செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள்! …. நடேசன்.
மிருக வைத்தியராக எனது அனுபவங்களை அபுனைவாக “வாழும் சுவடுகள்” “ புத்தகத்திலும் புனைவாக “ அசோகனின் வைத்தியசாலை , மற்றும் “பண்ணையில் ஒரு மிருகம் “நாவலிலும் எழுதியுள்ளேன்.
நாற்பது வருட மிருக வைத்திய தொழிலில் இருந்து இளைப்பாறிய பின்னர் நான் ஏதாவது எழுதத் தவறிவிட்டேனா என நினைத்துப் பார்த்தபோது நெருடிய விடயம் ஒன்றுண்டு. செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் மனநிலைகளை எழுதத் தவறிவிட்டேனா என்ற நினைப்பு என்னுள்ளே வந்தது. எல்லோரையும் பற்றி எழுதாத போதிலும் குறிப்பிடத்தக்கதாக என் மனதில் நிலைத்து நிற்பவையை சிலவற்றை இங்கு எழுதுகிறேன்.
மனிதர்கள் மற்றைய மனிதர்கள்மேல் அதிகாரம் செலுத்துவதை நாம் வெறுக்கும் வேளையில், செல்லப் பிராணிகள், மானிட மனதின் முற்றான கட்டுப்பாட்டில் வருகின்றன. எங்களுக்கும் அவைக்கும் இடையே மனரீதியான ஒப்பந்தம் ஒன்று அவைகளை பராமரிப்பது பற்றி உருவாகிறது. அவற்றை முறையாகச் செயல்படுத்துகிறோமா என்பது ஒரு கேள்வியாகும். செல்லப் பிராணிகளுக்கு எந்த உரிமையும் இல்லாதபோதும், நாம் எதைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை அறம், தர்மம் ,மனச்சாட்சி என பல பெயரில் அழைக்கலாம். நாம் வளர்க்கும் மிருகங்களை எப்படி நடத்துகிறோம் என்பது இந்தக் கட்டுரைகளின் அடிநாதம்.
மனிதர்களை வைத்தியம் பார்க்கும் வைத்தியர் ஒருவர், நோயின் தன்மையை கண்டுபிடித்து விட்டால் அவரது கடமை முடிந்து விடுகிறது. அவருக்கு நோயாளியின் பணவசதியைப் பற்றி கவலையில்லை. ஆனால், செல்லப்பிராணிகளுக்கு வைத்தியம் பார்க்கும் போது உரிமையாளர்களின் பணவசதி மட்டுமல்ல, கலாச்சாரம் பின்னிய மனவோட்டங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பல தடவைகள் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு என்ன தேவை என்று மட்டும் சொல்கிறேன். அதை நீங்கள் செய்ய முடியுமா என்பது எனது பொறுப்பில்லை எனக் கூறியிருக்கிறேன். ஆனாலும் அந்த வார்த்தைக்கு அர்த்தமில்லாத நிலைகள் இருந்தன.
எனது வைத்தியசாலை தொடங்கிய காலத்தில் அறுபது வயதான ஒருவர் தாடி உள்ள அவரது நாயுடன் (Standard Schnauzer) எனது வைத்தியசாலையைக் காலையும் மாலையும் கடந்து செல்வார். பல தடவைகள் எனக்கு கையும் காட்டுவார். ஒரு நாள் காலை வைத்தியசாலை உள்ளே வந்து தனது நாய்க்கு மலத்தோடு இரத்தம் போவதாகச் சொன்னார். நாயின் குதத்தை எனது விரலால் பரிசோதனை செய்துவிட்டு இரத்தம் குதத்தில் இருந்து வருகிறது . ஏதாவது புதிதாக உணவு கொடுத்திருந்தால் உணவு ஒவ்வாமையால் இரத்தம் வரலாம் என்று நான் சொன்னபோது , “ அப்படி இல்லை . “ என்றார் .
“அப்படி இல்லை என்றால், எலும்பு அடைத்திருக்கும் . அல்லாத போது ஏதாவது கட்டி வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பு உள்ளது. எதற்கும் எக்ஸ்ரே எடுத்தால் தெரியும். “ என்றேன்.
அவரது சம்மதத்துடன் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து, எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தால் அங்கு எதுவும் இல்லை.
உங்களுக்குத் தெரியாமல் ஏதாவது உணவு உண்டு அதனால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனச்சொல்லிவிட்டு, அதற்கு மருந்து கொடுத்துவிட்டு எக்ஸ்ரேக்கு உரிய பணத்தையும் அவரிடம் இருந்து பெற்றபோது, ஓய்வூதிய அட்டையைக் காட்டினார். அதற்கும் தள்ளுபடி செய்தது பணம் பெற்றேன்.
அவரது முகத்தில் சந்தோஷம் இல்லை.
அதன் பின்னர் பல ஆண்டுகள் அவர் என்னிடம் வருவதில்லை. நடந்து செல்லும்போது என்னைப் பார்த்தால் கையை காட்டுவதில்லை. எனக்கு அவரது நடவடிக்கை மனவருத்தத்தைக் கொடுத்தது. நான் அவரிடம் எப்படி நடந்து கொண்டிருக்கலாம் எனப் பல முறை சிந்தித்தேன்.
ஒரு நாள் மீண்டும் அவர் வந்த போது, அவரது நாயின் வயிறு ஊதியிருந்து. அதிகம் சோதனை செய்யாமல் அதன் வயிற்றில் பெரிய கான்சர் கட்டி இருப்பதை என்னால் ஊகிக்க முடிந்து.
“ இதை இப்படியே விட்டால் சில மாதங்களுக்கு மட்டுமே உயிர் வாழும். என்னால் கட்டியை வெட்டி எடுக்க முடியும். ஆனால், அதனை எக்ஸ்ரேயில் பார்த்த பின்பே சேர்ஜரி செய்ய முடியும். சேர்ஜரி செய்த பின்னர் சில மாதங்கள் மட்டுமே வாழும் என்பது உண்மை . “ என்றேன்.
எதுவும் பேசாமல் நாயுடன் வீடு சென்றார். அத்துடன் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எனது வைத்தியசாலை முன்பாக தனது நாயுடன் நடக்கும் போது கை காட்டுவார். பின்னர் ஒரு நாள் தனது நாய் வீட்டில் இறந்ததாகச் சொல்லி, நன்றியும் சொல்லி விட்டுச் சென்றார். இம்முறை நான் எதுவும் செய்யவில்லை. ஆனால், அதற்கு அவர் மகிழ்ச்சியடைந்தார்.
ஒரு முறை தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த மத்திய வயது ஆண் தனது டாஷாசான் (Mini Dachshund ) இன சிறிய நாயை, அதற்கு மூலத்தால் இரத்தம் போகிறது எனக் கொண்டு வந்தார். முதன் முறையாக என்னிடம் வருகிறார்.
அவரது முகம் இறுகியதாகவும் சிரிப்பற்றும் இருந்தது. அதை நான் பொருட்படுத்தாது உள்ளே அழைத்து, அவரது பத்து வயதான நாயின் வயிற்றில் அழுத்திப் பார்த்தேன். பெரிதாக எதுவும் தெரியவில்லை. மிகவும் சிறிய நாய் என்பதால் பல பரிசோதனைகள் செய்யமுடியாது . உணவு
உண்பதுடன் சந்தோசமாக நின்றது என அவர் சொன்னதும், இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்காக வாயால் செலுத்தும் மருந்தைக் கொடுத்து, “ மீண்டும் வாருங்கள் . இரத்தப்போக்கு நிற்காது போனால், எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அதற்காக காலையில் உணவு கொடுக்காது கொண்டு வாருங்கள். “ என்றேன் .
அவர் என்னிடம் முடிவான ஒரு பதிலை எதிர்பார்த்திருந்தார் என்பதால் அவரது முகத்தில் சந்தோசமில்லை. பணத்தைச் செலுத்திவிட்டுச் சென்றார்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு பின்னர் வந்து, “ எனது நாயின் வயிற்றில் கான்சர் இருந்ததை நீங்கள் கண்டு பிடிக்கவில்லை. நான் ஒரு கிழமையின் பின்னர், அதைக் கருணைக் கொலை செய்தேன் என்பதால் உங்களுக்கு அன்று தந்த பணத்தைத் திருப்பித் தாருங்கள். “ என்று மிகவும் கோபமாகப் பேசினார் .
நான் சிரித்தவாறு, உங்கள் நாயைப்பற்றி நான் எழுதிய குறிப்பு இதோ உள்ளது . “ இரத்தம் வருவதால் கான்சர் இருக்கலாம், மீண்டும் வரும்போது எக்ஸ்ரே எடுக்கவேண்டும் “ என்ற அந்தக்குறிப்பினை அவருக்கு காண்பித்தேன். உங்களது சிறிய நாயைக் குதத்துக்குள் கையை வைத்துப் பரிசோதிக்க முடியாது -மேலும், உங்களை மீண்டும் வரச்சொன்னேன் நீங்கள் வரவில்லை இல்லையா? “ என்றேன்.
“ மற்றைய மிருக வைத்தியர் உடனே கண்டுபிடித்தார். ஏன் உங்களால் முடியாது போனது? “
“ எப்போது அங்கு சென்றீர்கள் ? “
“ ஒரு கிழமையின் பின்பு. “
“ ஏன் ஒரு கிழமையின் பின்பு? “
“அது ஒரு கிழமையாகச் சாப்பிடவில்லை என்பதால். “
“ என்னிடம் வரும்போது உணவருந்திய நாய், ஒரு கிழமையின் பின்பு எலும்பும் தோலுமாகி இருக்கும்போது, எவராலும் வயிற்றில் தடவியோ, ஊகித்தோ சொல்லியிருக்க முடியும். மேலும் ஒரு கிழமை உணவருந்தாமல் நாயை வைத்திருப்பது மிருக வதை அல்லவா? “ என்றேன்
மனிதர் உள்ளே அதிர்வடைந்தது அவரது கண்ணில் தெரிந்தது.
“ நான் உங்களது நாயைப் பரிசோதித்த நேரத்துக்காக எடுத்த பணத்தை மீளத் தரமுடியாது. ஆனால், அந்த மருந்தை நீங்கள் பாவிக்காததால், அந்த மருந்துக்கான பணத்தை மட்டும் தருகிறேன் “ எனச்சொல்லி பணத்தைக் கொடுத்தேன். அதை வாங்கியபடி அவர் சென்றார்.
தென் ஆபிரிக்காவில் நிறபேத ஆட்சி மாறியவுடன் பல வெள்ளையர்கள் அவுஸ்திரேலியா வந்தபோது, தங்களது நிறவெறி மனப்பான்மையோடு வந்தார்கள் . பெரும்பாலானவர்கள், மேற்கு அவுஸ்திரேலியாவில் குடியேறினார்கள். அங்கு ஒப்பீட்டளவில் மெல்பன் – சிட்னியிலும் பார்க்க வெள்ளையர்கள் அதிகம். ஆனால், மெல்பன் வந்தவர்கள் பல இடங்களில் கறுப்பினத்தவர் மற்றும் ஆசியர்களை தங்களின் பல தேவைகளுக்காகச் சந்திக்கவேண்டும். .அவர்கள் மனம் மாற சற்றுக் காலம் செல்லும் .
அவ்வாறு தென்னாபிரிக்காவிலிருந்து இங்கு வந்த ஒரு வெள்ளையர், முதல் முதலில் என்னிடம் வந்தபோது, மிருக வைத்தியராக என்னைப் போன்ற வெள்ளையரற்ற ஒருவர் இருப்பார் என எதிர்பார்க்கவில்லை.
அவருக்கு நான் எந்தப் பணமும் திருப்பி கொடுக்கத் தேவையில்லை . ஆனால், அவரென்ன செய்திருப்பார் எனக்கெதிராக மிருக வைத்திய சபைக்கு கடிதம் எழுதியிருப்பார். அவர்கள் என்னிடம் பதில் கேட்பார்கள். அதற்கு நான் பதிலெழுதவேண்டும்.
நான் முற்றாகச் சரியோ அல்லது அவர் தவறோ என்பது இங்கு முக்கியமில்லை . உண்மையில் அந்தச் சிறிய பணத்தைக் கொடுத்ததன் மூலம் அவரும் வெற்றியடைந்தார் என்ற நினைவு அவருக்கு ஏற்படும். இது மிருக வைத்தியத்தில் மட்டுமல்ல, குடும்பம், அரசியல், மற்றும் வியாபாரம் எங்கும் உபயோகமான ஒரு விடயம் .
மகாபாரதத்தில் துரியோதனன் ஐந்து வீட்டையோ அல்லது ஐந்து ஊரையோ கொடுத்திருந்தால் அங்கு குருக்ஷேத்திர யுத்தம் நடந்திராது.
எதிராளியும் சிறிய வெற்றியை அடைந்தார் என்ற விடயம் முக்கியம் . அல்லாதபோது வீணாகப் பழிவாங்கும் எண்ணம் மட்டுமே அவர்கள் மனதில் இருக்கும். அப்படிப்பட்டவர்களை நீங்கள் எதிரியாக வைத்திருக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய வெற்றியை அவர்கள் அடைந்தால் பிற்காலத்தில் அவர்கள் உங்களது நண்பர்களாகவோ இல்லை பங்குதாரர்களாகவோ மாறும் சாத்தியம் உள்ளது.
மெல்பனில் பிரபலமான ஒரு கிறிஸ்தவ போதகர் இருந்தார். அவரிடம் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் போவார்கள். அவரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுவார்கள். எனக்கு அவரது அறிமுகமோ அவர் பற்றிய அபிப்பிராயமோ இருந்ததில்லை.
ஒரு நாள் அவர் எனது வைத்தியசாலைக்குத் தனது சிறிய நாயைத் தனது உடலில் படாது, மலங்கழிக்கும் சிறு குழந்தையை நாம் தூக்குவதுபோல், நெஞ்சிலிருந்து இரு அடிகள் தூரத்தில் வைத்துக் கொண்டுவரும்போது, நானே சென்று கதவைத் திறந்தேன்.
என்னைப்பார்த்ததும் “ தனது நாய்க்குக் கட்டி “ என்றார்.
நாயின் வயிற்றைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. ஐந்து கிலோ நாயின் வயிற்றில் ஒரு கிலோ அல்லது கிரிக்கட் பந்துக்கும் பெரிதான கட்டி தனியாகத் தொங்கியபடி இருந்தது.
“ ஏன் இவ்வளவு காலமும் இந்தக் கட்டி வளரும்வரை காத்திருந்தீர்கள்? “ எனக்கேட்டேன்.
அவர் வந்த வழியே,திரும்பிப் போய்விட்டார்.
அவரது வாயால் வரும் கிறிஸ்துவின் மலைப் பிரசங்க வார்த்தைகள் அவரையே ஆட்கொள்வதில்லையோ என என்னால் அப்போது நினைக்க மட்டுமே முடிந்தது.
தமிழ்நாட்டு பிராமண குடும்பத்தினர் ஒரு கறுத்த லாபிரடோர் நாயை வளர்த்தார்கள். பல காலமாக என்னிடமே அந்த நாயைக் கொண்டு வருவார்கள்.
ஒரு முறை அந்த நாய்க்குக் குருதியில் செங்குருதிக் கலங்கள் அழிந்து இரத்தசோகை வந்தது . அதற்குக் காரணம் ஓட்டோ இம்மியூன் நோய் (Autu immune disease) எனக் கண்டுபிடித்தபோது, அதனது இரத்தச் சோகை (Anaemia) அபாய கட்டத்தில் இருந்ததால் , நான் அவர்களை வேறு விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி அதற்கு புதிய இரத்தம் ஏற்றுவித்தேன். பின்பு அதனைத் தொடர்ச்சியாகக் கவனிக்கும்போது, “ வழக்கமான உணவிற்குப் பதிலாக மாட்டிறைச்சியை ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும். “ என்றேன்.
அவர்கள் எந்த முகச் சுழிப்புமில்லாது மாட்டிறைச்சியை அந்த நாய்க்கு உணவாகக் கொடுத்தபோது, அந்த நாய் பலகாலம் வாழ்ந்தது.
நிச்சயமாக அவர்களுக்கு ஆரம்பம் கடினமாக இருந்திருக்கும். ஆனாலும் அதற்கு மேலாக அந்த நாயை அவர்கள் நேசித்தது எனக்குப் பிடித்திருந்தது.
இவ்வாறு வித்தியாசமான மனிதர்களைச் சந்திக்க வைத்தது இந்த நாற்பது வருட மிருக வைத்தியத் தொழில். இன்றும் என்னைக் காணும் பலர் தங்கள் செல்லப்பிராணிகளை நினைவு கூருவார்கள் என்பது மனநிறைவான விடயம்.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா என நான் மேற்கொண்ட இந்த மிருக மருத்துவம் நேரம், காலம், பணம் எனப் பார்க்காமல் செய்தது. குறைவான
பணத்தையும் மலையான மனநிறைவையும் தந்த ஒரு தொழிலாக எனது தொழிலை உணர்ந்தேன். …