கவிதைகள்

சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்! … கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

ஆடும் அரவும் அழகுடை நிலவும் 
ஓடும் நதியும் உயர்சடை வைத்தான்
காடுடை சுடலைப் பொடியினை எடுத்து
தோடுடை செவியன் சுந்தர மாக்கினான் 
 
அடியா ரழைத்தால் அங்கே நிற்பான்
அன்பே அவனின் அகமா யிருக்கும்
ஆசை யடங்கினால் அருகே அணைவான்
மாசை அகற்றும் மாணிக்கம் ஆவான் 
 
ஆலம் வந்தால் அதையும் ஏற்பான்
ஆழ அன்பை அணைத்தே நிற்பான்
சீலம் உடையார் சிந்தை வருவான்
சிவனே என்றால் சிறப்பும் தருவான்
 
கால காலனைக் காலால் உதைத்தான்
கருத்துடைப் பக்தனை மீட்டான் கருணையால்
பாலன் அழுதான் பாலும் கொடுத்தான்
பக்தர் துடித்தால் பதறுவான் பரமன் 
 
ஆதியு மில்லான் அந்தமு மில்லான்
அவனின் முன்னே ஆணவமும் எழுந்தது
பிரமன் தானே பெரியவன் என்றான்
திருமால் மறுத்துத் தானே என்றான் 
 
ஆணவ மடக்க அரனும் எண்ணினான்
அவர்களின் முன்னே ஜோதியைக் காட்டினான்
ஜோதியின் முடியை ஜோதியின் அடியைக் 
காணுவார் பெரியர் ஒலித்தது பேரொலி 
 
ஒலியைக் கேட்டவர் ஒளியைத் தேடினார்
அடியையும் காணா முடியையும் காணா
அவரவர் தேடியே அலைந்துமே நிற்க
ஆனந்த ஜோதி அரனாய் ஒளிர்ந்தது
 
பிரமன் திருமால் பெம்மானைப் போற்றினர்
மருளுடை எண்ணம் மறைந்தே போனது 
அருளுடன் சிவனும் அணைத்தே நின்றான்
ஆணவம் பொடிப்பொடி ஆகியே நின்றது
 
பெருமான் சிவனைப் பேணியே நிற்க
உருகியே அடியார் விரதம் இருப்பார்
சிவனைக் குறிக்க சிறந்திடு விரதமாய்
அமையும் விரதம் சிவராத்திரி ஆகும் 
 
அடியை முடியை தேடிய சம்பவம்
சிவனின் ராத்திரி செப்பியே நிற்கும்
ஆணவம் போக்கிடும் அற்புத விரமாய்
சினார் ராத்திரி சிறப்புடன் திகழும்
 
விஞ்ஞான உண்மைகள் நிறைந்ததே விரதம்
மெய்ப்பொருள் அதனுடன் இணைவதே தத்துவம்
ஆன்மீகம் அறிவியல் அமைவதே சமயம்
அனைவரும் அகத்தில் இருத்துதல் அவசியம் 
 
பசித்தும் விழித்தும் இருப்பது விரதம்
பசித்து விழித்து இருப்பது பக்குவம் 
பசித்தும் விழித்தும் பக்குவம் மிகுந்தால்
பரமனைப் பார்க்கும் பதவியும் கிடைக்கும் 
 
உண்மைகள் என்பது உயிர்ப்புடன் இருக்கும்
உண்மைகள் என்றுமே உறங்கிட மாட்டா
உயர்வுடை உண்மைகள் இறைவனே ஆகும்
உணர்வெலாம் இறையினை இருத்தியே வைப்போம்.
  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
           மெல்பேண் …. அவுஸ்திரேலியா.
 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.