கட்டுரைகள்
மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி உருவாகிய நேபாளத்தில் ஆளும் கூட்டணி பிளவினால் புதிய அரசு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
காத்மாண்டுவில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாளி காங்கிரஸ் கூட்டணி முறிந்ததை அடுத்து, புதிய அரசு பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இடதுசாரி போராட்ட முடிவு :
இமாலயத்தின் உச்சத்தில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் 1996 இல் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டமானது நேபாள மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உருவாக்கும் நோக்குடன் இடதுசாரி மாவோயிசவாத போராளிகளால் நடத்தப்பட்ட போராட்ட எழுச்சி முடிவுற்று கட்சி அரசியல் மூலம் தேர்தல் நடாத்தப்படுகிறது.
நேபாளத்தில் கடந்த 2022இல் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, புஷ்ப குமார் தமல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, ஷே பகதூர் துபே தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்த கூட்டணி நற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பிரதமர் புஷ்ப குமார் தமல் தலைமையிலான புதிய அமைச்சரவையில் சிபிஎன்-யுஎம்எல், ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவை இணைய உள்ளன.
நேபாள நாடாளுமன்றதின் மேலவைத் தலைவர் பதவிக்கு, நேபாளத்தின் இரு பெரும் கட்சிகளான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) மற்றும் நேபாளி காங்கிரஸ் ஆகியவை இடையே போட்டி ஏற்பட்டிருப்பதே ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கூடிய, மாவோயிஸ்ட் மையத்தின் மத்தியக் குழுக் கூட்டத்தில், மேலவைத் தலைவர் பதவிக்கு கட்சியின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நேபாள காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்போது, தங்கள் கட்சி நேபாள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்று புஷ்ப குமார் தமல் ஏற்கனவே வாக்குறுதி அளித்ததாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்படுவதாகவும் நேபாள காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
கூட்டணி பிளவினால் புதிய அரசு ?
இதற்கு பதில் அளித்துள்ள மாவோயிஸ்ட் மையத்தின் செய்தித் தொடர்பாளர் அக்னி பிரசாத் சப்கோடா, நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவிக்கு கட்சி போட்டியிட வேண்டும் என மத்தியக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே வேட்பாளர் நிறுத்தப்பட இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
59 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள மேலவையில் மாவோயிஸ்ட் மையம் 17, நேபாளி காங்கிரஸ் 16, சிபிஎன்-யுஎம்எல் – 19, சிபிஎன்(யுஎஸ்) – 8, ஜனதா சமாஜ்வாதி கட்சி – 3, ராஷ்ட்ரிய ஜனமோர்ச்சா சமாஜ்வாதி கட்சி – 1 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஒரு உறுப்பினரை நேபாள அதிபர் ராம் சந்திர பாதெல் நியமிப்பார்.
நேபாள நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 7ம் தேதி நடைபெறும்.
மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம்:
நேபாளத்தின் கிராமப்புறங்களில் 1996களில் ஆரம்பிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் குறிப்பிட்ட கட்டத்துக்கு முன்னேறியிருந்த நிலையில், மன்னராட்சிக்கு எதிராக நகர்புறங்களில் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டு போராடினர்.
நேபாள மக்கள் இயக்கம்,(People’s Movement) (Jana Andolan) நேபாளத்தின் ஷா வம்ச மன்னர்களின் முடியாட்சி மற்றும் அரசியல் கட்சிகள் சார்பற்ற தேசியப் பஞ்சாயத்து ஆட்சி அமைப்பை அகற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட பல அரசியல் கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சியை நிறுவிட வலியுறுத்தி நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து இடதுசாரி முன்னனி அரசியல் கட்சிகள் இணைந்து நடத்திய மக்கள் போராட்டமாகும்.
இப்போராட்டங்களை நசுக்குவதற்காக, மன்னரின் கைப்பாவையான, தேசியப் பஞ்சாயத்து ஆட்சியினர், அனைத்து அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாவட்டத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. மேலும் அனைத்து ஊடகங்களின் செய்திகளும் தணிக்கை செய்த பிறகே வெளியிடப்பட்டது. செய்தித் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கபப்ட்டது.
ஜனநாயக அமைப்புக்கான போராட்டங்கள் நாடு முழுவதும் கலவரமாக மாறியதால், அனைத்து வணிக, கல்வி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. இறுதியாக நேபாள மன்னர் பிரேந்திரா போராட்டக்கார்களின் கோரிக்கைகளை ஏற்றார்.
இதன்பின்னர் நேபாளி காங்கிரஸ் கட்சியின் நேபாள பிரதம அமைச்சர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னரின் இறுதி முடிவுக்குட்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றபட்டு, பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
மன்னராட்சியை வீழ்த்த போராட்டம் :
மன்னராட்சியை வீழ்த்த “மக்கள் நேபாள குடியரசு” என்ற இலக்கை கொண்டு இடதுசாரி மாவோயிஸ்டுகள் போராடினார்கள். நேபாளத்தின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்த அவர்களை 1998 ஜூன் தொடக்கம் ஆகஸ்டு வரை அப்போதைய பிரதமர் செர் பகதூர் தேவ்பாவினால், போராளிகளை கைப்பற்றி அழிக்கும் நோக்குடன் நடைமுறைப் படுத்தப்பட்ட “கிலோ சேரா 2” என்ற மூர்க்கமான நடவடிக்கை காரணமாக போராளிகள் தலைமறைவாகினர். அதன்பின் போராட்டம் மேலும் வலுக்கவும் வழிவகுத்தது.
அதன்பின் 2001 இல் நேபாள மன்னர் மாவோயிச போராளிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். அது முதல் 12,700க்கும் மேற்பட்டவர்கள் இறந்தும் 100,000 – 150,000 பேர்வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
நீண்ட கால மன்னராட்சி முடிவுற்று, இடதுசாரி மாவோயிஸ்டுகளின் போராட்டம் நிறுத்தப்பட்டு மக்களாட்சியாக ஜனநாயக தேர்தல் நடாத்தப்படுகிறது. ஆயினும் தற்போது காத்மாண்டுவில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, நேபாளி காங்கிரஸ் கூட்டணி முறிந்ததை அடுத்து, புதிய அரசு பதவியேற்க உள்ளது.