“மாமிசத் துண்டு” … சிறுகதை – 58 … அண்டனூர் சுரா.
ஒருபிடி மணலை அள்ளினார் சுடலை. கையை ஒரு பக்கமாகச் சாய்த்து மெல்லச் சலித்தார். பொடி மணலை ஒரு நீண்ட மரக்கட்டையில் நீள்வாக்கில் நிரவினார். அரிவாளை அதில் ஓடவிட்டார். அரிவாள் ஓடும் அரவம் ‘கிரிச்.. கிரீச்….’ என்றது.
“ எலேய் சுடலெ, பகல்ல பார்த்துப்பேசணும். ராவு அதுவும் கூடாதுடா. நீ நீட்டி இழுக்கிற இழுவ மேலத்தெருவத் தாண்டி கேட்கும் போலிருக்கேடா. பார்த்து பதமா, அரவமில்லாம இழேண்டா” என்றார் ரெங்கன்.
சுடலை அரிவாள் தீட்டுவதை ஒரு கணம் நிறுத்தினார். விளிம்பை வலது கை கட்டைவிரலால் நீவிப் பார்த்தார். “இதவிடவும் எப்டி பதமா இழுக்கிறதாம்…” என்றவர் மறுபடியும் அரிவாளைக் கட்டையில் ஓடவிட்டார்.
பௌர்ணமி இருட்டு. வெள்ளை வேட்டியைத் துவைத்துக் காயப் போட்டதைப் போலிருந்தது பால் வெளிச்சம். வெள்ளாவிக் குளத்தின் கீழக்கரை. பத்துக்கண் பாலம். சுற்றிலும் கருவேல் மரங்கள். புதர்கள், அடைசல்கள். அதற்குள் நான்கைந்து பேர். அத்தனை பேர் தலையிலும் பெரிய உருமாக்கட்டு.
“ இன்னுமாடா அரிவாளத் தீட்டுறே?”
“ ஏ வேல முடிஞ்சது.” சுடலை தீட்டிய மரக்கட்டையில் அரிவாளைப் பதம் பார்த்தார். ஒவ்வொரு வெட்டிலும் மரக்கட்டை வாய்ப் பிளந்தது. அடுத்ததாகக் கத்திகளை எடுத்தார். ஒன்றோடொன்று உரசி கூர்த் தீட்டினார். கத்திகளின் உரசல்கள். ‘ கிரீச், கிளாங்க்’ என்றன.
முத்தன் ஒரு கட்டு வைக்கோலை அள்ளித் தரையில் வட்டமாகக் கிடத்தினார். கடம்பன் அதன் மீது தண்ணீர் தெளித்தார். வேலன், பனைமரக் குரங்கு மட்டைகளைக் கிடத்தி அதன் மீது சாக்குகளை விரித்தார்.
ரெங்கன் கைலியை மடித்துக்கட்டி முன்பகுதியை தொடைகளுக்கிடையில் கொடுத்து லங்கோடு கட்டிக்கொண்டார். இடுப்பில், தீட்டிய அரிவாளைச் சொருகிக்கொண்டார். தலையில் பெரிய முண்டாசு. வலது, இடது பக்கமாக இரண்டு கத்திகள்.
“ ரெத்தம் பிடிக்க சட்டி இருக்காடே“
“ ஆம், இருக்கிண்ணே”
“ இருக்கிறது தெரியும். அதில மண்ணுக்கிண்ணு இல்லாம இருக்கா.”
“பார்த்தேந்தேன். வேணுனா மறுக்கா பார்க்கே.” கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை சட்டிக்குள் அடித்தார். கையால் துழாவித் தடவினார். நெநெற்றிக்கு மேலாகத் தூக்கி ‘ ப்பூ,ப்பூ…’ வென ஊதினார். அத்தனை பேரும் கட்டியிருந்த கைலியை அவிழ்த்துச் சுருட்டி கருவேல மரக்கிளைகளுக்கிடையில் வைத்தார்கள். கால்சட்டைக்குள் கையை நுழைத்து புகையிலைப்
பொட்டலத்தை எடுத்து விரித்து ஒரு குதப்பு அள்ளி கடாப்பற்களுக்கிடையில் வைத்தார்கள். எச்சிலை இரண்டொரு முறை துப்பிக்கொண்டார்கள்.
“ எங்கடாம்பி கன்னுக்குட்டி?”
“ கருவ மரத்தில கட்டிக்கெடக்கு.”
“ யாருடா கட்டுனது?”
“ நாந்தே” முன்னே வந்தார் முத்தன்.
“ நீயே போயி அவுத்துக்கிட்டு வா”
முத்தன் நடந்தார்.
“ எங்கேடாம்பி கடம்பன்?”
“ இருக்கேன்.”
“ அவன் கூட ஒத்தாசைக்குப் போ. அவன் கயித்தப்பிடிப்பான். நீ வாலைப்பிடி.”
“ நீயும் போ, தர்மா”
“இ ம், போறே.”
“ பிடிக்கிறப்ப சத்தம் வரக்கூடாது”
“ சரிதே”
“ எலேய் வெள்ளயா.அந்த கத்திய எடு. அப்டியே கயித்தயும் எடு”
“இந்தாண்ணே”
கன்றுக்குட்டியை மூன்று பேர் இழுத்து வந்தார்கள். அது வருவேனா என்றது. கால்களை இழுவிட்டுக்கொண்டு முரண்டு பிடித்தது. ‘மாக்’கென்று குதித்து நாலாபுறமும் தவ்வியது. புழுதி பறந்தது.
“ இந்தே, ட்டெர்ரே….ம், ட்ரே….”
ஒருவர் கன்றுக்குட்டியின் வாலை முறுக்கினார். இன்னொருத்தர் வாலைக்கடித்தார். கன்றுக்குட்டி தாவிக்குதித்து கால்களை அங்கே இங்கே என எடுத்து வைத்து நடந்தது. ‘ .ம்..மா….’ என்று கத்தியது.
ரெங்கன் தலையைத் தூக்கிக் கத்தினார். “அடேய், எளவு எடுத்தவன்களா. கத்த விடாதீங்கனு சொன்னாக் கேட்டுத் தொலைக்க மாட்டீங்களா?”
“ நடக்க மாட்டேங்குதே”
“ வால நல்லா முறுக்கு. அப்புடுதேன், அப்புடுதேன். இப்ப வருது பார்த்தீயா.”
ரெங்கன் முன் கன்றுக்குட்டி நிறுத்தப்பட்டது. அவரைக் கண்டதும் கன்றுக்குட்டி நாலாபுறமும் தாவிக்குதித்தது. வாலைத் தூக்கிக்கொண்டு மூத்திரம் பெய்தது. சாணம் போட்டது. ‘ம்மா….’ என்று கத்தியது.
ரெங்கன் கீழே குனிந்து கயிற்றினை எடுத்தார். கயிற்றைக் கன்றுக்குட்டியின் கால்களைச் சுற்றி அரைவட்டத்தில் விட்டெறிந்தார். கயிறு நான்கு கால்களைப் பிணைந்துகொண்டு அவருடைய கைக்கு வந்தது. ஒரே இறுக்கு. கன்றுக்குட்டி குடிசை சாய்வதைப்போல மட,மட…எனச் சாய்ந்தது.
“ அடேய் சுடலெ. தலயப்பிடி.”
“இம்..”
“அட கருமாந்திரம் பிடிச்சவனே. இது என்ன பசுங்கன்னுக்குட்டினு நினைச்சியா? எருமையடா. நல்லாப்பிடி. ம், ம். அப்பிடிதே…”
“முத்தா, நீ என்ன பண்றே. அதோட தலையில ஏறி உட்காரு.”
“ வால பிடிக்கிறவ எவன்?”
“ நான்தே”
“ வால இன்னும் இழுத்துப்பிடி. முதுகு பக்கமா இழு. நல்லா”
“ சொக்கா, வயித்தில ஏறி உட்காரு…”
“ ஒருத்தன் சட்டிய எடு”
“ கத்த விடாதீங்கடா”
“ அறுக்கலாமா?”
“இம், அறுண்ணே..”
ரெங்கன் தலையில் சொருகியிருந்த கத்தியை எடுத்தார். அதற்கொரு முத்தம் கொடுத்தார். கன்றுக்குட்டி சாய்ந்துக்கிடந்த வாக்கில் கத்தியை மேலிருந்து கீழ் நோக்கி நுழைத்தார். அவருடைய கை மேலும் கீழுமாக ஊர்ந்தது.
‘ விழுக், விழுக்…’ என்றது அறுப்பு. இரத்தம் ‘ விசுக்…’என பீச்சிட்டது.
“….ம்…மா..”’
“ வாயல கால வச்சி மிதி”
“ எவன்டா வயித்தில குந்திருக்கிறவ. இது என்ன மகராச கட்டிலினு நினைச்சியாக்கும். முட்டார் எலும்ப ஒரு கையால பிடிச்சிக்கிட்டு கழுத்தில கிடக்கிற கயித்தப்பிடிச்சி இழு. நல்லா இழு. அப்படிதே.”
“ எலே, சொக்கா. ரெத்தம் சட்டியில வடியுதா கீழே வடியுதானு பார்த்தீயா?”
“ சட்டிலதான்ண்ணே வடியுது”
“ மண் சட்டிடா. பத்திரம்”
“ அதெல்லாம் நா பார்த்துக்கிறேன்ண்ணே”
“ சட்டியில ஒரு பிடி உப்ப போட்டீயா?”
“இம்,போட்டுட்டேன்ண்ணே”
“வெவரமாதான் இருக்கே”
ரெங்கன் மொத்தப் பலத்தையும் கொடுத்து கன்றுக்குட்டியின் கழுத்தை அறுத்தார். அறுப்பு ‘விழுக், விழுக்…’ என்றது. கன்றுக்குட்டியின் தலை, கால்கள் உதறல் எடுத்தன. வயிறு ஏறி இறங்கியது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. நாசியிலிருந்து சளி ஒழுகிற்று. காதுகள் அடித்துகொண்டன. மலப்புழை வழி்யே ஒரு கூடை சாணம் கொட்டிற்று. இரத்தமும் சுவாசக் காற்றும் கலந்து இரத்தம் ஒழுகிற்று.
தலை கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டித்துக்கொண்டு வந்தது. திரண்ட முழிகள் டார்ச்
விளக்கில் பிரகாசித்தன. கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர் வடிந்து ஒழுகியது. உயிர் தொண்டைக்கும் நெஞ்சிற்குமிடையே துடித்துகொண்டிருந்தது. முழிகளை அகல விரித்து, சுற்றி நின்றவர்களை ஒரு பார்வை பார்த்தது. கருவிழி இமைகளுக்குள் சொறுக தொடுக்கிக்கொண்டிருந்த மிச்ச உயிரும் அறுந்துபோனது.
ரெங்கன் கையிலிருந்த கத்தியை வாங்கினார் சுடலை. உயிர் அறுந்து நரம்பு அறுகாத கழுத்தை வேகமாக அறுத்தார். கொம்பைப் பிடித்துகொண்டிருந்த வெள்ளையன் அதைப் பிடித்துத் தூக்கினார். ஒரு பழைய வேட்டிகொண்டு மூடினார்.
“ இருபது கிலோ தேறுமாண்ணே” – முத்தன்.
“ தேறும். அது வயித்தில வச்சிருக்கிற அஞ்சுகிலோ சாணியச் சேர்த்தா தேறும்..” – ரெங்கன்.
“ எலே முத்தா. நீ முன்னே பின்னே மாடு கீடு அறுத்திருக்கீயா இல்லயாடா?“ – கடம்பன்.
“ இருபது கிலோ தேறாட்டியும் பதினைஞ்சுக்குக் குறையாதீண்ணே”- சுடலை
ரெங்கன் அத்தனை பேரையும் ஒரு பார்வை ஏற இறங்கப் பார்த்துவிட்டு கேட்டார். “என்ன விலக் கொடுத்து வாங்கினீங்க?”
“தட்டைக்குக் கேட்டேன்ண்ணே. மசிய மாட்டேனுட்டான். தாளுக்கு கேட்டு, வேற வழியில்லாம சவடுக்கு தானே சம்மதித்தான். மசியிற விலைதானே?” ரெங்கனிடம் கேட்டார் சுடலை.
“ காலு, கரும்பு, குடல்கள வெட்டிக்கொத்தி தண்ணீயில போட்டு எடுத்தா இருபது தேறும்…”
கன்றுக்குட்டி தலையை அறுத்த களைப்பில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கண்கள் கன்றுக்குட்டியின் திரண்ட தசைகளைப் பார்த்துகொண்டிருந்தன. ஒருவர் கால்சட்டை பாக்கெட்டிற்குள் கையை விட்டு தாஜ்மஹால் பொட்டலத்தை எடுத்து விரித்தார். அதற்குள் கையை நுழைந்து ஆளுக்கொரு குதப்பு எடுத்தார்கள். கடாப்பற்களுக்கிடையில் குதப்பினார்கள். கத்தியை எடுத்துத் தோலினை உரிக்கத் தொடங்கினார்கள்.
“ எலே கவுடு மொளஞ்சப்பயல்களா. தோலுக்கு வில பேசியாச்சு. தோல்ல ஓட்ட விழமா உரிங்கடா டேய்”
“தோலப்பத்தி உங்களுக்கென்ணெண்ணே கவல. எலும்பு, மண்ட, குடலு, கால்கள வெட்டி குமிச்சி பங்கு வச்சா ஆளுக்கு மூணு கிலோ தேறுமா. அதைமட்டும் பாருண்ணே…”
“ தேறும், தடியை எடுத்துக்கிட்டு எவன்டாவன் இங்கே மாடு வெட்டுறது. மாடு வெட்டாதீங்க. மாட்டுக்கறி திங்காதீங்கனு சொல்லியும் நீங்க திங்கிறீங்களா. உங்கள நான் என்ன பண்றேன் பாருனு நாளு சாத்துச் சாத்தி விரட்டி அடிக்காம இருந்தாத் தேறும்.”
“ இந்தத் தடவ எவனும் வரப்போறதில்லண்ணே…”
“ போன தடவ அப்டித்தான் சொன்னே. கடைசியில என்ன நடந்துச்சு. நம்ம நாக்குல கொள்ளிதான் விழுந்துச்சு.”
“ அப்ப இப்டி ரகசியமவா அறுத்தோம். ஊரே தண்டோரா போட்டுக்கிட்டுல அறுத்தோம். இப்ப என்ன அப்டியா?”
“ நம்மளச்சுத்தி நாய்ப்படைக இருக்கே. அதுக்கு நாம பாக்கா வச்சோம். அதுக எப்படியாக்கும்
வந்துச்சாம்.” ரெங்கன் அப்படிக் கேட்டதும் மொத்தப்பேரும் ‘கொல்’லெனச் சிரித்தார்கள்.
சுடலை சொன்னார். “யாரு வருவா. வரட்டும். நான் பேசுறே. எங்கேடா வந்தீங்க ராஸ்கோல்களானு விரட்டி அடிக்கிறே.”
“ ஆமாண்ணே. போனமுற மாதிரி இந்த முற ஏமாந்திரக்கூடாது. நாங்க வளர்த்த மாடு. நாங்க வெட்டி ஆக்கித்திங்றோம். உங்களுக்கு என்னனு கேட்கணும்?”
“ போன முற மாதிரி இந்த முற கறிகள அள்ளி வீசினாலும் மண்ண வெட்டி கறிகள மண்ணுக்குள்ளே புதைச்சாலும் அதை தோண்டி எடுத்து வெட்டிக் கொத்தணும். என்னென்ன சொல்றே”
“ அடிச்சாலும் உதைச்சாலும் நாம கறிதான் கதியென வெட்டிக்கொத்தணும்” பேசிக்கொண்டே ஒருத்தர் கழுத்து வழியே கையை நுழைத்துத் தோலை உரித்தார். இன்னொருத்தர் கால் குளம்புகளை வெட்டித் தொலை அறுத்தெடுத்தார்.தொடையை நீள்வாக்கில் வகுந்துகொண்டிருந்த ரெங்கன் ஒரு கணம் கத்தியை நிறுத்திச் சொன்னார் ‘ பேச்சுவாக்கில மறந்திடாதீங்கடா. தலைக்கறி உயிரக்கொன்ற எனக்கு. தெரியும் தானே?”
“ ஏன்ண்ணே, இப்டி எங்க வயித்தில அடிக்கீறே?”
“ நீங்க என் வாயில அடிச்சிறாதீங்கடா?”
“ ஆளுக்கு மூணு கிலோ கறிய பங்கு வச்சிக் கொடுத்திட்டு நீ மண்டய எடுத்துக்கிட்டு போண்ணே”
“ அப்டி வா வழிக்கு” என்றவர் அரிவாளைக் குறுத்தெலும்பில் பாய்ச்சினார். ரெண்டாக வகுந்தார். முதுகுப்பகுதியை கவிட்டிக்கிழி கிழித்தார். விலா எலும்புகளைக் கொத்தினார். குடலைக் கிழித்து உயரத்தூக்கி சாணியைக் கீழேக் கொட்டினார். பெருங்குடலை குரங்கு மட்டையில் கிடத்திவிட்டு சிறுகுடலை கயிறு போல உருவினார். மடிந்துக்கிடந்த குடல் ‘சர…சர…’ வென உருவிக்கொண்டு வந்தது. கட்டை மற்றும் ஆட்காட்டி விரலை வளைத்துக்கோர்த்து குடலைப் பீய்ச்சினார். சாணம் தண்ணீர் கொட்டவதைப்போல ‘பொத்..பொத்…’எனக் கொட்டியது. கயிற்றைச் சுற்றுவதைப்போல கைகளில் குடலைச் சுற்றினார்.
குத்துச்சண்டை வீரனின் கையைப் போல குடல் கைகளில் சுற்றிக்கொண்டிருந்தது. மறுபடியும் குடல்களை இழுத்து விரல்களுக்கிடையில் வைத்து இழுத்தார். தண்ணீருக்குள் மூழ்கி எடுத்துக் குடலுக்குள் தண்ணீரை ஊற்றினார். பலூன் பெருப்பதைப்போல குடல் பெருத்தது. விரல்களால் தண்ணீரை வெளியேற்றினார். காற்றுப் போன பலூனைப் போலிருந்தது குடல். அதைச்சுருட்டி ஓரிடத்தில் வைத்தார். பாம்பு நெளிவதைப்போல குடல் நெளிந்தது. தொட்டிக்குள் கிடந்த ஈரல், இதயம், கல்லீரல், நுரையீரல்களை உள்ளங்கையால் அள்ளினார்.
ஒவ்வொருத்தரும் ஆளுக்கொரு மரக்கட்டையை எடுத்து வைத்துகொண்டு ‘வெட், வெட்.’ என்று வெட்டினார்கள். ஒருவர் அரிவாளால் அரிந்தார். இன்னொருத்தர் கத்தியால் குத்திக்கிழித்தார். இன்னொருத்தர் வகுந்தார். இன்னொருத்தர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ‘சப்…சப்…’பெனக் குவித்தார்.
“ எலேய்,யாராவது ஒருத்தன் போயீ தண்ணீ கொண்டு வாங்கடோய்”
“ நா போறேன்”
“ இதில ஊத்து”
“ இன்னும் கொஞ்சம் ஊத்து”
“ இன்னொரு கொடம் கொண்டு வா”
“ எனக்கும் ஊத்து. எனக்கும்.”
பொழுது மெல்ல விடிந்துகொண்டிருந்தது. பறவைகளின் கீச்சிடுதல் கேட்கத்தொடங்கின. ஆட்காட்டி குருவி பெரிய அளவில் கத்திக்கொண்டிருந்தது.
“ நாம மாடு வெட்டுறது யாருக்கும் தெரியாதுல”
“ தெரியாதுண்ணே”
“ என்னடா சொல்றே. தெரியாதுன்னா ஊருக்குத் தெரியாதுனு சொல்றீயா, ஒனக்குத் தெரியாதுனு சொல்றீயா?”
“ யாருக்கும் தெரியாதுண்ணே”
“ அப்படிச்சொல்லு. வயித்தில புளியக் கரைக்காம”
எலும்புகள் ஒரு குவியலாக இருந்தது. தொடைக்கறி தனி. ஈரல் வகையறாக்கள் வேறு. சிறு ,பெருங்குடல்கள் தனியாக. கொழுப்பு தண்ணீரில் மிதந்தது.
பச்சைக்கறி வாசனை நாசியைத் துளைத்தது. இரத்தமும் கறியும் கலந்த வாடை அடிவயிற்றில் பசியைத் தூண்டியது.
“கிழட்டு மாட்டுக் கறியாத்தின்னு பல்லு செத்துப்போச்சிண்ணே. இப்பதானே மொத மொதலா கன்னுக்குட்டி கறியத் திங்கப்போறே.”
“கன்னுக்குட்டின்னா சாதாக் கன்னுக்குட்டியில்ல. அஞ்சு சுழி போட்டது. ஒத்தப்பல்லு. வளர்க்கிறதுக்குனு வாங்கி வந்து ஆக்கி திங்கப்போறோம்டா.” இதைச் சொல்கையில் சொக்கனுக்கு எச்சில் ஊறியது.
ரெங்கன் முதுகில் வியர்வை சரம், சரமாக ஒழுகிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த முத்தன் தன் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்துத் துடைத்துவிட்டார். வெள்ளையன் கறியை அள்ளித் தண்ணீருக்குள் அமிழ்த்துக் கீற்றில் குவித்தார்.
“ ஈ மொய்க்காத கறிடா. விடியுறதுக்குள்ள வீடு போய்ச் சேர்த்துப் புடணும்.”
“ ஏலேய் சுடல, ஓ பொஞ்சாதி கைப்பக்குவத்துக்கு பெயர் போனவ. அவ வைக்கிற குழம்புல ஒரு கிண்ணி எனக்குக் கொடுத்துவிடு”
“ ஏன்ண்ணே,ஓ பொஞ்சாதி சந்தேகப்பட்டு ஏ பொம்மனாட்டிய சண்டப்பிடிக்கவா”
“ அவக்கிடக்கிறா. இவ்ளோ கறிய வெட்டிக்கொத்திச் சீர்ப்பண்ணி கூட்டிக்கொழம்பு வையீனு சொன்னா அவ வைக்கவா போறா”
“ என்னண்ணே சொல்றே!”
உப்புவடுக போடுறேன்பா. அவ அப்பனுக்கு, அவ தங்கச்சிக்குனு பங்கு வச்சிக்கொடுத்துவிடுவா. வகுந்து கொத்தி வீடு சேர்க்கிற எனக்கு நாலு துண்டுதான் கிடைக்கும். அதுவும் ரசமா ”
“அட விடுண்ணே. மத்தியானம் எனக்கொரு போத்தல வாங்கிட்டு வாரிப்பக்கம் வந்திருண்ணே. நான் ஆக்கினத்தில பாதிய அள்ளிக்கிட்டு வந்திடுதேன்.”
“ எலேய், வேம்பா. நம்ம சோமு பெரியப்பா இருக்குல்ல. அவரு சொல்லிக்கிட்டே இருந்தாருடா. மனுசன் திரி முந்தியா எண்ணெய் முந்தியானு கெடக்காரு. சாகப்போகிற மனுசன் கவிச்சிய மோர்ந்துப்பார்த்திட்டு சாகட்டும். அவருக்கு நாலு துண்ட கண்ணுல காட்டுடா.”
“ அண்ணே, அந்தக் கிழவாடிய நான் கவனிச்சிக்கிறேன்.”
அவர்களின் வாய் பேசிக்கொண்டே கைகள் சிதறிக்கிடந்தக் கறிகளைப் பொறுக்கி எடுத்து வெட்டிக் கறியோடு கறியாகச் சேர்த்தன. எல்லாக்கறியையும் வெட்டிக்கொத்தி குவித்தாகி விட்டது.
அவரவர் எழுந்து கால் கைகளை உதறிக்கொண்டார்கள். தலையைச் சுற்றி நெட்டிப் பறித்துகொண்டார்கள். “சுடலெ, நீ போயி வீடு தவறாம காதில வாய வச்சி கறியாயிருச்சினு சொல்லி மிளகா, மல்லிய அரைச்சி கூட்டி கரைக்கச் சொல்லு.”
“ சரிண்ணே”
“வரும்போது எல்லா வீட்லயும் ஒரு ஏத்திரம் வாங்கிக்கிட்டு வா. நேக்கா போவணும்…நேக்கா வரணும்.”
சட்டென ஓட்டமெடுத்தார் சுடலை. ஓடிய கால்கள் சட்டென நின்றன. கறி பக்கமாகத் திரும்பினார். “ ஏத்திரம் எவ்ளோ பெரிசுண்ணே”
“பத்தாளு கறினு சொல்லு பொம்பளயளுக்குத் தெரியும்.”
சுடலை ஓடத் தொடங்கினார். அவர் திரும்பி வருகையில் பொழுது பளிச்சென விடிந்துபோயிருந்தது. அவருடைய தலையில் ஒன்றுக்குள் ஒன்றெனப் பாத்திரங்கள் இருந்தன. இரண்டு கைகளிலும் தூக்கு வாளிகள். அண்டா, குண்டா, சட்டிகள்…
சுடலை தூரத்தில் வந்துகொண்டிருந்தார். வரும்பொழுதே அவருடைய வாய் கூச்சநாச்சம் போட்டது. “ வெள்ளையா, ஓ பொஞ்சாதி கறில பாதிய அவ பொறந்த வீட்டுக்குக் கொடுத்து விடட்டுமானு கேட்டாடா.”
“ சொக்கா, ஓ வீட்டுக்கு மாமனும் அத்தெயும் விருந்தாளி வந்திருக்காக”
“ரெங்கண்ணே, ஓ பொஞ்சாதி உப்பு மிளகா இல்லேன்னு சொல்லச் சொன்னாப்பா.”
ஒவ்வொரு பெயராக விளித்துச் சேதி சொல்லிக்கொண்டு வந்தார் சுடலை. கறிக்கொட்டலை நெருங்கியதும் அவருடைய பேச்சு சட்டென நின்றது. கூடவே அவருடைய நடையும் நின்றது. உடம்பு ‘பக்’கென வியர்த்து. அவருடைய நாசிகள் துடித்தன. கண்களில் விரக்தி அனல். ஏமாற்றக் கிரக்கம்.
கறித்தட்டியில் வெட்டிக்கொத்தி வைத்திருந்த அவ்வளவு கறியும் நாலாபுறமும் கொட்டிக்கிடந்தன. மண்டை ஒரு புதருக்குள்ளாகக்கிடந்தது. குடல் நான்கைந்து நாய்கள் இழுத்துச் சென்றிருந்தன. அத்தனை பேருக்கும் அடி, உதை விழுந்திருந்தது. ஆனால் யாரும் எழுந்து ஓடுபவராக இல்லை. மண்டையில் இரத்தம் வடிய முதுகு வீங்கிப்போய் தாவாங்கொட்டையில் கைகளைக் கொடுத்து சோகமாக உட்கார்ந்திருந்தார்கள்.
சுடலை சுற்றுமுற்றும் பார்த்தார். ஏழட்டுப்பேர் தடிகளோடு புதருக்குள்
சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்கொட்டாமல் வெறித்துப்பார்த்தார் சுடலை. அவர்களை விரட்டி பிடிக்கணும் போலிருந்தது அவருக்கு.
“ ராஸ்கோல்களா, என்னத்துகடா அவன்கள உள்ளே விட்டீங்க. அவன்கள விரட்டி அடிக்க ஒருத்தனுக்கும் துப்பு இல்லையா”’
யாரும் பதில் சொல்வதாக இல்லை. கால் கைகளை உதறிக்கொண்டு எழுந்தார்கள். சிதறிக்கிடந்த கறிகளைப் பொறுக்கித் தண்ணீரில் அலசித் திரும்பவும் வெட்டிக்கொத்தினார்கள். ‘கொன்ற பாவம் தின்னாதான் போச்சு. கொத்துங்கடா”
இருபது கிலோ கறி பத்துக் கிலோ அளவிற்குக் குறைந்து போயிருந்தது. கறி மண்ணும் சகதியுமாக இருந்தது. அலச அலச கறியில் மண் துகள்கள் இருந்துகொண்டிருந்தன.
கறியை அறிந்து ஒன்று சேர்த்துப் பங்கு வைத்தார்கள். பிரித்தார்கள். சட்டியில் அள்ளினார்கள். இது போதும், எனத் திரும்புகையில் அதே கும்பல் திரும்பவும் வந்திருந்தார்கள். பாத்திரங்களை அடித்து நொறுக்கினார்கள். பாத்திரங்கள் கறியோடு பறந்தன. கறிகள் நாலாபுறமும் சிதறி தெறித்தன. காக்கைகளும் நாய்களும் ஆலவட்டமடித்தன. ஒன்றின் மீது ஒன்று ஏறி விழுந்து கட்டிப்புரண்டு சண்டையிட்டன.
அவர்கள் யாரும் அந்த இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. உட்கார்ந்தவர்கள் உட்கார்ந்தப் படியும் நின்றவர்கள் நின்றபடியும் இருந்தார்கள். இத்தனை நாட்கள் மாடுகளை அடித்து இழுத்துவந்த மாட்டடிகள் அவர்களின் மேல் விழுந்திருந்தன. இன்னும் அடி வாங்குமளவிற்கு அவர்களிடம் வலு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அடித்துத் துவைக்குமளவிற்கு அடித்தவர்களிடம் பலமில்லை. “இனி வெட்டுவீங்களாடா. வெட்டுங்கடா பார்க்கலாம்” என்றவாறு பாத்திரங்களை எட்டி உதைத்தவாறு சென்றார்கள்.
இவர்களால் மாட்டுக்கறி திங்காமல் கூட இருந்துவிட முடியும். ஆனால் மாடு வெட்டாமல் இருக்க முடியாது. எத்தனை மாடுகள் வெட்டிய கை. எத்தனை ஆண்டுகள் கறிகளைக் கொத்திக் குவித்தக்கை. மாடு வெட்டுவதை வைத்தே அவர்களின் பெயரில் அடைமொழி விழுந்திருந்தது. தலைக்கறி ரெங்கன், கத்தித் தீட்டி சுடலை, இரத்தம் பிடிக்கி சொக்கன் இப்படி…
இந்த முறை கத்தி சுடலைமுத்து கைக்கு வந்திருந்தது. அவர் கைலியை மேலே தூக்கிவிட்டுக்கொண்டு பிட்டத்தைக் குதிக்காலுக்கு கொடுத்து கறியை ‘வெட்,வெட்’ என வெட்டிக்கொத்தி பிரித்துகொண்டிருந்தார். அவர் வெட்டிய வெட்டில் கறியோடு எலும்புகள் முறிந்து நாலாபுறமும் தெறித்தன .
அதே கும்பல் இந்த முறையும் கறி வெட்டும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவர்களை அடிக்கவோ, துவைக்கவோ, உதைக்கவோ, கறிகளை அள்ளி விட்டெறியவோ இல்லை. அதைவிடவும் முக்கிய வேலை அவர்களுக்கு இருந்தது. கூட வந்திருந்த ஒருவன் சடுதியில் தொலைந்து விட்டிருந்தான். அவனைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.