கவிதைகள்

“காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 மாநிலத்தில் மொழிகளோ வகைவகையாய் இருக்கிறது
அவற்றுக்குள் தமிழொன்றே தனித்துவமாய் மிளிர்கிறது
காதலை வீரத்தை கண்ணியமாய் சொன்னாலும்
கடவுளையும் பக்தியையும் கருவாக்கி உயர்கிறதே 
 
எம்மொழியும் பக்தியினை எட்டியும் பார்க்கவில்லை
பக்தியெனும் பெருவெளியில் பயணிக்க நினைக்கவில்லை
எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியது
இதனாலே எங்கள்மொழி தனித்துவமாய் ஒளிர்கிறது
 
பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
படைத்திட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
பரவசத்தை அளிக்குமொழி பாங்குடைய தமிழாகும் 
 
பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார் 
 
நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே 
 
கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்
 
பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம் 
 
காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்
 
அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார் 
பசுந்தமிழும் அதையேற்று பார்போற்ற எழுந்ததுவே 
 
இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே 
அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே 
 
அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார் 
திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
பதிகத்தைத் தொடக்கி பக்தியைக் காட்டி
அந்தாதிக் கன்னையாய் ஆண்டவனைப் பாடினார் 
 
பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார் 
பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார் 
வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார் 
 
இசைத் தமிழால் பாடுதற்கு இவரேவித்தாவார்
பண்பாடி பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
நாயன்மார்  பண்ணோடு  நற்றமிழில் பாட 
காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்
 
சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்
 
இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
பேயுருவில் கைலாயம் சென்ற பெண்ணாவர்
பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார் 
 
காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்
காலத்தால் அழியாத கவிமரபை அளித்தார்
திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவரே 
அவர்தினத்தைப் புனிதமாய் அனைவருமே நினைப்போம்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.