ஒடிசா இந்துக் கோயில்கள்! … நொயல் நடேசன்.
இந்தியாவின் கிழக்குக் கரையோர மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவைப்பற்றி பற்றிப் பலகாலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கலிங்கம் என்ற பெயர் கொண்டு , மகதப் பேரரசை எதிர்த்து நின்றது மட்டுமன்றி, இந்திய மதங்கள் , வாணிபம், நடனம் இசை என்பனவற்றைக் கிழக்காசியாவுக்கு கடத்துவதற்குக் கண்மாயாக இருந்த இடமும் அது.
இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் ஒரு முக்கோணத்தில் அமைந்திருப்பதாக அறிந்தேன். இந்து, புத்தம், ஜைன ஆகிய மதங்களில் முக்கிய இடங்கள் உள்ள இந்த மாநிலத்தின் பெரும் பகுதியில் ஆதிவாசிகள் வசிப்பதாகத் தெரிந்து கொண்டேன். அவைகளையெல்லாம் அறிந்து கொள்ளச் சென்றதன் பலனாக நான் பார்த்த இந்து கோவில்களைப் பற்றி மட்டுமே இந்தச் சிறிய கட்டுரையில் குறிப்பிட முயல்கிறேன். நான் உருஸ்சியாவுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள காட்சிகள் எப்படிக் கமராவில் அடக்க முடியாதவை எனப் புரிந்து கொண்டேனோ, அதேபோல ஒரிசாவில் பார்த்தவைகளையும் முழுவதுமாக எழுத்தில் குறிப்பிடவும் முடியாதவை என்பதை உணர்கிறேன். அங்கு இலங்கையிலுள்ள சிங்கள மொழியில் உள்ள சொற்களுக்குச் சமமான சொற்கள் பல பேசப்படுவதை ஒடிசாவில் என்னால் கேட்க முடிந்தது.
64 யோகினிகள் கோயில்
ஒடிசா மாநிலத்தின் தலை நகரான, புவனேஸ்வரில் இருந்து 15 கிலோமீட்டர் துரத்தில் கூரையற்ற, வட்டவடிவமான ஒரு கட்டிடத்தின் உள்ளே 64 பெண் தெய்வங்களின் சிலைகள் உள்ளன. நடுவே 9 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சக்தி கோயில் உள்ளது . ஆரம்பத்தில் சாக்கிய தாந்திரீகத்துக்குரியதாக இருந்த அந்தக் கோயில் இப்பொழுது சக்தியின் கோயிலாக உள்ளது . அந்த 64 யோகினிகளது உருவங்கள் பலவற்றிற்குத் தலை, கை, கால் என்பன உடைத்திருந்தன.
சியாமளா உள்ளே வணங்கிக்கொண்டிருந்தபோது நான் அந்தச் சிலைகளின் உடைப்பு எப்படி நடந்திருக்கும் என்று என மனத்தை நோண்டிக்கொண்டிருந்தேன். அப்போது, வேட்டி உடுத்து மஞ்சள் சால்வை போர்த்திய உயரமான ஒருவர் என்னருகில் வந்து எனது வலது கையை பிடித்து, என் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டவர்போல, “எல்லாம் முஸ்லீம்கள்தான் உடைத்தார்கள்” என்று கூறினார். விக்கிப்பீடியாவிலும் முஸ்லிமாக மாறிய ஒரு சேனாதிபதி உடைத்ததாகவே உள்ளது.
சக்தி என்பதைவிடச் சிற்பங்களை ஆராதிக்கும் எனக்கு உடனே ஆத்திரம் வந்தது. சியாமளாவோடு வாகனத்தில் ஏறியதும் ‘அரசர்கள் சிற்பங்கள் கட்டிடங்களை உடைப்பது வழக்கம் தானே? அக்காலத்தில் கோயில்கள் மட்டும்தான் பெரிய கட்டிடங்களாக இருந்திருக்கின்றன. சாதாரண மக்கள் குடிசைகளில்தான் வாழ்வார்கள். வேண்டுமென்றால் குடிசைகளுக்குத் தீ வைக்க முடியும். மக்கள் அவற்றை மீண்டும் கட்டி வாழ்வார்கள் என நினைத்தபோது என் மனதில் பதற்றம் குறைந்தது.
பின்னர் ஒருதடவை என்னைவிட இந்த விடயங்களை அறிந்த ஒருவரிடம் இதுபற்றிக் கேட்டபோது “முஸ்லீம் அரசர்கள், சேனாதிபதிகள் பல கோயில்களை உடைத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்தக்கோவில் அவர்களால் உடைக்கப்படவில்லை . இந்த சிற்பங்கள் மென் கற்களால் செய்யப்பட்டவை. இவை காலத்தின் சக்கரத்தில் அவையாகவே உடைவது வழக்கம்” என்றார்.
பெரும்பாலான கோயில்களின் அத்திவாரங்களின் மேல் மசூதிகளைக் கட்டினார்கள் என்றும் அவர் கூறினார். அவ்வாறு, அந்தக்காலத்தில் இஸ்லாமிய அரசர்கள் செய்த விடயம் இப்பொழுது அரசியலுக்குப் பயன்படுகிறது.
டெல்லியில் உள்ள குதுப் மினாரில் இறை வடிவங்கள் சுரண்டப்பட்டும், கலசங்கள் மற்றும் கும்பங்கள் சுரண்டப்படாதும் இருப்பதைப் பார்த்தேன் .
மாணவனாக இருந்த காலத்தில் பொலநறுவைக்கு சென்றபோது, ஒரு சிங்களவர் அங்கு உடைக்கப்பட்டிருந்த புத்த சின்னங்கள், அரண்மனைகளைப் பார்த்து தமிழர்களைத் திட்டியதைக் கேட்டபோது எனது மனம் சங்கடப்பட்டது.
இராஜராஜசோழன், பராக்கிரம பாண்டியன், கலிங்கமேகன் என்ற அரசர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் படை எடுத்து வந்தவர்கள். இவர்களில் யார் அந்த அழிவுக்குப் பொறுப்பு? இதேபோல் மாமல்லபுரத்தில் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தனால் உடைக்கப்பட்ட சிற்பங்களும் உள்ளன.
சாத்திய தாந்திரியத்துக்கு உரியவையாக இருந்த இந்த 64 யோகினிகள் கோயில் இப்பொழுது இந்து மதத்தின் மத்திய நீரோட்டத்திற்குள் வந்துள்ளது.
சாதாரணமான மக்களை அரச இயந்திரத்தின் கீழ் ஆள நினைக்கும்போது மதமும் அரசியலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். அவை அந்தக் காலத்திலிருந்து இன்று வரை முடிவற்ற ஒரு விடயமாகவே தொடர்கிறது.
லிங்கராஜா கோயில்
என் வாழ்நாளில் இதுவரை நான் பார்த்த கோயில்களில் பிடித்தது எது எனக்கேட்டால், புவனேஸ்வரில் உருளை வடிவத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலான “லிங்கராஜா கோயில்” என்று கொஞ்சமும் தயங்காமல் சொல்வேன். கலிங்கச் சிற்பக்கலையின் மகோன்னதமான வடிவமாக அது உள்ளது.
தென் இந்திய, வட இந்தியச் சிற்பக் கலைகளைக்( Nagara style of Northern India and the Dravida style of South India) கலந்த கூட்டமைப்பான அவர்களது புதிய கலிங்கச் சிற்பக்கலை வடிவத்தில் அமைந்த கோயில் அது. இந்த கோயில் சிவனுக்குரியது. 1000 வருடங்கள் பழமையானது. சோமவம்சி என்ற அரசின் காலத்தில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்திலுள்ள லிங்கம், சுயம்பு லிங்கம் என்கிறார்கள்.
கோயிலின் உள்ளே படமெடுக்க முடியாது. இந்து அல்லாதவர்கள் உள்ளே செல்லமுடியாது. வெளியே வந்து ஒரு மேடையில் நின்றே முழுவதையும் பார்க்கவேண்டும் .
எங்களை உள்ளே அழைத்துச் செல்வதற்கு ஒரு பிராமணரை ஒழுங்கு பண்ணியிருந்தோம் . சியாமளா உள்ளே சென்று பார்த்தபோது துணையாக நானும் உள்ளே சென்றேன். அந்த வழிகாட்டியிடம் கோயிலின் சிற்பக்கலையைப் பற்றிக் கேட்டபோது அவர் அங்கிருக்கும் சிவனின் மகிமையைச் சொல்ல முயன்றார். அவருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, “நான் வெளியில் நின்று பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். கோவிலைப்பற்றி அறிவதற்காக நான் கேட்டசில கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த கோயிலில் ஐந்துவேளைக்கு மேல் போய் வருபவராக இருந்தாலும், வண்டிச் சக்கரத்தின் சக்கரத்தின் பல்லி போன்றவர் அந்த பிராமணர். அவருக்குக் கோவிலின் கட்டுமானம் பற்றிய எந்த அறிவுமில்லை.
அவரின் செயல் எனக்குப் புறநானூற்றுப்பாடல் ஒன்றை நினைவூட்டியது.
கலம்செய் கோவே! கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே! (புறநானூறு 256)
இதன் பொருள் : மண்பாண்டங்கள் செய்யும் குயவனே, வண்டியின் அச்சுடன் பொருந்திய ஆரக்காலைப் பற்றிக்கொண்டிருக்கும் பல்லி அதனுடன் சுழன்று நெடுந்தூரம் செல்வதைப்போல, இறந்துவிட்ட, என் கணவனுடன் சேர்ந்தே இதுவரை பல வழிகளையும் கடந்து வந்தேன். (இப்போது அவன் இறந்துவிட்டான்) அவனுக்குச் செய்யும் ஈமத்தாழியில் நானும் இருக்க இடம் ஒதுக்கிச் சற்று அகலமாகச் செய்வாயா?
கோயிலுக்கு வெளியே வந்த நான் அரைமணி நேரம் சுற்றினேன். அங்கு இருந்த கட்டிட அமைப்பு எனக்கு மிகுந்த அதிசயத்தைக் கொடுத்தது. அங்குள்ள ஒவ்வொரு வளைவையும், அங்குள்ள சிற்பங்களையும் பல மணிநேரம் நின்று பார்த்துக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அந்த அழகிய கோவில், பிற்காலத்தில் வைஷ்ணவ சமயம் செல்வாக்கு அகடைந்துவிட்டதால் புறக்கணிக்கப்பட்டதாக அறிந்தேன்
பூரி ஜகநாத் ஆலயம்
ஆதிசங்கராச்சாரியாரால் இந்தியாவின் நான்கு திசைகளில் திருமாலின் நான்கு ஆலயங்கள் முக்கியமானவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. கிழக்கு திசையில் பிரகடனப்பட்பட்டதே பூரி ஜகநாத் ஆலயம். ஏற்கனவே ராமேஸ்வரம் துவாரகா இரண்டிற்கும் போயிருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது பத்திரிநாத்தும் செல்லும் எண்ணம் இருக்கிறது.
ஜகநாத் கோயில் செல்வதற்கு அதிகாலையில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டும் அத்துடன் உள்ளே செல்பவர்கள் மிகவும் வேகமாக உட்புகுவார்கள். நான் அங்கு போன நாளுக்குச் சில நாட்கள் முன்பாக பலர் நிலத்தில் விழுந்து மயங்கிவிட்டார்கள் என்று அறிந்தேன். எல்லோரும் வைகுண்டம் செல்லும் ஆசையில் உள்ளே பாய்ந்து விழுந்து செல்லும்போது, என் மனதில் செயற்கை இடுப்போடு சியாமளாவை பாதுகாப்பது எப்படி என்ற எண்ணமே மேலோங்கியது.
எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் திடகாத்திரமான வீமனைப் போன்ற உடல் கொண்டவர். சியாமளா பல்லியாக அவரது முதுகில் ஒதுங்கியபோது, நான் பின்னால் முழங்கைகளை விரித்தபடி மாணவப் பருவத்தில் எம்ஜீஆரின் படத்திற்கு முதல் நாள் கலரிக்கு செல்வதுபோல் சென்றேன். ஓரிரு இடத்தில் பிதுங்கி நெளிந்தபோதும், இறுதியாக, நமது வீமனின் உதவியுடன் எந்தவித பாதிப்புமில்லாமல் உள்ளே நுழைய முடிந்தது.
ஜெகநாத் கோயிலைப் பற்றி சில விடயங்கள் என் மனதில் பதிந்தன. இங்கு கிருஷ்ணரது தங்கையான சுபத்திராவுக்கும் பலராமனுக்கும் கோயில்கள் உள்ளன .
ஒவ்வொரு வருடமும் தேர்த் திருவிழாவிற்குப் புதிதுபுதிதாகத் தேர் செய்யப்படும். நாங்கள் ஒரு கிராமத்தினூடாக சென்றபோது அலங்கரிக்கப்பட்ட சக்கரத்தைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்டபோது, அது ஜகநாதரது தேர் சக்கரம் என்றும், தேர்த்திருவிழாவின் பின் அந்த சக்கரத்தை ஏலம் விடுவார்கள் என்றும் கூறினார்கள், ஊரில் பெரியவர்கள் அதை ஏலம் எடுப்பார்களாம்.
அத்துடன் விக்கிரகங்களும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வேப்ப மரத்தினால் புதிதாகச் செய்யப்படுமாம். கோவிலுக்காகப் பிரத்தியேகமான காடும், இப்படியான வேலைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் அறிந்தேன். வெவ்வேறு காலங்களில் கோயிலின் கட்டிடங்கள் கட்டப்பட்டபோதும், பத்தாம் நூற்றாண்டில் எழுந்த கட்டிடங்களே பெரும்பான்மையானவையாகும்.
கொனாரக் சூரியக் கோயில்
இந்திய 10 ரூபாய்த் தாளில் கொனாரக் சூரியக் கோயில் அச்சிடப்பட்டுள்ளது. சூரிய தேவனுக்காக 1250 ல் நரசிம்மதேவ அரசரால் தேர் போன்ற அமைப்பில், 24 சக்கரங்களும், 7 குதிரைகளும் கொண்ட அற்புதமான கல்லோவியம் பல நூற்றாண்டு காலமாக மண்மூடி மறைந்து கிடக்கிறது.
ஆரம்பத்தில் வங்கக் கடல் ஓரத்திலிருந்த சூரியக்கோயில், பின்னர், கடல் பின்வாங்கியதனால், இப்போது கடலிலிருந்து சில சில கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. கடலோடிகள் இதைக் கறுப்பு பகோடா எனப் பேசி வந்தார்கள்.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பிகளும் வேலைக்காரர்களுமாகப் 12 ஆயிரம் பேர், சேர்ந்து இதைக் கட்டி முடிக்க 12 வருடங்கள் சென்றதாக அறியக்கிடக்கிறது.
கலிங்கத்தின் உன்னதமான கட்டிடக்கலையாகிய இந்த கொனாரக் சூரியக் கோயில் அழிந்துகொண்டிருந்த நிலையில் தற்பொழுது மீள் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. இந்தியாவில், முகலாயர்களது அரசுக்குப் பின்பாக வந்த ஆங்கிலேய கொலனி ஆட்சியைப் பாராட்டவேண்டி ஒரு விடயம், அவர்களே இந்தியாவின் புராதன கட்டிடக்கலைகளைப் பல இடங்களில் அழிவு நிலையிலிருந்து மீட்டெடுத்தார்கள்.
கொனாரக் சூரியக் கோயில் அழிந்த நிலைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றிலொன்று, அது முழுவதும் கட்டி முடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதாகும்
பூரியில் உள்ள ஓர் உணவுவிடுதியில் எமது காலை உணவிற்குப் பின்பாக நாம் கொனாரக் சூரியனது கோயிலுக்குச் சென்றபோது அங்கு எமக்காக எமது வழிகாட்டி காத்திருந்தார். ஆனால் அப்போது எனக்குத் திடீரெனத் தலையைச் சுற்றியபடி வாந்தி வரும்போல இருந்தது. இந்த முறை ஒடிசாவுக்குப் போன முக்கிய நோக்கமே கொனாரக் சூரியக் கோயிலைப் பார்க்க வேண்டும் என்பதே. அதனால்
எனது நிலையைப் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடர்ந்தோம். வழிகாட்டி சூரியக் கோயிலின் வரலாற்றைச் சொல்லியபடியிருந்தார். சற்று நேரத்தில் என்னால் முடியாமல் போகவே, அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வாந்தியெடுத்தேன். வழக்கமாக உணவு விடயத்தில் பிரச்சனை இல்லாத சியாமளாவும் வாந்தியெடுத்தார். அப்படியிருந்தும் அரை மணிநேரம் சுற்றிப்பார்த்தோம்.
அதன்பிறகு, காரில் ஏறியபின் போகும் வழியில் மீண்டும் வாந்தி எடுத்தேன். அன்று சுற்றுலாவை மேலும் தொடரமுடியாது என்ற நிலையில், வழிகாட்டிக்கு பணம் கொடுத்தபோது, அவரோ “நீங்கள் நாளைக்கும் வாருங்கள். நான் பணம் இல்லாமல், இன்னும் சில இடங்களை உங்களுக்குச் சுற்றிக் காட்டுகிறேன்” என்று சொன்னார்.
வழிநெடுக, அன்று காலைச் சாப்பாட்டையும் அதில் சேர்ந்திருந்த கடுகு எண்ணெய்யையும் திட்டியபடி மீண்டும் விடுதிக்கு வந்துவிட்டோம். நமது அவஸ்தைக்கு யாரையாவது குற்றம் சுமத்தவேண்டுமே!
அடுத்த நாள், காலை உணவு அருந்தாது, அதிகாலையிலேயே கொனாரக் கோயிலைப் பார்க்கச் சென்றோம். வழிகாட்டியும் வந்தார் இம்முறை பல மணி நேரம் நின்று பார்க்கக்கூடியதாக உடலும் மனமும் ஒத்துழைத்தன.
இந்தக் கோவிலில் கடவுள்கள், தேவர்கள், கின்னரர்களும், மட்டுமல்லாமல், புவியில் உள்ள சகல விடயங்களும் சிற்பமாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. விவசாயம், சண்டை, காமசூத்திரத்தில் உள்ளபடியான மனித உடலுறவுகள், மிருகங்களது இனப்பெருக்கம், காடு, தாவரங்கள், புவியின் காலநிலை மாற்றங்கள் என்றிப்படி, நமக்குப் புரிந்தவையும், புரியாதவையுமாகப் பல விடயங்கள் அங்கே சிற்பங்களாக உள்ளன.
சூரியன் கடலினுள் இருந்து, பன்னிரண்டு சோடிச் சக்கரங்கள் கொண்ட இரதத்தில் ஏழு குதிரைகளில் வருவதைப்போல ஓர் இரத அமைப்பு ஆரம்பத்தில் அங்கே உருவாக்கப்பட்டு இருந்திருக்கிறது. கோயிலுக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த இரதத்தின் பன்னிரண்டு சோடிச் சங்கரங்களும், பன்னிரண்டு மாதங்களைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கோயில் இப்பொழுது அழிந்துவிட்டது.
இவ்வாறு, 24 சக்கரங்கள் உள்ள இந்த கோயிலில், கிழக்கையும் மேற்கிலும் அமைந்துள்ள சக்கரங்கள் கடிகாரங்களாகத் தொழிற்படுகின்றன. கடிகாரத்தின் பிரிவுகளாக அச்சிலிருந்து பெரியதும் சிறியதுமாக வரும் சட்டங்களும், ஆரக்கால்களும், நேரத்தைப் பிரிக்கின்றன. அவற்றின் இடையே நிமிடங்களைக் குறிக்கும் சிறிய மேடுகளும் உள்ளன. ஆனால் நேரத்தை எதிர்த் திசையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
“தாஜ்மகால் மட்டும், இந்தியா அல்ல” என்ற இந்திய உல்லாசத்துறையின் வார்த்தைகள் விளம்பரத்துக்கான வார்த்தைகள் மட்டும் அல்ல. கொனாரக் சூரிய கோயில் என்பது, கல்லில் வரையப்பட்ட ஓவியம் என்பதிலும் பார்க்க ஓர் இதிகாசம் என்றே சொல்லலாம். இப்படி நான் சொல்லவில்லை. “இங்கே இந்தக் கல்லின் மொழி மனித மொழியைவிட மேலோங்கி நிற்கிறது” என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூரே சொல்லியிருக்கிறார்.
(“Here the language of stone surpasses the language of human” — Rabindranath Tagore)
தாகூரின் வார்த்தையை விடவா என்னால் எழுதிடமுடியும்?