கட்டுரைகள்
மாஸ்கோ இசை அரங்க படுகொலை: ரஷ்யாவில் மீள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தீவிரவாதம் ? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
ஒரு வாரத்திற்கு முன்பு, ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரகங்கள் மாஸ்கோவில் பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் குறித்து எச்சரிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிந்து ரஷ்ய அதிபராக விளாடிமிர் புட்டின் நாட்டின் மீது தனது பிடியை உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு ஒரு வெளிப்படையான பயங்கரவாத தாக்குதல் தற்போது இடம்பெற்றுள்ளது.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். உயிர்ச் சேதத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நன்றாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு தாக்குதல் இது.
இசை அரங்க படுகொலை:
மாஸ்கோவில் நடந்த இசைக் கச்சேரி அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள “க்ராஸ்னோகோர்ஸ்க்” ( Krasnogorsk City) நடந்த ராக் இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் தானியங்கி ஆயுதங்களால் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS, ரஷ்யாவின் உயர்மட்ட உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமான பெடரல் செக்யூரிட்டி சர்வீஸை (FSB) மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
ரஷ்ய தலைநகரின் வடக்கில் உள்ள க்ராஸ்னோகோர்ஸ்க் புறநகரில், உள்ள ஒரு பெரிய அரங்கில் “பிக்னிக்” என்ற ராக் இசைக்குழுவின் கச்சேரியில் கலந்துகொண்ட கூட்டத்தின் மீது மூன்று முதல் ஐந்து பேர் வரை ஆயுதங்களால் சுட்டதாக ரஷ்ய ஊடகங்கள் முதலில் தெரிவித்துள்ளன.
6,000 பேருக்கு மேல் தங்கக்கூடிய மண்டபத்தில் பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான பிக்னிக்கின் இசை நிகழ்ச்சிக்காக மக்கள் கூடியிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் தானியங்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கையெறி குண்டு அல்லது தீக்குண்டு வீசியதால் கச்சேரி அரங்கில் தீ வேகமாக பரவியது. அந்த மண்டபத்தில் இருந்தவர்கள் 15 அல்லது 20 நிமிடங்கள் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தரையில் வீழ்ந்து உயிரை காப்பாற்றினர்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களை பெறுகிறார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். தாக்குதலின் பின்னர் என்ன நடக்கிறது மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தொடர்புடைய அனைத்து சேவைகளும் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன என்று பெஸ்கோவ் ரஷ்ய செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தார்.
பயங்கரவாதச் செயல் என்று கண்டனம்:
மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ரஷ்ய தலைநகரில் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்ட அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டை “பயங்கரவாதச் செயல்” என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, இந்த சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இது ஒரு கொடூரமான குற்றம் என்றும் கூறினார். ரஷ்ய தலைநகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் படங்கள் “பயங்கரமானவை மற்றும் பார்ப்பதற்கு கடினமானவை” என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இச்சம்பவத்தில் உக்ரைனுக்கு எதுவித தொடர்பும் இல்லை என உக்ரைனின் ஜனாதிபதி உதவியாளர் பொடோலியாக் (Mykhailo Podolyak) தனது டெலிகிராம் சேனலில் கூறியுள்ளார்.
இஸ்லாமிய குழு உரிமை கோரல்:
இத்தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்- கே (ISIS- K) உரிமை கோரியதாக மேற்கத்தய ஊடக வலைத்தளங்களில் காணக் கூடியதாக இருந்தது. ஆயினும் இத் தாக்குதலை நடத்தியவர்கள் ரஷ்யாவின் வடக்கு காக்ஸஸ் பிராந்திய ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று தாங்கள் நம்புவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செச்சின்யா, இங்குஷெட்டியா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியான வடக்கு காக்ஸஸைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்த தாக்குதல்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறது என்று தாம் ஆராய்வதாக ரஷ்யாவின் முக்கிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு உரிமை கோரும் குழு ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசு கொராசன் மாகாண ISIS-K எனும் அமைப்பு ஆகும்.
பாகிஸ்தான் தலிபானால் உருவாக்கம்:
இந்த ISIS-K 2015 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய தலிபானின் அதிருப்தி உறுப்பினர்களால் நிறுவப்பட்டது. அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆப்கானிய கமாண்டோ தாக்குதல்களில் அதன் தலைவர்கள் பலரைக் கொன்றதன் மூலம் 2021 ஆம் ஆண்டளவில் அதன் அணிகள் சுமார் 1,500 முதல் 2,000 போராளிகளாகக் குறைக்கப்பட்டது.
2021 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் கவிழ்த்தவுடன், அமெரிக்க இராணுவம் வெளியேறியது. ஆகஸ்ட் 2021 இல் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ISIS-K ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியது, அதில் 13 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் 170 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் ISIS-K இன் சர்வதேச சுயவிவரத்தை உயர்த்தியது. இது தலிபானின் ஆளும் திறனுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. அப்போதிருந்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ISIS-K க்கு எதிராக போர் தொடுத்து வருகின்றனர்.
ரஷ்யாவை பழிவாங்க முயற்சி:
இந்த மாத தொடக்கத்தில், மாஸ்கோவில் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய தகவலை அமெரிக்க அரசாங்கம் எச்சரித்து இருந்தது. இத்தாக்குதலின் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் அதன் வெளிப்புற செயல்பாடுகளை தெளிவாகக் காட்ட முயல்கிறது.
இவ்வருட ஜனவரி மாதம் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில், ஐஎஸ்ஐஎஸ்-கே, ஈரானின் கெர்மானில் கொல்லப்பட்ட ஒரு ஈரானிய தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவு ஊர்வலத்தின் போது 84 பேரைக் கொன்ற குண்டுவெடிப்புத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கூறியது.
ஈரானை பலமுறை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ்-கே, அங்கு நடந்த பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று உள்ளது. இப்போது மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு இக்குழு பொறுப் பேற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ISIS-K ரஷ்யாவில் தீவிரமாக செயற்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான், செச்னியா மற்றும் சிரியாவில் மாஸ்கோவின் தலையீடுகளை எதிர்க்கும் வண்ணம், பழிவாங்கலாக இத்தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் நடாத்தியுள்ளது. அத்துடன் கிரெம்ளினின் கைகளில் முஸ்லீம்களின் இரத்தம் இருப்பதாக குற்றம் சாட்டி, பழிவாங்கலாக இத்தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் நடாத்தியுள்ளது.