கட்டுரைகள்

“சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்” …. 39…. சட்டத்தரணி, பாடும்மீன். சு.ஸ்ரீகந்தராசா.

இது என் கதையல்ல,

என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”

சட்டத்தரணியாகச் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னரும், எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுடன் தொடர்ந்து சிலகாலம் தொழில் ரீதியாக, அவரின் இளைய சட்டத்தரணியாக (ஜூனியராக) பணியாற்ற விரும்பியிருந்தேன். அவரும் விருப்பத்துடன் சம்மதித்திருந்தார். ஆனால், அது முடியாமல் போயிற்று,

என்ற விடயத்துடன் கடந்த அத்தியாயத்தை நிறைவு செய்திருந்தேன்.

அரசியல் செல்நெறி பற்றிய தொலை நோக்குப் பார்வை இல்லாத சில இயக்கங்களினாலும், சமூக நலங்களில் அக்கறையில்லாத காடையர் கூட்டத்தினாலும் 1985 ஆம் ஆண்டு கல்முனை – காரை தீவுப் பிரதேசங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறை தூண்டிவிடப்பட்டது. அந்த வன்முறையின் விளைவுகளாக இரண்டு சமூகங்களினதும் பொருளாதாரத்தில் பேரிழப்புகள் ஏற்பட்டன. அன்றாட வாழ்வு நிம்மதியற்றதாயிற்று. அவற்றில் ஒன்றாக, எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், தான் நேசித்த தனது சொந்த மண்ணை விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஊரெங்கும் கலவரம் தொடர்ந்தது. முஸ்லிம் மக்கள் தமிழ்ப் பகுதிகளுக்கோ, தமிழ்ப் பகுதிகளைக் கடந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கோ பயணம் செய்யப் பயந்தார்கள். கல்முனைப் பகுதி முஸ்லிம்கள் வழமையான பிரதான வீதியூடாக மட்டக்களப்பிற்குச் செல்ல முடியாது. தமிழ் மக்கள் காத்தான்குடியூடாக மட்டக்களப்பிற்குப் போக்குவரத்துச் செய்ய முடியாது. அதற்காக, களுவாஞ்சிகுடியூடாக பட்டிருப்புப் பாலம் கடந்து படுவான்கரைப் பகுதியூடாக மட்டக்களப்பு நகரை அடைய வேண்டியிருந்தது.

களுவாஞ்சிகுடியிலிருந்து படுவான்கரையூடாக மட்டக்களப்பிற்குத் தனியாரின் சிற்றுந்துகள் (மினி வேன்) போய்வரத் தொடங்கின. ஒருநாள் கல்முனையிலிருந்து களுவாஞ்சிகுடியூடாகப் படுவான்கரை வழியில் செல்வதற்குக் கல்முனையிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு வண்டியில், புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய ஜீ.குமாரலிங்கம் அவர்கள் கல்முனையிலிருந்து, மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் செல்வதற்காக வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் எனக்கு இருக்க இடம் கிடைத்ததால், சில நிமிடங்களிலேயே அவருடன் அறிமுகமாகி உரையாடக் கிடைத்தது.

சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு முன்னரான பயிற்சிவகுப்பு கொழும்பில் நடந்துகொண்டிருக்கையில், என்னை முதன்முதலில் அப்பாவாக்கிய, எனது மூத்த மகன் பிறந்தான். எனக்கு இன்பமான இந்தச் செய்தியை, எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களிடம் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் என்னை வாழ்த்தினார். உடனே மனைவியையும் மகனையும் பார்க்கவேண்டும் என்ற எனது ஆசையை நான் அவரிடம் சொல்லி, அன்றிரவே ஊருக்குப் போகிறேன் என்று கூறியதும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவரது சம்மதம் எனக்கு அவசியமல்ல என்றாலும், மனித வாழ்க்கையின் உள்ளத்து உணர்வுகளின் உந்தலால் ஏற்படக்கூடிய விளைவுகளின் தாக்கத்தை இரண்டு நிமிடங்களில் அவர் எனக்கு உணர்த்தினார். “நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கும் வரையில் இருக்கும் உங்கள் மனோ நிலைக்கும், பார்த்துவிட்டால் ஏற்படக்கூடிய மனோ நிலைக்கும் இடையில் நிறைய மாற்றங்கள் வருவதற்குச் சாத்தியம் உள்ளது. அங்கே சென்று பார்த்துவிட்டு உடனே வரமுடியாமல் போகலாம். இங்கு திரும்பி வந்ததும் மீண்டும் போகவேண்டி

வரலாம். அதனால் உங்கள் பயிற்சிக் கால வரவு வீதம் குறைவடைந்துபோனால், இம்முறை சத்தியப்பிரமாணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

குழந்தையைப் பார்க்காமலே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பது எளிதானது. பார்த்துவிட்டால் கட்டுப்படுத்துவது கடினமானது. எதற்கும் ஒருமுறை யோசியுங்கள்” என்றார்.

எனது மனதில் கவலையோ ஏமாற்றமோ எனக்கு ஏற்படாத வகையில், ஒரு சகோதர உணர்வுடன் அவர் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்து, ஊருக்கு உடனடியாகச் செல்லும் தீர்மானத்தைச் செயற்படாததாக்கின. “இதென்ன பெரிய விடயம்? அவர் போகவேண்டாம் என்றார். இவர் சரியென்று போகாமல் விட்டார், இதற்கேன் இவ்வளவு விவரணம் ” என்று இதை வாசிப்பவர்களில் சிலர் நினைக்கலாம்.

அந்தக்காலத்தில் கொழும்பு – மட்டக்களப்புப் பயணத்தில் எதிர் நோக்க வேண்டியிருந்த அச்சமான, அல்லோலகல்லோலமான, சேருமிடத்தைச் சென்றடைவதில் நிச்சயமில்லாத போக்குவரத்து நிலைமையையும், திருமணமாகி, முதல் குழந்தைக்குத் தந்தையாகி அந்தக் குழந்தையைப் பார்க்கத்துடிக்கும் ஒருவனின் மனநிலையையும், வாழ்க்கையில் இலட்சியங்களில் ஒன்றை அடைவதற்கான இன்றியமையாத செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அது திருப்திகரமாக நிறைவேறும் தருணத்தில் ஒருவருக்கு எழக்கூடிய உள்ளத்து உணர்வுகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் மட்டுமே அன்றைய எனது சிந்தையின் குழப்பத்தை உணரமுடியும்.

அப்படியே கொழும்பில் நின்று, எல்லா அலுவல்களையும் திருப்திகரமாக நிறவேற்றியபின்னர் ஊருக்குச் சென்று, மகன் பிறந்து இருபது நாட்களுக்குப் பிறகு முதன்முதலாக அவனைக் கண்டேன். களிகொண்டேன்.

நான் உயர்நீதிமன்றச் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுத்த வைபவத்திற்கு, எனது மதிப்பிற்குரியவராகவும், என்னில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் இருந்த எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள், வாஞ்சையோடும், வாழ்த்து மடலோடும் வந்திருந்தார். அன்று அவர் மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அதற்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது. அவரது வாழ்க்கையில், அவரிடம், தொழிற்பயிற்சி பெற்ற முதலாவது அணியினரின் சத்தியப்பிரமாண வைபவம் நடந்த நாள் அது! நானும் எனது நண்பர்கள் மூவரும் அந்த அணியில் இருந்த இளவல்கள்.

அந்த வைபவத்தன்று, அதனை மகிழ்ந்து கொண்டாடவும், என்னை வாழ்த்தவும் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு, எனது நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். அவர்களில் மன்மதன், ஜெயந்தன், நாகேந்திரன், குகராசா, வேணு, நிர்மலா- ராஜா (தம்பதி), நித்தி, சரோஜினி மற்றும் சிலரை அடக்கிய புகைப்படம் ஒன்றேயொன்று என்னிடம் உள்ளது. யாரோ ஒரு புண்ணியவான் எடுத்துத்தந்த படம் இது. செல்லிடத் தொலைபேசியோ, கையடக்கப் புகைப்படக்கருவியோ இல்லாத காலம் அல்லவா அது!

நான் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துபின்னர் ஊருக்கு வந்தபோது, களுவாஞ்சிகுடி சைவமகாசபையின் சார்பில் எனக்கு ஒரு பாராட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள். மூன்றாம், ஆறாம் வகுப்புகளில் எனது வகுப்பாசிரியராகவும், தமிழாசிரியராகவும், பத்தாம் வகுப்பில், சைவசமயபாட ஆசிரியராகவும் அறிவூட்டிய பண்டிதர் வி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்த வைபவத்தில், அவரே எழுதிய வாழ்த்துப் பத்திரத்தை எனக்கு வாசித்து அளித்தபோது நான் அழுதுவிட்டேன். இந்தச் சைவமகாசபையின் தலைவராக பண்டிதர் வி.விசுவலிங்கம் அவர்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,

பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களும் பணியிருக்கிறார் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது. சைவமகா சபையின் ஆரம்பகாலத்திலிருந்து அதன் செயற்பாடுகளிலும், அதன் வளர்ச்சியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் அமரர் கோ. பாக்கியராசா அவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

களுவாஞ்சிகுடி சைவமகாசபை, கிழக்குமாகாணத்தில் மிகநீண்டகாலமாகச் சைவமும் தமிழும் தழைத்தோங்க இன்றுவரை பணியாற்றிவரும் ஓர் அமைப்பாகும். அதனால் நடத்தப்பட்ட எழுத்துப்போட்டி, பேச்சுப் போட்டி முதலிய போட்டிகளில் பல தடவைகள் முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். சைவமகாசபையின் ஞாயிறு அற நெறிப் பாடசாலையில் ஆசிரியராகவும், சபையின் செயற்குழு உறுப்பினராகவும், செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறேன். இந்தத் தொடரில், சைவமகாசபையினைப் பற்றிய விடயங்கள் தனியொரு அத்தியாயமாக இடம்பெறவுள்ளன.

தனது சட்டத்தரணி தொழிலைக் கொழும்பில் தொடர்வதற்கு ஆரம்பித்திருந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், கொழும்பிலேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார். முதன்முதலில் அவர் வசிக்கத் தொடங்கிய வாடகை வீட்டைப் பார்வையிடுவதற்கு என்னையும் அழைத்துச் சென்றார்.

என்னையும் கொழும்பிற்கு வரும்படியும், தன்னுடன் தொழில் செய்யும்படியும் அழைத்தார். ஆனால், சொந்த ஊரில் இருக்கவேண்டும் என்ற எனது தணியாத விருப்பத்தால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொழும்பில் வசிப்பது தானாக விரும்பி அவர் எடுத்த தீர்மானம் அல்ல, தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தால் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், கொழும்பு வாசம் அவரது தொழிலை விஸ்தரிப்பதற்கும், இலங்கை அரசியலில் தவிர்க்கப்படமுடியாத, தனித்துவமான அரசியல் தலைவராக உயர்வதற்குமான அகலமான பாதையை அவருக்கு வகுத்துக் கொடுத்தது என்று கூறலாம்.

ஜீ.குமாரலிங்கம் அவர்கள் என்னைக் கல்முனைக்கு வரும்படியும், தன்னுடன் பணியாற்றும்படியும் அழைத்தார். அதனை ஏற்றுக்கொண்டு கல்முனையில் அவரது ஜூனியராகப் பணியாற்றத் தொடங்கிய எனக்குச் சில மாதங்களில், மட்டக்களப்பு நீதிமன்றங்களில் தனியாகப் பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், குறிப்பாகப் பட்டிருப்புத் தொகுதியில் ஏற்கனவே பிரபல்யமாக இருந்த நான் சட்டத்தரணியானதும், சட்ட உதவிக்காகப் பல ஊர்களில் இருந்தும் மக்கள் என்னைத் தேடிவரத் தொடங்கினார்கள். அவர்களது சட்டப் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மட்டக்களப்பு நீதிமன்றங்களையே நாட வேண்டியிருந்ததால் அந்தத் தேவைப்பாடு ஏற்பட்டது. பின்னர் அதுவே வழமையாயிற்று. ஆயினும் மட்டுநகரை எனது வசிப்பிடமாக நான் ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை. எனது பிறப்பிடமான களுவாஞ்சிகுடியிலேயே எனது அலுவலகம் இருந்தது. அங்கிருந்தே தினமும் மட்டக்களப்பிற்குச் சென்றுவந்து கொண்டிருந்தேன். தனியாகவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளான திரு ஜீ. குமாரலிங்கம் அவர்களுடனும், திரு. க. தங்கவடிவேல் அவர்களுடனும் சேர்ந்து கல்முனை, மற்றும் அம்பாறை நீதிமன்றங்களிலும் வழக்குகளில் அடிக்கடி முன்னிலையாகிவந்தேன்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.