கட்டுரைகள்
ரஷ்ய தேர்தலை உற்றுநோக்கும் உலகு! புட்டினின் நிர்ணயிக்கப்பட்ட வெற்றி! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(உலக நாடுகள் கூர்ந்து கவனிக்கும் வேளையில், பல நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் தேர்தல் நடந்துள்ளது. ஐந்தாவது முறையாக அதிபராக புட்டின் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது )
ரஷ்யாவில் கடந்த மூன்று நாட்களாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திட புட்டினே முன்னைலையில் உள்ளார்.
ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் சுமார் 11.4 கோடி பேர் வாக்களித்தனர்.
புட்டினின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. சோவியத் ஒன்றிய சிதைவின் பின்னரான ரஷ்யாவின் முதல் அதிபர் பொறிஸ் யெல்ட்சின் 1999இல் பதவி விலகியதை அடுத்து விளாடிமிர் புட்டின் கடந்த இருபது ஆண்டுகளாக தலைமைப் பதவி வகித்து வருகிறார்.
2000 முதல் 2008 வரையிலும், பின்னர் 2012ல் இருந்து தற்போது வரையிலும் அவர் அதிபராக தொடர்கிறார். புட்டினின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 15 முதல் 17ம் வரை நடந்தது.
இத்தேர்தலிலும் புட்டின் வெற்றி பெற்று 2030 வரையிலும் அதிபராக நீடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
கடந்த 2018 தேர்தலில் புட்டின் 76.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இம்முறை அவர் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குரிமையை உணர வேண்டுகோள்:
உக்ரைன் போரால் ராணுவச் செலவினம் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் தேர்தல் நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், அதன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்தன.
கடந்த இரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்த தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தலில் போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எந்த எதிர்க்கட்சியும் இல்லை, தலைவரும் இல்லை. மேலும் ரஷ்யர்களின் ஆதரவுடன் இப்போரை புட்டின் அரசு நடத்தி வருவதால், உக்ரைன் போர் இத்தேர்தலில் எந்த எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
சர்வதேச ரீதியில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வரும் புட்டின் ரஷ்யாவின் அதிபராக சுமார் இருபது ஆண்டு காலமாக பதவி வகித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாக பொது மக்களிடம் பேசுகையில், வாக்குரிமையை உணர்ந்து வாக்காளர்கள் செயல்பட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் வேண்டுகோள் விடுத்தார்.
கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்தல்:
கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு புட்டினுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் பல கிளம்பின. அதேபோல், சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மர்மமான முறையில் உயிரிழந்ததும் புட்டினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடந்தது.
ஆயினும் அதிபர் தேர்தலில் புட்டின் சுயேட்சையாகவே போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட மூன்று கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகோலாய் கரிடோனோவ், தேசியவாத லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் லியோனிட் ஸ்லட்ஸ்கி மற்றும் புதிய மக்கள் கட்சியின் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனாலும் இந்த கட்சிகள் கிரெம்ளின் கொள்கைகளையே ஆதரிக்கின்றன. அதேசமயம் இத்தேர்தலில் நான்குமுனை போட்டி இருந்தாலும், மீண்டும் புட்டினே வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அதிபராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னைய உக்ரைனிலும் தேர்தல்:
அதேவேளை ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட முன்னைய உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக வாக்களித்தனர். இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களுக்கு சென்று வாக்களித்தனர்.
எண்பது சதவீத வாக்குகள் பெறுவார்?
உக்ரைன் போரால் ரஷ்யாவில் கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தினாலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட மூன்று பேருமே உக்ரைன் மீதான போருக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள். இதனால் இத்தேர்தலில் உக்ரைன் போர் பெரிதாக எதிரொலிக்காது என்று கூறப்படுகிறது. இது புட்டினுக்கு ஒரு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதேவேளை அதிபர் புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியும் சிறையில் உயிரிழந்து விட்டதால் கடும் போட்டி இல்லை. இதனால் என்பது சதவீத வாக்குகளுக்கு மேல் புட்டின் பெறுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஐந்தாவது முறையாக புட்டின் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் நடைபெறும் இந்த தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வெற்றி பெறும் வேட்பாளர், மே மாதம் அதிபராக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவித பாரிய அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் வாக்கு பதிவு நடந்துள்ளதாகவும், மீண்டும் புட்டின் வெற்றி பெற்று ரஷ்யாவின் நீண்ட காலதலைவராக மூன்று தசாப்தங்களுக்கு நீடிப்பார் என்றும் பரவலாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ரஷ்ய அரசியல் சாசன திருத்தங்களுக்கு பின்னர், புட்டின் 2036-ம் ஆண்டு வரை அரசியலில் அதிகாரத்தில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.