கவிதைகள்
“இன்று அலைபேசியில் பொய்களைப் பேசுவதற்கு யாரும் அகப்படவில்லை”…. கவிதை …. முல்லைஅமுதன்.
குழந்தைகளிடமிருந்து
குதூகலமடையவே செய்திருக்கிறது.
பொய்கள் நிறைந்த ஒருவன்
நிறைய திமிராகவே இருக்கிறான்.
கொஞ்சமாய் சொன்னவனும்
காதலியுடன்
நெருங்கியே இருப்பதாக நினைக்கமுடிகிறது.
பொய்களே அரசாட்சி செய்யும் உலகில்
தனி மனிதனும் பொய்களுடன் அரசியல்வாதியாகி விடுகிறான்.
இன்று காலை நடைப்பயிற்சியின் போது ஒருவன் பொய்களை கூடவே அழைத்துச் சென்றான்.
கூட வந்த பொய்யும்
அவ்வப்போது
வாலாட்டுகிறது..
குரைக்கவும் செய்கிறது.
முற்றதில் காய்ந்துகொண்டிருந்த பொய்களை
கொத்திச்செல்ல வருகின்ற பொய்களை
அப்பாச்சி உரத்து குரலெடுத்து விரட்டுகிறாள்.
பொய்களை புனைவதற்காய்
எதிர்வீட்டு மாலதி அக்கா
கற்பனையில் இருப்பது தெரிந்தது யன்னலூடே…
வெய்யிலைப் பார்த்தபடி…
பொய்களையே சிலசமயங்களில் எழுதிவிடுவதுண்டு.
அதற்கான வாசகப்பரப்பு அதிகம்தான்.
அம்மா கொடிகளில் பொய்களை விரித்துக்கொள்கிறாள்..
இன்று அலைபேசியில் பொய்களைப் பேசுவதற்கு யாரும் அகப்படவில்லை.
ஆக,
பொய்களில்
வாழ்வதும் ஒருவித சுகமே….
இன்று அலைபேசியில் பொய்களைப் பேசுவதற்கு யாரும் அகப்படவில்லை.
ஆக,
பொய்களில்
வாழ்வதும் ஒருவித சுகமே….
முல்லைஅமுதன்.