கட்டுரைகள்
ரஷ்யா தோல்வியடைய பிரான்ஸ் திடசங்கற்பம்! ஜனாதிபதி மேக்ரான் தரைப்படையை அனுப்புவாரா! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
உக்ரேனிய போரில், ரஷ்யா தோற்றே ஆக வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அண்மையில் சூளுரைத்துள்ளார். கடந்த 2022 பெப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் இன்னமும் தொடர்கிறது.
ரஷ்யா தோல்வியடைய உறுதி:
இரு வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.
உக்ரைனிடம் போதுமான அளவு இராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷ்ய இராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.
மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷ்யாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் இராணுவ அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பெப்ரவரியில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மேக்ரான் ரஷ்யா தோல்வியடைய பிரான்ஸ் திடசங்கற்பம் பூண்டுள்ளது என
தெரிவித்ததார். இப்போரில் ரஷ்யா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷ்யா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.
நேட்டோ படையை அனுப்ப எதிர்ப்பு:
ஆயினும் மேக்ரானின் தரைப்படை அனுப்பும் திட்டத்தை மற்றய நேட்டோ நாடுகள் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. மேற்கத்திய நாடுகள் நேரடியாக போரில் தலையிடுவதன் மூலம் சிவப்புக் கோட்டைத் தாண்டக்கூடாது என்று ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேக்ரானின் கருத்துக்கள் பயனளிப்பவையாக இல்லை என்றும், உக்ரைனுக்கு வீரர்களை அனுப்புவது தைரியமா அல்லது கோழைத்தனமா என்பதைக் குறித்து விவாதிக்க அவசியமில்லை என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதற்காக உக்ரைன் சென்றால், அவர்கள் அணு ஆயுதப் போரை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய மக்களுடன் போர் அல்ல:
ரஷ்யா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷ்ய மக்களுடன் அல்ல.
குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.
உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் இராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம். இவ்வாறு மேக்ரான் கூறினார்.
சில தினங்களுக்கு முன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேரடியாக மேற்கத்திய நாடுகளின் இராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷ்யாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கோழைகளாக இருக்க வேண்டாம்!
ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி அண்மையில் நேட்டோ நாடுகளை கோழைகளாக இருக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.
உக்ரைனின் நட்பு நாடுகள் போரில் உக்ரைனுக்கு உதவவேண்டுமென அழைப்பு விடுத்த மேக்ரான், மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் உக்ரைனுக்கு ஆதரவாக போரிடுவதற்காக உக்ரைன் செல்வதற்கு தனது ஆதரவையும் உறுதி செய்துள்ளார். மேலும் ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள ரஷ்யர்களின் சொத்துக்களைக் கொண்டு உக்ரைனுக்கு உதவுவதற்கும் தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் எனவும், ஆனால் ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் வெற்றி வேண்டாம் எனவும், உக்ரைன் தனது நிலையைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் ரஷ்யாவை மொத்தமாக சின்னா பின்னமாக்கிவிட்டு வெற்றி கொள்ளும் திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளிக்காது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவை அதன் மண்ணில் வெற்றிகொள்ள வேண்டும் என சில நாடுகள் குறிப்பிடுவதை தாம் ஏற்கவில்லை எனவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி, உக்ரைனின் கூட்டாளிகள் கோழைகளாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேக்ரானின் இந்த கருத்துக்கு சில நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் விமர்சனம் வைத்துள்ளன.
முனிச் பாதுகாப்பு மாநாடு:
முனிச்சில் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாட்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் பல உக்ரைனுக்கு மேலும் அதிகமாக ஆயுதங்களை வழங்க உறுதி செய்ததுடன், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கொண்டுவரவும் கோரிக்கை வைத்தனர்.