வலியாரை தெய்வம் வருத்தும் என்பதே காத்திருப்புக்கு நம்பிக்கை! …. நியூசிலாந்து சிற்சபேசன்.
இன்றைய காலகட்டத்திலே, காலநிலைமாற்றம் பரவலான கவனத்தைக் கொண்டிருக்கின்றது. அதுதொடர்பில் தமிழ்ச்சூழல் கொண்டிருக்கின்ற பிரக்ஞை புரியாத புதிராகும்.
தமிழ்ச்சூழலின் பாரம்பரியம் இயற்கையோடு ஒன்றியது. ஆனால், அத்தகைய பாரம்பரியத்தை பெருமளவில் இழந்திருக்கின்றோம். அதனால், காலநிலைமாற்றம் என்பதனைப் பிறவழமாகவே தமிழ்ச்சூழல் பார்க்கின்றது.
அதீதமான மழையினால், வெள்ளம் ஏற்படுகின்றபோது காரணம் தேடப்படுகின்றது. அந்தவேளையிலேயே, காலநிலை மாற்றம் குற்றவாளியாகப் பார்க்கப்படுகின்றது. அத்துடனேயே அந்த விஷயம் முடிந்துவிடுகின்றது.
காலநிலைமாற்றம் ஏன் ஏற்படுகின்றது என்னும் கேள்வியை, மிகுந்த ஈனஸ்வரத்திலேயே தமிழ்ச்சூழலில் கேட்க முடிகின்றது.
இத்தனைக்கும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சமூகமே தமிழர்களாகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதனை பஞ்சபூதங்கள் என வணங்கினார்கள். மரங்களைத் தெய்வமாக்கினார்கள். அவ்வாறாக மரங்களைப் பாதுகாத்தார்கள். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்” என்றார்கள். வணங்கப்படுவதற்கான வரைவிலக்கணத்தை அவ்வாறாக வகுத்தார்கள். அந்தவகையிலே பல்லுயிர்களையும் பாதுகாக்க முற்பட்டார்கள் சகவாழ்வு என்பதனை அறமாகவே வகுத்தார்கள். தற்போது அவையெல்லாம் பழங்கதைகள் ஆகிவிட்டன.
இயற்கையைப் பாதுகாக்கத் தவறியதனாலேயே, காலநிலைமாற்றம் ஏற்படுகின்றதென்பதை தமிழ்ச்சூழல் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
சராசரி வெப்பம் மற்றும் மழைவீழ்ச்சியின் அளவு தொடர்ச்சியாக அதிகரிப்பதே காலநிலைமாற்றம் எனப் பெருவெட்டில் சொல்லப்படுகின்றது. இத்தகைய மாற்றம் ஒருவகையில் இயல்பானதாகும். அதற்கு சூரியசுழற்சியும் காரணியாகின்றது. அத்தகைய ஏற்றஇறக்கங்களை இயற்கையே சமன்செய்துகொள்கின்றது.
அவ்வாறான இயற்கைச்சமநிலை 1800களிலே உடைய ஆரம்பித்தது. அதற்கு மானிடமே காரணமாகியது. வானத்தை வில்லாக வளைக்க அவாவியது. வளர்ச்சி என்னும் இலக்கைத் துரத்தத் தொடங்கியது. சகவாழ்வின் எல்லைகளை உடைத்தது. இவ்வாறாக, இயற்கையுடனான சமநிலையை தொடர்ச்சியான அத்துமீறல்கட்கு உட்படுத்தியது.
அதிகரித்த எரிவாயு பயன்பாடு, தொழிற்சாலைகளின் பெருக்கம், போக்குவரத்து அதிகரிப்பு, முடிவற்ற கட்டுமானங்கள், உச்சமான நிலப்பயன்பாடு, காடு அழிப்பு, உச்சப்பயன் நோக்கிய விவசாயம் என இயற்கையின் சமநிலையை சீண்டும் செயற்பாடுகளின் பட்டியல் நீளத் தொடங்கியது. விளைவு: கரியமிலவாயு வகையறாக்களின் வெளியேற்ற அளவுகள் வேகமாக அதிகரித்தன. அதுவே பிரச்சினையின் ஆரம்பப்புள்ளி எனலாம்.
மிதமிஞ்சிய அளவுகளிலே வெளியாகின்ற கரியமிலவாயு வகையறாக்கள், வளிமண்டலத்தில் படலமாகின்றன. சூரியவெளிச்சம் மூலமாக கிடைக்கின்ற வெப்பத்தை பூமியிலேயே மடக்குகின்றன. அதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட அளவுகளோடு ஒப்பிடுகையில், பூமியின் வெப்பம் 1.1 செண்டிகிரேட் அதிகரித்துள்ளது. வளிமண்டலத்தில் படருகின்ற கரியமிலவாயு வகையறாக்களின் அளவு 50விகிதத்தினால் அதிகரித்திருக்கின்றது.
கிறீன்ஹவுஸ்தாக்கம் என்ற சொல்லாடலை காலநிலை மாற்றம் தொடர்பான சம்பாஷனைகளிலே அதிகம் கவனிக்கலாம். அஃது குளிர்பிரதேசத்தில் விஷயத்தைப் புரியவைக்கப் பயன்படுத்தப்படக்கூடிய சொல்லாடலாகும்.
கிறீன்ஹவுஸ் என்பது குளிர்பிரதேசங்களில் காணப்படுகின்ற கட்டுமானமாகும். தக்காளி போன்ற வெப்பவலயத் தாவரங்களைக் குளிர்காலத்தில் பாதுகாப்பதற்கான கட்டுமானமே கிரீன்ஹவுஸ் எனப்படுகிறது. அஃது கண்ணாடியிலான சுவர்கள் மற்றும் கூரைகளைக் கொண்டதாகும்.
பகல்பொழுதில், கண்ணாடியூடாகத் தாவரங்களுக்குச் சூரியவெளிச்சம் கிடைக்கின்றது. இரவுப்பொழுது அதிகம் குளிரானவை. கண்ணாடியிலான கட்டுமானம் வெப்பத்தை பேணக்கூடியவை. பகலில் கிடைத்த சூரியவெப்பத்தை மடக்கிவைத்திருக்கின்றன. அதனால் தவாரங்களின் உயிர்ப்புத்தன்மை பேணப்படுகின்றது.
அதையொத்த தத்துவநிலையே பூமியிலும் ஏற்படுகின்றது.
மிதமிஞ்சிய அளவுகளிலான கரியமிலவாயு வளிமண்டலத்தில் படலமாகின்றது. அஃது பகலிலே சூரியவெளிச்சம் மூலமாக கிடைக்கின்ற வெப்பத்தை மடக்கிவைக்கின்றது. அதனாலேயே பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது.
பூமியில் நடைபெறுவது கிறீன்ஹவுஸ் தத்துவத்தை ஒத்ததாகும். அதனாலேயே கிறீன்ஹவுஸ்பாதிப்பு என்ற சொல்லாடலை காலநிலை மாற்றம் தொடர்பான சம்பாஷனைகளிலே காணமுடிகின்றது.
கிரீன்ஹவுஸ்பாதிப்பு என்பதே தமிழில் பசுமைக்குடில்பாதிப்பு என விளிக்கப்படுகின்றது. அஃது பொருத்தமான தமிழ் சொற்பதமா என்ற கேள்வியை எளிதில் கடந்துபோக முடியவில்லை.
கரியமிலவாயு வகையறாவையே கிறீன்ஹவுஸ்வாயு என விளிக்கப்படுகின்றது. வளிமண்டலத்திலே, கிறீன்ஹவுஸ்வாயுக்களின் அடர்த்தி இரண்டுமில்லியன் ஆண்டுகளிலே, தற்போது, உச்சமடைவதாகக் கணிக்கப்படுகின்றது.
காலநிலைமாற்றத்தின் முக்கிய கூறாக புவிவெப்பமடைதலைச் சொல்லலாம். கடந்த 150 ஆண்டுகளிலேயே புவிவெப்பமடைதல் பன்மடங்காக அதிகரிக்கின்றது. அதனுடைய விளைவுகளை சங்கிலித்தொடரில் காணமுடிகின்றது.
பஞ்சபூதங்கள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை. வெப்பம் அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுகின்றன. இருபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க நிலப்பரப்பு பனிபடர்ந்திருந்தது. தற்போது வெப்பவலயங்களும் உருவாகியுள்ளன. துருவங்களிலே பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல்மட்டம் அதிகரிக்கின்றது. காட்டுதீ ஏற்படுகின்றது. காலம்தவறிய கனமழை பொழிகிறது. அதனால் வெள்ளம் ஏற்படுகின்றது. கணப்பொழுதில் ஏற்படுகின்ற, மின்னல்வேக, வெள்ளப்பெருக்கு சர்வசாதரணமாகின்றது. மறுவளத்தில், வறட்சி தலைவிரித்தாடுகின்றது. சூறாவளிகளின் வீரியம் அதிகரிக்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு ஒருதடவை என்று சொல்லக்கூடிய, கனதியான இயற்கை சீற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன.
இவ்வாறாக, இயற்கை சீற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. அதுவே காலநிலைமாற்றம் குறித்த அச்சத்தை அதிகரிக்கின்றது.
காலநிலைமாற்றம் தொடர்பான பிரக்ஞை இளைய தலைமுறையிடம் அதிகரித்து வருகின்றது. பொருளாதாரவலுவுடைய நாடுகள் காலநிலைமாற்றம் தொடர்பில், மேடைகளில் முழங்குவதோடு நிறுத்திக்கொள்ளவே விரும்புகின்றன. காரணம்: காலநிலை மாற்றத்தைப் பார்த்தால் கஜானா காலியாகிவிடும் என்னும் பீதியாகும்.
மெலியாரை வலியார் வருத்துகின்ற நிலையே காணப்படுகின்றது. அதனால் நம்பிக்கைகள் அடிவாங்குகின்றன. வலியாரை தெய்வம் வருத்தும் என்பதே நாளைய பொழுதுக்கான காத்திருப்புக்கு நம்பிக்கை தருகிறது.