கவிதைகள்
நினைவுகளைத்தவிர யாவும் மாறிக்கொண்டே இருக்கும்.! … கவிதை …. முல்லைஅமுதன்.
வீடு தான் எத்தனை?
அப்புச்சி வீடு.. அம்மம்மா வீடு… பெரியப்பா வீடு. அவனின் வீடு… அவளின் வீடு… குஞ்சாச்சி வீடு… வளவு மாமி வீடு… சிறுகச் சிறுக சேகரித்து அப்பா கட்டிய எங்கள் வீடு, அக்காவிற்குச் சீதனமாகியது. பின்னர்- கடைசி வளவில் அம்மா கட்டிய ஓலைக்குடிசை கறையானுக்கு இரையாக..கல்வீடாக முனைந்து தோற்றுப்போனது. வீடு எனும் கனவு கடைசிவரை கைக்குள் வரவேயில்லை. அகதிவாழ்க்கையே நிரந்தரமானது. நீண்ட மிகநீண்ட கால நீட்சி …எல்லாம் மறந்துபோக.. நினைவிழந்த ஒரு பொழுதில்.. என் பேரன் சொன்னான்… உங்கள் பரம்பரைவீடு அந்த இடத்தில் இல்லையே… தலைமுறைகள் மாற… நினைவுகளைத்தவிர யாவும் மாறிக்கொண்டே இருக்கும். பேரன் என்னைப் பார்த்தான்.. இருவர் மனதுள்ளும் ஏதோ ஒன்று மாறியிருத்தல்வேண்டும்… அல்லது அவசியமாகிவிடுகிறது.முல்லைஅமுதன்