போர் தின்ற வன்னிமண்ணின் ஆத்மாவை மும்மொழிகளில் எழுதியிருக்கும் நிலக்கிளி அ. பாலமனோகரன்! …. முருகபூபதி.
அரைநூற்றாண்டுக்கு முன்னர், 1973 ஆம் ஆண்டு மே மாதம் வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது அ. பாலமனோகரன் என்ற எழுத்தாளர் எழுதிய முதல் நாவல் நிலக்கிளி. இந்நாவல் வௌியாகும் முன்னர் அவர் பல சிறுகதைகளை இலங்கை இதழ்களில் எழுதினார்.
ஆனால், நிலக்கிளி நாவல் இலக்கிய உலகில் மிகுந்த கவனத்தை பெற்றதையடுத்து, இந்த இலக்கியப் படைப்பாளி நிலக்கிளி பாலமனோகரன் என்றே அழைக்கப்படலானார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு கிராமத்தின் மண்வாசனை கமழ்ந்த இந்த நாவல், பின்னாளில் மேலும் சில பதிப்புகளைக்கண்டது. அத்துடன் ஆங்கில மொழியிலும் வெளியானது.
டென்மார்க்கில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலக்கிளி பாலமனோகரனின் எழுத்துக்களை அவரது முதல் நாவலிலும், அதன்பின்னர் வெளியான குமாரபுரம் நாவல் உட்பட சில சிறுகதைகளிலும் படித்திருந்தாலும், அவரை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
இலங்கையில் நீடித்த உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினை அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டில் பல இரக்கமுள்ள அன்பர்களின் ஆதரவுடன் ஆரம்பித்திருந்தேன். எனினும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் அந்தப்போர் முடிவுக்கு வரும்வரையில் வடபுலத்திற்கு செல்ல முடியாதிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல மாணவர்களுக்கு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் ஊடாக உதவி வந்தோம். 2011 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று இக்கல்லூரிக்குச்சென்ற வேளையில் நிலக்கிளி பாலமனோகரனும், டென்மார்க்கிலிருந்து தமது ஊருக்கு வருகை தந்திருந்தார்.
அவரையும் மாணவர் சந்திப்புக்கு அழைத்து அவரது கரங்களினால், மாணவருக்கு நிதியுதவியை வழங்கினோம்.
அன்றைய தினம்தான் நான் முதல் முதலில் நிலக்கிளி பாலமனோகரனை சந்தித்தேன். எனினும் அவருடனான கடிதத் தொடர்பு நாமிருவரும் புலம்பெயர்ந்த பின்னர்தான் ஆரம்பமாகியிருந்தது.
அவர் 14 – 02 – 1994 ஆம் திகதியன்று எனக்கு டென்மார்க்கிலிருந்து எழுதிய நீண்ட கடிதம் இற்றைவரையில் என்னிடம் பொக்கிஷமாக வாழ்கிறது. இக்கடிதம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது கடிதங்கள் நூலிலும் இடம்பெற்றுள்ளது. இக்கடிதத்தில் தானும் தனது துணைவியாரும் காணும் கனவுகளைப்பற்றி சுவாரசியமாக எழுதியிருந்தார்.
ஊரான ஊரிழந்தோம், ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம், பாராள வந்தவரே உம்மையுந்தான் நாமிழந்தோம் என்ற வரிகளில் தொடங்கும் கவிஞர் சேரனின் வரிகள்தான் அக்கடிதத்தின் தொனிப்பொருளாக உறைந்திருக்கும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டில், வென்மேரி அறக்கட்டளை நடத்திய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருந்தபோது, மீண்டும் நிலக்கிளி பாலமனோகரனை அவரது அன்புத்துணைவியாருடன் சந்தித்தேன். இச்சந்தர்ப்பத்தில் இருவரும் எமது நூல்களையும் பரிமாரிக்கொண்டோம். நீண்ட நேரம் உரையாடினோம்.
நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களைத் தொடர்ந்து, அவரது எழுத்துக்களை ஊடகங்களில் காணமுடியாதிருந்த அக்காலப்பகுதியில், நிலக்கிளி பாலமனோகரன் எங்கே..? என்ற கேள்வியைத் தொடுத்து, அப்போது வீரகேசரி வாரவெளியீட்டில் இலக்கியப்பலகணியில் ( ரஸஞானியின் பத்தி எழுத்து ) எழுதியிருந்தேன்.
அந்தக்குறிப்பினையும் அவர் எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் டென்மார்க்கிலிருந்து எழுதியிருந்த கடிதத்தில் நினைவுபடுத்தியிருந்தார்.
டென்மார்க் நாட்டுக்கு நிலக்கிளி பாலமனோகரன் புலம்பெயர்ந்து சென்றபின்னர், அந்நாட்டு மொழியையும் கற்றுத்தேர்ந்து, மொழிபெயர்ப்பாளராகவும் பயணித்தார்.
தாய்வழித்தாகம், BLEEDING HEARTS முதலான நாவல்களையும் வரவாக்கினார். அத்துடன் இலங்கை அரசியல் தொடர்பான பல ஆவணங்களையும் ஆங்கில, டேனிஷ் மொழிகளுக்கு மொழிபெயர்த்தார்.
சிறந்த ஓவியருமான பாலமனோகரன், தனது முதல் நாவல் நிலக்கிளியில் அந்த வன்னிமண்ணை நிலக்காட்சியுடன் உயிரோட்டமாகச் சித்திரித்து வெற்றி கண்ட படைப்பாளுமை.
நிலக்கிளி நாவல் பற்றி நூலகம் ஆவணகம் வெளியிட்டிருக்கும் குறிப்பினைப் பாருங்கள் :
நாகரீகம் பரவாத ஒரு விவசாயக் கிராமப்புறத்தில் வளர்ந்த பெண்ணான பதஞ்சலி அநாதையாகும் நிலையில் கதிராமனின் மனைவியாகின்றாள். பிற ஆணுடன் தொட்டுப் பழகுவது என்று கூடப் புரிந்து கொள்ளாத கள்ளம் கபடமற்ற அவள் புயல் தந்த சோதனையால் கணவன் அருகில் இல்லாத போது ஆசிரியர் சுந்தரலிங்கத்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் தழுவப்படுகிறாள். அந்த நிகழ்ச்சியின் பின் அவள் யதார்த்த உலகைப் புரிந்து கொள்ளத் தொடங்குகின்றாள். நிலக்கிளிகள் நிலத்தில் வாழ்பவை. உயரே பறக்க விரும்பாதவை. பிறரிடம் இலகுவில் அகப்பட்டுக் கொள்பவை. ஆனால், அவை எளிமையானவை. அழகானவை. தம் சின்னச் சொந்த வாழ்க்கை வட்டத்துக்குள் உல்லாசமாகச் சிறகடிக்கும் அவற்றின் வாழ்க்கை இனிமையானது. 20 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வவுனியா மாவட்ட தண்ணிமுறிப்பு கிராம விவசாயக் குடும்பப் பின்னணியில் அமைந்தது இக்கதையின் களம். பதஞ்சலியின் பாத்திரம் நிலக்கிளியாக இக்கதையில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கனடாவில் வதியும் இலக்கியப்பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர், பாலமனோகரனின் நாவல்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை பாலமனோகரன் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்தவர், இளவழகன் என்ற புனைபெயரிலும் எழுதியிருக்கிறார்.
ஆசிரியராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த பாலமனோகரன் மூதூர் பிரதேசத்தில் பணியாற்றச்சென்றதையடுத்து, அங்கு வாழ்ந்த மூத்த எழுத்தாளர் வ. அ. இராசரத்தினம் அவர்களின் நண்பரானார். அவரது சிபாரிசுடன் இவரது மலர்கள் நடப்பதில்லை என்ற முதலாவது சிறுகதை சிந்தாமணியில் வெளியானது. மித்திரனிலும் வண்ணக் கனவுகள் என்ற தொடர்கதையை எழுதினார்.
அக்காலப்பகுதியில் இவரது சில கதைகள் வானொலி நாடகமாகவும் ஒலிபரப்பாகியது. சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கில ஊடகங்களிலும் வெளிவந்தன.
கனவுகள் கலைந்தபோது – வட்டம்பூ – நந்தாவதி – தாய்வழித் தாகம் முதலான நாவல்களையும் தீபதோரணங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும் வரவாக்கியிருப்பவர். நாவல் மரம் என்ற நாவல் டேனிஷ் மொழியில் வெளிவந்துள்ளது.
அத்துடன் டேனிஷ் – தமிழ் அகராதியையும் இவர் தொகுத்திருக்கிறார். அவுஸ்திரேலியாவிலிருந்து தனது கலாநிதிப்பட்டத்திற்காக முருகர் குணசிங்கம் எழுதிய தமிழ்த் தேசியவாதம் என்ற ஆய்வேட்டையும் நிலக்கிளி அ. பாலமனோகரன் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு படைப்பாளுமை மிக்க இவருக்கு தனது சில கதைகளையாவது திரைப்படச்சுவடிகளாக்கவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.
இதுபற்றி கடந்த ஆண்டு பிரான்ஸில் என்னைச்சந்தித்தபோது கூறினார். புதிய தலைமுறை வாசகர்கள் இவரது படைப்புகளை தேடி எடுத்துப்படிக்கவேண்டும். போர் விழுங்கி ஏப்பம் விட்ட வன்னிமண்ணின் ஆத்மாவை இவரது கதைகளில் தரிசிக்கலாம்.
—0—
மிகச்சிறப்பு எழுத்தாளுமை திரு பாலமனோகரன் அவர்கள் பற்றிய பலசெய்திகளை அறிமுகப்படுத்தியமைக்கு முருக பூபதி ஐயாவுக்கும் அக்கினிக் குஞ்சுவுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்
பாண்டிருப்பில் இருந்து கமலன்