அறிவித்தல்கள்

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவில், யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்ட மாணவர்களுக்கு உதவி!

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையில் அண்மையில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வதியும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் மூன்று மாத கால நிதியுதவி வழங்கப்பட்டது.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ் – முல்லை, கிளிநொச்சி மாணவர் தொடர்பாளர் அமைப்பான சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தனர்.

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் திட்ட அமுலாக்கத்துடனும் அவுஸ். இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிப்பங்களிப்புடனும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மாணவர்களின் கல்விக்கான முதலாம் காலாண்டு கொடுப்பனவு இம்முறை ஒரு மாணவருக்கு மாதாந்தம் தலா நான்காயிரம் ரூபா வீதம் பன்னிரண்டாயிரம் ரூபா வழங்கப்பட்டது.

இலங்கையில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில்கொண்டு, 2024 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இம்மாணவர்கள் மாதாந்தம் மூவாயிரம் ரூபாவை பெற்று வந்தனர்.

அவுஸ்திரேலியாவில் வதியும் தமிழ் அன்பர்களின் நிதிப்பங்களிப்புடன் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்துடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு, போரிலும் வறுமையிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களை வடக்கில் தெரிவுசெய்து இந்த நிதிப்பங்களிப்பினை வழங்கி வருகிறது.

“ யாழ். சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்திற்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்குமான நட்புறவு பல வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து செல்கின்றது. அதற்கான காரணம் பாதிக்கப்பட்ட

மக்களுக்காக நாம் கைகொடுத்து உதவவேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டு அமைப்புகளும் செயற்பட்டு வருவதால் இவ் உறவு நீடித்துக்கொண்டு செல்வதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. “ என்று இந்நிகழ்வில் உரையாற்றிய பணியாளர்கள் நிதியுதவியை பெறும் மாணவர்களின் தாய்மார் மற்றும் பாதுகாவலர்கள் முன்னிலையில் தெரிவித்தனர்.

2024 ஆண்டில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி பல மாணவர்கள் கல்விக்கான கொடுப்பனவை பெற்றுக்கொண்டனர்.

முதலாம் காலாண்டுக் கொடுப்பனவுகள் யாழ் மாவட்டத்தில அந்ததந்த பிரதேச செயலக பிரிவுகளில் உதவி பெற்று வரும் மாணவர்களுக்கு சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் பணியாளர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகங்களின் உதவிப் பிரதேச செயலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் முதலான அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நல்லூர் , சாவகச்சேரி , யாழ்ப்பாணம் ,

சங்கானை , தெல்லிப்பளை , வேலணை,

உடுவில், கோப்பாய், சண்டிலிப்பாய்,

மருதங்கேணி , காரைநகர் , ஊர்காவற்றுறை முதலான பிரதேசங்களைச்சேர்ந்த மாணவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு முதலான பிரதேசங்களிலும் , கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச செயலக பிரிவிலும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

உதவிப்பிரதேச செயலர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.முரளிதரன், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.