கவிதைகள்
“நீண்டநாள் நீநிலைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்” …. வாழ்த்து கவிதை … கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
ஆண்டு பதினான்கில் அடிபதிக்கும் அக்கினிக்குஞ்சே
நீண்டநாள் நீநிலைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்
ஆண்டவனின் அருள்பெற்ற அன்னைத் தமிழேடாக
அகிலத்தார் போற்றுமுனை ஆசிகூறி வாழ்துகிறேன்
ஆயிரத்துத் தொண்ணூறில் அச்சான சஞ்சிகையாய்
ஆஸ்திரேலிய நாட்டில் முதலேநீ கால்பதித்தாய்
அருந்தமிழ் ஈன்றெடுத்த ஆளுமையாம் பாரதியின்
அகத்துதித்த அக்கினிக்குஞ்சை ஆசையுடன் அணைத்திட்டாய்
பெரும்புலவன் பாரதியின் அருள்பெற்ற சொல்லுனக்கு
பெருவரமாய் வாய்த்து பெருமைகளைச் சேர்த்திருக்கு
பேரறிஞர் உறவானார் பெரும்புலவர் அருகானார்
பாரறியும் சஞ்சிகையாய் பட்டொளிநீ வீசுகின்றாய்
ஈராறு இதழ்களாய் இங்கிதமாய் அச்சானாய்
சீராக நல்லிதழாய் சிறப்புடனே வெளியானாய்
அச்சேறிக் களைத்ததனால் அருமையாம் கணணியில்
இப்போது இளமையுடன் இன்னிதழாய் மலருகின்றாய்
உள்நாட்டு வெளிநாட்டுச் சேதிகளை தருகின்றாய்
உவப்புடனே பலபேரின் செவ்விகளும் தருகின்றாய்
கதைகள் தருகின்றாய் கவிதைகள் தருகின்றாய்
கட்டுரைகள் பலதந்து கருத்துரைத்தும் நிற்கின்றாய்
போட்டிகள் வைக்கின்றாய் பொறுப்புடனே நடக்கின்றாய்
விருதுகளும் கொடுத்து விருந்துமே அளிக்கின்றாய்
இசைபருக வைக்கின்றாய் இளைஞர்களை அணைக்கின்றாய்
இங்கிலீசு நாட்டினிலே இன்பத்தமிழ் வளர்க்கின்றாய்
தளராத பண்புடைய தமிழான பாஸ்கரனை
தான்துணையாய் கொண்டே தலைநிமிர்ந்து நிற்கின்றாய்
அழகுதமிழ் அக்கினிக்குஞ்சே ஆண்டுபல நீகாண
அகமார உனைவாழ்த்தி அகமகிழ்வு கொள்ளுகின்றேன்.
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா