கட்டுரைகள்
பேரிடரில் மனிதநேயம் ….. சைப்ரஸிலிருந்து காசா வரும் கப்பல் ! வன்னி வந்த வணங்கா மண் கப்பல்!! … நவீனன்.
ஆங்கிலேயருக்கு பணியாது போரிட்ட பண்டார வன்னியன் வாழ்ந்த வணங்கா மண்ணே வன்னி மண்ணாகும். இந்த வன்னியிலே தான் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் முழு உலகமே தமிழ் மக்களை கை விட்டதும் வரலாறாகியது.
அன்று உலகமே கைவிட்டாலும், புலம்பெயர் தமிழ் உறவுகள் தாயக மண்ணை மறக்கவில்லை. 2009 மார்ச்சில் தமிழ் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கி பயணித்த கப்பலே வணங்கா மண் கப்பலாகும். முல்லைத்தீவு நோக்கி பிரித்தானிய துறைமுகம் ஒன்றில் இருந்து புறப்பட்ட இக்கப்பல் போர் முடிந்து பல வாரங்களின் பின்னரே இந்தியப் பெருங்கடலுக்கு வந்தடைந்தது.
இன்று கொடும் பஞ்சத்தின் விளிம்பில் பாலஸ்தீனத்தில் இருக்கும் காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்காக, சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து கப்பல் காசாவை நோக்கி புறப்பட்டுள்ளது.
காசாவுக்கு உதவிகளை விநியோகிப்பதற்கான புதிய கடல் பாதை ஒன்றை ஏற்படுத்தும் முன்னோடித் திட்டமாக, சைப்ரஸ் துறைமுகத்தில் இருந்து இருநூறு தொன் உணவு பொருட்களை ஏற்றிய கப்பல் ஒன்று மார்ச் 12 காசாவை நோக்கி புறப்பட்டது. காசாவின் வட மேற்காக 320 கிலோமீற்றர் தொலைவிலேயே சைப்ரஸ் நாடு உள்ளது.
போரால் பாதிக்கப்பட்டு, பஞ்சத்தின் விளிம்பில் இருக்கும் காசா நகருக்கு உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவை சைப்ரஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உணவு இன்றிய நோன்பு:
காசாவில் போர் நிறுத்த முயற்சிகளில் இழுபறி நீடிக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலேயே அங்குள்ள மக்கள் ரமழான் நோன்பை பிடித்து அனுஷ்டித்து வருகின்றனர். காசா மக்களில் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபாவில் உள்ளவர்களும் இடம்பெயர்ந்து உள்ளனர். அங்கு வாழும் மக்கள் பொதியில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் அவரை விதைகளைக் கொண்டு நோன்பு துறந்ததாக கான்யூனிஸில் இருந்து அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியான ரமழானாக இம்முறை உணரவில்லை. மக்கள் குளிருக்கு மத்தியில் கூடாரங்களில் இருக்கிறார்கள். இம்முறை ரமழான் இரத்த வாடையுடன் துன்பம், பிரிவு மற்றும் ஒடுக்குமுறையை சுவைக்கிறோம் என்று கான் யூனிஸில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
காசாவில் தற்காலிக துறைமுகம்:
காசாவில் துறைமுகக் கட்டமைப்பு ஒன்று இல்லாத போதும், அழிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளை பயன்படுத்தி இறங்குதுறை ஒன்றை உருவாக்கவிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது காசா கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
இப்போது காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களைச் சேகரித்த ஸ்பெயின் நாட்டின் “ஓப்பன் ஆர்ம்ஸ்’ (Open Arms) என்ற அமைப்புக்குச் சொந்தமான கப்பல் காசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
‘ஓபன் ஆர்ம்’ என்ற ஸ்பெயின் தொண்டு நிறுவனத்தின் இந்தக் கப்பல் அரிசி, மாவு மற்றும் உணவு பொருட்களை ஏற்றி சைப்ரஸின் லர்னாகா துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து காசாவுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய அரபு இராச்சியமே அதிக நிதி உதவி அளித்திருப்பதோடு, ஸ்பெயின் தொண்டு நிறுவனம் கப்பலை வழங்கியுள்ளது.
காசாவில் குறிப்பாக வடக்கு காசாவுக்கான உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வரும் சூழலில் அங்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். காசாவில் பஞ்சம் ஏற்படுவது பற்றி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உதவி அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
இஸ்ரேலின் கடல்வழி முற்றுகை:
காசாவில் கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி போர் வெடித்தது தொடக்கம் அந்தப் பகுதியை வெளியுலகில் இருந்து இஸ்ரேல் முடக்கி இருக்கும் நிலையிலேயே அங்கு நேரடி உதவி விநியோகத்திற்கு தொண்டு நிறுவனங்கள் முயன்றுள்ளன.
இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா நகரில் மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் எதுவுமின்றியும், மின்சாரம் இல்லாமலும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
உணவு இல்லாததால் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு தற்போது தரை வழியாகவும், வான் வழியாகவும் அளிக்கப்பட்டு வரும் நிவாரணப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை.
இதனாலேயே சைப்ரஸில் இருந்து மேலும் ஐந்நூறு தொன் உதவிகள் திரட்டப்பட்டிருப்பதாகவும் அவைகளும் காசாவுக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடல்த் திட்டம் வெற்றி அளித்தால், 2007 ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் இஸ்ரேல் அந்தப் பகுதி மீது கொண்டுவந்த கடல்வழி முற்றுகையை மீறும் முதல் சம்பவமாகவும் இது இருக்கும்.
2009 வன்னி நோக்கிய வணங்கா மண் கப்பல்:
வன்னியில் இறுதிக்கட்ட போரில் முழு உலகமே தமிழ் மக்களை கை விட்ட பின், எம் உறவுகளின் உயிர் காப்பதற்க்கான தாயகம் நோக்கிய பயணமே “ஒப்பரேஷன் வணங்கா மண்” எனப்படும். புலம் பெயர்ந்த உறவுகளால் ஈழத்து உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் தாயகம் நோக்கிய பயணத்திற்கு “வணங்கா மண்” ஒருங்கிணைப்பு குழு இலண்டனில் தீவிரமாக செயற்பட்டது.
வன்னி யுத்த நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்பட்டது. இதற்கு ஐநா முதல் உலகநாடுகள் அனைத்துமே எம்மக்களை கைவிட்டு வேடிக்கை பார்த்தது. இந்நிலையில் எம் வன்னி உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் “வணங்கா மண்” நடவடிக்கை 2009 மார்ச் முதல் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் பொருட்கள் சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
ஒப்பரேஷன் வணங்கா மண்:
ஒருபுறம் குண்டுமழையில் சாவுக்குள் வாழும் மக்களை பட்டியால் சாவு கொள்ள விடுவோமா, அல்லது குண்டுகளால் எம்மினம் அழிய விடுவோமா, உலக அரசுகள் கைவிட்டால் என்ன செய்வது என பல ஐயங்கள் அப்போது எழுந்தன. ஆனாலும் வன்னி நோக்கி ‘வணங்கா மண்’ கப்பல் பல்வேறு சிரமங்கள் மத்தியில் பிரித்தானியாவில் இருந்து
அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்ல திட்டமிடப்பட்டது. இதனாலேயே
இந்த நடவடிக்கைக்கு “ஒப்பரேஷன் வணங்கா மண்” (Operation Vananga Mann – Vanni Mission ) என பெயரிடப்பட்டது.
சட்டச் சிக்கல்கள், கடல் வழிப்பயண அனுமதி, பயணிப்பவர்கள், மாலுமிகள் மற்றும் சர்வதேச அங்கிகாரத்துடனான பாதுகாப்பு என பல இடர்கள் வந்த போதும், இக்கப்பலில் உலர் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல
முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் பல பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மருந்துப் பொருட்கள் உலர் உணவுப் பொருட்கள் என்பன சேகரிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு பிரித்தானிய பொதுஸ்தாபன ஆணையகத்தின் கீழ் பதிவு செய்யப்ட்ட Tamil Aid, Tamils Health Organisation, The Tamils Support Foundation, Technical Association of Tamils ஆகிய அமைப்புகள் உதவிகளை வழங்கின.
அத்துடன் இந்த வணங்கா மண் நடவடிக்கையில் சர்வதேச ஊடகவியலாளர்களையும் இந்தக் கப்பலில் ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
போர் தீவிரமாக நடைபெறுகையில் வணங்கா மண் கப்பல் முல்லைத்தீவுத் தரையை தொடுமா என்பது ஒரு பகற் கனவாகவே இருந்தது. அதேவேளை வணங்கா மண் கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படுமா என்பதே முக்கிய கேள்வியாக இருந்தது.
சென்னையில் நிறுத்தப்பட்ட கப்பல்:
வன்னியில் இறுதிப் போர் முடிவுற்று சுமார் 3 இலட்சம் மக்களுக்கு மேல் அகதிகளாக திறந்தவெளிகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு
வேண்டிய மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிய கப்பல் நேரடியாக பொருட்களை வன்னியில் கொண்டு சென்று இறக்க முடியவில்லை.
இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொருட்களையே சிங்கள அரசு தானே பொறுப்பேற்று அரைகுறையாக விநியோகித்தது.
வன்னி தமிழர்களுக்கு உதவுதற்காக வெளிநாட்டு தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் ‘வணங்காமண்’ கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்ததால் 25 ஜூன் 2009 அந்த கப்பல் சென்னை அருகே நிறுத்தப்பட்டது.
இந்த கப்பலை இலங்கையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி வேண்டினார். அப்போது
இலங்கையில் இருந்து டெல்லி வந்திருந்த ராஜபக்சே அரசின் உயர் மட்டக் குழுவினர், வணங்காமண் கப்பலை இலங்கை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதியளித்துனர்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்ட சபையில் வணங்காமண் கப்பல் பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. பின்னர் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் அந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப மத்திய நடவடிக்கை மேற்கொண்டது.
இலங்கையில் மீதம் இருக்கும் தமிழர்களை காப்பாற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்ட சபையில் கருணாநிதி கோரினார். அத்துடன் சர்வதேச சட்ட வல்லுனர்களை பயன்படுத்தி ஒரு சுயாதீன குழுவை அனுப்பி வன்னிக்குள் அரங்கேறும் இன அழிப்பு நிகழ்வுகளை வெளிக்கொண்டுவந்து சர்வதேசத்துக்கு பகிரங்கப் படுத்தினாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் எனவும் தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.