சிறுபிள்ளை வேளாண்மை போல் ஆகிவிட்டதா?….. நியூசிலாந்து சிற்சபேசன்.
கடந்த நான்கு தசாப்தங்களில் “புலம்பெயர்ந்ததமிழர்” என்னும் சொற்பதம் கணிசமான பாவனைக்கு உரியதாகியிருக்கின்றது. அசாதாரணமான அரசியல் சூழலினால் இலங்கையிலிருந்து வெளியேறிய தமிழர்களே இவ்வாறு பெரும்பாலும் அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர்வு இயல்பாக உருவாகியதல்ல. நிர்பந்தம் காரணமாக உருவாகியதாகும்.
ஆரம்பங்களில், புதியபுலங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பதிலேயே புலம்பெயர்ந்தோர் கவனத்தைக் கொண்டிருந்தனர். மறுவளத்தில், அசாதாரணமான அரசியல் மற்றும் யுத்தச் சூழ்நிலைகளைத் தாயகத்திலிருந்தோர் எதிர்கொண்டனர். சொல்லொணச் சங்கடங்களுக்கு முகங்கொடுத்தனர். அதனால், இரண்டு தரப்பினரிடையேயும் படிப்படியான புரிதலை வளர்த்துக்கொள்ளக் கூடிய சூழல் இருக்கவில்லை. அதுபற்றிச் சிந்திக்கக்கூட யாருக்குமே நேரமிருக்கவில்லை. அந்தவகையிலேயே, காலப்போக்கில் இரண்டுதரப்பினருமே அந்நியப்பட்டனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் நேரடியான ஊடாட்டங்கள் ஆரம்பமாகின. ஆனால், அதற்குமுன்னரே இரண்டுதரப்பினருமே வெவ்வேறு துருவநிலைக்குப் போய்விட்டனர். தத்தமது நிலையிலிருந்தே, மற்றவர் தொடர்பான கணிப்பீடுகளை வளர்த்துக்கொண்டனர். வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெறுவதில்லை. இரண்டுதரப்புமே, மற்றவர் தொடர்பில் யதார்த்தமான அபிப்பிராயங்களை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால், அப்பளம்போல் நொறுங்கிவிடக் கூடிய உறவுநிலையையே காணமுடிகின்றது. ஆகக்குறைந்தது, இவை தொடர்பிலான பிரக்ஞைகூட இருப்பதாகக் கருதமுடியவில்லை.
ஒரு தொகுதி புலம்பெயர்ந்தோர், தாயகத்துடனான உணர்வுபூர்வத் தொடர்புகளை இழந்துவிட்டனர். மற்றையோர், உயிரோட்டமான தொடர்பாடல்களை இழுத்துப்பிடித்துக் கொண்டுள்ளனர். இவர்கள், தாயகம் தொடர்பில் மிதமிஞ்சிய கவனத்தைக் கொண்டிருக்கின்றனர். அதனை ஒருவகையான தீவிரப்போக்கு என்றுகூடச் சொல்லலாம்.
அத்தகையோரின் சிந்தனை, கவனம், செயல் என விழித்திருக்கும் நேரத்தின் கணிசமான பகுதி தாயகம் நோக்கியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்க்கை, அவர்கள் வாழும் சமூகத்தில் சகதமிழ் பேசுவோருடனான கலப்பு என்பவற்றுக்கு அப்பால் முழுமையான கவனத்தை தாயகம் நோக்கியே கொண்டிருக்கின்றனர். அதனால், தாயகம் தொடர்பில் மிதமிஞ்சிய அல்லது இயல்புக்கு மாறான பற்றுதலை வளர்த்துக் கொள்கின்றனர். பாசம் தான் வினைகளுக்கு காரணம் என்கிறது சைவசித்தாந்தம். ஆக, மிதமிஞ்சிய பற்றுதலே, தாயகத்தில் வாழ்கின்றவர்களை முகம்சுளிக்க வைக்கக்கூடிய வகையில், புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகள் அமைவதற்கு காரணமாக இருக்கலாமோ என்றும் கேள்வி எழுகின்றது.
புலம்பெயர்ந்தோருடைய கணிசமான சமூகச் செயற்பாடுகள், தாயகத்தின் மேம்பாடு என்னும் கருப்பொருளை மையப்படுத்தியதாகவே அமைகின்றன. தங்களுடைய ஊர், தங்களுடைய பாடசாலை, தங்களுடைய கோவில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வு என்ற வட்டத்திலேயே பெரும்பாலானவர்களின் எண்ணமும், செயலும் சுழல்கின்றன.
புலம்பெயர்ந்தோரின் சமூக ஊடாட்டங்களிலுமே மேற்சொன்ன விடயங்களிலேயே அதிககவனம் குவிகின்றது. பாடசாலை நண்பர்கள், ஒன்றாக கல்வி கற்றவர்கள், ஊரவர்கள் என ஒன்றுகூடுகின்ற வேளைகளிலெல்லாம் தாயகத்தின் மேம்பாடு என்பதே தூக்கலான பேசுபொருளாகின்றது.
புலம்பெயர்ந்தோர், தம்முடைய ஊர்களிலே தாயக மேம்பாட்டுக்கு என நிதிசேகரிக்கும் நோக்கில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வாறான நிகழ்வுகளின் டிக்கெட்டுக்களைக் கண்டு விலகிப்போவோரின் எண்ணிக்கை ஊதிப்பெருக்கின்றமையையும் கவனிக்க முடிகின்றது. அதற்காக, அவ்வாறு விலகுவோர் தாயகமேம்பாட்டில் அக்கறை கொள்ளவில்லை என்பதல்ல. மாறாக, “அளவுக்கு மிஞ்சிய அமுதமும் நஞ்சு” என்று கொள்ளலாம். தாயகம்நோக்கிய நிதிசேகரிப்பு முயற்சி “விரலுக்கு மிஞ்சிய வீக்கம்” ஆகிவிட்டதோ என்ற எண்ணம் “புலம்பெயர்ந்த” சூழலில் ஏற்படுவதைக் கவனிக்கமுடிகின்றது.
புலம்பெயர்ந்தோரின் தாயகம் நோக்கிய கரிசனை, அவரவர் வாழ்கின்ற ஊர்களுடன் நின்றுவிடுவதில்லை. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் பரிணமித்துள்ள சோஷல்மீடியா யுகத்தில், ஊடாட்டங்கள் தேசஎல்லைகளைக் கணப்பொழுதில் கடக்கின்றன. “தாயகத்துக்கு ஏதாவது செய்யவில்லை” எனில் வாழ்ந்து பயனில்லை என்ற தொனியில் அதிதீவிர மனப்பாங்கையும் சிலர் வளர்த்துக்கொண்டு உலாவுகின்றனர். வாட்ஸ்அப், வைபர், பேஃஸ்புக் என எங்கும் எதிலும் குழுக்கள் அமைக்கின்றனர். அதிலே, தாயக மேம்பாடு பற்றியே கதைக்கின்றார்கள். ஜூம் வழியாகக் கூடுகின்றனர். அங்கேயும் தாயக மேம்பாடு பற்றியே பேசுகின்றனர். பேசுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. தர்க்கிக்கின்றனர். அதனால் கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. கருத்து வேறுபாடுகளை, கருத்து வேறுபாடாக கடந்து செல்லத் திணறுகின்றனர். அதனால் உறவுகள் உடைகின்றன.
ஆக, தாயகம் நோக்கிய அதிதீவிர கவனத்தினால், புலம்பெயர்ந்ததமிழர் இரண்டு நேரடி எதிர்விளைவுகளைச் சந்திக்கின்றனர்.
ஒன்று, தாயகத்து விடயங்களில் அதீதமான உரிமை எடுத்துக்கொள்கின்றனர். தன்னிச்சையாக செயற்படுகின்றனர். அதனால், தாயகத்தில் முகச்சுளிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.
மற்றையது, தமது கையருகே உள்ள விடயங்களைக் கைதவறவிடுகின்றனர். அடுத்த தலைமுறைக்கான, உயிரோட்டமான பாண்பாட்டு அத்திவாரமொன்றை, காத்திரமானதாக புலம்பெயர்ந்தசூழலில் அமைப்பதில் முழுமையான கவனம் இல்லை. பண்பாட்டைக் கடத்துவது என்பது வேட்டி
சேலை அணிவது, தமிழ் மற்றும் கலைகளைக் கற்றல் என்னும் குறுகிய புரிதலும் அதற்குக் காரணமாகும்.
நிற்க, புலம்பெயர்ந்தோரிடையே அதீதமான தாயகப்பார்வை கொண்டோர் ஓய்வுக்காலத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். அதனால், தாயகத்துக்கு கிடைக்கக்கூடிய பொருளாதார அனுகூலங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் வற்றிவிடலாம். தாயகத்துக்கு வருவோரின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையலாம்.
காற்றுள்ளபோதே நெல்லைத் தூற்றிக்கொள்ளவேண்டும் என அறுவடையின்போது சொல்வார்கள். கடந்த ஈரேழு ஆண்டுகளில் புலம்பெயர்ந்த மற்றும் தாயகத்தமிழரின் கூட்டுமுயற்சி பரிணமித்திருக்கவேண்டும். ஒருவருடைய கையைப்பற்றிக்கொண்டு அடுத்தவர் வளர்ச்சிப்படிக்கட்டுகளில் ஏறியிருக்கவேண்டும். இரண்டு கைகளும் தட்டும்போதல்லவா ஓசை ஏற்படுகின்றது. இரண்டு தரப்பிடையே பரஸ்பர புரிதல் வளர்க்கப்படவில்லை. விட்டுக்கொடுப்புக்கள் இருப்பதில்லை. முயலுக்கு மூன்றுகால் என்பதை நிறுவுவதிலேயே பிராயத்தனம் செலவாகின்றது. அதனால், புலம்பெயர்ந்த மற்றும் தாயகத் தமிழரின் கூட்டுமுயற்சி சிறுபிள்ளை வேளாண்மை போல் ஆகிவிட்டது.
சமகாலத்தில் இதுபோன்ற ஆக்கங்கள்தான் சமூக ஊடகங்களில் தேவைப்படுகிறது.
இதனை எழுதிய அன்பர் சிற்சபேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.
முருகபூபதி
Many thanks sabes
Hopefully they will realise important of unity sincerity honesty 🤝