இந்தியா

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை – மீட்கும் பணிகள் தீவிரம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அங்கு எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. சங்கரப்பா, தனது விளைநிலத்தில் நேற்று முன்தினம் புதியதாக ஆழ்துளை கிணறு ஒன்றை அமைத்தார். ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த ஆழ்துளை கிணற்றை மூடாமல் விட்டுள்ளனர்.

விளைநிலத்தின் அருகே வீடு இருப்பதால், சதீசின் குழந்தை விளைநிலப்பகுதிக்கு வந்து அங்கு விளையாடுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலையில் சாத்விக், விளைநிலத்திற்குள் தவழ்ந்து வந்தான். அந்த குழந்தை விளைநிலத்தில் திறந்த நிலையில் கிடந்த ஆழ்துளை கிணறு அருகே சென்றது. அப்போது அந்த குழந்தை எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் கிராமத்தினரை உதவிக்கு அழைத்தனர். போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் வந்து குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில் 12 மணிநேரத்திற்கும் மேலாக அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கர்நாடக மந்திரி எம்.பி. பாட்டீல், விரைவாக குழந்தையை மீட்க விஜயபுரா மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியதாகவும், குழந்தை தனது பெற்றோருடன் பாதுகாப்பாக மீண்டும் இணைவதற்கு பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *