கதைகள்

“கட்சி என்பது இரண்டு கால்கள்” …. சிறுகதை – 60 …. அண்டனூர் சுரா.

கடவுள் இதற்கும் முன்பு பூமிக்கு வந்து திரும்பியது புதுமைப்பித்தன் காலத்தில். வந்தவர் அதிக சிரத்தையுடன் மருத்துவ சஞ்சிகையை நடத்திக்கொண்டிருந்த கந்தசாமிப் பிள்ளையைச் சந்தித்தார். இருவரின் சந்திப்பும் சண்டையில் முடிந்திருந்தது. கடவுள் சொன்னார், “மனிசங்களுக்குத் தூரத்தில் நின்று வரம் கொடுக்கலாம். கிட்டேயிருந்து வாழ முடியாது“ என்று. கந்தசாமிப் பிள்ளைக்கு வந்ததே கோபம். அவர் கடவுள் என்றுகூட பார்க்காமல் சாபம் விட்டாலும் பரவாயில்லையென்று முகத்தில் அடிப்பதைப் போல சொல்லிவிட்டார். “நீ அந்த ஒன்றுக்குத்தான் லாயக்கு…” என்று. கடவுள் அத்துடன் கோபித்துக் கொண்டு போனவர்தான். அதன்பிறகு இப்பொழுதுதான் பூமிக்கு வந்திருக்கிறார்.

கடவுள் வந்திறங்கிய இடம் மெரினா கடற்கரையாக இருந்தது. அவர் முந்தைய வருகையின்போது விட்டுச் சென்றதில் கடற்கரை மட்டும்தான் மிச்சமிருந்தது. மற்ற இடங்கள் யார் யார் பெயருக்கோ பத்திரம், பட்டாவாகி இருந்தன.

இத்தனை காலம் அப்பாவியான பாமர மக்கள் கூப்பிட்டு வராத கடவுள் அரசியல்வாதிகள் கூப்பிட்டதும் வந்தது அரசியல்வாதிகளுக்குப் படுகொண்டாட்டமாக இருந்தது. கடவுளின் வருகையை அவர்கள் ரகசியப்படுத்தினார்கள். எதை எதையோ ரகசியம் காக்கத் தெரிந்தவர்களுக்குக் கடவுள் வருகையை ரகசியப்படுத்துவது எம்மாத்திரம்..?

கடவுள் பூமிக்கு வந்த அன்றைய தினம் கடற்கரை அமளிதுமளிப்பட்டது. கடற்கரை மணல்களை எண்ணிவிடலாம், மனிதத் தலைகளை எண்ண முடியவில்லை. அந்தளவிற்குக் கூட்டம். அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு வானத்தைப் பார்ப்பதும் கூட்டத்தைப் பார்ப்பதுமாக இருந்தார்கள். கடவுள் பூமிக்கு வருவதாக இருந்தால் இந்தத் திசையிலிருந்துதான் வர வேண்டும் என அவர்கள் ஆளுக்கொரு திசையைப் பார்த்தவாறு நிமிர்ந்த தலை குனியாமல் பார்த்து நின்றார்கள்.

கடவுள் என்ன உடையில் வருவார்?. அவரது தோளில் கிடக்கும் துண்டு என்ன நிறத்தில் இருக்கும்? கடவுள் வேட்டியில் வருவாரா? முழு கால்ச்சட்டையில் வருவாரா? அவர்களின் யோசனைகள் இப்படியாக அலைபாய்ந்தன. மூத்த அரசியல்வாதிகள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கவனம் கடவுளின் கவனத்தைப் பெறுவதில் இருந்தது.

“இன்னும் ஒரு சில மணித்துளிகளில் கடவுள் நம் முன் தோன்றப்போகிறார்.” அனுபவமிக்கவர்கள் முணுமுணுத்தார்கள். எப்படியேனும் கடவுளின் பார்வைக்குத் தான் தெரிந்துவிட வேண்டும் என்று அவர்கள் ஒருவரையொருவர் முட்டிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்கள்.

வானத்தில் ஒரு பருந்து உயரே பறந்துகொண்டிருந்தது. ஒன்றிரண்டு அரசியல்வாதிகள் அதைக் கண்டிருந்தார்கள். கடவுள் வரும் வாகனம் இதுதானென்று கடவுளைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். அவரவருக்கு நெருக்கமானவர்களிடம் உச்சியில் பருந்து பறக்கும் ரகசியத்தைப் பகிர்ந்து மனதிற்குள் கொண்டாடினார்கள்.

“ ஆம், கடவுள் வந்து விட்டார். கருடன் மீது அமர்ந்து வருகிறார்” என்று அவர்களுக்குள் குதூகலம் அடைந்தார்கள். அப்பருந்தைப் பார்த்தபடி முகவாயிலில் கொட்டிக்கொண்டார்கள். அவர்களுக்குக் கழுத்து வலிதான் மிஞ்சியது. உச்சத்தில் பறந்த கருடன் கீழே இறங்குவேனா என்றது.

“ இந்தக் காலத்தில் கடவுள் போயும் போயும் பருந்திலா வருவார்?. கடந்த முறை அவர் ஆட்டோவில் வந்தார். இந்த முறை வருவதாக இருந்தால் நிச்சயம் ஹெலிகாப்டரில்தான் வருவார்” என்று ஒருவர் சொன்னதும் அவர்களின் பார்வை ஹெலிகாப்டரைத் தேடத் தொடங்கியது.

கடற்கரையில் உழைப்பாளர்களின் சிலை இருந்தது. அச்சிலையிலும் உழைப்பாளர்கள் உழைத்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பெருங்கல்லை நீண்டத் தடிகொண்டு நகர்த்திக்கொண்டிருந்தார்கள். கல் அந்த இடத்தை விட்டு நகர்வேனா என்றது.

நேற்றைய தினம் கடவுள் வானத்திலிருந்து பூமிக்கு குதித்த விசயம் அரசியல்வாதிகள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கடற்கரையில் ஒற்றைக் கல்லிடம் நான்கு உழைப்பாளிகள் முரண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த கடவுள், மனமிரங்கி உழைப்பாளர்களின் சிலைகளோடு சிலையாக நின்று அக்கல்லை நகர்த்தும் முயற்சியில் இறங்கினார். கல் எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்தால்தான் நகர்வேன், என்று சொல்வதைப் போல அந்த இடத்திலிருந்து நகர மறுத்தது. கடவுள் எவ்வளவோ முயன்று பார்த்தார். நெம்புகோல் தத்துவம் மனிதனுக்குத்தான், கடவுளுக்கு அல்லவே!

கடவுளை ஏமாற்றுவதற்கென்று நிறுத்தப்பட்டிருந்த சிலைகளில் ஒன்றாக அந்த உழைப்பாளர் சிலை இருந்தது. கருத்த உடம்பில் உடல் முழுமைக்கும் தார்ப் பூசியதைப் போல மார்பு, விலா எலும்புகள் வெளியே தெரியவும் வயிறு, தொடை சப்பைகள் குழி விழுந்துபோய் அரை முழம் கோமணத்துணியோடு அவர்கள் அந்த பெருங்கல்லை நகர்த்திவிடும் முயற்சியில் இருந்தார்கள்.

அக்கல்லை கடவுளால் மில்லி மீட்டர் அளவிற்கும் நகர்த்த முடியவில்லை. கடவுள் மனிதனின் படைப்பைப் பார்த்து மிரண்டு போனார். சிலையிடமிருந்து பார்வையை எடுத்து நிமிர்ந்தார். கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாக இருந்தன. அத்தனை தலைகளும் அரசியல்வாதிகளின் தலைகள். இடுப்பிற்கு இரண்டு கைகளையும் கொடுத்து கூடிநின்ற அரசியல்வாதிகளைப் பார்த்து அவர்களிடம் ‘நான் கடவுள்’ என்றார்.

அரசியல்வாதிகள் அவரைக் கடவுளாக ஏற்க முன்வரவில்லை. பின்னே கடவுள் இப்படி எளிமையாகவா வருவார், ஒட்டுப் போட்ட கோமணத்துணியுடன், மேலுடம்பில் சட்டை அணியாமல்? பார்க்க அவர் ஒரு கோமாளியைப் போலவும் பிச்சைக்காரனைப் போலவும் தோன்றினார். அரசியல்வாதிகளுக்கு ஒரு விதமான பயம் இருக்கவே செய்தது. பிச்சைக்காரனைப் போல இருந்தாலும் பார்க்க ஞானியைப் போலல்லவா இருக்கிறார். யாரையும் உடையைப் பார்த்து எடை போட்டுவிடக் கூடாது. ஒருவேளை அவர் கடவுளாகவே இருந்துவிட்டால் அவர் கொடுக்கும் வரம் என்னாவதாம்? சாபத்தை ஏன் விலைகொடுத்து வாங்குவானேன், எச்சரிக்கையால் அரசியல்வாதிகள் உஷாரானார்கள். தலைக்கும்மேல் கூப்பிய இரு கைகளையும், “ கடவுளே….“ என்று உச்சரித்த சொல்லையும் அவர்கள் தாழ்த்துவதாக இல்லை.

கடற்கரையில் மொய்த்த மக்கள் உழைப்பாளர் சிலையை வட்டம் கட்டினார்கள். ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு கடவுளைச் சுற்றி முன்னேறி வந்தார்கள். அரசியல்வாதிகளுக்குச் சொல்லவா வேண்டும்! தன்னை இடிப்பவர்கள் யார், தன் கால்களுக்குள் நுழைபவர்கள் யாரென அவர்கள் கவனம் கொள்ளவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது கடவுள் முகம் மட்டும்தான்!

“ கடவுளே, மகாகடவுளே…” என அரசியல்வாதிகள் கடவுளை இறைஞ்சினார்கள்.

கடவுள் அரசியல்வாதிகளைப் பார்த்து கேட்டார். “உங்களுக்கு என்ன குறை, ஏன் என்னை அழைத்தீர்கள்?’

அரசியல்வாதிகள் ஒற்றைக் குரலில் சொன்னார்கள். “கடவுளே, எங்களையும் நாட்டையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.”

“ இத்தனை நாட்கள் காப்பாற்றியவர் என்னானார்?”

“ எங்களை அவர் அதோகதியில் விட்டுவிட்டு மேலுலகம் சென்றுவிட்டார் கடவுளே”

கடவுள் மெல்ல சிரித்துகொண்டார். “ யார் யாரையெல்லாம் அவர் அதோகதியில் விட்டுசென்றார்?”

“ எங்களைத்தான்”

“ எங்களைத்தான் என்றால்?”

“ அரசியல்வாதிகளை…”

“மக்கள்….?”

“மக்களுக்கு ஒரு குறையுமில்லை. அவர்களுக்குத்தான் நாங்கள் இருக்கிறோமே. எங்களுக்குத்தான் யாருமில்லை”

கடவுள் கொஞ்சநேரம் யோசித்தபடி நின்றார். பிறகு கேட்டார். “ நான் என்ன செய்ய வேண்டும்?”

“ எங்களுக்குள் உட்கட்சி பூசல் இருக்கிறது. பூசல் சண்டையாக மாறுகிறது. அடுத்தத் தலைவர் யார் என்கிற யுத்தத்தில் நாங்கள் என்னவாகி விடுவோம் என்கிற பயம் எங்களை ஆட்டிப்படைக்கிறது. நாங்கள் இத்தனை ஆண்டுகள் பதுக்கிய பதுக்கலில் இடி விழுந்துவிடுமோ என்கிற பயம் எங்களைத் தின்னுகிறது. இத்தனை ஆண்டுகள் ஒரு தலைவரின் கீழ் மூக்கணாங்கயிற்றால் கட்டப்பட்டுக் கிடந்தோம். எங்களையெல்லாம் மேய்த்தத் தலைவர் இறந்ததன் பிறகு நான்தான் தலைவரென்று தலை இருப்பவர்களெல்லாம் தலையெடுக்கிறார்கள். எங்களை ஆட்டிப் படைக்கிறார்கள். அவர்களுக்கும் கீழ் நாங்கள் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா! நாயால் உருட்டப்படும் தேங்கம்பழமாகிப் போகிறோம்.”

கடவுளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தலையைச் சொறிந்தபடி நின்றவர், “சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்” என்றார்.

“ எங்கள் தலைவர் இறந்ததற்குப் பிறகு வேறொரு தலைவரை எங்களால் தேர்வுசெய்ய முடியவில்லை. ஒரு பக்கம் பணம். இன்னொரு பக்கம் பதவி. எது முக்கியமென்று எங்களால் முடிவெடுக்க முடியவில்லை. கட்சிக்கும் ,ஆட்சிக்கும் பொறுப்பாளர்களை நியமிக்க முடியவில்லை. நாங்கள் ஒரு பொறுப்பாளரை அறிவித்தால் இன்னொருவர் போட்டி பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்.” இதைச் சொல்லுகையில் அரசியல்வாதிகளின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அவர்களுக்கு வந்த அழுகையால் மீதத்தைச் சொல்ல முடியவில்லை. கடவுள் அவர்களைப் பாவமாகப் பார்த்தார்.

“ நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்கள் கவலையை நான் தீர்த்து வைக்கிறேன்.. முதலில் தீர்க்க வேண்டிய பிரச்சனை என்ன என்பதை மட்டும் சுருக்கமாகச் சொல்லுங்கள்…” என்றார் கடவுள். அவர் அப்படியாகக் கேட்டதும், ஒரு துடிப்பான அரசியல்வாதி, “நான் சொல்கிறேன்…” எனக் கையைத் தூக்கினார். கடவுள் அவரை அழைத்துக் கேட்டார்.

“ எங்கள் நாட்டில் கட்சித் தலைவர்கள் வயதால் முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள்..”

“சரி…”

“ இயலாத வயதானாலும் தொடர்ந்து தலைவராக இருக்க விரும்புகிறார்கள்”

“ அடுத்து..”

“ ஆட்சியை நடத்தும் கட்சித் தலைவர் தாம் பதவியில் இருக்கும் பொழுதே இறந்துவிட வேண்டும் என நினைக்கிறார். எப்படியேனும் அரசிற்குச் சொந்தமான இடத்தில் தன்னுடைய சமாதி ஆலயமாக அமைந்துவிட துடிக்கிறார்…”

“அப்படியா!”

“ஆமாம் கடவுளே. அதுமட்டுமல்ல. தனக்கு பிறகு அரசியல்வாரிசு யார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறார்கள். ஆகையால் அவர்கள் இறந்ததற்குப் பிறகு கட்சிக்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குள் நாங்கள் ஒட்டடைக் குச்சியில் சிக்கிய நூலாம்படையாகி விடுகிறோம்..”

கடவுள், “அய்யகோ, பாவம்தான் நீங்கள். உங்களை நினைக்க எனக்கு வருத்தமாக இருக்கிறது!”

“ ஆமாம் கடவுளே, அமைச்சர்கள் ஏற்றும்கொள்ளும் தலைவரைக் கீழ்மட்ட பொறுப்பாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் சொல்லும் நபரை மக்கள் வேண்டாம் என்கிறார்கள். மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவரை அமைச்சர்கள் ஏற்க மறுக்கிறார்கள். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒருவர் எங்கள் கட்சிக்கு வேணும். நீதான் அவரைத் தேர்வுசெய்து தர வேண்டும்….” எனச் சொல்லி முடித்தார் ஒரு மூத்த அரசியல்வாதி.

கடவுள் சற்றுநேரம் அமைதியாக நின்றார். அவருக்கு இதுவொன்றும் சவாலானதாகத் தெரியவில்லை. அரசியல் உளவியலோடு அரசியல்வாதிகளின் உளவியலையும் கடவுள் தெரிந்து வைத்திருந்தார்.

அரசியல்வாதிகளிடம் இரைச்சல் அதிகமாக இருந்தது. அவர்களை அமைதிபடுத்த வேண்டும் போலிருந்தது. அவர் அரசியல்வாதிகளின் முன் கையை நீட்டி ஒரு நிமிடம் அமைதியாக இருக்கக் கேட்டுக்கொண்டார். அரசியல்வாதிகள் சட்டென அமைதியில் ஆழ்ந்தார்கள்.

கடவுள் தன்னைச் சுற்றி நின்றவர்களில் ஒருவரை அருகில் அழைத்தார். “உங்கள் நாட்டில் எத்தனை மாவட்டம், உள் மாவட்டம், ஒன்றியம், வட்டம், கிளை வட்டம், பேரூராட்சி, ஊராட்சி, கிராமம், கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன?” எனக் கேட்டார்.

ஒரு மூத்த அரசியல்வாதி இந்த விபரங்களை மனனமாக ஒப்பித்தார். அவர் சொன்னதைக் கடவுள் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். மற்றொருவரை அழைத்து எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன எனக் கேட்டார். அதையும் ஒருவர் ஒப்பித்து முடித்தார். நாட்டிலுள்ள மொத்த வட்டங்கள், ஒன்றிய, பேருராட்சி, மாநகராட்சிகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்தார். பிறகு கூடிநின்ற அரசியல்வாதிகளைப் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்தார்.

“அரசியல்வாதிகளே, நான் நியமிக்கப்போகும் பொறுப்பாளர்களை நீங்கள் மனமுகந்து ஏற்றுகொள்வீர்களா?” சூழ்ந்து நிற்பவர்களைப் பார்த்து கேட்டார்.

அரசியல்வாதிகள் ஒத்தக் குரலில் சொன்னார்கள். “ஆம்,கடவுளே ஏற்றுக்கொள்கிறோம்..”

கடவுள் விசாலமானப் பார்வையால் அரசியல்வாதிகளை அளந்தார். அவருடைய பார்வையில் அத்தனை அரசியல்வாதிகளும் தெரிந்தார்கள். நல்லவர், கெட்டவர், பணம் படைத்தவர், ஏழை, பொதுநலமிக்கவர், சுயநலமிகள்…. இப்படியாக.

கடவுள் அவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தார். “அரசியல்வாதிகளே, உங்கள் கட்சிக்கானப் பொறுப்பாளர்களையும், ஆட்சியாளர்களையும் நியமிக்க இருக்கிறேன்…” என்றதும் அவர்கள் கையையும் தலையையும் ஆட்டியபடி கொண்டாட்டத்தில் குதித்தார்கள்.

கடவுள் பொறுப்பாளர்களை வார்டு உறுப்பினர்களிலிருந்து தேர்வு செய்யத் தொடங்கினார். அவர் பெயர்களை முன் மொழிய, பெயருக்குரியவர் கடவுளின் முன்னால் கும்பிட்டபடி நின்றார்கள். அடுத்ததாக கட்சிக்கான பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து அறிவித்தார். பிறகு ஆட்சியாளர்களையும் அமைச்சர்களையும் தேர்வு செய்து, ஆட்சி நடத்துவதற்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்தார்.

‘ ஊராட்சி மன்றத் தலைவர்’, ‘ ஒன்றியத் தலைவர்’, ‘ ஒன்றியக்குழு உறுப்பினர்’, ‘பேருராட்சித் தலைவர்’, ‘ மாநகராட்சித் தலைவர்’ ,‘ சட்டமன்ற உறுப்பினர்’ ,‘ நாடாளுமன்ற உறுப்பினர்’, ‘ அமைச்சர்’, ‘ முதலமைச்சர்’ எனப் பலரையும் தேர்வு செய்து அரசியல்வாதிகளின் முன் நிறுத்தினார்.

தேர்வானவர்கள் கடவுளின் முன்னால் பெரிய கும்பிடு போட்டபடி நின்றார்கள். கீழ்மட்ட அரசியல்வாதிகள் தனக்குக் கிடைத்த பதவியும் பொறுப்பும் போதுமென்று கடவுளிடமிருந்து விடைபெற்றார்கள். பொறுப்புக் கிடைக்காதவர்கள் பொறுப்புக் கிடைக்கப்பெற்றவர்களைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடத் தொடங்கினார்கள். அவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விடை பெற்றதைக் கடவுள் வேடிக்கையாகப் பார்த்தார். ஆனால் கடவுளின் நெருங்கிய வட்டத்திற்குள் இருந்த மேல்மட்ட அரசியல்வாதிகள் அந்த இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை. கடவுள் முகத்தை ஏமாற்றத்துடன் பார்த்தபடி நின்றார்கள். அவர்களுடைய முகம் பார்க்கப் பாவமாகவும் இறுக்கமாகவும் இருந்தது. இவர்களின் தேவை என்னவென்று கடவுளால் அறுதியிட முடியவில்லை. கடவுள் அவர்களை எப்படித் திருப்திப்படுத்துவது என்கிற கவலையில் ஆழ்ந்தார்.

“அரசியல்வாதிகளே, உங்களுக்கு வேறென்ன வேணும். உங்களை ஆளவும் மக்களை ஆளவும்தான் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து கொடுத்துவிட்டேனே. இன்னுமேன் நீங்கள் சோகமாக இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

சற்றுமுன் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் கடவுளிடம் சொன்னார். “ கடவுளே, இதையெல்லாம் நாங்களே தேர்வு செய்துகொள்வோம். எங்களுக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான்…”

கடவுளின் இமைகள் நெற்றிக்கு ஏறின. “ அந்த ஒன்று என்ன?”

“ நாங்கள் கும்பிட்டு விழ இரண்டு கால்கள் வேண்டும்!”

கடவுள் ஒருகணம் விதிர்விதிர்த்துப் போனார். தன்னை விட்டால் போதுமென்று ஒரே ஓட்டமாக ஓடினார். அவரைத்தான் அரசியல்வாதிகள் கையில் பூமாலையுடன் ஒவ்வொரு சிலையாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.