“முத்தமிட்ட பொழுதுகள் நினைவில் எழுந்தன” … கவிதை …. முல்லைஅமுதன்.
கிராமத்து தட்பவெட்பத்திற்கேற்பவே
என்னைத்தயாரித்து அனுப்பியிருந்தாள் அம்மா.
இங்கு என்னுடலைப் பழக்கியெடுக்கவே வருடங்களானது
என்பது என்னவோ உண்மைதான்.
அதிகாலையில் திறந்திருந்த யன்னலோரம்
உட்கார்த்திவிடுகிறாள் மகள்.
காலையை,பகல் பொழுதை,மாலைக் கருக்கலை
இப்படியே நாள்தோறும் பார்த்தும்,சலித்தும்,
மௌனமாய் நகரும் காலம்.
பூக்கள் பூப்பதையும்,அழகழகாய் குழந்தைகள்
பாடசாலை நோக்கிப் பயணிப்பதும்,
திமிறும் குழந்தையை சாதூர்யமாக கைப்பிடித்து அழைத்துச்செல்லும் அப்பாக்கள்..
முத்தமொன்றை தந்தபடி,திக்கொன்றாய் பிரியும் காதலர்கள்…
திருபிப்பார்க்கிறேன்.படமாய் என்னவள்…முத்தமிட்ட பொழுதுகள் நினைவில் எழுந்தன..
மகளின் வருகையை பார்த்தபடி…தூங்கவேண்டும் கனவுகளுடன்..
எல்லாவற்றையும் பழக்கப்படுத்திக்கொண்டாலும்,
எனோ
கிராமத்தையும்,இழந்த கால்களையும் மறந்துவிடமுடியவில்லை..ஏன்?
முல்லைஅமுதன்.