இந்திரா காந்திக்கும் மோடிக்கும் உள்ள ஒற்றுமை என்ன?…. நியூசிலாந்து சிற்சபேசன்.
“ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை” என்று பாரதி கொண்டாடிய இந்தியத் தேசத்தின் சனத்தொகை 140 கோடியைக் கடந்திருக்கின்றது.
அஃது உலகிலேயே அதியுச்சமான சனத்தொகையாகும். ஒரு பேச்சுக்குச் சொல்வதெனில், பூமிப்பந்திலுள்ள ஒவ்வொரு நூறுபேரில் பதினேழுபேர் இந்தியராகும்.
இவ்வாறானதொரு தேசத்திலே, சனநாயக கட்டமைப்பு துடிப்பானதாகவே காணப்படுகின்றது. அதிலே பிரதமரொருவரின் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகின்றது.
சுதந்திரத்துக்குப் பின்னரான கடந்த ஏழு தசாப்தங்களிலே நேரு முதல் மோடி வரையில் பதின்னான்கு பிரதமர்களை இந்தியா கண்டிருக்கின்றது. அதிலே, ஜனரஞ்சகமான தலைவர்களாக இந்திரா காந்தியும், நரேந்திர மோடியுமே எழுச்சியடைந்தனர்.
நேருவும் பிரசித்தமான தலைவரேயாகும். ஆனால், நேருவின் பிரசித்தம் விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து தாய்வீட்டுச் சீதனமாகக் கிடைத்ததாகும்.
நேருவின் மகளாக அரசியல்பரப்பில் காலடிவைத்தவரே இந்திரா காந்தியாகும். தந்தைவழி கிடைத்த அரசியல் அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைத்தவர்.
நேருவுக்குப் பின்னர் பிரதமரான சாஸ்திரி 1966ல் மறைந்தார். அதன்பின்னரான உட்கட்சிப் பிணக்குகளை இந்திரா காந்தி துணிவுடன் எதிர்கொண்டார். மொரார்ஜி தேசாயை தோற்கடித்தார். அதுவே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனான மோதலின் ஆரம்பமாகியது. 1969ல் காங்கிரஸ் பிளவடைந்தது.
மூத்த தலைவர்கள் ஒன்று திரண்டனர். கர்மவீரர் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் உருவாகியது. அதனை இந்திரா காந்தி துணிவுடன் எதிர்கொண்டார். 1970 பொதுத்தேர்தலிலே வெற்றிபெற்றுப் பிரதமரானார்.
அரசியலில் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள தனித்துப் போராடினார். அடிமேல் அடிவைத்தே முன்னேற்றங்களை அடைந்தார். கட்சியையும், தேசத்தையும் துணிச்சலாக வழிநடாத்தினார்.
சீனாவுடனான மோதல்களை உறுதியுடன் கையாண்டார். பங்களாதேசத்தின் விடுதலையின் மையசக்தியானார். அதனூடாக, இந்தியப் பிராந்தியத்தின் ஒப்பற்ற சக்தியாக வளர்சியடைந்தார்.
அஃது அமெரிக்க – சோவியத் முறுகல் காலமாகும். நேருவின் இந்தியா அணிசேராக் கொள்கையை முன்னிறுத்தியது. அதிலிருந்து இந்திரா காந்தி வேறுபட்டார். அணிசேராக் கொள்கையுடன் சமாந்திரமாக, இந்திய – சோவியத் உறவை வளர்ப்பதில் துணிச்சலை வெளிப்படுத்தினார்.
உள்நாட்டில் சமஸ்தானங்களை இல்லாமல் செய்தார். வங்கிகளை தேசியமயமாக்கினார். சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலினுள் இராணுவத்தை அனுப்பினார்.
இவ்வாறு தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைவராக இந்திரா காந்தி எழுச்சியடைந்தார். இந்திராவே இந்தியா என்றும் சொல்லும் நிலைக்கு உயர்ந்து ஜனரஞ்சகமான தலைவரானார்.
இந்திரா காந்திக்குப் பின்னர் ஜனரஞ்சகமான தலைவராக நரேந்திர மோடியே எழுச்சியடைகின்றார்.
மோடி, குடும்பப் பின்னணியூடாக அரசியலில் நுழைந்தவரல்ல. கீழ்மட்டத்திலிருந்து கடுமையாக உழைத்தவர். ஒவ்வொரு படிக்கட்டுகளாக ஏறியவர். இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லக்கூடிய இந்து தேசியவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டவர். துறவு வாழ்க்கையைத் தேடியவர். 1970களில் ஜனசங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சாரகர் ஆனார். அவசரகாலச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். காலவோட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு, மோடியை அரசியல் பணிகளுக்காக பாரதிய ஜனதாக் கட்சிக்கு அனுப்பியது.
1987ல் அகமதாபாத் மாநகரசபைத் தேர்தலிலே மோடியின் தலைமைப்பண்பு கவனிப்பைப் பெற்றது. அவருடைய தேர்தல் யுக்தியே, கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கருதப்பட்டது.
1990ல் அத்வானியின் ரதயாத்திரை, அதனையடுத்து முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமைக்கான யாத்திரை போன்றவைகளை ஒருங்கிணைத்ததிலே மோடியின் ஆளுமை பரவலான கவனத்தை ஈர்த்தது.
பல்வேறு தேர்தல்களிலேயும் அயராது உழைத்தார். தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான பாஃர்முலாவை உள்ளங்கையில் சுருட்டிவைத்திருந்தார். தேர்தல் வெற்றிகளை கட்சிக்கு குவித்தார். அதனால் மோடியின் பெறுமதியை கட்சி அங்கீகரிக்க ஆரம்பித்திருந்தது.
2001ல் குஜராத் துணை முதலமைச்சராகும் வாய்ப்பைக் கட்சி வழங்கியது. அதனை மோடி நிராகரித்தார்.
ஒன்றில், குஜராத்துக்கான முழுப்பொறுப்பையும் ஏற்பதற்கு முதலமைச்சர் பதவியைத் தரவேண்டும். இல்லையேல், ஒரு பதவியுமே வேண்டாம் என்றார். கட்சி இறங்கிவந்தது. மோடி ஏறிக்கொண்டார்.
குஜராத் மாற்றத்தின் ஆரம்பமாகியது.
தொழில்துறை வளர்ச்சி என்பதற்கு அப்பால், சாதாரணர்களும் நேரில் கண்ட நிலத்தடிநீர்வளம், நீர்ப்பாசனம் என பன்முகப்பட வெற்றிகள் குவிந்தன. அதிலே, 2002 குஜராத் கலவரம் கறையாகியது.
இருந்தாலும்கூட, மோடி சளைத்துவிடவில்லை.
“டெல்லியிலே ராசாவாக” கனவுகண்டார். தேசத்தின் தலைவராகத் தன்னை சந்தைப்படுத்தினார். பிரமாண்டத்தை உருவாக்க பி.ஆர் நிறுவனங்களின் உதவியை நாடினார். வைத்தகுறி தப்பவில்லை. 2014ல் இந்தியப் பிரதமரானார்.
பிரதமராக மோடியின் செயற்பாடுகள் தீர்க்கமானவையாக வெளிப்பட்டன. குடியுரிமைச் சட்டத்திருத்தம், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து, ரூபாய் நோட்டுகளில் மாற்றம் போன்றவை மோடியின் துணிவைப் பறைசாற்றின.
சர்வதேச அரங்கிலே பிராண்ட் இந்தியாவை சந்தைப்படுத்துவதில் மோடி வெற்றி பெறுகின்றார். மத்தியகிழக்கில் உறவு வலுவடைந்திருக்கின்றது.
இவ்வாறு தீர்க்கமாக முடிவெடுக்கும் மோடி ஜனரஞ்சகமான தலைவராக எழுச்சியடைகின்றார்.
தேசப்பற்று, கொள்கைப்பற்று, அயராதஉழைப்பு, விடாமுயற்சி, தொலைநோக்கு, துணிவு, தீர்மானமெடுப்பதில் தயக்கமின்மை போன்ற குணாதிசயங்களே நல்ல தலைவருக்குரிய பண்புகளெனச் சிலாகிக்கப்படுகின்றன.
அத்தகையை பண்புகளை இந்திரா காந்தி வெளிப்படுத்தினார். மோடி வெளிப்படுத்துகின்றார்.
அந்தவகையிலேயே தனித்துவமான ஆளுமை வெளிப்படுகின்றது. அதுவே சாதாரணர்களையும் பின்தொடரச் செய்கின்றது.
அதனாலேயே, காஷ்மீர் முதல் கன்னியகுமாரி வரை அறியப்படுகின்ற ஜனரஞ்சகமான தலைவராக இந்திரா காந்தி காணப்பட்டார். நரேந்திர மோடி காணப்படுகின்றார்.
அதுவே இந்திரா காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் உள்ள ஒற்றுமையாகும்.