“நெருப்பு” ….. சிறுகதை …. சோலச்சி.
இரவு பதினோரு மணி.
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
என் எதிரே சில புத்தகங்களைப் பரவலாக தரையில் வைத்திருக்கின்றேன். அவை ஏதோவொரு ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அதில் உள்ள புத்தகங்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். சில புத்தகங்கள் நான் வாசித்தே ஆக வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்துகின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாசிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளேன் என்பதாலேயே அந்த புத்தகங்கள் பொறுமைகாத்து இருக்கின்றன. ஏதோவொரு யோசனையில் எழுதுவதை நிறுத்திவிட்டு கைகால்களை நீட்டியும் முடக்கியும் சோம்பல் போக்கிக்கொண்டேன்.
அப்போது என் அலைபேசி சிணுங்கத் தொடங்கியது. பதிவு செய்யாத புதிய எண் அது. எடுப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நேரத்துல யாரு போன் பண்றா… என்ற நினைப்போடு அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக தகவல் வந்தது. இரவு பத்து மணியைக் கடந்து வரும் அலைபேசி அழைப்புகள் யாவும் ஒருவித பதற்றத்தையே தந்துவிடுகின்றது. மீண்டும்…மீண்டும் தொடர்பு கொள்கிறேன். லைன்…பிஸ்சி… என்றே வந்தது. ஒருவேளை எதிர்முனையில் இருப்பவர்களும் என்னைத் தொடர்பு கொள்ள முயற்ச்சித்துக்கொண்டு இருக்கலாம். அதற்காக சிறிது நேரம் காத்திருக்கின்றேன். இருந்தபோதும் மனம் நிலையாக நிற்க மறுக்கிறது. என்னம்மோ ஏதோ தெரியலயே.. உடல் சற்றே நடுங்கத் தொடங்கியது. என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள. நினைக்கிறேன். அந்த நேரம் பார்த்து மேலச் சுவரில் பெரிய பல்லி ஒன்று கிச்சு….கிச்சுக் எனக் கத்தியது.
“இன்னைக்கிப்பூரா சகுனமே சரியில்ல… நாலாபக்கமும் வளச்சுவளச்சு கிச்சு கிச்சுனே கத்திக்கிட்டே இருக்கு… அந்தப் போனு வேற அடிச்சுச்சுல.. கட்டாயிருச்சுனா.. யாரு என்னனு நீ ஒரு தடவ போட்டு பேச வேண்டியதுதானே…. அப்புடி என்ன ரோசனையோ இருக்க…” தாழ்வாரத்தில் கட்டிலில் படுத்துக்கொண்டு சத்தம் போட்டார் என் அம்மா.
“சத்தியாவ பெரியசாமி மயன் சம்பத்து தஞ்சாவூர்ல பாத்தானாம். ஏதோ சோலியா அங்க போயிருப்பான்போல. அப்போ, வூட்டுக்காரு புள்ளைக கூட அந்தப்புள்ள பஸ்டாண்டுல நின்னுச்சாம். இவன பாத்ததும் புள்ள ஓடிவந்து பேசியிருக்கு. மொகம் வேற வாட்டமா இருந்ததா சொன்னாப்ல… எதுக்கும் ஒரு எட்டு நாளைக்கி போயிட்டு வந்துருவோமா….” என் அப்பாவும் அம்மாவும் தாழ்வாரத்தில் பேசிக்கொண்டிருப்பது என் காதில் விழுந்தது.
“ஒருவேளை சத்யாதான் வேற நம்பர்ல இருந்து போன் பண்ணுதோ…. மாமனாருதான் கொஞ்சம் வயசானவரு… ஆனா நல்லாதானே இருந்தாரு….” எண்ணிக்கொண்டிருந்தபோதே அலைபேசி மீண்டும் சிணுங்கியது. எடுப்பதற்குள் சினுங்கள் நின்று போனது.
அதே எண்ணுக்கு மீண்டும் தொடர்புகொண்டேன். தொடர்பு கிடைக்கவில்லை. தொடர்பு எல்லைக்கு அப்பால்…. லைன் பிஸ்சி… என்பதுபோலவே இருந்தது.
சரி… ரொம்ப முக்கியமான சேதினா, அவங்களே திரும்ப பண்ணுவாக. இந்தக் கணக்கு வழக்க மொதல்ல எழுதி முடிச்சுருவோம்.. இல்லனா அந்த புது மேனசரு வாய்க்கு வந்தபடி கத்தி தொலைவாரு…..”
மீண்டும் எழுத ஆரம்பித்தேன்…
அதே எண்ணிலிருந்து மீண்டும் மிஸ்டுகால் வந்திருந்தது….. மனசு பதட்டம் அடைந்தாலும் கோபமாகவும் இருந்தது. யார்ரா இவனுங்க அர்த்த ராத்திரில தொந்தரவு பண்றது…. கையில கெடச்சானுக… பல்லைக் கடித்துக்கொண்டு கோபத்தை கட்டுப்படுத்துகிறேன். ஒருவழியாக நிதானத்திற்கு வந்தேன்.
யார்யாரெல்லாம் இன்று சந்தித்தேனோ அவர்கள் எல்லோரும் கண் முன்னே வந்து சென்றார்கள்.
“சம்பத் அண்ணே.. தஞ்சாவூர்ல சத்யாவ பாத்ததா அப்பா சொல்றாரு. மொகம் வேற வாட்டமா இருந்துச்சாம். தஞ்சாவூர்ல மெயின் ரோட்டுல இருந்த டாஸ்மார்க் கடைய மூடுறமாதிரி மூடிட்டு இப்ப ரெண்டு கடைய கூடுதலா தெறந்துது மட்டுமில்லாம திருக்காட்டுப்பள்ளிக்கு போற எடத்துலயும் ஒருகடை தெறந்துருக்காக. சுந்தரம்நகர்ல இருந்து ஒருகிலோ மீட்டர்தான். இப்ப ஓம் மச்சுனனுக்கு ரொம்ப தோதா போச்சுனு அன்னக்கி சத்யா சொன்னுச்சே. ஒருவேளை புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டையா இருக்குமோ..? பக்கத்து வீட்டுக்காரங்க ஏதும் போன் பண்ணிருப்பாங்களோ..? புள்ளக்குட்டினு ஆன பொறவும் குடிக்கிறதையும் ஒரு பொழப்பா வச்சுருந்தா குடும்பம் எங்கிட்டு முன்னுக்கு வர்றது. அந்தக் கருமத்த கொஞ்சங்கொஞ்சமா நிறுத்தித் தொலஞ்சாதான் என்னங்குறேன்..” தங்கச்சி புருசனை நினைத்து கோபம் தலைக்கேறியது.
எதுவா இருந்தாலும் பரவாயில்ல… அலைபேசியை எடுத்து அதே எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டேன். ரொம்ப நேரம் ரிங் போயும் எடுக்கவேயில்ல…
சரி… இனியும் யோசிக்க என்ன இருக்கு. சத்யா நம்பருக்கே போன் பண்ணலாம்னு நினைக்கும் போது அதே எண்ணிலிருந்து மீண்டும் மிஸ்டுகால்….
நம்ம கூட்டாளிக யாரும் புதுசா சிம்கார்டு வாங்கிட்டு நம்மல அலையவிடுறானுகளா…. அப்படி யாரும் பண்ண வாய்ப்பில்லையே…. மீண்டும் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். தொடர்பு கிடைக்கவில்லை. கோபமாகவும் இருந்தது. அதேநேரத்தில் மனம் திக்திக்கென்றும் இருந்தது. தெருவில் நாய்கள் அதிகமாக குரைக்கும் சத்தமும் கேட்டது.
பக்கத்துவீட்டு பழனிச்சாமி அண்ணன் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் திருவப்பூர் டாஸ்மார்க் கடைக்குள் நுழைந்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்கான அடையாளம் அது. சரட்டுசரட்டுனு சத்தம் கேட்டது. தெரு நாய்கள் கத்திக்கொண்டே இருந்தன. ஆய்… உஸ்…. ஒடிச்சி என அவர் பேச்சுக்குரலும் கேட்கிறது.
“ஏய் இந்தாடி…அஞ்சலி. என்னடி பண்ற…. இந்த நாய்கள வேற…. அந்த பொட்டநாயி பெத்துப் போட்டுட்டு அதுபாட்டுக்கு வதவதனு திரியுது… மனசன் பாதையில நடக்க முடியல. கம்ப எடுத்தேனு வச்சுக்க ஒருசொழட்டுசொழட்டிப் புடுவேன். அப்பறம் எங்க போவீங்க என்னப் பண்ணுவீங்கனு தெரியாது. இவ வேற கதவ தொறக்க இம்புட்டு நேரம்…” அவரின் நிதானம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இது எப்போதும் நடப்பதுதான்.
அஞ்சலி அத்தாச்சிக்கு… நான்குமே பெண் குழந்தைகள்தான். நூறுநாள் வேலை மட்டும் இல்லையென்றால் அவர் பொழப்பு அவ்ளோதான். வேலை இல்லாத நாட்களில் அவர் படும் துயரை சொல்லி மாளாது…. நூறுநாள் கூலியும் எப்போ வங்கியில் ஏறுமுனு தெரியாது… மதியத்துக்கு மேல முத்து பெரியப்பா வீட்லயும் கன்னுச்சாமி தாத்தா வீட்லயும் வேலை பார்த்தாள்.
ரெண்டு வீட்டலயும் மாட்டுக் கட்டுத்தறியில் சாணி அள்ளி கூட்டி சுத்தம் செய்வதற்குள் அவள்படும்பாடு இருக்கே…. நெனச்சாலே கண்ணு கலங்குது..
“ராத்திரில தூங்கும்போது அசதியில கையிகாலு பிணாத்துறதுல தூக்கமே வராம அல்லோலப்பட்டுக்கிட்டு இருப்பேன். பல நேரம் செத்துரணும் போல இருக்கும். இதுல நேரங்காலம் தெரியாம அந்த ஆம்பள படுத்துற பாடு…. ம்… எத்தனையத்தான் நானு சகிச்சுக்கிறது…” அஞ்சலி அத்தாச்சி பக்கத்துவீட்டு சித்ராவிடம் ஒருநாள் பேசிக்கொண்டு இருந்தது நினைவுக்கு வந்தது… வயசு வர்றத்தக்கன புள்ளைக குடுகிடுனு வளந்துருச்சுங்க… இந்த அண்ணே இப்புடி பண்ணலாமா… எனக்குள்ளேயே கேள்வியும் கேட்டுக்கொண்டேன்.
மீண்டும் அலைபேசியில் அதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். எதிர்முனையில் ஒரு பெண் தூக்க கலக்கத்தோடு பேச ஆரம்பித்தாள். அந்தக் குரலுக்கு வயது ஐம்பது வயசுக்கு மேல் இருக்கும். இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கின்றேன். உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
“ம் சொல்லுங்கம்மா …. பேசத் தொடங்கினேன்….
“தம்பி எல்ஏசிகார தம்பி சுகுமாறாயா… என்னப்பா சாயந்தரத்துல இருந்து மூச்சுக்கு ஒருக்கா ஒனக்கு போனு பண்ணிக்கிட்டே இருக்கோம். சுச்சி ஆப்புனே வந்துச்சுப்பா……. மீனாக்காதான் ஓங்கிட்ட
ஒரு சேதி சொல்லனும்னுச்சு. பக்கத்துலதான் திண்ணயில படுத்துருக்கு. பேசியா கொடுக்குறேன்….”
மாஞ்சான் விடுதியிலிருந்து பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். ஊராட்சி மன்றத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கிறார் மீனாம்மா.
“மீனாக்கா… எந்திரி அந்தத் தம்பியே போன் பண்ணிருக்கு”
“கொண்டா… கொண்டா…. இவ்ளோ நேரமா முழிச்சேதான் இருந்தேன். கொஞ்ச நேரத்துல மூதேவி போட்டு அமுக்கிப்புடுச்சு..” கண்களை தேய்த்துக்கொண்டே போனை வாங்கினார்.
அர்த்த ராத்திரி வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன. எனக்குள் இருந்த பதற்றம் வேலியோரத்து ஓணானைப் போல் எட்டி பார்த்துக்கொண்டு இருந்தது.
“தம்பி….”
“ம்.. சொல்லுங்கம்மா…” இந்நேரம் வரைக்கும் தூங்காம இருக்காங்கன்னா… என்ன சொல்லப் போறாங்கனு தெரியலயே.. மனசு படபடத்தது.
“என்ன சாமி ஓம்புட்டு கொரலே சரியில்ல. நா ஒரு கிறுக்கி அர்த்த ராத்திரில போனு பேசுனா என்னமோ ஏதோனுதானே மனசு பதறும்…”
“அதெல்லாம் ஒன்னுல்லம்மா. நல்லாருக்கேன். விசயத்த சொல்லுங்கம்மா…”
“சாமி… நா சொல்றத ஓம் மனசுக்குள்ளயே வச்சுக்கய்யா…”
எனக்கு ஒன்னும் புரியவில்லை. என்னம்மோ ஏதோனு மனசு தூக்கிவாரிப் போட்டது. ராத்திரியில் சத்தம் கேட்டு மரத்திலிருந்து பறக்கும் பறவை போல் மனம் படபடத்தது.
வேறு ஏதும் பதில் பேசாமல் “தம்பி….” என்றவாறு உதடுகளைத் திறக்காமல் அழத் தொடங்கினார்.
“தம்பி… பகல்ல பக்கம் பாத்து பேசனும்; ராத்திரில அதுவும் பேசக் கூடாதுனு சொல்லுவாங்க. இருந்தாலும் மனசு கேக்கலயா..”
“என்னம்மா ஆச்சு. வீட்ல ஏதும் சண்டையா….”
“அது நெதமும் நடக்குறதுதானய்யா. அவுக மட்டும் கெங்காகொமரியாவே இருக்கப் போறாகளா..? ஒருநாளைக்கி இந்தத் தோலும் சுருங்கிப் போகும். ரத்தமும் சுண்டிப்போகும். இன்னும் நாலு சந்தைக்கு வாழப்போற இந்தக் கெழவிக்கு வீராப்பு என்ன வேண்டிக் கெடக்கு…..” அவரின் பேச்சில் வெறுமை ஒட்டிக்கொண்டிருந்தது.
“ராத்திரில சொல்ற அளவுக்கு அப்புடி என்னம்மா… பிரச்சினை..” எனக்குள் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டதை உணர்ந்தேன்.
சிறிது நேரம் மவுனம் காத்து பெருமூச்சு விடத் தொடங்கினார்.
“தம்பி, எங்க வீட்ல இருந்து அஞ்சாறு வீடு தள்ளி சந்திரா இருக்காளே….” பேச்சை இழுத்தார். இந்த ராத்திரில எதுக்கு சந்திரா அக்காவ இழுக்குது என நினைக்கத் தோன்றினாலும்..
“ஓம் மருமகளுக்கு நீயே ஒரு பாலிசி போடுப்பானா.. அக்காகிட்டயே காசு கேட்குற. ஓம்புட்டு அக்காளா இதுந்தா நீ செய்ய மாட்டியா….” உரிமையோடு பேசுகின்ற சந்திரா அக்காவின் வார்த்தைகள் என்னுள் வலம்வந்தன.
“அவங்களுக்கு ஏதும் பிரச்சினையா…. நல்லாதானே இருந்தாக….” கேட்க நினைப்பதற்குள்..
“அவளதாயா… எல்லாருமா சேர்ந்து கொன்னுப்புட்டாக…” தேமித்தேமி அழுதார் மீனாம்மா.
அதைக் கேட்டதும் மனசு திக்கென்று இருந்தது.
“அவனுக்கு உள்ள லெட்சணத்துக்கு ரெண்டு பொண்டாட்டி. மூத்தவ ஒரு பையன பெத்துக்கிட்டு தனியா இருக்கா. ரெண்டுமூனு வருசம் போச்சுனா அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான் தம்பி..”
“அக்கா மகள கட்டிவச்சா வயசான காலத்துல அந்த ஆள பாக்குமுனு அவுக அப்பன் படுத்துன பாட்டுலதான் அவனுங் கட்டிக்கிட்டான்…” அன்றொருநாள் டீக்கடையில் சந்திரா அக்கா புருசன் வெள்ளைச்சாமியைப் பற்றி மாரியப்பனும் கணேசனும் சொன்னது நினைவுக்கு வந்தது.
“கர்ப்பப்பையில ஏதோ கோளாறா இருக்குனு டாக்டரு சொல்லிட்டாரு. இனிமே புள்ள பொறக்காதுனு தெரிஞ்சதும் அந்த ஆம்பள மூத்தவ வீட்லயே போயி இருந்துக்கிட்டான்… மூத்தவ
மயன் சம்பாதிக்க ஆரம்பிச்சுருவான்ல. காலம்போன கடைசியில கட்டிக்கிட்ட ஏந்தலவிதிய யாரால மாத்த முடியும். எனக்குப் பொறந்ததும் பொட்டபுள்ளயா போச்சே. அது இப்பத்தான் மூணாங்கிளாசே படிக்கிது…”
“அந்தக் கெழவன்… அதான்ய்யா மாமனாரு. என்னப்பாத்து கேக்குற கேள்விக்கெல்லாம் நா உசுரோட இருக்கதே இந்த பொம்பளப் புள்ளைக்காகத்தான்… பெருப்பெருத்த குடும்பத்துக்கு வந்துட்டு புள்ளப்பெத்துக்க வக்கில்லனு பேசுறான். இவனுக வச்சுருக்க வாஞ்சாலையப் பாத்துதான் எந்தசாமி புண்ணியமோ ஒன்னுக்கு மேல பெத்துக்க முடியாமல ஏம்புட்டு வயித்துலயும் எடத்தக் கொறச்சு கனத்த கூட்டுப்புட்டான்..” சந்திரா அக்கா ஒருமுறை சொன்னதை நினைவுபடுத்திக் கொண்டேன்.
“எப்புடிமா ஆச்சு…..” இறுக்கம் நிறைந்த மனதுடன் மீனாம்மாவிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.
“பாவிப் பயலுக எல்லாருமா சேர்ந்து தீய வச்சுட்டானுகய்யா… அவ பெத்த அந்த பிஞ்சு உசுரு கத்துன கதறு கல்லு மனசயும் கரச்சுருக்கும்ய்யா…. “
“ஊருக்குல யாருமே இல்லயா….” ஆதங்கப்பட்டேன்.
“ஊருக்குள்ள உள்ளவனுக எல்லாரும் மெய்யாலுமே செத்துதாய தொலஞ்சுட்டானுக… பொறந்த பொறப்பு மாதிரி ஓங்கிட்ட பாக்குற எடத்துல வெள்ளந்தியா பேசுவா அதாய்யா ஒனக்கு போன் பண்ணுனேன்…”
“ரெண்டு மூனு வருசமாவே அவ புருசன் இவ வீட்டுக்கு வர்றதுல்லனு ஒனக்கு தெரியும்ல. இவளும் ஒத்தயில என்ன பண்ணுவா. பிரிச்சு விட்ட பங்கு நெலத்துல மூத்தவதான் நடவு நட்டு தின்னு கொழுக்குறா. இவளுக்குனு ஒன்னுமே இல்லய்யா. ஏற்கனவே ஒருத்தி இருக்கும்போது இந்தக் கெழவன், அக்கா மகனு இவளக்கொண்டாந்து மயனுக்கு கட்டி வச்சானே. அவ என்னத்த வாரிக்கொண்டுபோனா…. சாகும் போது அந்த மனுசி என்னென்ன நெனச்சாளோ…” மீனாம்மாளின் கண்கள் குளமாகிப் போனதை உணர முடிந்தது. என்னையறியாமல் கண்களில் நீர் வழிந்தது.
சந்திரா அக்காவை மூன்று ஆண்டுகளாகத்தான் தெரியும். எல்ஐசியில் முகவராக வேலை பார்க்கும் நான் ஏதோ ஒரு நிகழ்வில்
சந்திரா அக்காவை சந்தித்தேன். அப்போதிருந்து தம்பி தம்பி என்று உரிமையோடு பேசுவார்.
சந்திரா அக்கா குலவை போட்டு பாட்டுப்பாடி வயலில் நாற்று நடும்போது மற்ற பெண்களும் பின்பாட்டுப்பாடி களைப்பு தெரியாமல் சுறுசுறுப்பாக நாற்று நடுவார்கள். அவரே மெட்டு கட்டி பாடுவதிலும் கெட்டிக்காரர். அவர் வயல்வெளியில் பாடும்போது பலமுறை நின்று பாடலைக் கேட்டுவிட்டு சென்றிருக்கின்றேன்.
“ஏய்…. தன்னேனானே தானேனானே….
அக்கா நாத்தையுமே நட்டுக்கிட்டு பாடப்போறேன்
நீயும் கூடவந்து ஒத்தாசையா
மெட்டு போடு
நல்ல மெட்டு போடு……”
இந்த வரிகளுக்கு முழு உரிமையும் கொண்டவர் சந்திரா அக்காதான்…. நம்ம ஊருக்கு ஒருநாளைக்கு வெள்ளச்சாமியோட சின்ன சம்சாரத்த நடவுக்கு கூப்புட்ரனும் என்று அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள் ஆசைப்படும் அளவுக்கு பாட்டும் வேலையும் சிறப்பாக செய்வார். நடவு நாத்துபறி வேலைனா சந்திரா அக்காவை போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு கூப்பிடுவார்கள்.
மீனாம்மா மீண்டும் பேசினார்.
“ராத்திரில அவ தனியா இருக்கத தெரிஞ்சுக்கிட்டு காலிப்பயலுக கதவ தட்டுறானுக. எல்லாம் மூத்தவளோட வேலப்பாடுய்யா. மூத்தவ லேசுபட்ட ஆளு இல்லய்யா. அவளுக்கு வேலக்காரியா இருக்கத்தானே இவளக் கொண்டு வர நெனச்சா. அது நடக்கல. சந்திரா துணிச்சகாரியா இருந்துருந்தா பரவாயில்ல. பேச்சுதாய்யா படபடனு பேசுவா. ஒரு தைரியமும் இல்லாதவய்யா..”
“ஆம்பள சொகம் வேணும்னா எவன்கிட்டயாச்சும் போக வேண்டியதுதானே. எப்பப்பாத்தாலும் பொழுதுசாய விடமாட்டேங்கிற. எலவு வீடு மாறி இங்க வந்து கத்திக்கிட்டே இருக்க..னு சத்தம் போட்டுக்கிட்டே அந்தப் பாவிப்பய வெள்ளச்சாமி, அவ கன்னத்துல நேத்து ரெண்டு விட்டான் பாரு. அப்பவே அவளுக்கு பாதி உசுரு போயிருச்சுய்யா…” மீனாம்மா
சொல்லச்சொல்ல என் மனசுபூராவும் சந்திரா அக்காவை நோக்கியே இருந்தது.
“போனுல யாருப்பா. இந்த நேரத்துல.. சத்யாவா பேசுது….” தாழ்வாரத்திலிருந்து என் அம்மா முனுமுனுத்தபடி இருந்தார்.
நான் என் அம்மாவுக்கு பதில் சொல்லாமல் மீனாம்மா பேச்சுக்கு ம்..போட்டுக்கொண்டு இருந்தேன். தழுதழுத்த குரலோடு மீனாம்மா பேசிக்கொண்டு இருந்தார்.
“பொழுதுசாய.. என்ன நெனச்சாளோ தெரியல. கையில வச்சுருந்த மண்ணண்ணய மேலுல ஊத்திக்கிட்டு சாகப்போறேனு கத்துனா… பாவிமக சும்மாதான் பயமுறுத்துறானு நெனச்சா நெசமாலுமே பத்த வச்சுக்கிட்டாயா….. ஊருக்குள்ள ஒரு சனம் எட்டிப்பாக்கலயே….”
என் கண் முன்னால் வந்து நின்ற சந்திரா அக்காவின் முகம் அகலவே இல்லை. என் கண்கள் பாலைவனம் போல் வறண்டு கிடந்தது. தொட்டுப் பார்த்தேன். வழிந்த கண்ணீர் காய்ந்து போயிருந்தது. துளியும் ஈரமில்லை. என் கண்கள் நெருப்பாய் மாறி இருந்தது…
“இங்கேருக்கா. சாமத்துல அழுகுறத நுப்பாட்டு…. பாக்குறவங்க ஏதாச்சும் முடிச்சு போட்டுருவாங்க. அதுவும் நம்ம ஊரு சனத்துக்கு சொல்லியா தரணும். ஒடம்பு பூரா வெசத்த வச்சுக்கிட்டு அலையுதுக….” போனை வாங்கி இணைப்பைத் துண்டித்தார் மாரிக்கண்ணு அம்மா.
இரவு உறக்கமில்லை.. என் முன்னால் அந்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. மேலச்சுவரைப் பார்த்தேன். அந்தப் பெரிய பல்லி மிரட்சியோடு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவேளை என்னைச் சூழ்ந்த வெப்பம் பல்லியையும் சூழ்ந்திருக்கலாம்…..
———**——-