அயோத்தி இராமர் கோவில் சொல்லும் செய்தி என்ன? …. நியூசிலாந்து…சிற்சபேசன்.
இந்தியத் துணைக்கண்டத்திலும், பூமிப்பந்தெங்கிலுமுள்ள இந்திய வம்சாவளியினரிடையேயும் “இராமர்” என்பது மந்திரச்சொல்லாகும். அதனுடைய உள்ளார்ந்த கருத்தியல் பிரதேசரீதியாக மாறுபடக்கூடியதாகும். பெருவெட்டில் சொல்வதெனில், விந்தியமலைக்குத் தெற்கே காப்பிய நாயகனாகக் கொண்டாடப்படுகின்ற “இராமர்”, விந்தியமலைக்கு வடக்கே வானுயர்ந்த தெய்வமாகப் போற்றப்படுகின்றான்.
ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள். அதுபோல, “இராமர்” என்னும் சொல்லின் “மந்திரசக்தியைப்” புரிந்துகொள்ள ஒன்றைச் சொல்லலாம்.
அஃது சாமானியர்களின் உள்விறாந்தைகளில் தொலைக்காட்சிப்பெட்டி புகுந்த காலகட்டமாகும். அப்போது, இராமாயணம் தொலைக்காட்சித் தொடராக, இந்தியாவிலே, ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
அஃது ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளில் வர்ணித்துவிடக்கூடியதல்ல.
தொலைக்காட்சிப்பெட்டி தென்பட்ட இடங்களிளெல்லாம், இராமாயணம் பார்க்க மக்கள் கூடினார்கள். “இராமர்” தோன்றுகின்ற காட்சிகளிளெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள்.
அத்தகைய போற்றுதலுக்குரிய இராமபிரானின் பிறப்பிடமே அயோத்தியாகும்.
அஃது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், சாராயு நதிக்கரையில் அமைந்திருக்கின்றது. இராமஜென்மபூமி எனவும் அழைக்கப்படுகின்றது.
அங்கே அமைக்கப்பட்டுள்ள இராமர் கோவிலே, சனவரி 22ல், பூர்வாங்கமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. கோவில் வளாகம் எழுபது ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். அதிலே சுமார் ஏழு ஏக்கர் விஸ்தாரணத்தையும், மூன்று தளங்களையும் கொண்ட கோவில் கட்டிடத்தின் மையப்பகுதியில், சுமார் நான்கு அடி உயரமான இராமபிரானின் உருவச்சிலை நிறுவப்படுகின்றது.
அயோத்தியில் பெருமெடுப்பில் நிர்மாணிக்கப்பட்டு, அரசின் அனுசரணையோடு, தேசமே திரண்டெழுந்து கொண்டாடுகின்ற இராமர் கோவில் மீள்நிர்மாணம் கடந்துவந்த பாதை கரடுமுரடானதாகும்.
இராமஜென்மபூமி சர்சை இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
இஸ்லாமியப் படையெடுப்புக்களால், 16ம் நூற்றாண்டில், இராமர் கோவில் தகர்க்கப்பட்டு மசூதி நிறுவப்பட்டபோது ஆரம்பமாகியது.
1800களின் நடுப்பகுதிகளிலேயே இராமஜென்மபூமியை மீளப்பெறும் முனைப்பு வெளிப்படையாகியது. அதனால், இந்து – இஸ்லாமிய கலகங்கள் ஆரம்பித்தன.
சர்சைக்குரிய பிரதேசத்தை, இந்து மற்றும் இஸ்லாமிய இடங்களாக தனித்தனியாக அடையாளப்படுத்தி, 1857 ஆண்டு அளவிலேயே, அன்றைய பிரித்தானிய காலனித்துவ அரசு எல்லை வகுத்தது.
அந்த ஏற்பாடு, அடுத்த 90 ஆண்டுகளுக்கு சர்சைகளுடனே தொடர்ந்தது எனலாம்.
இந்திய சுதந்திரம் பெற்ற பின்னர் சர்சைகள் உக்கிரமடைந்தன. அந்த இடத்திற்கான உரிமையைக் கோரிய தரப்புக்கள் நீதிமன்றத்தை நாடின.
நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தின் அடிப்படையில், யாருமே உள்நுழைய முடியாத தடையை 1949ல் அரசு விதித்தது.
அதன்பின்னர், நீதிமன்றத்தில் விசாரணைகள் தொடர்ந்தன. வருடங்கள் உருண்டோடின.
இராமர் கோவில் விவகாரத்தில், சங்கப்பரிவார் எனப் பொதுவில் சுட்டக்கூடிய, இந்துஅமைப்புக்கள் ஆரம்பம்முதலே அதீதமான பற்றுதலைக் கொண்டிருந்தன. இந்திய விடுதலையை வேண்டிய காலகட்டத்திலேயே, இந்து அடையாளங்களை சங்கப்பரிவார் முன்னிறுத்தியது. அவற்றினுடைய வழித்தோன்றலே, தற்போதைய, பாரதிய ஜனதாக் கட்சியாகும்.
1984ல் இராமர் கோவில் அமைக்கப்பட வேண்டும் என்னும் எழுச்சி வீறுகொள்ள ஆரம்பித்தது.
1986ல் சர்சைக்குரிய இராமஜென்மபூமி பிரதேசத்தில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கான அனுமதியை மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
1989ல் விஸ்வ ஹிந்து பரிஷத்தினால் இராமர் கோவிலுக்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டது.
அதே காலப்பகுதியில், பாரதிய ஜனதாக் கட்சி சுண்டியிழுக்கும் வளர்ச்சியைத் தேசிய அளவிலே பெறத்தொடங்கியது. இராமர் கோவில் நிர்மாணத்தை முன்னிறுத்தி, அன்றைய தலைவரான, அத்வானி முன்னெடுத்த இரதயாத்திரை பரவலான கவனிப்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்த ஆண்டுகளிலே, “ஹிந்தி பெல்ட்” என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களான மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்றவற்றிலே பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
சங்கப்பரிவார் முன்னெடுத்த இராமர் கோவில் பிரசாரத்துக்கு, உத்தரப்பிரதேசத்தில் அமைந்த கல்யாண் சிங் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசு தோன்றாத்துணையாகியது.
1992 டிசம்பர் 6ம் திகதி சர்சைக்குரிய பிரதேசத்தில் “கரசேவக்” என்று சொல்லப்படுகின்ற இந்துதொண்டர்கள் லட்சக்கணக்கிலே திரண்டபோது உணர்வுகள் கொந்தளித்தன. கல்யாண் சிங் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசும், பிவி நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசும் மோனத்தவத்திலிருந்த வேளையில், சர்சைக்குரிய, பாபர் மசூதி தகர்க்கப்பட்டது.
அதன்பின்னர் வழமையான விசாரணைகள் நடைபெற்றன. வழக்குகள் தொடரப்பட்டன.
2010 செப்டெம்பரில் சர்சைக்குரிய பிரதேசத்தை, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே, சமமாகப் பங்கிட வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத்தீர்ப்பை எதிர்த்து, சம்பந்தப்பட்ட தரப்புக்கள், டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடின.
சுமார் ஏழுவருடங்கள் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன.
உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய “கன்ஸிடுயூஷனல் பென்ச்” அமைக்கப்பட்டது. விசாரணைகளின் முடிவில், சர்சைக்குரிய இடம் இராமர் கோவிலுக்கு உரியது என்னும் தீர்ப்பை, 2019 நவம்பரில், உச்சநீதிமன்றம் வழங்கியது. அதன்மூலமாக, சுமார் ஐநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த சர்ச்சை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்பின்னர், 2020 மார்ச் மாதத்தில் அத்திவாரம் நாட்டப்பட்டது. 2024 சனவரி 22ல் இராமர் கோவில் திறந்து வைக்கப்படுகின்றது.
இந்தியப் பாரம்பரியத்தின் மையக்கோட்பாடு “அறம்” எனச் சொல்லலாம். அறத்திற்கான வரைவிலக்கணமாகவே இராமபிரானின் வாழ்வு சொல்லப்படுவதுண்டு. அத்தகைய இராமபிரானின் வாழ்வு மட்டுமல்ல, பிறப்பிடமும் அறத்திற்கு இலக்கணமாகியிருக்கின்றது.
அந்நிய ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட அயோத்தி இராமர் கோவில் கரடுமுரடான பாதைகளைக் கடந்து வானுயர்ந்திருக்கின்றது. அஃது, அறம் வெல்லும் என்பதையே பாறைசாற்றுகின்றது.