“அடுத்த தெருவிலிருந்த கடவுள் அங்கு நடந்த கலவரத்தில் மரணித்துப்போனார்” … கவிதை … முல்லைஅமுதன்.
கடவுளால் நிராகரிக்கப்பட்ட தெருவில்தான்
இத்தனை காலங்கள் வாழ்ந்திருக்கிறேன்.
இன்று மாலை நாலுமணியளவில்தான்
எங்கோ சிறிய தீப்பெட்டிக்குள் ஒளிந்திருந்து,
இறந்து போன
கடவுளை இடுகாட்டிற்கு எடுத்துச்சென்றிருந்தனர்.
அடுத்த தெருவில் இருப்பவனும்
தங்கள் தெரிவில் கடவுள் இன்னும்
உயிருடன் இருப்பதாக சொல்லிச்சென்றார்கள்.
அங்கு பூக்கள் மணக்கின்றன.
கடவுளரின் இருப்பு பற்றிய கேள்வி என்றும் எனக்குண்டு.
ஆனாலும் அவராவர் நம்பிக்கைகளை
நிராகரிக்கவுமில்லை.
அம்மா வீடு முழுக்க வாசனைத்திரவிய மணத்துடன் வலம் வந்தாள்.
அப்பா தனக்கான கடவுளின் முன்னால் உட்கார்ந்து தொடர்ந்து பூசிக்கிறார்.
அக்கா
துளசிசெடியை பக்தியுடன் சுற்றிவந்தாள்.
ஆலமரத்தைச் சுற்றிவந்த பவானி ஒருநாள் கர்ப்பம் தரிந்திருந்தாள்.
எதைச் சுற்றியோ எனது ஊர்வலம் நடக்கிறது.
இப்போது இரவு பதினொரு மணியாயிற்று.
அடுத்த தெருவிலிருந்த கடவுள் அங்கு நடந்த கலவரத்தில் மரணித்துப்போனார் என்றார்கள்.
இன்று
எங்கள் தெருவில் புதிதாக கடவுள் தோன்றியிருந்தார்.
முல்லைஅமுதன்