கட்டுரைகள்
உண்ணாவிரதமும் பெண்களும்: … அமெரிக்க பெண் உரிமை போராட்டங்கள் : … ஈழத்தில் அன்னை பூபதியின் உயிரீகம்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
உலக வரலாற்றில் பெண்களின் உரிமைக்காக உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வென்றுள்ளனர். அமெரிக்க பெண் உரிமை போராட்டத்தில் பெண்கள் எடுத்துக் கொண்ட ஆயுதம் உண்ணாவிரதமாகும். இதற்கு ஒப்பாக
ஈழத்தில் அன்னை பூபதியின் உண்ணாவிரதப் போராட்டம் உயிரீகத்தின் உச்சமாக விளங்குகிறது.
அமெரிக்க பெண் உரிமை போராட்டம்:
அலஸ் ஸ்டோக்ஸ் பால் (Alice Stokes Paul) ஒர் அமெரிக்க பெண்ணியவாதியும், பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதாம் திருத்தத்திற்கான பிரச்சாரத்தின் முன்னணி மூலோபாயவாதிகளில் இவரும் ஒருவர்.
அக்காலத்தில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பெண் வாக்களிக்கும் உரிமைக்காகவும் பாலின பாகுபாட்டை எதிர்த்து அலஷ் பால், லூசி பர்ன்ஸ் மற்றும் பிறருடன் இணைந்து, பெண் வாக்குரிமை போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர்.
உரிமைக்கான பெண்கள் ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற அகிம்சை நிகழ்வுகளை மூலோபாயமாக்கி போராடியதன் வெற்றிகரமான பிரச்சாரத்தின் மூலம் அமெரிக்காவில் பிரபல்யமானார். இதன் விளைவாக ஆகஸ்ட் 1920 இல் பெண் வாக்குரிமை திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
1885 இல் நியூ ஜெர்சியில் பிறந்த அலஷ் பால், (ஜனவரி 11, 1885 – ஜூலை 9, 1977) தன் சிறு வயதிலிருந்தே பெண்களுக்கான வாக்குரிமை நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அவர் சமூகப் பணியைப் படித்தாலும், குடியேற்ற வீடுகளில் ஏழைகளுக்குச் சேவை செய்தாலும், பெண்களுக்கான உரிமைக்காக
சமூகப் பணியை தொடர்ந்து மேற்கொண்டார். உயர் கல்வியில் அவர் உயிரியல் மற்றும் சமூகவியலில் பட்டங்களை முடித்த பிறகு, பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் தனது படிப்பைத் தொடர 1907 இல் பிரிட்டனுக்குச் சென்றார்.
அவர் பிரிட்டனில் பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (WSPU) சேர்ந்து, பெண்களின் சம உரிமைகளுக்காக ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிவில் ஒத்துழையாமை ஆகியவற்றில் பங்கேற்றார். இதன் விளைவாக, அவரும் பிரிட்டனில் உள்ள மற்ற பெண் வாக்குரிமையாளர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் வாக்குரிமைக்காக போராட்டம்:
பெண்களின் வாக்குரிமைக்காக Emmeline மற்றும் Christabel Pankhurst தலைமையில், WSPU உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி சிறையில் தங்கள் கட்டாய சிகிச்சை , உணவு அருந்துதலை எதிர்த்தனர்.
உண்ணாவிரத போராட்டங்கள்
ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறியது. ஏனெனில் அவை கூடுதல் தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. அதே காரணத்திற்காக மக்களிடம் அனுதாபத்தை பெரிதும் உருவாக்கியது.
1910 ஆம் ஆண்டில், பால் கிரேட் பிரிட்டனில் இருந்து அமெரிக்கப் பெண்களுக்கான சட்ட மற்றும் பொருளாதார சமத்துவத்திற்காக வேலை செய்யத் திரும்பினார், தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கத்தில் (NAWSA) சேர்ந்தார். 1890 மற்றும் 1910 க்கு இடையில், மாநில வாரியான மூலோபாயம் சில மேற்கு மாநிலங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தெருக் கூட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் மறியல் போராட்டங்கள் உட்பட இங்கிலாந்தில் அவர் பங்கேற்றது போன்ற தேசிய அளவில் போர்க்குணமிக்க எதிர்ப்பு உத்திகளுக்கு மாற வேண்டியது
என்று அலஷ் பால் நம்பினார்.
பெண் உரிமைக்காக உண்ணாவிரதம்:
இந்த அகிம்சை நடவடிக்கைகள் அனைத்தும் பெண்களின் தலைமை சரியான கிளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்தது. 1913 மார்ச் 3 ஆம் தேதி பெண் வாக்குரிமை ஊர்வலத்தை அவர்கள் ஏற்பாடு செய்தனர். 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஊர்வலத்திற்காக அணிவகுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில் பெண் உரிமைக்காக ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற அகிம்சை நிகழ்வுகளை மூலோபாயமாக்கி போராடியதன் மூலம் ஆகஸ்ட் 1920 இல் பெண் வாக்குரிமை திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தில் அன்னை பூபதி :
ஈழத்தில் கோரமான போர் தீவிரம் அடைந்திருந்த 1988இல் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்தி, பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டி, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது.
31 நாள் நோன்பிருந்த பத்துப்பிள்ளைகளின் தாயான
அன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்.
பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை.
அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணா நிலையிருந்து உயிர் நீத்தவர்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.
உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். போரிடும்
புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையின் பின்னர் அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை.
ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.
1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர்.
அன்னையர் முன்னணி போராட்டம் :
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார்.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
அன்னைபூபதி போராட்டம் :
இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை.
அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
அன்னை பூபதியின் நினைவுநாள் ஈழத்தில் நாட்டுப்பற்றாளர் நாளாக என்றும் நினைவு கூறப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் பெண்கள் அடக்குமுறைகளை எதிர்க்க உண்ணாவிரதப் போராட்டத்தை ஓர் எழுச்சி வடிவமாகவே கருதி போராடி இருக்கின்றனர். உயிரீகத்தின் உச்சம் தொட்ட அன்னை பூபதியம்மா ஈழ மண்ணில் தன் உயிர்க் கொடையால் தியாகத் தாயாக என்றும் விளங்குகின்றார்.