கட்டுரைகள்

மோல்டோவா மேலான ரஷ்ய அச்சுறுத்தல் ? பிரியும் திரான்ஸ்னிஸ்ட்ரியா ரஷ்யாவுடன் இணைவு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

மோல்டோவாவின் மேற்கு எல்லைகளில் ரஷ்யா தனது இராணுவ துருப்புக்களை நீண்ட காலமாக நிறுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1,500 இராணுவ வீரர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர். அவர்களை திரும்ப பெறவேண்டும் என மோல்டோவா வலியுறுத்தியுள்ளது. அதையடுத்து அங்கு கடந்த ஒருவாரமாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
உக்ரேனுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பணியை ரஷ்யா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் தற்போது உக்ரேனுக்கு அருகே உள்ள சிறிய ஐரோப்பிய நாடானா மோல்டோவா (Moldova) சிக்கிக் கொண்டுள்ளது என மேற்கத்தய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுடன் இணையும் திரான்ஸ்னிஸ்ட்ரியா :
மோல்டோவா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதுடன்,  மோல்டோவா நீண்ட காலமாக ஐரோப்பிய குடும்பத்தில் உறுதியான உறுப்பினராக வேண்டும் என்று முனைந்து வருகிறது.  இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உச்சிமாநாட்டின் முடிவு மோல்டோவாவின் காதுகளுக்கு இனித்த இசையாக வந்தது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இறுதியாக மோல்டோவா குடியரசிற்கு வேட்பாளர் அந்தஸ்தை வழங்கியது.
ஆனால் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முடிவில் அதிருப்தி அடைந்த மோல்டோவாவின் பிரிந்த பிராந்தியம், தற்போது பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ளது. திரான்ஸ்னிஸ்ட்ரியா   (Transnistria) இப்போது ரஷ்யாவுடன் இணைவதாக அறிவித்துள்ளது. திரான்ஸ்னிஸ்ட்ரியாவின் இறையாண்மை பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலைமைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் மோல்டோவாவிற்கு அதன் அங்கத்துவத்தை வழங்க முன்வந்துள்ளது.
நீண்ட காலமாக ரஷ்ய சார்பு பிராந்தியமாக இருந்து வரும் திரான்ஸ்னிஸ்ட்ரியா  , இப்போது மோல்டோவாவுக்கு ஐரோப்பிய அந்தஸ்து வழங்குவதால் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான பதட்டங்களை மேலும் அதிகரிக்கும். மோல்டோவாவின் முக்கிய குறிக்கோள் திரான்ஸ்னிஸ்ட்ரியா   பிராந்தியத்தை மீண்டும் ஒரு நாட்டிற்குள் ஒருங்கிணைப்பதாகும்.
ரஷ்யாவின் பூரண ஆதரவு;
திரான்ஸ்னிஸ்ட்ரியாவின் இந்த முடிவு ரஷ்யாவால் முழு மனதுடன் வரவேற்கப்பட்டுள்ளது. ரஷ்ய கூட்டமைப்பின் மாநில அவை, அங்கீகரிக்கப்படாத திரான்ஸ்னிஸ்ட்ரியா ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறுவதற்கான விருப்பத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவில் சேரவிரும்பிய முன்மொழிவு தொலைதூர எதிர்காலம் பற்றியதும், எதிர்காலத்தில் ஒரு வழிகாட்டும் திசையாகும். எங்களுக்கு நெருக்கமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் அங்கு வசிப்பதால், இந்த திட்டத்தை நாங்கள் தீவிரமாக ஆதரிப்போம் என்று மாநில அவை உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.
வெளிப்படையாக, ரஷ்யா திரான்ஸ்னிஸ்ட்ரியா   பிராந்தியத்தை திறந்த கரங்களுடன் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்தில் மற்றொரு இறுக்கமான அறையாக கூட இருக்கலாம்.
திரான்ஸ்னிஸ்ட்ரியா வரலாறு:
திரான்ஸ்னிஸ்ட்ரியா டினீஸ்டர் ஆற்றின் கிழக்குக் கரைக்கும் உக்ரேனுடனான மோல்டோவாவின் எல்லைக்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பாகும். இதில் சுமார் 500,000 இன ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் வசிக்கின்றனர்.
திரான்ஸ்னிஸ்ட்ரியா 1992ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, புதிதாக சுதந்திரம் பெற்ற மோல்டோவா குடியரசு மற்றும் சோவியத் உறவுகளை பராமரிக்க விரும்பும் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. திரான்ஸ்னிஸ்ட்ரிய பிராந்தியத்தில் எப்போதும் 1500 ரஷ்ய அமைதி காக்கும் துருப்புக்கள் நிலை கொண்டுள்ளன.
திரான்ஸ்னிஸ்ட்ரியாவில் இருந்து உக்ரேன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா இந்த துருப்புக்களை பயன்படுத்தக்கூடும் அல்லது குறைந்தபட்சம் உக்ரேனில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க இப்பிராந்தியத்தை பின்தளமாக ரஷ்யா வைத்துள்ளது என்று கீவ்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ரஷ்யா அச்சுறுத்தல் :
சிக்கலான இந்த பிரச்சனைகளின் பின்னர் மோல்டோவா நாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பிரான்ஸ் வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளார். மோல்டோவாவுக்கு அசைக்க முடியாத ஆரதவு வழங்க பிரான்ஸ் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த வாரம் மோல்டோவா நாட்டின் ஜனாதிபதி மய்யா சாந்து (Maia Sandu ) பிரான்ஸ் வருகை தந்திருந்தார். இரு தலைவர்களும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்கள்.
அச்சுறுத்தல் விடுக்கும் ரஷ்யாவை எதிர்க்க மோல்டோவா நாட்டுக்கு ஆதரவு வழங்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அதே வேளை
மோல்டோவின் மேற்கு எல்லைகளில் ரஷ்யா தனது இராணுவ துருப்புக்களை நிறுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 1,500 இராணுவ வீரர்கள் அங்கு நிலைகொண்டுள்ளனர். அவர்களை திரும்ப பெறவேண்டும் என மோல்டோவா வலியுறுத்தியுள்ளது. அதையடுத்து அங்கு கடந்த ஒருவாரமாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சோவியத் ஆக்கிரமிப்பில் மோல்டோவா:
மோல்டோவா குடியரசு (Republica Moldova) கிழக்கு ஐரோப்பாவில் நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. 1812இல் இது ரஷ்சியப் பேரரசுடன் இணைக்கப்பட்டு, ரஷ்சியாவின் வீழ்ச்சியின் பின்னர் 1918இல் ருமேனியாவுடன் இணைக்கப்பட்டது.
ஆயினும் 1940 இல் சோவியத் ஆக்கிரமிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றின் பின்னர் இந்நாடு சோவியத் ஒன்றியத்தின் கீழ் மோல்டோவா சோவியத் சோசலிசக் குடியரசு ஆகியது. பனிப்போர் முடிவில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது ஆகஸ்ட் 27, 1991 இல் இந்நாடு முழுமையாக விடுதலை பெற்றது.
மோல்டோவா ஒரு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். நாட்டின் தலைவராக சனாதிபதியும் அரசுத் தலைவராக தலைமை அமைச்சரும் உள்ளனர்.
மோல்டோவாக்கு ஐரோப்பிய ஒன்றிய அந்தஸ்து?
உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று 2022 டிசம்பரில் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக தற்போது அங்கீகரிக்கப்படவுள்ளன.
நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தநிலையில் உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியம், உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே நேரடியாக இராணுவ உதவி செய்ய முடியும். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.
இந்த நிலையில், அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மோல்டோவா நாட்டுக்கும் வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படுகிறது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.