செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனின் “யாவும் கற்பனையல்ல “ புதிய கதைத் தொகுதி …. ( அமரர் ) பேராசிரியர் செ.யோகராசா வழங்கிய முன்னீடு.
செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனின் “யாவும் கற்பனையல்ல “ புதிய கதைத் தொகுதி
( அமரர் ) பேராசிரியர் செ.யோகராசா
( மேனாள் மொழித்துறைத் தலைவர், கிழக்குப் பல்கலைக்கழகம் )
வழங்கிய முன்னீடு
செங்கதிரோன் எழுதியுள்ள “யாவும் கற்பனையல்ல” என்ற இச் சிறுகதைத் தொகுப்பு சமகால ஈழத்து இலக்கியச் செல்நெறியிலிருந்து விலகிநிற்கின்ற வித்தியாசமான செல்நெறிசார்ந்த தொகுப்பாகின்றது.
இதுபற்றி எடுத்துரைப்பது இவ்வேளை பொருத்தமானது என்று கருதுகிறேன். சமகால ஈழத்துச் சிறுகதைகள் பெரும்பாலானவற்றின் பேசுபொருளான போர்க்கால அனுபவங்கள், போருக்குப் பிற்பட்ட அனுபவங்கள், பெண்கள் வாழ்க்கை நிலை, பாலுணர்ச்சி வேட்கை, தொன்மங்களின் மறுவாசிப்பு, பின்நவீனத்துவ நோக்கு, புகலிட வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் பண்பாட்டு மாற்றங்கள் முதலியனபற்றிப் பேச முற்படுவது இலக்கிய ஆர்வலர்களறிந்த விடயமே.
இத்தொகுப்பிலுள்ள நான்கு சிறுகதைகள் தவிர்ந்த ஏனையவை “இவையும் சிறுகதைப் பொருளாகுமோ” என்று கருதக்கூடிய அளவிற்கு நாளாந்த வாழ்க்கையின் சாதாரண விடயங்கள் பற்றிப் பேச முற்படுகின்றன.
“குடை கவனம்” என்ற சிறுகதை குடும்ப வாழ்க்கையிலீடுபட்ட ஆண்கள் பலரும் அன்றாடம் அனுபவிக்கும் விடயம் பற்றி – சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வரும்போது எதிர்கொள்கின்ற சுவாரஸ்யமான சவால்கள் பற்றி – பேச முற்பட்டுள்ளது. நானும் கவிஞர் சண்முகம் சிவலிங்கமும் இதுபற்றிச் சில தடவைகள் உரையாடியிருப்பது இவ்வேளை நினைவில் நிழலாடுகின்றது.
எனினும் அவரோ வேறெவருமோ இத்தகைய சிறுகதை எழுதியிருப்பதாக நினைவுகூர முடியவில்லை.
“கரப்பத்தான் பூச்சி”யும் நாளாந்தம் ஏற்படும் மற்றொரு அனுபவம் பற்றிப் பேசுகின்றது.
நடிகைகளின் பேட்டிகளில் மட்டும் இடம்பெற்றிருந்த அந்த ஜீவன் இப்போது வித்தியாசமானதொரு குடும்பக் கதையில் இடம்பிடித்திருப்பது கவனத்திற்குரியது.
“ஒரு குழந்தையின் அழுகை” – குழந்தைகள் அழுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது இலகுவான விடயமல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது. நீண்டகால அனுபவமுள்ள தாய்மாரால் மட்டுமே சில சந்தர்ப்பங்களில் குழந்தையின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். எவ்வாறாயினும் இச்சிறுகதையின் ரிஷிமூலம் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
“துறவு” இன்னொருவிதமான அனுபவ வெளிப்பாடு. ‘ஊருக்குழைத் திடல் யோகம்’ என்று பாடினான் பாரதி. துறவிற்கு புதியதொரு விளக்கமளித்திருக்கிறார் செங்கதிரோன்.
இத்தொகுப்பிலுள்ள சிறந்த உருப்படிகளில் இதுவுமொன்று.
ஜப்பான் தேசத்துப் புகையிரதநிலையமொன்றிலே தினமும் வழியனுப்பி வைக்கும் எஜமான் மரணித்ததை அறியாது காத்திருந்து உயிர்விட்ட ஒரு நாய்க்குச் சிலை வைத்திருப்பதாக தகவலொன்றுண்டு. இத் தொகுப்பிலுள்ள ‘லயன்’ அவ்வாறானதொரு நாய்க்குச் சிறுகதையூடாகச் சிலை வைத்துள்ளது.
கற்பனை செய்யமுடியாத முற்றிலும் வித்தியாசமான மூன்று சிறுகதைகளிலொன்று “யாவும் கற்பனையல்ல” என்பது. பேய்கள் பற்றி நவம், ஏ.இக்பால், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதலானோர் எழுதியுள்ள சிறுகதைகள் சிலவற்றை நினைவுகூர்ந்து நோக்கும்போது எடுத்துரைப்பு முறை காரணமாக இச் சிறுகதை தனித்துவம் பெற்றிருப்பது வெளிப்படுகின்றது.
“பேய்களில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பேய்களுக்கு நான் பயம்” என்று புதுமைப்பித்தன் ஒருதடவை குறிப்பிட்டிருப்பதை வாசகர் சிலரறிந்திருப்பர். அன்னாரது சிந்தனைக்கு இச்சிறுகதையும் ‘அந்த ஏவறைச்சத்தம்’ உம் ‘கூடுவிட்டு’ ஆகியனவும் சிறுகதையின் தடத்தில் செல்கின்றவைதாம். “எங்கே சமயம் முடிகின்றதோ அங்கே விஞ்ஞானம் தொடங்குகின்றது” என்றொரு அறிஞன்
குறிப்பிட்டிருப்பதை மேற்குறிப்பிட்ட மூன்று சிறுகதைகளும் நினைவுபடுத்துகின்றன என்பதிலும் தவறில்லை.
சமூக, போராட்ட, அரசியல் சார்ந்த முக்கியமான சில விடயங்களைத் துணிவுடன் ஆரோக்கியமான விமர்சனக் கண்ணோட்டத்தில் சிறுகதைகளாக ‘ராஸ்கல்ஸ்’, ‘சகோதரத்துவம்’, ‘ஊர்மானம்’, ‘துரோகி’ ஆகிய சிறுகதைகள் காணப்படுகின்றன. இத்தகைய அணுகுமுறையில் எழுதுகின்ற எழுத்தாளர்கள் சிலரேயுள்ள வரிசையில் இப்போது செங்கதிரோனும் இச் சிறுகதைகளூடாக இணைந்து கொள்கிறார்.
இறுதியாக ஒன்று. சிந்தனைக்கு விருந்தான சிறுகதைகள் தந்துள்ள இவரிடம் பேச்சுமொழியைச் சிறப்பாகக் கையாளுகின்ற ஆற்றல் இருப்பது பலமெனில், களவர்ணனையைச் சில சந்தர்ப்பங்களிலே நீட்டிச் செல்வது பலவீனமென்பதையும் இவ்வேளை கூறத்தான் வேண்டும். வாழ்த்துக்கள்.
—0—