கதைகள்

“கனகர் கிராமம்” … தொடர் நாவல் …. அங்கம் – 23 …. செங்கதிரோன்.

பெரியவர் சாமித்தம்பி காரைதீவில் வாழ்ந்த சித்தரான சித்தானைக்குட்டிச் சாமியாரைப் பற்றிப் பேச்செடுத்ததும் தனது தாயார் ஒருமுறை பேச்சுவாக்கில் சித்தானைக்குட்டிச் சாமியார் பற்றித் தன்னிடம் கூறிய சில விடயங்கள் கோகுலனுக்கு ஞாபகம் வந்தன.

கோகுலனின் தந்தையாரும் சித்தானைக்குட்டிச் சாமியாரும் நல்ல நெருக்கமான கூட்டாளிகளாம். இருவரும் இணைந்து ஒன்றாயிருந்து ‘தண்ணி’ போடுவார்களாம். அந்தச் சந்தர்ப்பத்தில் யாராவது மூன்றாவது நபரொருவர் வந்தால் அவரைப் பார்த்துச் சித்தானைக்குட்டிச் சாமியார் “இந்தா நீயும் குடி” என்று கூறிப்போத்தலிலுள்ள சாராயத்தைக் ‘கிளாஸ்’ ஸொன்றில் ஊற்றி நீட்டுவாராம். மூன்றாவது நபர் அதனை வாங்கிக்குடித்தால் அது ‘பச்சைத்தண்ணி’ யாக இருக்குமாம். அது சாராயமாக இருக்காதாம். அதுவும் அவரது சித்துவிளையாட்டுக்களிலொன்றாம்.

தன் தாயார் தன்னிடம் சில வருடங்களுக்கு முன்னர் கூறிய இக்கதையைக் கோகுலன் நினைவில் கொணர்ந்தான்.

காரைதீவில் பிரதான வீதியையொட்டி அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலயத்திற்குப் பக்கத்தால் காரைதீவு ஊருக்குள்ளே கடற்கரை நோக்கிச் செல்லும் வீதியால் செல்லும்போது ‘கரச்சைப்பாலம்’ என அழைக்கப்படும் சிறு பாலத்தினூடாக உப்பாற்றைக் கடந்த பின்னர் பாலத்தின் அந்தத்தோடு ஒட்டியதாய் இடதுபுறம் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தினூடு நுழைந்தால் சித்தானைக்குட்டிச் சாமியார் கோயில் அமைந்துள்ளதும் அங்கு சித்தானைக்குட்டிச் சாமியாரின் சமாதி உள்ளதென்பதும் கோகுலனுக்குத் தெரியும். வருடாவருடம் இக்கோயிலில் சித்தானைக்குட்டிச் சுவாமிகளுடைய குருபூஜை நடைபெறுவதும் கோகுலன் அறிந்ததுதான். இவை தவிர சித்தானைக்குட்டிச் சாமியார் பற்றி கோகுலனுக்கு மேலதிகமாக எதுவும் தெரியாது. கதிரவேலின் நிலையும் இதுதான். ஆனால், பெரியவர் சாமித்தம்பிக்குச் சித்தானைக்குட்டிச் சாமியார் பற்றிய முழு விபரமும் தெரிந்திருந்தது.

கோகுலனும் கதிரவேலும் சித்தானைக்குட்டிச் சுவாமிகளைப் பற்றிக்கூறும் படி பெரியவர் சாமித்தம்பியைத் தூண்டினர். மொகமட்டுக்கும் அது பற்றி அறிய ஆவலிருந்தது என்பது அவனுடைய முகக்குறிப்பில் தெரிந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தபோதும் கோகுலன் – கதிரவேல் – பெரியவர் சாமித்தம்பி – மொகமட் நால்வருக்கும் உறக்கமே வரவில்லை. கதிர்காமத்தலத்தின் உற்சவ ஆரவாரம் அவர்களை அவ்வாறு ஆக்கியிருந்தது. தேனீர்க்கடையிலிருந்து வெளியே வந்தவர்கள் கூடாரவண்டில் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்து வண்டியிலிருந்து பாயொன்றை எடுத்துத் தரையில் விரித்து அதன் நான்கு மூலைகளிலும் ஆளையாள் பார்த்தபடி அமர்ந்து கொண்டார்கள். வண்டிலோட்டியும் அவனது உதவியாளனும் மெல்லிய குறட்டை ஒலியுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.

பெரியவர் சாமித்தம்பி சித்தானைக்குட்டிச் சுவாமிகள் பற்றிக் கூறத்தொடங்கினார்.

தென்னிந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘இராமேஸ்வரம்” பேர்பெற்ற பிரபல்யமான சிவத்தலம். இராமன் சிவபூசை புரிந்த தலம் எனக்கருதப்படுவது. இராமநாதபுரத்தைச் ‘சேதுபதி’ மன்னர்கள் என அழைக்கப்பட்ட மன்னர்களே ஆண்டு வந்தனர். இராமாயண இதிகாசத்தில் கடலைக்கடந்து இலங்கை வருவதற்கு இராமன் கட்டிய அணையெனக் கருதப்படும் அணை சேதுஅணை என்றும் இங்குள்ள தீர்த்தம் சேதுதீர்த்தம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றன. இச் சேதுவைச் சார்ந்துள்ள நாடு சேதுநாடு என வழங்கப் பெறுகிறது. இராமநாதபுர மாவட்டம் சேதுநாடாகும்.

இராமன் சேது அணைகட்டிய காலத்தில் தன்னை வழிபட்ட நிஷாதத் தலைவன் ஒருவனைத் தான் கட்டிய சேது அணையைக் காவல்காத்துப் பேணும்படி ஆணையிட்டதாகவும் இவனின் வழித்தோன்றல்களே சேதுபதிகள் எனக் கதையாடல்கள் நிலவுகின்றன. சேதுபதிகள் பாண்டிய மன்னர்களுக்குப் படைத்தளபதியாக இருந்துள்ளனர் என வரலாற்றுத் தகவல்கள் உள்ளன.

‘பெருநாளி’ என்பது இராமநாதபுரத்துச் சிற்றரசர் ஒருவரின் இராசதானியாக விளங்கிற்று. இச் சிற்றரசருக்குக் கோவிந்தசாமி எனுமொரு மகன் இருந்தான். கோவிந்தசாமி அரசகுடும்பத்தைச்

சேர்ந்தவராயிருந்தபோதும் அவரது உள்ளம் அரச சுகபோகங்களில் நாட்டம் கொள்ளாது துறவு வாழ்க்கையையே விரும்பியது. இந்தக் கோவிந்தசாமியே இலங்கையின் கிழக்கிலங்கையில் காரைதீவில் வாழ்ந்து அங்கேயே 1951 இல் சமாதியடைந்த சித்தானைக்குட்டிச் சாமியார் ஆவார்.

சித்தானைக்குட்டிச் சாமியாரின் பூர்வீகத்தைப் பெரியவர் சாமித்தம்பி கூறக்கேட்ட கோகுலன்,

“சித்தானைக்குட்டிச்சாமியார் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எப்படி வந்தார்?” என்று இடைமறித்துக் கேட்டான்.

“அந்தக் கதயக் கேட்டயலெண்டாத் தம்பி” என்ற பீடிகையுடன் பெரியவர் சாமித்தம்பி,

“நவநாதசித்தர் – ஆனக்குட்டிச்சுவாமி – சித்தானக்குட்டிச் சுவாமி எண்ட மூணு சித்தர்கள் இந்தியாவில் இருந்து ஒண்டாக இலங்கைக்கு வந்தவங்க. இந்த மூணு பேருக்குள்ளயும் சித்தானக்குட்டிச் சாமிக்குத்தான் வயது குறைய. இதில வயதில மூத்த நவநாதசித்தரும் பெரியானக்குட்டிச் சித்தரும் கப்பலில கொழும்புக்கு வந்தவங்களாம். இவங்களில வயதில குறஞ்ச சித்தானைக்குட்டிச் சித்தருக்கு கப்பலில வர ‘டிக்கட்’ கிடைக்கலயாம். புறகு பாத்தா சித்தானக்குட்டிச் சித்தர் ‘சித்து’ விளையாட்டால ஆகாயத்தால வந்து கொழும்புத் துறைமுகத்தில ஆனக்குட்டிச்சாமியாரையும் நவநாதச்சித்தரையும் வரவேற்கிறத்திக்கு நிண்டவராம்” என்று கூறிச் சித்தானைக்குட்டிச் சாமியாரின் கதையைத் தொடர்ந்தார்.

சித்தானைக்குட்டிச் சுவாமியார் ஆனைக்குட்டிச் சுவாமியாரைத் தனது உபதேச குருவாகவும், நவநாத சித்தரைத் தனது தீட்ஷா குருவாகவும் பேணி வந்துள்ளார். ஆனைக்குட்டிச் சுவாமியாரின் சமாதிக்கோயில் கொழும்பு முகத்துவாரத்திலும் நவநாதசித்தரின் சமாதிக்கோயில் நாவலப்பிட்டியை அடுத்த குயீன்ஸ்பரித் தோட்டத்திலும் உள்ளன.

இந்தியாவிலே தமிழகத்திலே ‘திருமூலர்’ தொடங்கிக் ‘குதம்பைச் சித்தர் கோரக்கர்’ வரை பதினெட்டுச் சித்தர்கள் இருந்துள்ளனர். இவர்களைப் பதினெண் சித்தர்கள் என அழைப்பர்.

இவர்களுக்குப் பின்னரும் பல சித்தர்கள் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். பிற்காலத்தில் தோன்றிய சித்தர்களில் கடையிற் சுவாமிகள் – நவநாதசித்தர் – பெரிய ஆனைக்குட்டிச் சுவாமிகள் (ஆனைக்குட்டிச்சுவாமிகள்) – சித்தானைக்குட்டிச் சுவாமிகள் ஆகிய நால்வரும் இலங்கைக்கு வந்து இங்கேயே சமாதியெய்தியவர்கள். கடையிற் சுவாமிகளின் சமாதி யாழ்ப்பணத்தில் நீராவியடி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் தோன்றிய சித்தர் ஒருவரும் இருந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் வேலணையில் பிறந்த குழந்தைவேற்சுவாமிகள் ஆவார். அவரது சமாதி கீரிமலையில் உள்ளது.

சித்தர்கள் சாதாரணமக்களால் செய்யமுடியாத பல அரிய செயல்களைச் செய்யும் வல்லமை படைத்தவர்கள். அத்தகைய செயற்கரிய செயல்களை அற்புதங்கள் என்பர். சித்து விளையாட்டுக்கள் எனவும் வழங்குவர். சித்தர்கள் இயற்கைக்கு மாறான பல அற்புதங்களைப் புரிவர்.

சித்தர்கள் இறவா நிலையுடையவர்கள். அழியாத உடலைப் பெற்றவர்கள். உடலை அழியவிடாது பாதுகாக்கும் ஆற்றலுடையவர்கள். தம்முடைய உடம்பிலிருந்து உயிரை வெளியேற்றி வேறொரு உடம்புக்குள் புகுந்து உயிர்பெறும் சக்தி படைத்தவர்கள். இதனைக் கூடுவிட்டுக்கூடு பாயும் வித்தையென்பர். இவர்களுக்கு ஆகாயவழியாகச் செல்லும் ஆற்றலும் உண்டு. முக்காலமும் உணர்ந்தவர்கள்.

சித்தர்கள் ‘அட்டமாசித்தி’களைப் (எட்டுவகையான சித்திகள்) பெற்றவர்கள் எனக்கூறப்படுகின்றது.

அணுவிலும் மிகச்சிறிய உருவையடைதல் – மலையிலும் பெரிய உருவம் பெறல் – உடம்பைப் பாரமற்றதாக்கி நீரிலும் காற்றிலும் வேகமாகப் பயணித்தல் – தான் விரும்புவதை (நினைப்பதை) அடையும் ஆற்றல் – தான் நினைத்தவற்றைப் படைக்கும் சக்தி – எல்லோரும் தன்னை வணங்கும்படி செய்யும் தெய்வசக்தி – உலகம் முழுவதையும் தன்வசப்படுத்தல் – ஜம்புலன்கள் நுகரும் இன்பதுன்பங்களில் அக்கறைகொள்ளாமல் அவற்றுடன் தொடர்பற்றிருத்தல் ஆகியவையே அந்த எட்டுவகைச் சித்திகள் (சக்திகள்) ஆகும்.

இந்தியாவிலே இராமநாதபுரச் சமஸ்தானமாகிய ‘பெருநாளி’யில் ஒருமுறை தொற்றுநோய் கண்டது. பலர் தொற்றுநோயால் மாண்டனர். மக்கள் மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்லப் பயந்து போயிருந்ததொரு நேரத்தில் இரண்டு சாதுக்கள் வீதிகளிலே உலாவந்து வீடுகளுக்குச் சென்று வற்புறுத்தி உணவுப்பண்டங்களைப் பெற்று வீட்டுக்காரர்கள் முன்னிலையிலேயே அவற்றை உண்டனர். இவர்களுக்கு யார் உணவளித்தார்களோ அவர்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டனர்;.

இச்செய்தியைப் ‘பெருநாளி’ச் சிற்றரசர் கேள்வியுற்று இந்தச் சாதுக்கள் இருவரையும் அழைத்துவரத் தனது மகன் கோவிந்தசாமியை அனுப்பினார். துறவறத்தில் நாட்டம் கொண்டிருந்த கோவிந்தசாமி இந்த இரு சாதுக்களையும் தேடிச்சென்று ஒரு குடிசையிலே சந்தித்து இவர்களது பாதங்களைத் தொட்டு வணங்கினார். இரு சாதுக்களும் கோவிந்தசாமியை வாரி அணைத்து அன்பு சொரிந்தனர்.

இந்த இரு சாதுக்களுமே பெரிய ஆனைக்குட்டிச் சுவாமியும் நவநாதசித்தரும் ஆவர்.

அரச உடையில் இளவரசனாக இச் சாதுக்களைக் காணவந்த கோவிந்தசாமி அரச உடைகளைக் களைந்து கோவணம் அணிந்து இரு சாதுக்களுக்கும் சீடனாகி அரசமாளிகை திரும்பாமல் இவர்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் யாத்திரை சென்று பின் மூவரும் ஒன்றாக இலங்கைக்கு வந்தனர்.

சித்தானைக்குட்டிச் சுவாமியின குருநாதரான பெரிய ஆனைக்குட்டிச் சாமியார் அவர்கள் சித்தானைக்குட்டி பல சோதனைகளுக்கு உள்ளாவாரென்றும் தம்மிலும் பெரியோனாய்த் திகழ்வானென்றும் தீர்க்கதரிசனம் கூறியும் உள்ளார்.

சித்தானைக்குட்டி சுவாமிகள் காரைதீவில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்கள் புரிந்துள்ளார்.

அதற்கு முன்னர் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திலும் தொடர்ந்து நவநாதச் சித்தர் சமாதியெய்திய நாவலப்பிட்டி குயீன்ஸ்பெரித்தோட்டத்திலும் வாழ்ந்து பல சித்துவிளையாட்டுக்கள் காட்டியவர்.

குயீன்ஸ்பெரித்தோட்டத்தில் வசித்த காலத்தில் கால்நடையாகக் கதிர்காமம் வந்துள்ளார். கதிர்காம முருகனைப்பற்றிய பல பாடல்கள் பாடியுள்ளார். அவையொன்றும் எழுத்திலில்லை. காதால் கேட்டவர்கள்தான் அவ்வாறு கூறியுள்ளனர்.

சித்தானைக்குட்டிச் சுவாமியார் வெளியில் மது அருந்தியும் – மாமிசம் உண்டும் – காமம் வசப்பட்டவர்போல் நடித்தும் சமூகத்திலுள்ள போலி ஆசாரசீலர்கள் தன்னை அண்டாதவாறு பார்த்துக்கொண்டாராம். ஏழை எளியவர்களுக்கே அற்புதங்கள் காட்டி உதவிகள் புரிந்தவராம்.

ஒருமுறை கதிர்காமத்தில் மாணிக்ககங்கையில் நீராடித்தரிசனம் செய்தபின் முருகன் தனக்குக் காட்சியளிக்க வேண்டுமென்று உண்ணாமல் தவங்கிடந்தார். பல வாரங்கள் கழிந்தும் வைராக்கியத்தைக் கைவிடவில்லை. ஒருநாள் முருகன் கோயில் ‘கப்புராள’ (கப்புகனார்) சுவாமிகளிடம் வந்து “உமது தந்தையார் உம்மை உள்ளே வருமாறு கூறினார்” என்று கூறி அழைக்கக் கப்புராளயின் பின்னே சென்று கோயிலுள் புகுந்தார்;. முருகன் அவர் முன்தோன்றி சுரங்கப்பாதையொன்றினூடாகக் கூட்டிச்சென்று ஏழுமலைகளிலுமுள்ள அற்புதக்காட்சியைக் காட்டி இறுதியில் ஒரு மலையிலுள்ள ஊற்றிலிருந்து நீரை விரலில் எடுத்துச் சொட்டுச் சொட்டாக மூன்று தரம் தனது வாய்க்குள் விட்டதாகவும் உடனே உண்ணாநோன்பிருந்த களைப்பெல்லாம் காணாமல் போய்விட்டதாகவும் அவரே கூறியுள்ளார்;. முருகன் தன்னைக் கண்ணை மூடுமாறு கூற அவ்வாறே கண்ணை மூடித்திறக்கத் தான் கதிர்காம வீதியிலே நடந்து கொண்டிருந்தாராம்.

இன்னொரு தடவை வேறு இரு அடியார்களுடன் செல்லக்கதிர்காமம் சென்றுள்ளார். அங்கு ஆற்றங்கரையில் மூவரும் உறங்கியுள்ளனர். அதிகாலை மூன்று மணிபோல் பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு மூவரும் விழித்தபோது அவர்களுக்கு முன்பெரிய யானையொன்று நின்றுள்ளது. அவருடனிருந்த இரு அடியார்களும் பயத்தில் எழுந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள். சித்தானைக்குட்டி சுவாமிகள் பயப்படாமல் தனது கைவசமிருந்த கற்பூரத்தைக் கொளுத்தித் தீபம் காட்டித் தரையில் சாஸ்டாங்கமாக வீழ்ந்து அந்த யானையை வணங்கி எழுந்தபோது யானையைக்

காணவில்லையாம். அப்போது அருகிலிருந்த காட்டில் சேவல் கூவும் சத்தமும் அவருக்குக் கேட்டதாம். யானையாக வந்தது தனது குருநாதர் பெரிய ஆனைக்குட்டிச் சாமியாரென்றும் சேவல் முருகனின் அடையாளம் என்றும் சித்தானைக்குட்டி சுவாமிகள் பின்னர் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தின் பின் வருடந்தோறும் கதிர்காம யாத்திரை செல்லும் வழக்கத்தை அவர் கொண்டிருந்தாராம்.

கதிர்காமத்திற்கு அருகாமையில் திஸ்ஸமகாரகம என்ற இடத்தில் PWD என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் பொதுமராமத்து இலாகாவில் ‘ஒவசியர்’ ஆகக் கடமையாற்றிய முத்துக்கந்தையா என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி சேதம்மா காரைதீவைச் சேர்ந்தவர். இவர்களுக்குப் பிள்ளைகளில்லை. முத்துக்கந்தையா ஓவசியர் பெருங்குடிகாரன். மனைவி கடவுள் பக்தி மிக்கவர். ஓவசியருக்குச் சாதுக்களைப் பிடிக்காது. ஆனால் மனைவியோ அடியார்களை மிகவும் ஆதரிப்பவர்.

ஒருமுறை சித்தானைக்குட்டி சுவாமிகள் கதிர்காமம் செல்லும் வழியில் முத்துக்கந்தையா ஒவசியரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். மனைவி சேதம்மா சுவாமிகளை வரவேற்று நன்கு உபசரித்தார். அவருக்குச் சுவாமிகளை நன்கு பிடித்துப் போய்விட்டது.

‘சுவாமி, கதிர்காமம் கொடியேற இன்னும் நாட்கள் பல இருக்கின்றன. அதுவரைக்கும் சுவாமிகள் இங்கு தங்கிச் செல்லலாமே’ என்று சேதம்மா கேட்டார்.

‘சன்னியாசிகள் குடும்பஸ்தர்களுடைய வீட்டில் தங்கக்கூடாது’ எனச் சேதம்மாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த சித்தானைக்குட்டி சுவாமிகள் அடிக்கடிவந்து வீட்டு முற்றத்திலேயே நின்று அமையாரின் உபசாரங்களைப் பெற்றுத்திரும்பி விடுவாராம். அம்மையார் சுவாமிகள் மீது மிகுந்த அன்பு காட்டினார். இதனால் அவரது கணவன் முத்துக்கந்தையா ஒவசியருக்குத் தனது மனைவிமீது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் இரவு நன்றாய்க் குடித்துவிட்டு வந்து அம்மையார் மூர்ச்சித்து விழும்வரை அடித்துள்ளார். மூர்ச்சித்து விழுந்த சேதம்மா அப்படியே நித்திரையாகிப் போய்விட்டார். வழமையாக அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடும் அம்மையார் ஆறுமணியாகியும் எழும்பாததைக் கண்ட வீட்டுச் சமையல்காரன் சுவாமிகளிடம் நடந்ததைக்கூறி அவரை அங்கு நிற்காமல் வேறெங்காவது சென்று விடும்படி வேண்டியுள்ளான்.

சுவாமிகள் சிரித்துக்கொண்டு ‘நானும் இரவு முழுவதும் வயிற்றுவலியால் அவதிப்பட்டேன். இரண்டொரு மிளகும் வேர்க்கொம்பும் தா நான் போய்விடுகிறேன்’ என்று கூறச் சமையல் காரனும் அவ்வாறு கொடுத்துச் சுவாமிகளை வெளியே அனுப்பிவிட்டான்.

ஓவசியரின் வீட்டுக்கு எதிரே ஒரு கள்ளிப்பற்றை இருந்தது. அதனருகே சென்ற சுவாமிகள் ‘படடி! படடி’ என்று சத்தமிட்டுக் கத்த கள்ளிச்செடிகள் அனைத்தும் தரையில் சாய்ந்து விட்டன. அவற்றின்மேல் சுவாமிகள் ஏறி இருந்து கொண்டு ஒரு கள்ளித்;துண்டையெடுத்துக் கத்தியால் தோண்டி அதற்குள் மிளகையும் வேர்க்கொம்பையும் வைத்து அடைத்துப் பின் தன்னிடமிருந்த கஞ்சாக்குழலையெடுத்து அதற்குள் கஞ்சாப் புகையிலையைச் செலுத்திக் குழலில் நெருப்பை மூட்டிவிட்டு மேலே அண்ணாந்து பார்த்தார். ஏழு மலைகளும் அவரது கண்களுக்கு வரிசையாகத் தோன்றினவாம். சுவாமிகள் ஆவேசம் வந்தவராய் ‘ஏழுமலையானே! நீ கள்வனா அல்லது நான் கள்வனா? அல்லது முத்துக்கந்தையா கள்வனா?’ எனக்கூறிக் கஞ்சாப்புகையை உள்ளே இழுத்து இரண்டொரு தடவை வெளியே விட்டபின் எழுந்து ஜெய்சீத்தாராம் – ஆனை – நவநாதா – கதிர்காமா என உரக்கச் சத்தமிட்டபடி கதிர்காமம் நோக்கிப் பயணமானார்.

கதிர்காமத்தீர்த்தம் முடிந்ததும் அம்பாந்தோட்டைக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் மட்டக்களப்பை அடைந்து அங்கு கார்த்திகேசு சுப்பிறிந்தர் என்பவரின் வீட்டில் சில மாதங்கள் கழித்தார்.

திஸ்ஸமகாரகமவில் முத்துக்கந்தையா ஒவசியரின் மேலதிகாரியான வெள்ளைக்கார எஞ்சினியருக்கும் ஒவசியருக்கும் இடையில் சர்ச்சை ஏற்பட்டு ஒவசியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வருமானமிழந்து தவித்தார். ஒவசியர் ஒருநாள் திடீரென்று ஞானம் பெற்றவராக மட்டக்களப்புக்குச் சென்று சுவாமியை அழைத்து வா என்று மனைவியை அனுப்பி வைத்தார். தன்னை மட்டக்களப்புக்குத் தேடிவந்து சந்தித்த சேதம்மாவை என்னிடம் வராமல் உங்கள் குறைகளைக் கதிர்காமக் கந்தனிடம் முறையிடுங்கள் என்று கூறி அவரைக் கப்பலேற்றி மீண்டும் அம்பாந்தோட்டைக்கு அனுப்பி வைத்தார் சித்தானைக்குட்டி சுவாமி. ஒவசியரின் வாழ்க்கை தோல்விக்கு மேல் தோல்வியாகவே அவரது சகல முயற்சிகளும் ஆகின. சேதம்மா மீண்டும் மட்டக்களப்பு திரும்பி ‘நான் உங்களோடுதான் இனி வாழப்போகிறேன்’ என்று சுவாமியுடன் இருந்து விட்டாராம். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காத சேதம்மாவைக் கூட்டிக்கொண்டு காரைதீவுக்கு வந்தார் சுவாமி. காரைதீவில் சேதம்மாவின் பெயரில் ஒரு காணியிருந்தது.

அக்காணியில் ஒரு பெரிய புளியமரமும் ஒரு வீடும் இருந்தன. சேதம்மா உடன் செய்த வேலை அக்காணியைச் சுவாமி அவர்களின் பேரில் எழுதி வைத்ததாகும்.

கடன்தொல்லை பொறுக்கமுடியாமல் ஒவசியர் காரைதீவுக்கு வந்து அவர்களிருவரிடமும் மன்னிப்புக் கேட்டு சிறிதுகாலம் மூவரும் அவ்வீட்டிலேயே வாழ்ந்தனர். கடன்காரர்கள் சேதம்மாவின் வீட்டைப் பறிமுதல் செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்குப்போட்டனர். சுவாமிகள் நீதிமன்றம் சென்று வழக்கில் வென்றார்.

இப்படியிருக்கும்போது ஒருநாள் ஒவசியர் நன்றாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து நிறைவெறியில் சுவாமியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். சுவாமி ஒவசியரின் கையிலிருந்த கத்தியைப் பறித்துத் தூர வீசி எறிந்து விட்டார்.

அதன்பின் ஒவசியர் வீட்டிலிருந்து வெளியேறி மட்டக்களப்பில் உன்னிச்சைப் பகுதிக்குச் சென்று அங்கு ‘கொத்தராத்து’ வேலைகள் செய்து வாழ்ந்து அங்கேயே காலமானார். ஒவசியரின் மரணத்தைத் தொடர்ந்து சேதம்மாவும் காரைதீவில் காலமானார். சேதம்மாவின் மறைவுக்குப் பின் சேதம்மாவின் மாமியாரான சிந்தாமணி அம்மையார் என்பவர் சுவாமிகளுக்குப் பணிவிடை செய்ய முன்வந்தார்.

சுவாமிகள் அந்தக் காலத்திலே தலையில் தலைப்பாகையுடனும் கையில் ஒரு பிரம்புடனும் மகாராஜாபோல் உலா வருவாராம். காலில் மிதிவடியும் இருக்குமாம்.

தென்னிந்தியாவின் இராமநாதபுரத்து இளவரசனான கோவிந்தசாமி என்பவர் சித்தானைக்குட்டிச் சுவாமியாகி இலங்கை வந்து இறுதியில் மட்டக்களப்புக் காரைதீவு ஊருக்கு வந்துசேர்ந்த கதையைப் பெரியவர் சாமித்தம்பி இவ்வாறு கூறிமுடித்தார்.

சித்தானைக்குட்டிச் சாமியாரின் கதையை மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த கோகுலன், பெரியவர் சாமித்தம்பியிடம் “சித்தானக்குட்டிச் சாமியார் செய்த சித்துவிளையாட்டுக்கள நீங்க இன்னும் விபரமாச் சொல்லலயே!” என்றான்.

“ஓம்! தம்பி! அவர் காட்டின அற்புதங்கள் கனக்க இரிக்கி” என்றார் சாமித்தம்பி.

“உங்கட சைவசமயத்தில சித்தர்கள் செய்த அற்புதங்களப் போலத்தான் எங்கட இஸ்லாமிய மார்க்கத்தில ‘அவுலியாக்கள்’ அற்புதங்கள் செய்து காட்டியிரிக்காங்க. அந்த அற்புதங்கள முஸ்லீம்கள் ‘கராமத்’ எண்டும் முஸ்லீம் அல்லாதவர்கள் செய்யும் அற்புதங்கள ‘இஹானத்’ எண்டும் சொல்லுவாங்க” என்றான் மொகமட்.

“சித்தானக்குட்டிச் சாமியாரிர மற்ற அற்புதங்களச் சொல்லுங்களன்” என்று கோகுலனைத் தொடர்ந்து கதிரவேலும் பெரியவர் சாமித்தம்பியிடம் விண்ணப்பத்தை முன்வைத்தான்.

நேரம் அப்போது அதிகாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. நேரத்தைப் பார்த்துச் சோம்பல் முறித்துக் கொட்டாவியொன்றை விட்ட சாமித்தம்பி, “இன்னொரு தேத்தண்ணி குடிச்சாத்தான் கதயத்தொடரலாம். இல்லாட்டி நித்திரதான் வரும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து எல்லோரும் எழுந்து மீண்டும் தேனீர்க்கடை நோக்கி நடந்தார்கள்.

(தொடரும் …… அங்கம் – 24)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.