கவிதைகள்
மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்!…. கவிதை … மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
நல்லூரான் வாசலுக்குச் சென்றுமே விட்டால்
நமையறியா ஆனந்தம் நமக்குள்ளே பெருகும்
நல்லூரில் சித்தர்கள் தடம் பட்டதாலே
நல்லூரில் தடம்பதித்தால் நம்மயக்கம் தீரும்
தேரடியை நாமெல்லாம் பார்த்தபடி செல்வோம்
தேரடியை பேரிடமாய் கண்டாரே ஓர்மனிதர்
பித்தான செல்லப்பர் பிரதான இடமாக
நல்லூரான் தேரடியே நாடியே தேர்ந்தாரே
தன்னை மறப்பார் தன்நாமம் உரையார்
என்னவோ பேசுவார் எடுத்தெறிந்தும் ஏசுவார்
அழுக்குத் துணியோடு அவரென்றும் திரிவார்
ஆனாலும் அவருக்குள் அருளொளி இருந்தது
அருளொளி இருப்பதை ஆருமே அறியார்
அருகணைய விளைவாரை அடித்துமே ஒதுக்குவார்
ஞானத்தின் ஒளியாக நல்லூரில் இருந்தார்
நல்லதொரு சீடனைக் மனமெண்ணி நின்றார்
தேடிய சீடன் ஓடோடி வந்தான்
வந்தவனை நிந்தனை செய்தவரும் நின்றார்
சீடனோ சிக்கெனப் பிடித்துமே நின்றான்
தேரடாவுள் தீரடாபற்று மந்திரமாக வந்ததுவங்கே
எப்பவோ முடந்த காரியம் நாமறியோம்
முழுவதும் உண்மை செப்பினார் செல்லப்பர்
சீடன் கேட்டான் சிந்தை தெளிந்தான்
குருவே அவரெனச் சரணம் அடைந்தான்
சுற்றினான் சீடன் ஒதுக்கினார் குருவும்
முற்றிய விசராய் தோற்றினார் அங்கே
அடித்தார் விரட்டினார் ஆக்கினை கொடுத்தார்
அயரா நின்றார் அவரடி சீடரும்
செல்லப்பர் முடிவை நெருங்கிய வேளை
சீடர் யோகர் தேடியே சென்றார்
நில்லங்கே வார்த்தை வெளியே வந்தது
நின்றார் யோகர் உணர்ந்துமே அகன்றார்
யோக நாதன் யோக சுவாமியானார்
செல்லப்பா சித்தர் உள்ளே புகுந்தார்
கொழும்புத் துறையை கோவிலாக்கி
அமர்ந்தார் யோகர் அனைவர்க்கும் அரணாய்
சித்தம் தெளிந்தார் சித்தும் அறிவார்
வித்தைகள் தெரிந்தும் விளம்பரம் இல்லார்
மேலாம் இறையை மேலாய் எண்ணினார்
கீழாம் குணத்தை ஆழவே அழித்தார்
படித்தவர் வந்தனர் பாமரர் வந்தனர்
பிடித்ததைக் கேட்டு வாசலில் நின்றனர்
தேவைகள் அறிந்து சுவாமிகள் கொடுத்தார்
தெரிசனம் கொடுக்கா திட்டியும் அனுப்பினார்
அணுகுவார் பிணியை அறிந்துமே நின்றார்
அவரவர் அகத்தை அவரறிந் திருந்தார்
ஆணவம் மிக்கார் அவர்முன் வந்திடின்
அவர்களை வைது அனுப்பியே விடுவார்
பொருளை நாடார் அருளை நாடினார்
பொன்னைக் கொடுத்தால் பொங்கியே எழுவார்
அன்பாய்க் கொடுத்தால் அகமும் மலர்வார்
கிடைக்கும் அனைத்தையும் கொடுத்துமே மகிழ்வார்
திருமுறை அனைத்தையும் திரவியம் என்பார்
பாடிப் பாடிப் பரவசம் அடைவார்
திரு வாசகத்தை உருகியே பாடுவார்
அனைவரும் படித்திட ஆசையும் கொண்டார்
நல்லூர் என்றால் உள்ளமே உருகுவார்
நற்குரு உறைவிடம் அதுவெனப் போற்றுவார்
எல்லை இல்லாப் பற்றுங் கொண்டார்
நல்லூர் தந்த நம்யோக சுவாமிகள்
சித்தராய் இருந்தவர் தெருவெலாம் திரிந்தார்
எத்தனை பேர்கள் அவரினை அறிந்தார்
அறிந்தவர் தெளிந்தார் அகமது வெளுத்தது
அவர்முகம் கண்டதே அவரவர் புண்ணியம்
மண்ணில் இருந்து மனிதம் காத்தார்
மாதவ யோக சுவாமிகள் வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆற்றல் அனைத்தையும்
இயல்பினை எண்ணி ஈந்துமே உயர்ந்தார்.
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா.