கட்டுரைகள்
பட்டினியை ஆயுதமாக்கி அழிக்கப்பட்ட போராட்டங்கள்: பயாவ்ரா – வன்னி – காசா தொடரும் அவலம்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(போர்க்களங்களில் மக்களை பட்டினி போட்டு கொல்வதும் ஆயுத வன்முறையின் இன்னோர் வடிவமாகும். பட்டினியை ஆயுதமாக்கி முடக்கப்பட்ட போராட்டங்கள் பல. அவற்றுள் பயாவ்ரா, வன்னி, காசா என தொடர்கிறது இந்த அவலம்)
1970 களில் அமெரிக்க தொண்டு நிறுவனமொன்று, நைஜீரியாவின் பயாவ்ரா பிராந்தியத்தின் கொடூர முற்றுகையால் ஏற்பட்ட பட்டினியால் எலும்பும் தோலுமாக ஒட்டிய வயிறோடு இருக்கும் ஆப்பிரிக்க மக்களின் காட்சிகளை படம் பிடித்து உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியதால் முழு உலகும் இக் கோரக் கொடூரத்தின் உண்மையை கண்டறிய முடிந்தது.
நைஜீரியாவின் கொடூரமிக்க போரில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பயாவ்ரா குடிமக்கள் இறந்தனர்.
தற்போது காசாவில் இருந்து வரும் நிழற்படங்களும் இத்தகைய கோரக் காட்சிகளையே மனத்திரையில் பதிவிடுகின்றன. கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கிறது.
இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாலஸ்தீன மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உணவு இல்லாததால் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை.
இதே நிலமை வன்னியில் ஈழத்தமிழர்கள் பாரிய பட்டினிச் சாவை 2009 காலகட்டத்தில் எதிர்கொண்டனர். போர்க்காலத்தில் உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை.
ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி பல்வேறு தடைகளை விதித்தது.
ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை நீண்டகாலமாக திட்டமிட்டே பறிக்கப்பட்டது.
இன்றுவரை இந்த உரிமை பறிக்கப்படுவதுடன், எத்தனையோ தடைகளை தாண்டி வந்திருந்தாலும், தமிழர்களை மிகவும் வாட்டியது பொருளாதாரத் தடையால் எழுந்த பட்டினியே.
உலகின் மனச்சாட்சியை உலுப்பிய நைஜீரியாவின் கொடூரம்:
1987இல் பாரிய பொருளாதார தடையினால் யாழ் குடாநாட்டை பட்டினி போட்டு ஈழப் போராட்டத்தை ஒடுக்க சிறிலங்கா அரசு முயன்றது. அதற்கு ஒப்பாகவே 1970களில் நைஜீரிய அரசாங்கத்தால், பயாவ்ரா ( Biafra ) பிராந்தியத்தில் இராணுவ முற்றுகையால் ஏற்பட்ட பட்டினியால் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் குடிமக்கள் (அவர்களில் முக்கால்வாசி சிறு குழந்தைகள்) இறந்தனர் என்பது உலகறிந்த உண்மையாகும்.
ஈழப்போராட்டம் முனைப்புப் பெற்ற காலகட்டங்களில், பனைவளமிருக்கையில் “பயாவ்ரா”நிலைவராது என 1987இல் ஈழமெங்கும் தன்னிறைவு பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி பரவலான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதும் பலரும் அறிவர்.
பட்டினிச் சாவால் அழிக்கப்பட்ட “பயாவ்ரா” போராட்டம் :
நீண்ட காலப் போருக்குப் பிறகு, நைஜீரிய அரசாங்கத்தால், பயாவ்ரா மக்கள் படைகள் முழுமையாக முடக்கப்பட்டனர். இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தடை இருந்த காரணத்தால், மக்கள் உணவின்றி பட்டினி கிடந்தது சாகும் அவலம் நேர்ந்தது. சுமார் 2 மில்லியன் மக்கள் பட்டினியால் கொல்லப்பட்டனர்.
சர்வதேச மனிதாபிமான அமைப்பான Médecins Sans Frontières பயாவ்ராவில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, பிரெஞ்சு மருத்துவ தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள், நைஜீரிய இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி, முற்றுகைப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு பட்டினி கிடப்பதைக் கண்டறிந்து உலகிற்கு உண்மையை பறைசாற்றினர்.
பிரெஞ்சு மருத்துவர் பெர்னார்ட் குஷ்னர் இந்த நிகழ்வுகளை பார்த்த சாட்சியாக, குறிப்பாக பட்டினியால் வாடும் குழந்தைகளின் இறக்க நைஜீரிய அரசாங்கத்தை பகிரங்கமாக உடந்தையாக நடந்து கொண்டதற்காக கூறினார்.
இரண்டு மில்லியன் பயாவ்ரா குடிமக்கள் இறந்தனர்.
அகோரமான பஞ்சத்தின் ஆண்டுகளில் பயாவ்ராவில் பிறந்த குழந்தைகள் உடல் விருத்தி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பலவீனமான குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகக் காட்டியது. 1970களின் தொடக்க பஞ்சத்தால் குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்து குறைபாடு இருதய நோய்கள் மற்றும் பிற்கால வாழ்க்கையில் நீரிழிவு நோய்க்கு ஒரு முன்னோடி காரணியாகும் என கண்டுபிடிக்கப்பட்டது.
பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்:
மனித நேயமற்று தொடரும் பாலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. கொடும் போரால் பாதிக்கப்பட்டு, பஞ்சத்தின் விளிம்பில் இருக்கும் காசா நகருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
காசாவில் கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையிலேயே அங்கு நேரடி உதவி விநியோகத்திற்கு தொண்டு நிறுவனங்கள் முயன்றுள்ளன. ஆயினும் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள பாலஸ்தீன மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
பசியால் கொல்லப்படும் பாலஸ்தீனர்:
உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உணவு இல்லாததால் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இதேவேளை, மனித நேயமற்று பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா சபை கேட்டுக்கொண்டிருக்கிறது.
தொடரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. இதனால் சுமார் 33,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
அதேவேளை காசாவுக்குள் உதவி பொருட்கள் செல்வதை இஸ்ரேல் பகிரங்கமாக தடுத்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரில், காசா மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், மருந்து பொருட்கள் ஆகியவை கிடைப்பது சிரமமாகியுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக எகிப்து, ஜோர்டான் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த ‘Refugees International’ குழு காசாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் குறித்து ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வின் அறிக்கையின் படி, காசாவில் செயற்கையான பஞ்சம் ஏற்படுத்தப்படுவது உண்மை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மனித நேயமற்ற விவகாரம் குறித்து விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிட இஸ்ரேல் குறுக்கே நிற்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை இஸ்ரேல் வெளிப்படையாக கடைப்பிடிக்க மறுத்துவிட்டது.
உணவு மருந்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் நாட்கணக்கில் எல்லையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே உணவுகள் வீணாக்கப்படுகின்றன. இதனால் இன்று கொடும் பஞ்சத்தின் விளிம்பில் பாலஸ்தீனம் உள்ளது.
ஈழத்தமிழர்கள் மீது பொருளாதாரத்தடை:
ஈழத்தில் தமிழர் மீது பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது. அத்துடன் ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே பறிக்கப்பட்டதுடன் இன்றுவரை பறிக்கப்படுகிறது.
வன்னியில் ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை.
எத்தனையோ கொடுமைகளை தாண்டி வந்திருந்தாலும், தமிழர்களை மிகவும் வாட்டியது பாரிய பொருளாதாரத்தடை தான். ஒரு தனியினமாக சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்அனைத்திற்கும் பொருளாதார தடை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.
ஈராக், கியுபா, ஹெய்ட்டி மற்றும் பல நாடுகள் மீது பொருளாதார தடை விதித்ததை அறிவோம். ஆயினும் ஒரு நாடு அதன் சொந்தநாட்டு மக்கள் மீதே, கொடூர தடையை விதிப்பது என்பது,
ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பொருளாதார தடை ஓர் கருவியாக, ஆயுதமாக தமிழர் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் மட்டுமே பிரயோகிக்கப்பட்டது என்றுதான் கருதலாம்.
வன்னியில் இறுதிக்கட்ட போர்க்காலத்தில், உணவும் மருத்துவமும் தமிழ் உறவுகளின் வாழ்வுரிமையை பறிக்கும் ஆயுதங்களாகவே பொருளாதார தடை மூலம் மாற்றப்பட்டிருந்தன என்பது தான் உண்மை. பொருளாதார தடை என்ற பெயரில் வன்னியில் உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் மக்கள் வதைக்கப்பட்டனர்.
வன்னியில் தமிழர்களின் வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வெளியுலக தொடர்பு இல்லாமல் என்ன நடக்கிறது என்று புரியாமல் திறந்த வெளிச் சிறைக்குள் மக்கள் தள்ளப்பட்டனர்.
பட்டினியை ஆயுதமாக்கி அழிக்கப்பட்ட போராட்டங்கள் பல. பயாவ்ரா, வன்னி, காசா என தொடரும் இந்த அவலத்தினை நிறுத்த ஐநாவிக்கும் சக்தியில்லை என்பதே வெளிப்படை.