைத்திட அயராது மிஞ்சு
தித்திக்கும் நற்றமிழில் நீயும் இளம் பிஞ்சு
எத்திக்கும் ஒளிர்வாய் நீ அக்கினிக்குஞ்சு
பிறந்து வளர்வதோ இயற்கையின் நிகழ்ச்சி
சிறந்து நிற்பது அக்கினிக்குஞ்சின் வளர்ச்சி
மறந்து வாசியாதிருந்தால் அது நம் தளர்ச்சி
பறந்துவந்து நினைவினில் அமர்வதே சாட்சி
மதித்து போற்றி வாசித்து நாமும் மகிழ என்று
மதியிலிருத்தி நினைந்து வாழ்ந்திடல் நன்று
பதினான்காம் ஆண்டில் கால்பதித்து வென்று
அதிபுகழ் அடைந்திட வாழ்த்துகிறேன் இன்று.
-சங்கர சுப்பிரமணியன்.