நடுகைக்காரி! … 67 …. ஏலையா க.முருகதாசன்.
இயல்பு உற செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் ,மகளிர் மென்தூசு
உயல்வு உறுபரவை அல்குல் ஒளிப்பு அறத்தளிப்ப உள்ளத்து
ஆயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயர்வுயிர்ப்பு அளித்தது அம்மா
-கம்பராமாயணம்
ஸ்ராப் றூமில் உட்கார்ந்திருந்த சில ஆசிரிய ஆசிரியைகள் முகமலர்ச்சியோடு இருந்தனர்.அதில் சிலர் கறுவல் செல்லத்துரை மாஸ்ரருக்கும் அவரைப் பற்றிய புகாரைச் சொல்லவிருக்கின்ற ஆசிரிய ஆசிரியைகளுக்குமிடையில் நடக்கப் போகும் வாக்குவாதத்தை இரசிக்கத் தயாராகி கொண்டிருந்தனர்.
இன்னும் ஓரு சிலர் தர்மேஸ்வரி தேவையில்லாமல் ஆப்புக்குள்ளை காலை வைக்கப் போகிறார் அவர் கேட்கிற கேள்விக்கு இவாவாளை பதில் சொல்ல முடியாது என்று ஒரு ஆசிரியர் பக்கத்திலிருந்த ஆசிரியையின் காதில் யாருக்கும் கேட்காத மாதிரிச் சொல்கிறன் என்று சொல்ல,எங்களுக்கும் கேட்டது என்று ஒரு ஆசிரியர் சொல்ல.காதுக்குள்ளை சொன்ன மாதிரித் தெரியேலையே முகத்திலை வேறை எங்கேயோ சொன்ன மாதிரித்தான் எங்கடை இடத்திலை இருந்து பார்க்கேக்கை தெரிஞ்சுது என்று சொன்னார்.
காதுக்குள்ளை இரகசியம் சொன்ன ஆசிரியரும்;, முழுமுகத்தையும் அந்த ஆசிரியையின் மூச்சுக் காற்றுபடும்படியாக அருகில் கொண்டு போய் கேட்ட ஆசிரியரும் இன்னும் திருமணமாகாதவர்கள்.
அவர்களைப் பற்றியும் அரசல்புரசல்களாக அப்படி இப்படிக் கதை உண்டு.மாணவர்களுக்கும் அது தெரியும்.
அவர்கள் இருவரும் பக்கத்துப் பக்கத்து அறையில் படிப்பிக்கிற நாட்களில்,இரண்டு வகுப்பறைகளையும் பிரிக்கும் சுவரடியில் இருவரும் நின்று கதைப்பதுண்டு.
கதைப்பதற்கு தேவையான விசயத்துக்காக அவர்கள் இருவரும் கடுமையாக யோசிப்பதில்லை.
மற்றைய ஆசிரியர்கள் ஆண் ஆசிரியரை மாஸ்ரர் என்றும் பெண் ஆசிரியரை ரீச்சர் என்று விளித்தழைத்துக் கதைப்பதுண்டு.
ஆனால் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அழைக்காமலே கதைக்கத் தொடங்குவார்கள். மாணவ மாணவிகளிடத்தில் உன்ரை ஆள் என்ரை ஆள் என்று கதைப்பது போல இவர்களையும் ஆசிரியையின் பெயரையும் ஆசரியரின் பெயரையும் இணைத்து வைத்துக் மாணவர்கள் கதைப்பார்கள்.
ஏதாவது ஒரு கருப்பொருளை எடுத்து கதைப்பார்கள்.யார் யாருக்குச் சோடி என்பதை ஆண்களின் கக்கூசின் சுவரிலும்; பெண்களின்; கக்கூசின் சுவரிலும் எழுதி வைத்திருப்பார்கள்.அது அவர்கள் பார்த்த திரைப்படமாகவோ அல்லது
அரசியல் பிரச்சினையாகவோ அல்லது முன்னாலை இருக்கிற அம்பனை வயல்வெளி பற்றியதாகவோ இருக்கும். ஒரு விடயத்தை கதைச்சு முடிஞ்சதும்,வேறை என்ன என்று இன்னொரு கதையைத் தொடங்குவார்கள்.
ஒரு ஆரம்பம் கலந்துரையாடுவது முடிவு என்றுதான் எந்தக் கலந்தரையாடலிலும் இருக்கும். ஆனால் இவர்களிடம் அது எதுவுமே கிடையாது.
இரு வகுப்பு மாணவர்களுக்கும் இவர்கள் கதைப்பது அப்பப்ப கேட்கும்.அவர்களை சிவாஜி பத்மினி என்றும்,எம்:ஜி.ஆர் சரோஜாதேவி என்றும்,ஜெமினி சாவித்திரி என்றும் மாணவர்கள் தமக்குள்ளே அவர்ளைக் கிண்டலடித்துக் குசுகுசுப்பார்கள்.
ஆசிரியரின் பெயரை எழுதி சமன் சிவாஜி என்றும்,ஆசிரியையின் பெயரை எழுதி சமன் பத்மினி என்று பள்ளிக்கூட கக்கூசுகளின் உட்புறச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும்.
அதை எழுதியவர்கள் யார் என்று எவருக்குமே தெரியாது.ஆசிரியர்களில் சிலர், சம்பந்தப்பட்ட மாஸ்ரர்தான் எழுதியிருப்பார் என்றும் கதைப்பார்கள்.
முகத்தோடு முகம் முட்டாத குறையாக அந்த ஆசிரியையும் ஆசிரியரும் கதைச்சதை ஸ்ராப் றூமில் ஆசிரிய ஆசிரியைகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மத்தியானச் சாப்பாடு உண்ட களைப்பில் மூன்று ஆசிரியர்கள் சுவரோடு தலையைச் சாய்த்து கோழிநித்திரையில் இருந்தனர்.
அப்பொழுது கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் ஸ்ராப் றூமுக்குள் நுழைவதை வைத்த கண் வாங்காமல் தர்மேஸ்வரி ரீச்சர் பார்த்துக் கொண்டிருந்தார்.
பெரும் எரிமலை ஒன்று வெடிக்கப் போகின்றது என எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.
வழமையாக சிரிப்பும் சத்தமுமாக இருக்கும் ஸ்ராப் றூம் அன்று வழமைக்கு மாறாக தான் உள்ளே நுழைந்ததும் கப்சிப் என்பது போல அமைதியடைந்ததைக் கண்ட கறுவல் செல்லத்துரை மாஸ்ர் தான் வந்ததும் ஏன் எல்லாரும் அமைதியாகினர் என யோசித்தவாறு சாய்வான பிரம்புக் கதிரையொன்றில் அமர்கிறார்.
கதிரையில் உட்கார்ந்தபடியே தலையைச் சுவரோடு சாய்த்து உட்கார்ந்த மூன்று ஆசிரியர்களும் கோழிநித்திரை கொண்டிருந்தாலும் அவர்கள் ஆழ்ந்த நித்திரை கொள்ளவில்லையாதலால் மற்ற ஆசிரிய ஆசிரியர்கள் கசை;;சுக் கொண்டிரு;தது அவர்களின் காதுகளில் விழுந்து கொண்டுதானிருந்தது.
திடீரென்று அமைதியாகியதால்,அமைதியானதற்கு என்ன காரணமாகவிருக்கும் என்ற வியப்புடன் அவர்களும் கண்விழித்து நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கம்பீரமாக எதற்கும் தயார் என்பது போல அலட்சியமாக உட்கார்ந்திருந்தார்.
தான் கேட்க வேண்டியதை கேட்பமா விடுவமா என்ற தயக்க ரேகை தர்மேஸ்வரி ரீச்சரின் முகத்தில் தெரிந்தது.
தொண்டையை மெதுவாகச் செருமிக் கொண்ட தர்மேஸ்வரி ரீச்சர் கறுவல் செல்லத்துரை மாஸ்ரரைப் பார்த்து உங்களோடை நாங்கள் கொஞ்சப் பேர் ஒரு விடயம் கதைக்கப் போறம் நீங்கள் என்ன நினைக்கிறியளோ தெரியாது,நீங்கள் என்ன நினைச்சாலும் பரவாயில்லை இண்டைக்கு கதைச்சுத்தான் ஆக வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம் என்று சொல்ல,வாயால் பதில் சொல்லாது கேளுங்கள் என்பது போல தலையாட்டிய கறுவல் செல்லத்துரை,நீங்கள் என்று சொன்னது இஞ்சை இப்ப இருக்கிற அனைவருமா இல்லாட்டி என்று அறுத்துக் கேட்க அங்கிருந்த சில ஆசிரியர்களும் ஆசிரியைகளும் ச்சாச் சாய் தர்மேஸ்வரி ரீச்சர் கேட்கிற விசயத்தக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஒரே குரலில் சொல்கிறார்கள்.
கறுவல் செல்லத்தரை மாஸ்ரர் தர்மேஸ்வரி ரீச்சரைப் பார்த்து சரி என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள் என்கிறார்.
நீங்கள் மாஸ்ரர் படிப்பிக்கிற நேரங்களில் பிள்ளைகளைக் கெடுக்கிற மாதிரி சில கதைகளைச் சொல்கிறீர்கள் எனச் சொல்ல,கறுவல் செல்லத்துரை மாஸ்ரரின் பிரதிபலிப்பு எப்படி இருக்கப் போகுது என ஆவலோடு காத்திருக்க,நான் அப்படி என்ன பிள்ளைகளைக் கெடுக்கிற மாதிரி கதைச்சனான் என்று தர்மேஸ்வரி ரீச்சரைப் பார்த்து கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கேட்க,இன்று இங்கிலீஷ் பாட நேரம் நீங்கள் மாஸ்ரர் கீரிமலைக் கதை சொன்னனீங்கள் அது உண்மையிலை மோசமான வம்புக் கதை மாஸ்ரர் இளந்தாரிப் பொடியங்களும் குமர்ப்பிளளையலும் இருக்கிற வகுப்பிலை பொறுப்பில்லாமல் இந்தக் கதையைச் சொன்னது சரியோ மாஸ்ரர் நீங்களே சொல்லுங்கள் என்று தர்மேஸ்வரி ரீச்சர் கேட்க,உங்களுக்கு நான் சொன்னது என்ணெண்டு தெரியும் என்று அவர் கேட்க,நீங்கள் சொன்னதைக் பக்கத்து வகுப்பிலை படிப்பிச்சுக் கொண்டிருந்து நான் காதைத் தீட்டிக் கேட்டனான் என்று ரீச்சர் சொல்ல அப்ப படிப்பிக்கிற வேலையை விட்டிட்டு அடுத்த வகுப்பிலை என்ன நடக்குது என்பதை கண்காணிக்கிறதுதான் உங்கடை வேலையோ என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கோபமாகக் கேட்க தர்மேஸ்வரி ரீச்சருக்குச் சார்பாக சர்வாம்பிகைச் ரீச்சர் என்ன மாஸ்ரர் நீங்கள் கதைக்கிறியள் கீரிமலையிலை நடந்ததைச் படிக்கிற பிள்ளையளுக்குச் சொன்னது சரியென்று நினைக்கிறியளோ என்று கொஞ்சம் சூடாகக் கேட்க,அது நான் பகிடியாகச் சொன்ன கதை அது உண்மையாக நடந்ததுமில்லை,பத்தாம் வகுப்பு படிக்கிற பிள்ளையளுக்கு எதுவுமே தெரியாதென்று நினைக்கக்கூடாது அவர்களுக்கும் எல்லாம் விளங்கும் என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கோபத்துடன் சொல்லுகிறார்.
கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சர்வாம்பிகை ரீச்சரைப் பார்த்து நீங்கள்தானே பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு தமிழ் ரீச்சர் கம்பராமாயணம் தமிழ்ச் சிலபசுக்குள்ளை வருவதுதானே.
நான் நினைக்கிறன் இப்ப நான் சொல்லுகிற கம்பராமாயணப் பாடலை நீங்கள் படிப்பித்திருப்பீர்கள் என்றவர்
இயல்பு உற செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள்,மென்தூசு
உயல்வு உறுபரவை அல்குல் ஒளிப்பு அறத்தளிப்ப உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு அயர்வுயிர்ப்பு அளித்தது அம்மா
அந்தப் பாடலைச் சொல்லி இதை நீங்கள் படிப்பித்திருப்பீர்கள்தானே.பாடலின் பொருளை விளக்கினீர்களா இல்லையா,எப்படி விளக்கினீர்கள் சொல்லுங்கள் ரீச்சர் என்றதும் சர்வாம்பிகை ரீச்சர் சாடைமாடையாக விளக்கினேன் எனச் சொல்ல என்ன ரீச்சர் சாடைமாடையாக விளக்கினேன் என்கிறீர்கள்.உங்களுக்கு தெரியுமா கல்வி என்பது அரைகுறையாகப் படிப்பிப்பது அல்ல எது பாடல்களில் சொல்லப்பட்டிருக்கின்றதோ அதை மாணவர்களுக்கு மூடிமறைக்காமல் சொல்ல வேண்டும்.
அது ஒரு ஆசிரியரின் கடமை என்றவர் நீங்களாகப் பாடலுக்குப் பொருள் சொல்கிறிர்களா இல்லாட்டி நானே சொல்லவா என்றதும் சர்வாம்பிகை ரீச்சரும் தர்மேஸ்வரி ரீச்சரும் தடுமாறத் தொடங்குகின்றனர்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரருக்கும் சர்வாம்பிகை,தர்மேஸ்வரிச் ரீச்சருக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதத்தை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்கள் மாஸ்ரர் நீங்களே விளக்கத்தைச் சொல்லுங்கள் என்கின்றனர்.
(தொடரும்)